மானுடம் மாண்ட மாதம்

"சுதந்திர" இலங்கையின் அரசியல் வரலாறு, சற்று விசித்திரமானது!

அது, காலத்துக்குக் காலம், அங்கு வாழும் சிறுபான்மை இனத்தின் மீது நடாத்தும், வன் கொடுமைகளால் நிரம்பியது என்றால் மிகையல்ல!

1948 ல் அந் நாடு தன்னை, ஆங்கிலேயர்களது அரசியல் ஆதிக்கத்தில் இருந்து விடுவித்துக் கொண்டது! அதுவரை, ஆங்கில அரசின் அடிமைகளாக வாழ்ந்த ஈழத் தமிழர்கள், தங்கள் எஜமானர்களை அப்போது மாற்றிக் கொண்டார்கள். வெள்ளைத் தோல் ஆங்கிலேயர்களுக்குப் பதிலாக தம்மைப் போன்று நிறமும்,தோற்றமும் கொண்ட ஆனால் மொழியால் (இனத்தால்) வேறுபாடு கொண்ட சிங்களர்கள் அவர்களது புதிய எஜமானர்களாக மாறிவிட்டிருந்தார்கள்.

Hidden_Massacre_TamilNational_03




அதற்கு ஜனநாயகம் என்னும் பெயரில் நவீன உலகு ‘கண்டுபிடித்த’-- பெரும்பான்மை மக்களின் உரிமைகளையும், கலாச்சாரத்தையும் சிறுபான்மையாக உள்ளவர்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் என்னும்- ‘சித்தாந்தம்’ வழிகோலியிருந்தது.

இந்தப் புதிய அரசியல் கோட்பாட்டின்படி, அறிவியலின் பிரமாண்டமான வளர்ச்சியினால், இன்று ஓர் கிராமம் போன்று குறுகி விட்டிருக்கும் உலகிற்குப் புதிய எஜமானர்களாக, உலகில் மிக அதிக மக்கள் தொகையினைக் கொண்ட சீனாவின் மொழியும், காலச்சாரமுந்தான் இருக்கவேண்டும் என்றாகிறது! அதனையே, ஏனைய மொழிபேசுபவர்களும், இனங்களும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு அடங்கிப்போக வேண்டும்! அதுதான் உலக ஜனநாயகத்துக்கு உதாரணம் என்று நான் கூறினால் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!

எனவே, அடிப்படையில் முரண்பாடுகளைக் கொண்டிருக்கும், பெரும்பானமைக்கே முன்னுரிமை என்னும் அரசியல் கோட்பாட்டினால், ஈழத் தமிழர்கள் வஞ்சிக்கப் பட்டார்கள் என்பதுதான் உண்மை.

அந்த உண்மை, இலங்கை சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்ட அடுத்த வருடமே, இலங்கையின் நாடாளுமன்றத்தில் ‘ஜனநாயக’ ரீதியில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் மூலம்.வெளிச்சத்துக்கு வந்தது! 1840 ம் ஆண்டு முதல் அந் நாட்டின் மலையகத்தை வளப்படுத்தி அதன் பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் இருந்த ‘இந்திய வம்சாவழித் தமிழர்கள்’ சுமார் ஒரு நூற்றாண்டின் பின்னர் 1949ல்,அந்த மண்ணிற்கு உரிமையற்றவர்களாய் ஆக்கப்பட்டார்கள். அவர்கள் ‘தமிழர்கள்’ ஆக இருந்ததே அதற்குக் காரணமாகும்.

ஆனால், இலங்கை சுதந்திரம் பெற்றுச் சுமார் ஒன்பது வருடங்களின் பின்னர், 1957 ல் ஆங்கில அரசிடமிருந்து விடுதலை பெற்ற மலேசியாவில், சுதந்திரத்துக்கு முன் அந்த மண்ணில் பிறந்த அனைவருமே குடியுரிமை பெற்றார்கள். சிங்கப்பூரிலும் இதே நிலைதான்!

இன்று இந்த நாடுகளின் வளமும், அவற்றின் நாணயங்களுக்கு ஈடாக இலங்கை நாணயம் கொண்டிருக்கும் மதிப்பும் எத்தகையது என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

1958ல், 1960ல், 1977ல், 1983ல் மிகப்பெரிய அளவில் தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் அந் நாட்டில் இடம்பெற்றிருக்கின்றன.

1981 ஜூனில், யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்ட நிகழ்வு, ஆட்சியாளர்கள் எவ்வளவு தூரம் தமிழர்கள் மீது காழ்ப்புணர்வுடன் செயற்பட்டார்கள் என்பதை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டிய சம்பவம் எனலாம்.

அதனைத் தொடர்ந்து 1983ல் இடம்பெற்றதுதான், கறுப்பு யூலை என அழைக்கப்படும் பாரிய இன அழிப்பு நடவடிக்கைகள்.

