நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளும்

முள்ளிவாய்க்கால் சமரின் பின் இரண்டு நாடளாவிய தேர்தல் திருவிழாக்கள்
முடிவடைந்துவிட்டன. இடம்பெயர்ந்தோர் வாழ்வில், மாறுதல்கள் இல்லை.
யாழ்.குடாவை நோக்கிய உல்லாசப் பயணங்களுக்கு மட்டும் குறைவில்லை.
அரசியல் கோட்பாட்டு மோதலிலும் தமிழ் மக்கள் அக்கறை செலுத்தவில்லை.
குடாநாட்டில் தமிழ்த் தேசியத்திற்கு மக்கள் அளித்த வாக்குகள், நான்கில்
ஒன்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.

Posted   Image
புள்ளிவிபரக் குறுக்கெழுத்துப் போட்டியில் முட்டி மோதும் வல்லுநர்கள்,
அரசியலிலிருந்து அந்நியமாகிப் போகும் பெரும்பான்மையான தமிழ் மக்களின்
விரக்தியைப் புரிந்து கொள்ளவில்லை.

இன்னுமொரு பத்தாயிரம் வாக்குகள் கிடைத்தால், தேசியப் பட்டியலில்
இரண்டு இடங்கள் கிடைக்கலாமென்கிற எதிர்பார்ப்போடு சிலர் காத்திருக்கின்றார்கள்.

இலங்கையின் தேசிய அரசியல் கட்டமைப்பில் தமிழ் வாக்காளர்கள்
நம்பிக்கையிழந்து போகிறார்களென்று யாழ். மாவட்டத்திலிருந்து தெரிவான சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரிப்பது மிக முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விவகாரம்.

2006ஆம் ஆண்டிலிருந்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் மற்றும் சிவநேசன் போன்றோர் கொல்லப்பட்ட நிகழ்வின் எதிர்வினைத் தாக்கங்கள், மக்கள் மனதில் இருந்து இன்னமும் அகலவில்லை.

தம்மால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் உயிருக்கு, பாதுகாப்பில்லை என்கிற போது ஜனநாயக அரசியலின் மீது மக்கள் நம்பிக்கை
இழப்பதனை தவறென்று கூறமுடியாதுள்ளது.

கண்டி மாவட்டத்தில், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் அதன் தலைவர் மனோ கணேசன் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் தொடர்ச்சியாக வன்முறைகள் பிரயோகிக்கப்படுகிறது.

வன்முறைக் கலாசாரத்தின் கொதிநிலை மையமாக நாவலப்பிட்டி மாறி வருகிறது.

ஜனநாயகத்தை நிலைநாட்ட ஏற்பட்ட மோதலில், கண்டி மாவட்டத்தில்
மறுவாக்கெடுப்பு நடத்த தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். ஆயினும் கட்சிகளுக்கிடையிலான மோதல்கள் குறைந்தபாடில்லை. மலையக மக்களின்
நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு பேரினவாதம் விடுக்கும்
அச்சுறுத்தல்களால் தேர்தல் முறைமையின் மீதே தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து போகக்கூடும்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னரும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பதற்றம் நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ். குடாநாட்டில் வீடுகளுள் புகும் வன்முறையாளர்கள், பொருட்களைச் சூறையாடுவதோடு, முதியோர்களை கொன்றொழிக்கும் துயரச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

196 பிரதிநிதிகளுக்காக 22 மாவட்டங்களில் நடைபெற்ற இலங்கையின் ஏழாவது
நாடாளுமன்றத் தேர்தலில் 36 கட்சிகளும், 301 சுயேட்சைக் குழுக்களும்
போட்டியிட்டன.

தேர்தல் களத்தில் குதித்தவர்களின் எண்ணிக்கை 7620. இழந்த கட்டுப்
பணங்கள் திறைசேரியில் குவிந்திருக்கும். கண்டியில், மனோ கணேசன்
படும்பாட்டைப் பற்றி இந்த ஜனநாயகக் காவலர்களிடம் எடுத்துரைக்க எவருமில்லை போல் தெரிகிறது.

தேர்தல் ஜனநாயகத்தால் பாதிப்படைந்தவர் பட்டியலில் பாலித ரங்கே பண்டாரவும் இணைந்துள்ளார். தாக்குதல் தாரிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதும் சம்பவம் நடைபெற்று முடிந்தவுடன் விசாரணைக் கமிஷனை நியமித்து நீதியை நிலைநாட்டப்போவதாக கூறிக் கொள்வதும் மக்களுக்கு சலிப்பைத் தரும் விவகாரமாகிவிடும்.

செம்மணிப் படுகொலைகள் விசாரணைக்கு என்ன நடந்தது என்பது குறித்து எவருக்குமே தெரியாது. காலத்தை இழுத்தடித்தால் மக்கள் மறந்து விடுவார்கள் என்கிற ஞாபக சக்தியை பரிசோதிக்கும் வழிமுறையைத் தான் பல ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கிறார்கள் போல் தெரிகிறது.

புத்தாண்டு வாழ்த்துக் கூறிய ஹிலாரி கிளின்டனும், ஜனாதிபதிக்கு நல்வாழ்த்துச் சொன்ன றொபர்ட் ஓ பிளேக்கும், இடம்பெயர்ந்து அவலப்படும் இலட்சக் கணக்கான தமிழ் மக்களின் நிலை குறித்துப் பேச மறந்து விட்டார்கள்.

