ஈழத் தமிழருக்கெதிரான இந்தியாவின் நயவஞ்சகம் மேலோங்குகின்றது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzBqidIDI-o3d-qcG9Y2wl7ehwMDmUWSNmrfuWkBBhTdXJIrqZ8UOf75CMydsRVP9WR4R_aB55Cet28eTdIquxZ5bb7yZXDJJ67jiNQIoG8pCpKu4DJoUFZh9SsCxXjpzhO29-uEAp7b4x/s400/india+flag.jpgஈழத் தமிழர் மூன்று தசாப்தங்களாக அறவழிப்போராட்டத்தின் மூலமாக வெல்லமுடியாத அரசியல் அபிலாசைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவரத் தேவைப்பட்ட ஒரே ஆயுதம் பல ஈழத் தமிழ் போராளிகளை வளர்த்து தமக்குள்ளே அடிபட்டு தமிழீழத் தாயகக் கோட்பாட்டை மழுங்கடிக்க அயராது உழைத்த நாடு தான் இந்தியா.

விடுதலைப் புலிகளினால் பிற தமிழ் ஆயுதக் குழுக்கள் தோற்கடிக்கப்பட்டு பின்னர் புலிகளே ஈழத் தமிழரின் தேசியத் தலைமை என்கின்ற அளவு அபார வளர்ச்சி பெற்று நின்ற வேளை இந்தியாவினால் அதனை சகித்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. புலிகளை பலம் இழக்கச் செய்து அவர்களின் ஆயுதப் போராட்டத்தை மழுங்கடிக்க ஒரே வழி அந்த அமைப்பைத் தடை செய்வது ஒன்றுதான் வழி என்று எண்ணிய இந்தியா குறிப்பாக 80 மற்றும் 90-ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டு மக்களுக்குள் அமோக ஆதரவைபெற்று ஏ.கே-47 துப்பாக்கிகளுடன் தமிழ் நாடு காவல் துறையினரின் வாகனங்களிலையே தமிழ் நாடு வீதிகளில் வலம் வந்த விடுதலைப் புலிகளை முடக்கவேண்டுமாயின் தமிழ் நாட்டு மக்கள் நம்பும்படியான சம்பவம் நடக்க வேண்டும்.

இந்திய இராணுவம் ஈழத்தை விட்டுத் துரத்தி அடிக்கப்பட்ட பின்னர் மூக்குடைபட்ட இந்திய வல்லரசுக்குத் தேவைபட்டது புலிகளை எப்படியாயினும் தமிழ் நாட்டு மக்களிடம் இருந்து பிரித்தெடுத்து அழிக்கப்பட வேண்டும் என்பதே. ராஜீவ் காந்தி கொலை ஊடாக இந்தியா இதனை இலகுவாகவே செய்து முடித்து விட்டது. ஆனால் ஈழத் தமிழருக்கெதிரான இந்தியாவின் நயவஞ்சகச் செயல்கள் மிக உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

புலிகளை அடக்கத் தேவைப்பட்ட ஆயுதம் தான் ராஜீவ் கொலை. தனது தாயார் இந்திரா காந்தி கொலையைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற அனைத்து மாநில மக்களின் ஆதரவு பெற்ற இளம் வயதான மற்றும் கவர்ச்சியான தலைவர்கள் யாரும் இல்லை. பெரும்பான்மையான இந்திய மக்கள் ராஜீவ் ஏதோ இந்தியாவிற்கு சுதந்திரம் எடுத்துக் கொடுத்த மகாத்மா காந்தியின் வாரிசு என்று தப்பாக எண்ணுகின்றார்கள். எது என்னவாகினும் கவர்ச்சியான இளம் தலைவர் மற்றும் காந்தி என்ற பெயர் (குறிப்பு: ராஜீவின் தந்தையார் ஒரு பெர்சியன்.