இதன் காரணமாகத்தான் "இந்திரா காந்தியின் அரசு" ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிட்டவேண்டுமாயின், அங்கு தமிழர்கள் அரச அடக்குமுறைகளுக்குப் பலியாகும் நிலையைத் தவிர்ப்பதற்கு அவர்களும் ஓரளவு "பலத்துடன்" இருப்பது அவசியம் என்பதை உணர்ந்தது. அதன் தொடர்ச்சியாகவே பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சியை வழங்க முன்வந்தது.

ஆனால், அதே இந்தியா இன்றைய சோனியாவின் தலைமையில், சென்ற வருடம் மே மாதம் இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைகளைச் சர்வதேசம் கண்டித்தபோது, அதற்கு எதிராக, தனது தோழமை நாடுகள் சிலவற்றின் உதவியோடு, குற்றமிழைத்த ஸ்ரீலங்கா அரசின் செயல்களுக்கு முட்டுக்கொடுத்தது!

காந்தியின் தேசம் என்னும் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்திய இந்தச்செயல் மனிதாபிமானம் மிக்க எவராலும் இலகுவில் ஜீரணிக்க இயலாதது.

vanni-avalam



இதில், மிகப்பெரும் முரண்பாடு யாதெனில், அரசியலில் அன்புடமை(அஹிம்சை)த்தத்துவத்தைக் கடைப்பிடித்து இந்தியாவுக்குச் சுதந்திரத்தினைப் பெற்றுக்கொடுத்தவர் மகாத்மா காந்தி என்றால் ஏறத்தாள இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே உலகினுக்கு அஹிம்சா தத்துவத்தைப் போதித்த புத்தரைப் போற்றும் நாடு இலங்கை! அந்த அஹிம்சாமூர்த்தியின் நினைவைப் போற்றும் விசாக தினம் ( வெசாக் பண்டிகை) கொண்டாடப்படும் மே மாதத்தில், அந் நாட்டின் அரசு நடாத்திய 'நர வேட்டைக்கு எல்லாவகையிலும் உதவி செய்து அதற்கான ‘புகழை’த் தன தாக்கிக் கொண்டது இன்றைய இந்தியத் தலைமை!

உயிர்கள் அனைத்திற்கும் அன்பே தெய்வீகத்தைத் தரும் என்னும் மானுட நேயத்தைப் போதித்த புத்தரைப் போற்றும் நாடு, பல்லாயிரம் (தமிழ்) உயிர்களை வெந்தீக் குண்டுகளால் எரியூட்டி அழிக்க, அரசியலில் அன்புடமையால் வெற்றிகண்ட காந்தியின் தேசம் அக்கொடூரத்துக்குத் துணைபோன அவலம் மானுட வரலாறு காலந்தோறும் நாகரீக முதிர்ச்சி பெற்றுவருகிறது எனத் ‘தம்பட்டம்’ அடித்துக்கொள்ளும். இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தத்தில் நடைபெற்றிருக்கிறது!

முதல் முப்பது வருடங்கள் அறவழி அரசியல் போராட்டங்களில் ஈடுபட்ட ஈழத்தமிழர்கள், காலப் போக்கில் ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய சமயத்தில், இந்தியா உட்பட உலக நாடுகள் யாவும்’ அரசுகளிடையே’ வர்த்தக நோக்கில் மட்டும் செயலாற்றுவதைப் புறந்தள்ளிவிட்டு மனித உரிமைகள் இன உணர்வுகள் இன ஒதுக்கல்கள் குறித்துக் கவனம் செலுத்தியிருப்பின் இப்போது நிகழ்ந்த இன அழிவையும். மனித அவலங்களையும் தவிர்த்திருக்கலாம்.

ஏன், இன்றுங்கூட ஈழமண்ணில். புத்த ஆலயங்களும் அரச படைப்பயிற்சி நிலையங்களும் உருவாகும் வேகத்தில். வீடிழந்து தமது உறவுகளைப் பறிகொடுத்து எதிர்காலம் குறித்த கவலைகளோடும். பயத்தோடும் வாடும் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு உரிய உதவிகள் கிட்டவில்லை என்பது வேதனையானது.

இம் மனிதாபிமானத் தேவைகள் குறித்துச் சிறிதும் கவலை கொள்ளாது, இன்றைய ஸ்ரீலங்காவின் தென்பகுதியினைச் சீனாவும் வட பகுதியினை இந்தியாவும் தங்கள் அரசியல் தளங்களாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதை; இலங்கையின் அரசியலைக் கூர்ந்து கவனித்து வருபவர்கள் புரிந்து கொள்ளமுடியும்.

ஒற்றுமைக்கான வழிகளா?