13ஆவது திருத்தச் சட்டம் பற்றியும் அதிகாரப் பரவலாக்கம் குறித்தும் பேசுவதே அமெரிக்க அரசு, இலங்கை மீது செலுத்தும் அதிகபட்ச அழுத்தமாகவிருக்கிறது.
ஐ.நா.வின் மனித உரிமை நிபுணர் குழு அமைக்கும் இராஜதந்திர நகர்வுகளெல்லாம் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளோடு மூச்சிழந்து போயுள்ளதை அவதானிக்க வேண்டும்.

இத்தேர்தலில் பேரினவாதச் சக்திகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக புதிய கண்டுபிடிப்பொன்றையும் றொபர்ட் ஓ பிளேக் வெளியிட்டுள்ளார்.
இழப்பதற்கு ஏதுமற்ற இடம்பெயர்ந்த தமிழர்களும், தாயக மண்ணைத் தினமும் பறிகொடுத்துக் கொண்டிருக்கும் கிழக்கு மக்களும், ""கிடைப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்''

என ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவல மேத்தானந்த தேரர் கூறும் அறிவுரைகள், அமெரிக்க காதுகளுக்கு எட்டவில்லை போல் தெரிகிறது.

பிராந்திய நலன்களுக்கூடாக இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையை தரிசிக்கும் கழுகுக் கண்களுக்கு ஆட்சியாளர்கள் எல்லோரும் முற்போக்காளர்களாகத் தெரிவதில் வியப்பேதுமில்லை.தென்னாசியப் புவிசார் அரசியலில் கேந்திர முக்கியத்துவமிக்க மையமாக, இலங்கைத் தீவு மாறி வருவதை இந்தியாவும் அமெரிக்காவும் புரிந்து கொண்ட அளவுக்கு நம்மவர்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவில்லை.

இந்திய ஆய்வாளர் பி.இராமன், இந்த வாரம் எழுதிய கட்டுரையொன்றில் இலங்கையில் சீனத் தலையீடு குறித்த நீண்ட புள்ளி விபரப்பட்டியலொன்றை முன்வைத்துள்ளார்.

கை மீறிச் செல்லுமளவிற்கு சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்திருப்பதாக அவர் எச்சரிக்கிறார்.

இந்திய நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிப்பதனூடாக, சந்தைகளை கையகப்படுத்துவதே தற்போதைய நிலையில் இந்தியாவிற்கு இருக்கும் ஒரே தெரிவாக இராமனின் ஆலோசனை அமைகிறது.

அதாவது, சிங்கள தேசத்தின் நீண்டகால நிரந்தர நண்பன் யாரென்பதை
அறுதியிட்டுக் கூறும் காலமாக இருக்கும் இனிவரும் நாட்கள் பல செய்திகளை
உலக வல்லரசாளர்களுக்கு உணர்த்தப் போகிறது.

பிராந்திய நலன் குறித்த ஆதிக்கப் போட்டியில், அமெரிக்காவோடு தற்காலிக
கூட்டிணைவு தந்திரோபாயத்தை இந்தியா மேற்கொண்டாலும் இறுதிப் பிடிமானமும் விரைவில் தகர்ந்து போகும்.(ஙுதச்ண) நாணயத்தின் பெறுமதியை மீள் மதிப்பீடு (கீஞுதிச்டூதஞு ) செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விடுத்த எச்சரிக்கை கலந்து வேண்டுதலையும் சீன ஜனாதிபதி நிராகரித்து விட்ட விவகாரம் இங்கு நோக்கப்படல் வேண்டும்.

அது மீள் மதிப்பீடல்ல, மாறாக நாணய மதிப்பிறக்கம் என்பது சீனாவுக்கு
நன்றாகப் புரியும். நாணயத்தை மதிப்பிறக்கம் செய்தால் திறைசேரியில் இருக்கும் ஏறத்தாழ 2 ட்ரில்லியன் (கூகீஐஃஃஐON) அமெரிக்க டொலர்களின் மொத்த
பெறுமதி வீழ்ச்சியடையும்.

தன் தலையில் மண் அள்ளிப்போடும் யானையாக சீனா இருக்க விரும்பாதென்பதை அமெரிக்காவும் புரிந்து கொள்ளும்.இந்நிலையில் முரண்பாடுகளாக இருந்தாலும் சரி, அல்லது பொருளாதார உறவு நிலையாக இருந்தாலும் சரி, அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் அதிகப்படியான புவிசார் இராஜதந்திர நெருக்கம் சீனாவை நோக்கியே நகர்கிறது.

இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பலம்பெறுவதும், சீனாவின் ஊடாக மேற்குலகின் ஆதரவைப் பெறுவதும் இந்தியாவிற்கு பல நெருக்கடிகளை
உருவாக்கலாம்.

தமிழ் மக்களின் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற அரசியல் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தியாவின் உதவியை நாடி நிற்கிறது.

அதேவேளை, மேற்குலகில் அதிகமாக வசிக்கும் புலம்பெயர் ஈழத் தமிழ் மக்கள்
ஒன்றிணைந்து மே 2 இல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமொன்றினை
உருவாக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இரு துருவ அணிகளை ஒரு புள்ளியில் கையாளும் சிங்கள தேசத்தின்
இராஜதந்திரம் போன்று, தாயக புலம்பெயர் மக்களும் புதிய மூலோபாயத்தை வகுக்கலாம்.அது மேற்குலக மற்றும் இந்திய சமன்பாட்டில் அமைவது தவிர்க்க
முடியாததாக இருக்கும்.

-இதயச்சந்திரன்-
நன்றி -வீரகேசரி வாரவெளியீடு

Comments