கனடாவில் கைதானவர் தாம் புலிகளுக்கு நிதிசேகரித்ததை ஒப்புக்கொள்கிறாராம்

கனடா நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வேண்டிய நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் என்று 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட பிரபாகரன் தம்பித்துரை என்பவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் என அறியப்பட்டுள்ளது. தம்பித்துரை தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவுள்ளார் என்றும் அவருக்கான தீர்ப்பு தயாராக இருக்கும் என்றும் கனடா நீதிமன்று கூறியுள்ளபோதும், அவர் எவ்வாறு தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள உள்ளார் என்பதை யாரும் சரிவரக் குறிப்பிடவில்லை. தம்பித்துரை நீதிமன்றில் வந்து தனது வாக்குமூலத்தைக் கூறுவதைக் காணும்வரை இதுகுறித்து ஒன்றையுமே உறுதியாகக் கூறமுடியாது என கனடாவின் பொது சட்ட சேவைக்கான பேச்சாளர் கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தம்பித்துரை மீது குற்றம் சாட்டப்பட்டபோது, அவருக்காக வாதாடிய வக்கீல் அவர் உலகத் தமிழர் இயக்கம் என்ற நிறுவனத்துக்காகவே நிதி சேகரித்தார் எனக் கூறினார். இந்நிறுவனம் கனடாவில் தடை செய்யப்படவில்லை. இதுவொரு மனிதாபிமான தொண்டு நிறுவனம் என அவர் வாதாடினார். ஆனால் இந்த நிறுவனமும் புலிகளுக்கு ஆதரவான நிறுவனம் என்று போலீசார் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதேவேளை, கனடாவில் புலிகளுக்கு நிதிசேகரிப்பைத் தடைசெய்யவேண்டும் என்பதற்கு பல முயற்சிகளை எடுத்துவரும் கனடா சட்ட அமுலாக்கல் சமூகமானது இந்த வழக்கை வெகு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. தம்பித்துரை நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பித்துரை தனது குற்றத்தை ஏற்றுக்கொள்ளும்போது அவருக்கு குறைந்த தண்டனை வழங்கப்பட்டால், பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கும் சட்டமானது பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகும். இதேவேளை குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதானது சட்டத்திலுள்ள பலவீனத்தைக் காட்டுவதாக ரொரண்டோவில் இயங்கும் பயங்கரவாதம், அரசியல் தீவிரவாதம் மற்றும் குற்றங்கள் குறித்துக் கவனமெடுக்கும் நிறுவனமான மக்கென்ஸீ இன்ஸ்டிடியூட்டின் தலைவர் ஜோன் தொம்சன் கூறியுள்ளார்.

குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு ஒருவரிடம் பேரம்பேசுவதானது, சட்டமானது தான் நினைத்தது எதுவோ அந்தப்பாதையில் மட்டுமே பணியாற்றுகிறது என்பதைக் குறிப்பதாக ரொரண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் வெஸ்லி வார்க் கூறியுள்ளார். புலிகளுக்கு பணம் கொடுத்தவர்களைக் கண்டுபிடிப்பதல்ல சட்டத்தின் நோக்கம். அது புலிகளைப் பற்றியோ அல்லது அதுபோன்ற பிற குழுக்களைப் பற்றியோ பலரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுபோலத் தொழிற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Comments