புலம் பெயர் மக்களும் நாடு கடந்த தேசியத்துவமும்


நாடு கடந்த தேசியத்துவம் [Transnationalism ] என்றால் என்ன என்பது குறித்த தெளிவுகளும்,பதில்களும் இல்லாவிட்டால், நாடு கடந்த அரசியலை புரிந்துகொள்ள முடியாது.

மறுக்க முடியாததொரு வகிபாகத்தை,இந்த நாடுகடந்ததேசியத்துவ கருத்தியல்,அனைத்துலக அரசியல் தளத்தில் முவைக்கப்படும் இவ்வேளையில்,
அதன் நதிமூலத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியமொன்று ஏற்படுகிறது.
கற்பனாவாத ரிஷி மூலத்தை தேடும் பணியல்ல இது.

மாறாக, தாயகம் கடந்து, வேற்று நாடுகளில் வாழும் போராடும் மக்கள், தமது சுதந்திர, தாய்நாட்டை நிர்மாணிப்பதற்கும், வாழும் தேசங்களில் தேசிய அடையாளத்தைப் பேணுவதற்கும், பல போராட்டங்களை நிகழ்த்திக்கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

உலக மயமாக்கல் [Globalization ] என்பது கூட,பொருளாதார நாடு கடந்த தேசியத்துவம் [ Economic Transnationalism ] என்கிற கருத்தியல் வரையறைக்குள் பொருத்திப் பார்க்கப்படுகிறது.
ஏகாதிபத்தியங்களின், நாடு கடந்த முதலீட்டு முகங்களான, பல்தேசிய நிறுவனங்களையும் [ Multi -National Corporation ] இவ்வட்டத்துள் உள்ளடக்குகின்றார்கள்.

அதேவேளை, 20 நூற்றாண்டின் முற்பகுதியில், நாடு கடந்த தேசியத்துவத்தின் முக்கியத்துவம் தொடர்பாக , ரன்டோல்ப் சிலிமன் போர்ன் [ Randolph Silliman Bourne ] என்கிற, அக்கால முற்போக்குச் சிந்தனையாளர் தனது கருத்தினை முன் வைக்கிறார்.

அமெரிக்க நியூ ஜெர்சி [New jersey ] புளூம்பீல்ட் நகரத்தில் பிறந்த ரன்டோல்ப் அவர்கள், சமூக உறவு குறித்த புதிய சிந்தனை முறைமை ஒன்றினை, நாடு கடந்த தேசியத்துவ கோட்பாட்டின் ஊடாக வெளிப்படுத்துகிறார்.

முதலாம் உலகப்போர் நிகழ்ந்த காலத்தில், இச்சிந்தனை முன்மொழிதலின் காரணிகள், அமெரிக்காவின் பல்வேறு தேசிய இனங்களின் நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக விளங்கியது.

அமெரிக்க வாழ் பல்தேசியங்கள், ஆங்கிலேய கலாச்சார தளங்களுள் கரைந்து விடாமல், அவர்களின் சமூக,கலாச்சாரத் தனித்துவம், அதன் உயர் விழுமியப் பரிமாணங்கள் சிதைவடையாமல், அமெரிக்க அதிகார மையக்கட்டமைப்பினுள் உள்வாங்கப்படுதலே,சிறப்பானதாக இருக்குமென்கிற கருத்தினை அவர் முன்வைத்தார்.

தனி நபரிற்கும், அவர் சார்ந்த ஆத்மார்த்த பூர்வமான தாயகத்திற்கும் இடையிலுள்ள உறவுகள், புதிய தேசத்தில், அவருடைய தேசிய இனத்துவ அடையாளத்தை தீர்மானிக்கும் என்பதாகவும் ரண்டோல்பின் கூற்று அமைகிறது.
புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் இம்மக்கள் வாழ்ந்தாலும், தமது பூர்வீக தாயகத்தின் கலாச்சார பண்புகளை மிக இறுக்கமாக, பேணிப் பாதுகாக்க முனைவார்கள் என்று இவர் திடமாக நம்புகிறார்.

ஆகவே இத்தகைய உயர்விழுமிய கலாச்சார ஆளுமையைக் கொண்ட ஏனைய தேசிய இனங்கள், அமெரிக்காவை ஒரு நாடு கடந்த தேசியத்துவ தேசங்கள் [ Transnational Nation ] கூட்டிணைந்த, புதிய கலாச்சார செழுமைமிக்க நாடாக மாற்ற உதவுவார்கள் என்பதனை ரன்டோல்ப் போர்ன் வலியுறுத்துகின்றார்.
வேற்றுக் கலாச்சாரப் படிநிலைகள் அழிந்து போகாமலும், அதேவேளை ஒன்றோடொன்று பிரிக்க முடியாத வகையில் பொருந்திக் கொள்வதாலும், அமெரிக்கா வலிமை பெறுமென்பதை, முதலாம் யுத்த காலத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழினத்தின் இன்றைய வாழ்நிலையானது, ஒரு நாட்டுக்குள் மட்டும் உள்ளடக்கப்பட்ட விடயமில்லை என்பது தெளிவானது. ஏனெனில் ஈழத்தமிழர்கள் பல நாடுகளில் சிதறி வாழ்கின்றார்கள்.