இவரின் பெயர் பெரோஸ் காந்தி) ஆகியவற்றுக்கு மக்களிடையே இருந்த நல்லெண்ணத்தை கொள்முதல் செய்யும் வகையிலும், காங்கிரசின் வாரிசு அரசியல் பாரம்பரியத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராஜீவ் தேர்வு செய்யப்பட்டார். விமான ஓட்டியாகப் பயிற்சி பெற்ற ராஜீவ் அரசியல் பாண்டித்துவம் எதுவுமின்றி இந்தியாவின் ஏழாவது பிரதம மந்திரியாக தனது 40 ஆவது வயதில் 1984-ஆம் ஆண்டு பதவிக்கு வந்து 1989-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

ரோ மற்றும் சிபிஐயினால் மரணிக்கப்பட்ட ராஜீவ்

இந்தியாவின் வெளிவிவகாரப் புலனாய்வுக்கு பொறுப்பான ரோவின் சூழ்ச்சி என்னவென்றால் புலிகளை தமிழ் நாட்டு மக்களிடம் இருந்து ஓரம் கட்டி அவர்களின் தனி ஈழக் கோரிக்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமாயின் அவர்களை முடக்கித் தனிமைப்படுத்த வேண்டும். எனவே இந்தியாவிற்கு ஒரு காரணி தேவைப்பட்டுக்கொண்டிருந்தது. அதற்கமைவாய்போல் 1991-ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ் நாடு வந்தார்.

இவர் யாருக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்ய வந்தாரோ அவர்களில் பலர் ராஜீவின் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக மீனம்பாக்கம் வானுர்தி நிலையம் வந்தடைந்த ராஜீவ், பல சந்திகளில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்காற்றி பின்னர் நடு இரவு தாண்டும் வேளை அதாவது மே 21 , 1991 சிறிபெரும்புதூர் சென்றடைந்தார். சிறிது நேரத்தில் மனிதக்குண்டுதாரியினால் கொலை செய்யப்பட்டார். இவருடன் 18 பேரும் சாவைத் தழுவினர்.

ஆனால் முக்கிய பல புள்ளிகள் மற்றும் உயர் காவல் அதிகாரிகள் இறக்கவில்லை என்பது தான் வியப்பான சம்பவம். கொலை செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் றோவினால் உலகம் முழுவதும் செய்தி பரப்பப்பட்டது. அது என்னவென்றால் தமது தலைவரை புலிகள் கொன்றுவிட்டார்களாம். அடுத்த ஒரு சில மணிநேரத்திற்குள் தமிழ் நாடு முழுவதும் துண்டுப்பிரசுரங்களும் மற்றும் சுவர்களில் புலிகளுக்கெதிரான வாசகங்கள் ஒட்டப்பட்டன. குறிப்பாக சில வாசகங்கள் இப்படியாக அமைந்திருந்தன:

"காட்டில் இருக்க வேண்டிய புலியை நாட்டுக்குள் விட்டதால் வந்த விளைவு தான் ராஜீவ் கொலை", "புலியை நாட்டுக்குள் விட்ட கருணாநிதியை ஒழிக்கவேண்டும்" மற்றும் "திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்கடிக்க வேண்டும்".

இப்படியான வாசகங்கள் தமிழ் நாட்டு மக்களிடம் ஈழத் தமிழருக்கு மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு எதிராக அமைந்திருந்தது. பல ஈழத் தமிழர் தாக்கப்பட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சார மேடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் பல முன்னணி திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்திவிடப்பட்டன. இப்படியாக ராஜீவ் கொலையை ஈழத் தமிழருக்கு எதிராக ஏவி விட்டு அவர்களின் தானத் தலைமையை பழி தீர்த்து அவர்களின் விடுதலைப் போராட்டத்தை அடியோடு முடக்கலாம் என்ற தோரணையில் ரோ களம் இறங்கியது.