இன்று இலங்கையின் அதிபர் தொடங்கி அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல் வாதிகள்வரை, ’தமிழ்ப் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி இலங்கையரான நாம் பேதங்களை மறந்து ஒற்றுமையாக இருப்போம்’ என்றே சொல்கிறார்கள்.

உண்மையான ஒற்றுமை ஏற்படுவதற்கான வழிகளை அவர்கள் மேற்கொள்கிறார்களா என்றால்…. அது தான் இல்லை!

ஒருவர் உணர்வினை மற்றவர் புரிந்துகொண்டு செயல்படும் பண்பு இருந்துவிட்டால் அங்கு, பேதங்கள் படிப்படியாக மறைந்துவிடும். அதிலும், ஆளும் வாய்ப்பினைப் பெற்றிருப்போர், குடிமக்களது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதன் மூலமகவே "நல்லாட்சியை" வழங்க முடியும்.

ஆனால், இலங்கையில், இன்று நடப்பது என்ன ?

சென்றவருடம், உலக நாடுகளின் நேரடி-மற்றும் மறைமுக உதவியுடன், ஓர் விடுதலைப் போராட்டத்தினைப் "பயங்கரவாத முத்திரை" குத்தி அடக்கி அழித்தாயிற்று!

அதற்கான "வெற்றி விழா"க்களும் ஏக விமரிசையுடன் கொண்டாடப்பட்டன.

அடுத்து இடம்பெறவிருந்த தேர்தல் திருவிழாவில் வெற்றிக்கனியைப் பறிப்பதற்கு இவை அவசியமானவையாக இருந்திருக்கலாம்.

அதன் பின், வெற்றியைத் தனதாக்கிக் கொண்ட ராஜபக்‌ஷேயும் அவரது கட்சியும், நாட்டின் மக்கள் எல்லோரும் ஒன்றே என்னும் சம நோக்கினை தாம் மட்டுமல்ல ஏனையோரும் உணரும் வண்ணம் செயல்படுவதுதானே, அரசுக்கு அழகு !

ஆனால் ,இந்த அரசோ, சென்றவருடப் போரில் சீரழிந்து கிடக்கும் தமிழர்களது உள்ளங்களைக் கவர்வதற்குப் பதிலாக, இந்த மே மாத மூன்றாம் வாரத்தை "வெற்றி வாரம்" எனக் கொண்டாடுகிறது.

பெரும் பான்மையான தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர் கூட்டணி மே 18 ஐ தமிழரது துயர நாளாக அறிவிக்கிறது!

அவ்வாறாயின், சிங்கள அரசு உண்மையில் வெற்றி கொண்டது தமிழரின் அரசினையா என்னும் கேள்வி, அரசியல் வரலாறு புரியாத குடிமகனின் உள்ளத்தில் கூட எழுவதைத் தவிர்க்க முடியாது.

அவ்வாறிருப்பினும், மகாவம்சம் போற்றும், சிங்கள அரசனான துட்டகெமுனு; தன்னால் வெற்றிகொள்ளப்பட்ட தமிழ் மன்னன் எல்லாளனுக்கு உரிய மதிப்பளித்து, அம்மன்னனின் சமாதியைக் கடக்கும் போதெல்லாம் அதற்குரிய மரியாதையை வழங்கியதாகவன்றோ குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போதுள்ள, அரசோ, போராளிகளின் நினைவிடங்களையெல்லாம் இடித்தழிக்கிறது.இவ்வாறு அழிக்கப்படும் இடங்களில், இப்போது அரசோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சில தமிழ்த் தலைவர்களோடு சேர்ந்து முன்பு அரச படைகளுக்கு எதிராகப் போராடியவர்களது ’வித்துடல்’ நிறந்த ‘பேழைகளும் அடக்கம் என்பதுதான் வேதனையிலும் வேதனை!

இதனை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில், ஈழ நேசனில், பஞ்சாங்கம் பற்றிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓர் விளக்கம் மனதில் எழுகிறது. அதில் ஓரிடத்தில், ‘மாதங்களின் பெயர்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய விபரம் உள்ளது.

அதே போன்று, இலங்கை அரசின் தமிழின விரோத நடவடிக்கை களுக்கும், மாதங்களுக்கும் இடையேயும் தொடர்பினைக் காணமுடியும் என்றே படுகிறது!

மே மாதம் - வலிசுமந்த (மானுடம் மாண்ட) மாதம்

ஜூன் மாதம் - நூலக எரிப்பு மாதம்

ஜூலை மாதம் - கறுப்பு (ஜூலை)மாதம்

ஓகஸ்ட் மாதம் - (ஆவணி) அமளி மாதம்

ஏனைய மாதங்களை நிரப்பும் வாய்ப்பினை வாசகர்களிடம் விட்டுவிடுகிறேனே!

- “சர்வசித்தன்”

Comments