வித்தியாசமான சமூகக் கட்டமைப்பு மற்றும் கலாச்சார சூழலில் வாழும் இனக்குழுக்களோடும், தேசிய இனங்களோடும் கூடி வாழவேண்டிய நிர்ப்பந்தத்துள் ஈழத்தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.
ஆயினும் குடும்பம், ஊர், மற்றும் பிரதேச ரீதியிலான உறவுப்பரிவர்த்தனைகளை தொடர்ந்தபடியே வாழ்கின்றார்கள்.

அதேபோன்று தாயகத்தில் வாழும் மக்களோடு, தமது சமூக,பொருளாதார தொடர்பாடல்களைப் பேணி வருவதனையும் அவதானிக்க முடிகிறது.
இவர்களை ஒன்றிணைத்து, ஒரு பலமான கட்டமைப்பினை உருவாக்குவதன் ஊடாக, அடுத்த சந்ததிக்கான தமிழ்த் தேசியத் தளத்தினை நிலைநிறுத்தலாம். அக் கட்டமைப்பானது, முன்னெப்பொழுதும் பரீட்சித்துப் பார்க்கப்படாத புதிய விடயமாகவே இருக்கும்.

புலம் பெயர்ந்து பல நாடுகளில் சிதறுண்டு வாழும் பூர்வீக ஈழத்தமிழ் மக்களை ,ஒரு உயர் கட்டமைப்பிற்குள் நிறுத்துவதன் மூலம்,
இரண்டு விடயங்கள் சாத்தியமாகும்.

முதலாவதாக, கால நீரோட்டத்தில், எமது அடுத்த சந்ததியினர், தாம் வாழும் நாட்டுக் கலாச்சார பண்பாட்டு தளத்தினுள், சுயத்தை இழந்து, முற்றாக கரைந்து போகாமல் தடுக்கலாம்.

அடுத்ததாக, அந்நியராலும் சிங்கள தேச ஆட்சியாளர்களாலும் மறுக்கப்பட்ட, அல்லது பறிக்கப்பட்ட தாயக மண்ணின் இறைமையை, மீளப் பெறும் போராட்ட இலக்கிற்கு வலுவான சக்தியாகவும் திகழலாம்.

எதிர்கால சந்ததியினரின் தமிழ்த் தேசிய ஆளுமையை உறுதிப்படுத்தும் அதேவேளை, இறைமை கொண்ட தேசமொன்று
நிறுவப்படல் வேண்டுமென்பதே இவ்விரு குறிக்கோள்களாகும்.

அடுத்த சந்ததியினர், நமது கலை, பண்பாட்டு அடித்தளத்திலிருந்து விலகிச்சென்று விடுவார்களோ என்கிற அச்சம், பெரும்பாலான புலம் பெயர்ந்து வாழும் பெற்றோர்கள் மனங்களில் ஊடுருவி இருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது.

ஆலயங்கள்,தமிழ் பாடசாலைகள், பொது நிகழ்வுகள் போன்றவற்றில் மட்டுமே, தாயாக மக்களில் பெரும்பாலானோர்கள் ஒன்று கூடுகின்றனர். பழைய மாணவர் சங்கம், ஊர்ச்சங்க ஒன்று கூடல் யாவும், ஒரு சிறுவட்டச் சந்திப்புக்களாகவே அமைந்து விடுகின்றன.

இவைதவிர, மாவீரர் தினம், மற்றும் தேச விடுதலைக்கான கவனயீர்ப்புப் போராட்டங்கள் என்பவற்றை, அரசியல் தளத்திலிருந்து முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளாக கருதலாம்.

ஆகவே, இத்தகைய யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, இதைவிட காத்திரமானதொரு சமூக, அரசியல், பொருளாதார, அறிவியல் சார்ந்த தளக் கட்டமைப்பொன்றினை உருவாக்க வேண்டியதொரு வரலாற்றுக் கடமை , புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதனை உணர வேண்டும்.

மாறிவரும் புதிய புவிசார் அரசியலின் நகர்வுகளை, தெளிவாகப் புரிந்துகொள்வதன் ஊடாக, விடுதலையை வென்றெடுக்கும் வழிமுறைகளை, சனநாயகக் கட்டமைப்பொன்றை நிறுவுவதன் மூலம் வகுத்துக்கொள்ளலாம்.
தாயக அரசியலில் தற்போது நிகழ்ந்துவரும் சிதைவுகளையும், பின்னடைவுகளையும் எண்ணிச் சோர்வடையாமல், எம் முன்னே விரிந்து கிடக்கும் சாதகமான தளங்களை இனங்கண்டு, பலங்கொண்டு எழுவதே, புலம்பெயர் ஈழத்தமிழினத்தின் ஒரே தெரிவாக இருக்கும்.

மே 18 இற்குப் பின்னர் , எம்மிடையே உருவான முரண்பாடுகளை களைந்து , மறுபடியும் ஒன்று சேர்ந்து செயற்படக்கூடிய தளமாக இந்த நாடு கடந்த அரசாங்கத்தை பார்க்கலாம். எமது இனத்தை அழிப்பதற்கு , கட்சி வேறுபாடு இன்றி , சிங்கள தேசம் எப்போதும் ஒன்றிணைந்தே இயங்குகின்றது. இந்த வரலாற்றுப் பட்டறிவுச் செய்தியை இனியாவது நாம் உணரவேண்டும்.

நிமிர்ந்தெழுவோம்...... அணிதிரள்வோம்........மீண்டும் நம்பிக்கையுடன் கிளர்ந்தெழுவோம்.

- இதயச்சந்திரன்

Comments