அதிலும் வெற்றி கண்டது.ஈழத் தமிழர் ராஜீவின் தாயாரின் தார்மீக ஆதரவை குறிப்பாக ஈழத் தமிழர் 1983-ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடைபெற்ற தமிழ் இனச்சுத்திகரிப்பில் இருந்து பல லட்சம் தமிழரை மீட்டு யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றார். மேலும் ஈழத் தமிழர் உலகம் முழுவதும் இன்று பரந்து விரிந்து கிடப்பதற்கும் அன்னை இந்திராவின் செயல் உதவியது. ஈழத் தமிழினம் ஒரு போதும் ராஜீவை கொலை செய்ய முனைந்திருக்க மாட்டார்கள். இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டை முன் வைக்க ரோ பல காரணிகளைத் தேடியது அதிலும் வெற்றி கண்டது.

குறிப்பாக ராஜீவ் கொலை விசாரணையை சிபிஐ என்ற இந்திய உள் விவகாரங்களுக்குப் பொறுப்பான குழு பொறுப்பெடுத்தது. இதன் விசாரணைக் குழுத் தலைவராக கார்த்திகேயன் என்ற ஈழத் தமிழருக்கு எதிரான நபரை நியமித்தார்கள். அவர்களின் விசாரணை ஒரு பக்க சார்பாகவே நடைபெற்றது. குறிப்பாக புலிகளின் தலைவர் பிரபாகரனின் பரம விரோதியாகவே ராஜீவைப் பார்த்ததாகவும் மற்றும் புளொட் இயக்கமும் ராஜீவை விரோதியாக பார்த்ததாகவும் கதையை புனைந்தார்கள்.

அவர்களின் காரணம் என்னவென்றால் ராஜீவினால் அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் 12 புலிகளின் முக்கிய உறுப்பினர்களை அதாவது குமரப்பா, புலேந்திரன் போன்றவர்கள் மற்றும் திலீபனின் சாவுகளுக்கு ராஜீவே காரணம் என்று பிரபாகரன் கருதி ராஜீவை பழி தீர்க்கத் தான் கொலைசெய்யப்பட்டார் என்றும் அத்துடன் புளொட் இயக்கமும் ராஜீவை பரம எதிரியாக பார்த்ததாகவும் காரணம் அவர்கள் மாலத்தீவை தமது கட்டுப்பாட்டின்கீழ் 1988-ஆம் ஆண்டு கொண்டுவந்தார்கள். ஆனால் ராஜீவ் உடனடியாகவே கடற்படையை அனுப்பி புளொட் உறுப்பினர்களைக் கொன்றும் கைது செய்தும் மாலத்தீவை மீட்டார்கள்.

இதனால் புளொட் தலைமை ராஜீவை பரம எதிரியாகவே பார்த்ததாகவும் கதை சோடிக்கப்பட்டு பின்னர் ராஜீவ் மரண தீர்ப்பிலும் நீதிபதிகள் இந்த கூற்றுக்களை ஏற்பதாகவும் 26 நபர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. நளினி, முருகன், பேரறிவாளன், மற்றும் சாந்தன் ஆகியோர் மீது மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு பல விதமான தண்டனைகள் அளிக்கப்பட்டன. புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலிகளின் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான் மற்றும் மகளிர் அமைப்பின் தலைவி அகிலா ஆகிய மூவரையும் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு தேடும் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள்.

இவர்கள் மீதான விசாரணை இன்னும் நிலுவையிலேயே உள்ளது. அகிலா ஏற்கனவே இறந்து விட்டார் மற்ற இருவரும் கடந்த வருடம் நடந்து முடிந்த நான்காம் கட்ட ஈழப் போர் வரை களத்தில் நின்று பின்னர் சிறிலங்காவினால் இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு விட்டதாக சிறிலங்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரோ மற்றும் சிபிஐயினால் அரங்கேற்றப்பட்ட நாடகத்திற்கு வேண்டிய ஒரே உயிர் தான் ராஜீவ். காரணம் இவர் ஒரு மக்களைக் கவர்ந்த இளம் தலைவர் மற்றும் இவருடன் இணைக்கப்படிருக்கும் பெயர் அதாவது காந்தி என்ற பெயர் மற்றும் நேரு வம்சாவழி என்ற பெருமை. ஆக இவரின் இழப்பினால் தமிழ் நாட்டு மக்களின் மனங்களை மாற்றி ஒரு உளவியல் யுத்த புரட்சி மூலமாக விடுதலைப் புலிகள் மீது கொண்டிருந்த அனுதாபத்தை அடியோடு அழிக்கலாம் என்ற தோரணையில் காரியத்தைக் கச்செண்டு முடித்துவிட்டது ரோ மற்றும் சிபிஐ.

