தனக்கு தரும் உணவில் நஞ்சு கலக்க ஏற்பாடு செய்வதாக நளினி குற்றச்சாட்டு

தான் சாப்பிடும் உணவில் மருந்து கலக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை தலைவருக்கு வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி நளினி கடித‌ம் எழு‌தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் சிறைத்துறை தலைவருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அக்கடித‌த்‌தி‌ல்,"கடந்த புதன்கிழமையில் இருந்து புது குற்றவாளி தொகுதியில் இருந்த எல்லா விசாரணை கைதிகளையும் பழைய குற்றவாளி தொகுதிக்கு மாற்றிவிட்டனர். தற்போது புது குற்றவாளி தொகுதிகள் 2, 3, 4, 5, 7, 8 ஆகியவற்றில் 200 பேர் அடைக்கக்கூடிய இடம் காலியாக உள்ளது.

இதில் 6ஆவது தொகுதியில் நான் மட்டுமே இருக்கிறேன். எனக்கு 'ஏ' வகுப்பு இருப்பதால் ஒரு உதவியாளர் தந்திருக்க வேண்டும். ஆனால், எனக்குத் தரவில்லை. புது குற்றவாளி தொகுதியைக் கடந்த 21.4.2010 முதல் பெருக்கவோ, சுத்தம் செய்யவோ யாரையும் அனுமதிக்கவில்லை. அந்த தொகுதிக்கான வார்டன் முதல் தளத்துக்கு வரவோ, அங்கு வேலை செய்யவோ தடை செய்யப்பட்டுள்ளது.

இது தவிர காலை, மாலை என்று என்னுடனே சமையல் அறையிலும், தொகுதியிலும் பணியில் இருக்கும் பெண் காவலர்கள் என் உணவில் மருந்து கலக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

உணவை மறுப்பதற்கு கடும் முயற்சி செய்தும் பலன் இல்லை. இரவில் கே.சி.லட்சுமி என்ற உதவி ஜெயிலர் வருகிறார். இவர்களாக எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து என் தொகுதியில் போட்டு விட்டு என்னை சோதனை செய்து எடுத்ததாகச் சொல்ல நிறைய வாய்ப்புகள் உண்டு " எ‌ன்று நளினி எழுதியுள்ளார்.

Comments