உலக தமிழ் உறவுகளுக்கு மெராக் தமிழ் அகதிகள் கப்பலிலிருந்து ஒரு மடல்

[ [ வீடியோ எழுத்தில் திருத்தம்]கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ]

கப்பல் இடை நிறுத்தப்பட்ட வேளை அவுஸ்திரேலியா ஐ.நாவின் அகதிகள் சாசனத்தில் கையொப்பமிட்ட நாடாகையால் நாம் அவுஸ்திற்ரேலியாவிற்கே செல்வோமென கப்பலை இந்தோனேசியாவிற்கு நகர்த்த மாட்டோமென அடம்பிடித்தோம்.

அந்த வேளையில் அவுஸ்திரேலிய தூதரக அதிகாரியென இந்தோனேசிய கடற்படையால் அறிமுகப்படுத்திய பெண்மணி ஒருவர் எம்மை கரைக்கு வருமாறும் எமக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் வசதிகளை வழங்கி மீண்டும் கிறிஸ்மஸ் தீவிற்கு செல்ல அனுமதிப்பதாக பொய் உறுதி மொழியை வழங்கி கரை செல்ல பணித்தார். அவரின் உத்தரவின் பேரிலும் இந்தோனேசிய அதிகாரிகளின் கட்டாயத்தின் பேரிலும் இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டோம்.

ஆனால் அவுஸ்திரேலியா எங்களுக்கு பதில் தரும் வரை நாங்கள் கப்பலை விட்டு இறங்க மாட்டோமென மறுத்து வருகிறோம். நாம் இந்தோனேசியாவில் இறங்குமிடத்து தடுப்பு முகாமில் வைக்கப்படலாம் அல்லது நாட்டுக்கு திருப்பியனுப்பபடலாம் என்ற பயத்தினாலேயே இறங்க மறுத்து 6 மாத காலமாக குழந்தைகள் சிறுவர் இன்னும் சில நாட்களுக்குள் மகப்பேற்றினை எதிர்பார்த்துள்ள கர்ப்பிணிப் பெண் உட்பட குடும்பஸ்தர் மற்றும் இளைஞர் யுவதிகள் உள்ளிட்டோர் கப்பலில் வாழ்ந்து வருகிறோம்.

அவுஸ்திரேலியா இன்று வரை எமது விடயம் தொடர்பில் இரட்டை வேடம் பூண்டு வருகிறது. முன்னதாக எமக்கு கரிசனை காட்டி வருவதாக தெரிவித்து வந்த போதும் இன்று எமது விடயம் தொடர்பில் கை கழுவி விட்டதாக சமிக்கை காட்டி வருகின்றது.

6 மாத காலமாக பல நோய் நொடிகளுக்கு மத்தியில் கடலில் மிதந்து கொண்டிருக்கும் நாம் சந்தித்த துயரங்கள் சொற்களால் வர்ணிக்க முடியாதவை.

கடந்த டிசம்பர் மாதம் உரிய நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காததன் காரணத்தால் எம்மோடு ஒருமித்து பயணித்த உறவு “ஜேக்கப் சாமுவேல் கிறிஸ்டின் “காலனால் அரவணைத்துச் செல்லப்பட்டார்.

சுதந்திர கனவுகளோடு கப்பலேறிய அப்பாவி இளைஞன் அந்நிய மண்ணில் அநியாயமாக அழிக்கப்பட்டான்.

நாம் எச்சந்தர்ப்பத்தில் அகதிகளாக்கப்பட்டோம் என்ற நியாயப்பாட்டினை எமது உறவுகள் அறிந்துள்ளீர்கள். தமிழ் மக்களாகிய நாம் இலங்கை அரசின் கொடிய ஆட்சியை நிராகரிக்கின்றோமென்பதை அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க மறுத்த 75 வீதத்திற்கு அதிகமான தமிழ் மக்கள் நிரூபித்துள்ளார்கள். எமது கண் முன்னே எங்கள் உடன் பிறப்புகள் அழிக்கப்பட்டனர். உடமைகளை இழந்து சொந்த மண்ணிலேயே அனாதைகளாக்கப்பட்டு இன்று மீண்டும் அகதிகளாக்கப்பட்டோம்.

சுதந்திரத்தையும் சமாதானமான வாழ்க்கையையும் தேடிவந்த நாம் இன்று தண்ணீரில் தவிக்க விடப்பட்டோம். சர்வதேசத்தின் போக்குகளில் கரிசனையில்லாதவிடத்து எம்மை தோள்களில் சுமந்து எமது விடயத்தை வெளிச்சமாக்கி வருகின்ற அவுஸ்திரேலிய, கனேடிய, நியூசிலாந்து மற்றும் பிற நாடுகளின் அகதிகள் ஆர்வலர் பெருந்தகைகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

உங்களுடைய கரம் எம்மை என்றும் பற்றி பிடித்திருக்க வேண்டுமென பணிவுடன் வேண்டி நிற்கிறோம்.

கடந்த 7ந் திகதி இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் யு.என்.எச்.சி.ஆர் பிரதிநிதி மானுவேல் மற்றும் சில இந்தோனேசிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கப்பலுக்கு வந்து எம்மை கப்பலை விட்டு இறங்குமாறு நிர்ப்பந்தித்தார்கள். நாங்கள் திருப்பியனுப்பப்பட மாட்டோம் என்றோ தடுப்பு முகாமில் வைக்கப்பட மாட்டோமென்றோ எதுவித உறுதி மொழிகளையும் வழங்கவில்லை. மீள்குடியேற்றம் தொடர்பிலும் எந்த ஒரு உறுதி மொழிகளும் வழங்கப்படவில்லை. ஒரு பெரிய கட்டிடத்தின் படத்தை காட்டி நாம் தங்குவதற்கான இடம் இதுதானெனவும் உங்களுக்கான சகல வசதிகளையும் பெற்றுத்தருவோமெனவும் குறிப்பிட்ட அவர் அதன் அமைவிடத்தை குறிப்பிட மறுத்து விட்டார்.

உடனடியாக இறங்க மறுத்த நாம் 5நாட்கால அவகாசமொன்றை அவர்களிடம் பெற்றுக்கொண்டோம்.

நாம் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்படுவோமோ அல்லது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவோமோ என்ற அச்சத்தில் இன்று தடுமாறிக்கொண்டிருக்கின்றோம். நாம் நாளையும் இறக்கப்படலாம். இறங்க மறுக்குமிடத்து வலுக்கட்டாயமாக இறக்கப்படலாம். வெளி உலகை தொடர்பு கொள்ள முடியாதவாறு எமது தொடர்பு சாதனங்கள் பறிக்கப்படலாம். இன்னுமோர் மடலை எழுத சந்தர்ப்பம் வழங்கபடுவோமோ என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆகவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் அனைவரது ஒருமித்த குரல்களையும் எமக்காக வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் அனைத்துலக ஊடகங்கள் எமக்கு கரிசனை காட்டுங்கள். உங்கள் நாடுகளிலுள்ள இந்தோனேசிய தூதரங்களிடம் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்துங்கள். உங்கள் நாடுகளில் புகலிடம் பெற்றுத்தருவதற்காக உங்கள் அரசாங்கங்களை வலியுறுத்துங்கள். உங்களாலான உதவிகளை எங்களுக்கு வழங்குங்கள். என்றும் நாம் உங்களுக்கு நன்றியுடையவராக இருப்போம்.

தமிழ் அகதிகள் சார்பில்

மெராக் துறை முகத்திலுள்ள அகதிகள் கப்பலிலிருந்து நிமல்.

Comments