நளினி மீதான தீர்ப்பு ‘சட்டம் ஒரு இருட்டறை' என்பதைக் காட்டுகின்றது

ராஜீவ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான நளினியை (வயது 44) முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த வாரம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான நளினியின் மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஏப்ரல் 24 , 2000 அன்று ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட நளினி, நன்னடத்தை அடிப்படையில் தம்மை தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் முன்பே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதனை எதிர்த்து ஜனதாக் கட்சியின் தலைவரும் இந்தியாவின் அரசியல் கோமாளியாக வர்ணிக்கப்படும் சுப்ரமணியசாமி மனுவை தாக்கல் செய்திருந்தார். நளினி சார்பாக அவரின் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆயராகினார்.

நளினி ஏற்கனவே 18 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துவிட்டார். அத்துடன் இவர் சிறையில் இருந்தபடியே முதுநிலைப் பட்டப்படிப்பையும் முடித்துவிட்டார். நீதிபதிகள் கடதர்மாராவ், சசிதரன் முன் இந்த விசாரணை கடந்த மாதம் வந்தது. முன் கூட்டி விடுதலை செய்ய கோருபவரின் மனுவை பரிசீலிக்க சட்டப்படி ஆலோசனைக் குழுவை அமைக்குமாறு மார்ச் 11 அன்று அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரமணியசாமி மனு தாக்கல் செய்தார். முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி நளினியும் மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையில், முறைப்படி ஆலோசனைக் குழுவை தமிழக அரசு நியமித்தது. இக்குழு கூடி நளினி விடுதலை தொடர்பாக விசாரணை நடத்தியது. தமிழகத்தின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கோர்ட்டில் கூறியதாவது: ஆலோசனைக் குழுவின் அறிக்கையை அரசு பெற்றுள்ளது. அதை அரசு பரிசீலித்து வருகிறது. இந்த அறிக்கை, அரசை கட்டுப்படுத்தாது. ஆலோசனைக் குழுவிடம் மேலும் சில விவரங்களை உள்துறை கோரியிருப்பதாக அறிகிறேன். அரசு இந்த விஷயத்தில் முடிவெடுக்கும். அதற்கு இரண்டு வார கால அவகாசம் வேண்டும்.

அதற்கு முன், அரசு முடிவெடுத்தால், கோர்ட்டுக்கு தெரிவிக்கிறேன்.இவ்வாறு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கூறினார். அதன்படியே நீதிபதிகளும் இரு வார கால அவகாசம் தமிழ் நாடு அரசிற்கு அளித்தது. பின்னர் தமிழக அரசு 10 விடயங்களை காட்டி நளினியின் விடுவிப்பை எதிர்த்தது. அதன் அடிப்படையில் நீதிபதிகளும் தமிழக அரசின் காரணிகளை ஏற்று நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளார்கள்.தமிழக அரசின் ஆலோசனைக் குழு அறிக்கையில் கூறப்படிருப்பதாவன:

