பாரிஸ் மாநகர 'நாடு கடந்த தமிழீழ அரசு'க்கான வேட்பாளரும், ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியருமான சி. பாலச்சந்திரன்

களத்தில் வீழ்ந்த நாங்கள் புலத்தில் ஒன்றாய் நிமிர்ந்தெழுவோம்! முள்ளிவாய்க்கால் என்பது எமக்கான முடிவுரை அல்ல... நாம் எழுவோம்! விழ விழ எழுவோம்!! புலம்பெயர் தேசங்களில் புலியாக எழுவோம்! நாடு கடந்த தமிழீழ அரசு இன்னொரு போர்க் களம்! உலகை இணைத்து எம் ஈழம் பெறுவோம்! பாரிஸ் மாநகர 'நாடு கடந்த தமிழீழ அரசு'க்கான வேட்பாளரும், ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியருமான சி. பாலச்சந்திரன்



தமிழீழ ஆன்மாவைத் தோள்களில் சுமந்த விடுதலை வேங்கைகளையும், அவர்களை நெஞ்சில் சுமந்த தமிழீழ மக்களையும் முள்ளிவாய்க்கால் வரை நகர்த்தி, அழித்தொழித்த சிங்கள தேசத்திற்கு, இப்போது எஞ்சியிருக்கும் ஒரே போர்க் களமாக புலம்பெயர் தமிழ்ச் சமூகமே உள்ளது. அந்தப் போர்க் களத்தைச் சிதைப்பதற்கும், உடைப்பதற்கும், பிரிவினைகளை உருவாக்கி அழிப்பதற்கும் சிங்கள தேசம் தனது சக்திகள் அத்தனையையும் பிரயோகித்து வருகின்றது.

இந்தச் சதி வலைகளுக்குள் இருந்து தமிழ் மக்களை மீட்கும் பெரும் பணி என் போன்ற ஊடகவியலாளர்களுக்கு அதிகமாக உள்ளதை என்னால் உணர முடிகின்றது. ஊடகவியலாளர்களின் இத்தகைய மக்கள் பணியை முடக்கும் முகமாகவே, சிங்கள தேசம் முப்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களைக் கொன்று குவித்துள்ளது. தமிழீழ மக்களது அரசியல், சமூக விடுதலைக்கான போர் ஆயுதமாக 'ஈழநாடு' பத்திரிகை ஊடாகக் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எனது பணி தொடர்ந்து வருகின்றது. இந்த ஆன்மார்த்தமான எனது மக்கள் பணியின் தொடர்ச்சியாகவே, பிரான்ஸ் மக்கள் பேரவையின் உருவாக்குனர்களில் ஒருவரான நான், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளேன்.

அமெரிக்காவில் வசிக்கும் வழக்கறிஞரான திரு. விசுவநாதன் உருத்திரகுமார் அவர்களது புனிதமான விடுதலைப் பயணத்தின் தொடர்ச்சியாக உருவாகிவரும் 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற மாபெரும் போர்க் கருவி, எதிரியை நோக்கிக் குறிபார்ப்பதற்காக நாம் அனைவரும் அவரோடு கரம் சேர்க்க வேண்டிய தேசியக் கடமையினை நிறைவேற்ற வேண்டியவர்களாகவே உள்ளோம். 'மக்கள் பேரவையும், நாடு கடந்த தமிழீழ அரசும் சிங்கள இனவாத அரசுக்குக் குறி வைக்கும் இரட்டைத் துப்பாக்கிகள்' என்ற திரு. உருத்திரகுமாரன் அவர்களது அறைகூவலை புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் புரிந்து கொண்டுள்ளார்கள். அதில், அவரது இலட்சிய நேர்மை வெளிப்பட்டது. அது, அவரது போர்க் களம் வெற்றி பெற வேண்டும் என்ற தாகத்தையும் புலம்பெயர் தமிழர்களது நெஞ்சங்களில் விதைத்தது.

திரு. உருத்திரகுமார் அவர்களது 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற போராட்ட வடிவம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே, இறுதிப் போர்க் காலத்தில் அணி திரண்ட புலம்பெயர் போர்க் களத்திலிருந்த தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், புலம்பெயர் தேசங்கள் ஒவ்வொன்றிலும் மக்கள் பேரவைகளாக அணி திரண்டனர். விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்த நாடுகளில், தமிழீழ விடுதலைக்கான தளங்கள் மீது அளவு கடந்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. மேற்குலகின் பல நாடுகளில் 'தமிழர் ஒருங்கிணைப்புக் குழு' போன்ற மக்கள் அமைப்புக்கள் முற்றுகையிடப்பட்டு, அதன் செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டனர். இது புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்த தமிழீழ மக்களது சமூக தளத்தில் பெரும் வெற்றிடங்களை உருவாக்கியிருந்தது. முள்ளிவாய்க்கால் புலம்பெயர் போர்க் களங்களிலும் தலைமைத்துவ வெற்றிடம் உருவாகுவதற்கும் இது காரணமாக இருந்தது.

