சிறுவர்கள் மீது சிறீலங்கா அரசு புரிந்த போர்க்குற்றங்களையும் உலகம் மறந்துவிட்டதா?

தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்ட இனவாத போர்க்குற்ற நாளாக எதிர்வரும் 18 ஆம் நாளை கடைப்பிடிக்க உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த பிரதேசங்கள் மீது சிறீலங்கா அரசும் அதன் கூட்டணி நாடுகளும் இணைந்து மேற்கொண்ட கொடூரமான போரில் பல ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அதன் ஓராண்டு நிறைவை தமிழ் மக்கள் கவலைகளுடனும், கண்ணீருடனும் நினைவுருகின்றனர்.

அனைத்துலக சமூகத்தின் கோரிக்கைகளையும் புறக்கணித்தவாறு சிறிலங்கா அரசு கனரக ஆயுதங்களை மக்கள் செறிவாக வாழ்ந்த பிரதேசங்கள் மீது அதிகம் பயன்படுத்தியிருந்தது.

பல ஆயிரம் சிறுவர்களையும், பெண்கணையும், நோயாளிகளையும் படுகொலை செய்ததுடன், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு, மருத்து விநியோகங்களையும் சிறிலங்கா அரசு நிறுத்தியிருந்தது.

போரில் கடைப்பிடிக்க வேண்டிய மனிதாபிமான விதிகள் அனைத்தையும் சிறீலங்கா அரசு புறம்தள்ளியிருந்தது. இந்த போரின் அவலம் தொடர்பில் மனிதாபிமான பணியாளர் ஒருவர் எடுத்த 512 புகைப்படங்களில் 14 புகைப்படங்களை தமிழ்நெற் இணையத்தளம் இன்று வெளியிட்டுள்ளது.

இந்த படங்களை எடுத்த தமிழ் மனிதநேயப்பணியாளர் போர் நிறைவடைந்த பின்னர் சிறிலங்காவை விட்டு வெளியேறியிருந்தார்.

தமிழ்வாணி ஞானகுமார் என்பவரே இந்த புகைப்படங்களை எடுத்திருந்தார். அவர் உயிரியல் மருத்துவத்துறை பட்டதாரி, பிரித்தானியா குடியுரிமை பெற்ற அவர் இறுதியாக நடைபெற்ற போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்கான நேரிடையான சாட்சியுமாவார்.

Comments