(1) நளினி ராஜிவை கொலை செய்ய உதவியாக இருந்திருக்கிறார்; (2) இந்த கொலை வழக்கில் இவரது முக்கிய தன்மை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது; (3) குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்; (4) சதித்திட்டத்தில் முக்கிய பங்கு உண்டு; (5) கொலை நடந்த விஷயத்தில் விவரம் அனைத்தும் நளினிக்கு தெரியும்; (6) கணவர் இல்லை என ஏற்க முடியாது. இவர் மரணத்தண்டனை பெற்று சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்; (7) அதிக கல்வி தகுதி உள்ளவர் என்பதற்காக அவர் ஒழுக்கத்துடன் நடப்பார் என்பது ஏற்க முடியாது; (8) இது வரை நளினி வருத்தமோ ஒப்புதலோ தெரிவிக்கவில்லை; (9) இவர் விடுதலை செய்யப்பட்டால் தாயாருடன் சென்னை ராயப்பேட்டையில் தங்கி இருப்பேன் என்பதும் நம்பும்படியாக இல்லை. அதே நேரத்தில் அங்கு முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் இடம். அத்தோடு சென்னையில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்; (10) இவர் 18 வருடம் சிறையில் இருந்தார் என்பதை ஏற்று விடுதலை செய்ய முடியாது.

தமிழக ஆலோசனை குழுவின் வாதங்கள் அரசியல் உள்நோக்கத்துடன் இந்திய மக்களின் உணர்வுகளை ஈழத் தமிழருக்கெதிராக குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையாகத் தான் இதனைப் பார்க்கவேண்டும். மற்றும் நளினியின் விடுதலைக்கும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கும் மற்றும் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்புக்கும் என்ன தொடர்பு என்பது வேடிக்கையாக உள்ளது. நளினி எந்தவொரு காலகட்டத்திலும் அமெரிக்காவுக்கு எதிராக எந்த கருத்தையோ அல்லது பகைமையை கொண்டவரல்ல.

அப்படியிருக்க அவர் என்ன மனநோயாளியா அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக சதி வேலை செய்ய. ஆக தமிழக அரசின் பரிந்துரைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.சட்டவாளர்களின் கருத்தின்படி ஆயுள் தண்டனை என்பதன் பொருள் இந்தியச் சட்டங்களில் சரியான வரையறை செய்யப்படாத நிலையில், நீண்ட நாட்களாக சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்க பல்வேறு இந்திய மாநில அரசுகள் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றன.

தமிழ் நாட்டில் 10 ஆண்டுகளை சிறையில் கழித்த ஒரு சிறைவாசி, அவர் மீது வேறு எந்தப் புகார்களும் இல்லாத நிலையில் (ஆயுள் தண்டனை என்பதற்கான கால அளவு சரியாக நிர்ணயிக்கபடாததால்) முன் விடுதலைக்கு பரிசீலிக்கப்படுகிறார். இவ்வாறான முன் விடுதலைக்கு தம்மைப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்கும் உரிமை ஒவ்வொரு சிறைவாசிக்கும் உண்டு. இந்த உரிமையை நளினியும் பயன்படுத்துகிறார். ஆனால் மற்றக் கைதிகளை விடுதலை செய்வதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, நளினி விவகாரத்தில் மட்டும் ஏனோ தயங்குகிறது.

இந்தத் தயக்கத்திற்கு நளினி விடுதலை குறித்து சமூகத்தில் நிலவும் பொதுக்கருத்தும் மற்றும் ஈழத் தமிழருக்கு ஆதரவான ஒரு நிலை மீண்டும் தமிழ் நாட்டில் வந்துவிடக்கூடாதென ரோ மற்றும் ஈழத் தமிழருக்கெதிரான இந்திய அரசியல்வாதிகளினால் வகுக்கப்பட்ட திட்டமும் தான். பலர் பல கேள்விகளை கேட்கலாம் எதற்காக நளினியின் விடுதலையுடன் ஈழத் தமிழரின் போராட்டத்தை சம்பந்தப்படுத்துவதென்று. ராஜீவ் கொலை விசாரணை ஒரு முடிவுக்கு வந்து அனைவரும் விடுதலை பெற்று மீண்டும் தமிழ் நாட்டு மக்கள் முன் ஈழப் போராட்டத்தை முன்னெடுப்பதனால் மீண்டும் ஈழப் போராட்டம் புத்துயிர் பெறும் என்று ரோ கணிப்பிட்டுள்ளது.