புலம்பெயர் தேசங்களில் தமிழீழ மக்கள் மிகப் பெரும் எழுச்சியுடனும், கோபத்துடனும் வீதிகளில் இறங்கித் தம் உறவுகளைக் காப்பாற்றப் போராடிய போது, எங்கள வேதனைகளையும், போராட்ட நியாயங்களையும் உணர்ந்து கொண்டாலும் எம்மை நெருங்கி வர முடியாத 'பயங்கரவாத' சட்டச் சுவர் அந்த நாடுகளின் அரசுகளுக்கும், அரசியல் தளங்களுக்கும் தடைகளை உருவாக்கியிருந்தது. விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட 'பயங்கரவாத' முத்திரையும், தமிழ்ச் செயற்பாட்டாளர்களது கைதும் ஏற்படுத்தியிருந்த சட்டச் சிக்கல், பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களையும் அநாதைகளாக வீதிகளில் நிறுத்தியபோது, பிரஞ்சு அரசால் தமிழ் மக்களுக்கான ஒரு ஆலோசனை வழங்கப்பட்டது. பிரஞ்சு அரசோடும், பிரஞ்சு மக்களோடும் இணைந்து செயற்படக் கூடியதான ஒரு புதிய ஜனநாயகத் தள உருவாக்கத்தின் அவசியம் உணர்த்தப்பட்டது. அந்த அவசியம் பிரஞ்சு மண்ணில் மட்டுமல்ல, மேற்குலகின் தமிழீழ மக்கள் வாழும் அத்தனை நாடுகளிலும் மக்கள் பேரவைகளாக உருவாக்கம் பெற்றன. இது 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற சொற்பதம் வெளியாகுமுன்னர் அந்தந்த நாடுகளில் ஏற்பட்ட அவசியம் நிமிர்த்தமாக உருவானதே தவிர, அதற்கு எதிராக உருவாக்கப்படவில்லை.
'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற சொல் செயல் வடிவம் ஆகுவதற்கு முன்னரே புலம்பெயர் போர்க் களங்களில் உருவாகியிட்ட மக்கள் பேரவைகள் அந்தந்த நாடுகளின் அரசியல், சமூக தளங்களில் மிகச் சிறப்பாகவே செயற்பட்டு வருகின்றனர். தமிழீழ மக்களுக்கான ஆதரவுத் தளங்கள் மக்கள் பேரவைகளால் அந்தந்த நாடுகளில் மிக அற்புதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தந்த நாடுகளின் அரசியல் தளங்களில் மக்கள் பேரவைகளின் பிரமுகர்கள் உள்வாங்கப்பட்டு, முன் நிறுத்தப்பட்டு வருகின்றனர். இவை, பெருமையுடன் நோக்கப்பட வேண்டிய புலம்பெயர் தமிழர் சாதனைகளாகவே பார்க்கப்பட வேண்டியவை. மக்கள் பேரவைகளின் இந்த செயற்பாடுகள் உருவாக்கப்படும் 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற தமிழீழ விடுதலைத் தளத்திற்குப் பலம் சேர்ப்பதாக அமைய வேண்டும். அதற்கான அவசியம் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இணைப்பாளர் திரு. உருத்திரகுமாரன் அவர்களுக்கும் உணர்த்தப்பட்டது. மக்கள் பேரவைகளும், நாடு கடந்த அரசும் இணைந்து செயற்பட்டாலே அதன் நோக்கம் முழுமை பெறும். அதன் இலட்சியம் இலகுவானதாகும் என்பதை திரு. உருத்திரகுமாரன் அவர்கள் ஏற்றுக் கொண்டதோடு, நடைபெறப்போகும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் மக்கள் பேரவையினரும் பங்குபற்ற வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்திருந்தார்.

திரு. உருத்திரகுமாரன் அவர்களிடம் எமக்கு நிறையவே நம்பிக்கை உண்டு. அவரது இலட்சிய தாகம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. அவருடைய குறிக்கோள் நேர்மையானது. தமிழீழ விடுதலைக்கானது என்று திடமாக நம்புகின்றோம். சிங்கள - இந்திய சதியால், அவரது போராட்ட வடிவம் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலுக்குச் சென்றடைவதை நாம் அனுமதிக்க முடியாது. அவருக்குப் பின்னால் தேசிய விடுதலைக்கான போராளிகளும், விடுதலை உணர்வாளர்களும் அணி வகுக்க வேண்டும்.

பிரான்ஸ் மக்கள் பேரவையின் உருவாக்குனர்களில் ஒருவரான சிவகுரு பாலச்சந்திரன் ஆகிய நான், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இந்தத் தேர்தலில் திரு. உருத்திரகுமாரன் அவர்களது இலட்சியத்திற்குப் பலம் சேர்க்கும் விதமாகப் பாரிஸ் (75) பிராந்தியத்தில் களம் இறங்கியுள்ளேன். ஐரோப்பாவின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையாக 'ஈழநாடு', பிரான்சின் முதலாவது தமிழ்ப் புத்தகசாலையாக 'தமிழாலயம்', முதலாவது வானொலியாக 'தமிழ் ஒலி', முதலாவது தொலைக்காட்சியாக 'தமிழ் ஒளி' என அனைத்து மக்கள் தளங்களையும் உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய நான், இந்த முதலாவது தமிழீழ அரசியல் தளத்திற்கும் எனது பங்கினை வழங்க முழுமையாக என்னை அர்ப்பணித்துள்ளேன்.

Comments