ஆகவே ராஜீவ் மரணத்தை காரணியாக வைத்தே ரோ தனது வியூகங்களை ஈழத் தமிழரின் போராட்டத்தை அடக்க முனைகின்றது. ஏதோ மறைந்த அன்டன் பாலசிங்கம் 2006-ஆம் ஆண்டு இந்திய தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகளே ராஜீவை கொன்றார்கள் என்ற தொனியில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக ரோ சூழ்ச்சி நடவடிக்கையை எடுத்தது. பாலசிங்கம் அவர்களும் தனது பாமர பேச்சின் மூலம் இந்திய மக்களிடம் ஏதோ விடுதலைப் புலிகள் மன்னிப்புக் கேட்பதாகவும் கூறினார்.

உண்மையிலையே பாலசிங்கம் அவர்கள் ராஜீவ் வழக்கில் சேர்க்கப்படவுமில்லை அத்துடன் அவர் விடுதலிப்புலிகளின் தலைமைப்பீடத்தினால் ஒரு அரசியல் ஆலோசகராகவே பார்க்கப்பட்டார். விடுதலைப் புலிகளின் இராணுவ தந்திரோபாயங்களிலோ அல்லது தாக்குதல் முடிவு எடுக்கும் பொறுப்பு பாலசிங்கம் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. ஆகவே அவரின் கூற்றை ஒரு வாய்மொழிச் சாட்கியாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஆக நளினியின் விடுதலை தொடர்பான தீர்ப்பு ‘சட்டம் ஒரு இருட்டறை' என்பதை காட்டி நிற்கின்றது.இந்திய அரசின் அராஜக நடவடிக்கைகள் மென்மேலும் ஈழத் தமிழருக்கெதிராகவும் அவர்களின் அரசியல் அபிலாசகளுக்கெதிராகவும் இரட்டிப்பாக்கப் பட்டிருக்கின்றது. முதலில் ஈழத் தமிழரின் அரசியல் போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்து பின்னர் ஆயுதப் போராட்டத்துக்கு நேரடி உதவி அளித்துப் பின்னர் விடுதலைப் புலிகளின் இராணுவப் பலத்தைக் கண்டு வியப்படைந்து அவர்களைத் தோற்கடிக்க ஒரே வழி தமிழ் நாட்டு மக்களிடம் இருந்த ஆதரவை முற்றிலுமாக இல்லாதொழித்து அவர்களின் ஆயுதப் போராட்டத்தை எப்படி கடந்த வருடம் முல்லைத்தீவின் நந்திக்கடலில் எல்லாமே முடிந்ததாக ரோ மற்றும் சிறீலங்கா அறிவித்ததான செய்தி இவர்களின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளமுடியும்.

ஆக ராஜீவ் பலிக்கடா ஆக்கப்பட்டார். ஒரு பொய் சொல்ல ஆயிரம் பொய்யை சொல்லவேண்டி வந்தது என்ற பழமொழிக்கேற்ப ஒரு கொலையை செய்யப் போய் பல ஆயிரம் உயிரை எடுத்த நிகழ்வுதான் கடந்த வருடத்துடன் முடிந்த நான்காம் ஈழப் போர். ஆக இந்தியா தனது அராயகத்தை ஈழத் தமிழருக்கு எதிராக இரட்டிப்பாக்கியுள்ளது. "அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மைப் புழுவை வாட்டுவதுபோல் இருக்கும்"; என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்குப்படி நிச்சயம் காலம் வரும். இந்தியா தான் செய்து கொண்டிருக்கும் ஈழத் தமிழருக்கு எதிரான அராயகம் வெளிக்கொணரப்பட்டு எப்படி வெப்பம் புழுவை வாட்டுமோ அதைவிட மோசமாக வாடும் நிலை உருவாகும். நீதி நிலைக்கும் காலம் வெகுதொலைவிலில்லை என்ற நம்பிக்கையுடன் பயணத்தை தொடருவோமாக.

அனலை நிதிஸ் ச. குமாரன்

Comments