முரண்பாடுகளை அவதானித்தலும் முன்நோக்கி நகர்தலும்

பிரித்து ஆக்கிரமித்தல் அல்லது பிரித்து ஆளுதல் என்கிற வழிமுறைகளே, வளர்ச்சியடையும் நாடுகள் மீது, பெரும் வல்லரசாளர்கள் பிரயோகிக்கும் உத்தியாக அமைகிறது. சீனா குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்திய அரசறிவியலாளரான பாஸ்கர் ரோய் "தந்திரோபாயத் தலையீட்டுக்கு தயாராகிறதா சீனா'' என்ற தலைப்பில் பிரித்து ஆக்கிரமிக்கும் வழிமுறையில் சீனா நகரப் போவதாக எச்சரிக்கிறார்.

நீண்ட சீனப் பெருஞ்சுவர் போன்று, தமது நில ஆதிபத்தியத்திற்கு அப்பால், கடலாதிக்கத்தை விரிவுபடுத்த தனது பேராளுமைதாகத்தினை எவ்வாறு அது முன்னெடுக்கப் போகிறது என்பதனை அவர் விளக்குகிறார். சீனாவின் அயல் நாடுகளில் உருவாகியுள்ள குழப்பகரமான நிலைமைகள், எதிர்மறையான விளைவுகளை, சீன நிலப் பரப்பில் ஏற்படுத்திவிடுமென்கிற பதற்றம் சீன ஆட்சியாளர்களுக்கு இருப்பதாக அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

சீனாவின் கடலாதிக்க நகர்வுகளை விட, அதன் இறைமையுள்ள ஒருமித்த நிலப் பரப்பில் ஏற்படும் மாற்றங்களையே, இந்திய ஆய்வாளர்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றார்கள். கடந்த ஏப்ரல் மாதம், சீனாவின் வட மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிர்கிஸ்தான் நாட்டில் எதிரணியினரின் கிளர்ச்சியால், அதன் ஜனாதிபதி குர்மான்பெக் பகியெவ் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அங்குள்ள சீன வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டு பெருந்தொகையான சீன வியாபாரிகளின் நிலைமை மோசமடைந்தது.

ஆனாலும் இக் கிளர்ச்சியின் பின்னணியில் நின்று தொழிற்பட்ட வல்லரசுச் சக்திகள், எதுவாக இருக்குமென்கிற சந்தேகம் இன்னமும் நீடிப்பதைக் காணலாம். எல்லை கடந்த சீனாவின் பிரித்து ஆக்கிரமிக்கும் தந்திரோபாயத்திற்கு எதிராக அமெரிக்காவும் ரஷ்யாவும் இதில் செயற்படுவதாக சீன ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். அயல் நாடுகளில் வாழும் சீனர்கள் ஊடாக தமது தந்திரோபாய நலன்களை உறுதி செய்யலாமென்று சீனக் குடியரசு நம்புவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2005 ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 15 ஆம் திகதிவரை ஆட்சி புரிந்த, ஜனாதிபதி பகியெவ் , கிர்கிஸ்தான் நாட்டிலுள்ள அமெரிக்காவின் மனாஸ் விமானப் படைத்தளத்தை அகற்றுவதற்கு 2 பில்லியன் டொலர்களை ரஷ்யாவிடமிருந்து கடனாகக் கேட்டாராம். ஜனாதிபதி பகியெவின், வெட்டி ஒடும் அரசியலைப் புரிந்து கொண்ட அமெரிக்கா, ஆண்டுதோறும் வழங்கிவரும் விமானப் படைத் தளத்திற்கான வாடகையை 17 மில்லியனிலிருந்து 60 மில்லியன் டொலர்களாக அதிகரித்து ரஷ்யாவின் இடைச் செருகலை முறியடித்தது.

இவ்விரு வல்லரசுகளுக்கிடையே நிகழும் பனிப் போரில், தமது பொருண்மிய ஆக்கிரமிப்பு நலன்கள் வலுவிழந்து போகலாமென்கிற ஆதங்கமே, சீனாவிடம் மேலோங்கியிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். சீனாவின் சுயாட்சி மாநிலமான ஸிங்ஜியாங்இல் தனி நாட்டிற்கான போராட்டம் வலுவடைகிறது. இதன் தலைநகரான உரும்கிலில் அண்மையில் நடைபெற்ற கிளர்ச்சி இன்னமும் தணிவடையவில்லை.

தனிநாட்டுப் போராட்டத்தில் குதித்துள்ள உய்கர்ஸ் இனத்தைச் சார்ந்த அரை மில்லியன் மக்கள் கிர்கிஸ்தானில் வசிக்கின்றார்கள். ஸிங்ஜியாங்கில் ஏற்பட்டுள்ள அரசியல் போராட்டம், கிர்கிஸ்தானிலும் சிக்கல்களை உருவாக்கி விடுமோவென்கிற அச்சம் சீன ஆட்சியாõளர் மத்தியில் காணப்படுகிறது. அதாவது கிர்கிஸ்தானிலிருந்து நிலத்தடி குழாய் மூலம் எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை சீனாவிற்கு கொண்டு வரலாம் என்ற திட்டத்திற்கு அங்கு நிலவும் அரசியல் நெருக்கடிச் சூழல் எதிர்மறையாக அமைந்து விடலாம்.

முதலீட்டு வர்த்தக உறவுகளின் ஊடாக, பொருளாதார ஆக்கிரமிப்பினை, அண்டைய நாடுகளில் நிலவும் சீனாவின் தந்திரோபாயத் தலையீட்டிற்கு அங்கு நிலவும் பதற்ற நிலைமை சாதகமாக இருக்கப் போவதில்லை. சீனாவின் எல்லைப்புற நாடான மொங்கோலியாவில் அரசுக்கெதிரான கிளர்ச்சி வலுப்பெறுகிறது. சீனாவின் நட்பு நாடான வட கொரியா மீது, பொருளாதாரத் தடை விதித்துள்ள மேற்குலகம், அந்நாட்டின் அணு ஆயுத இருப்பு தொடர்பான விவகாரங்களை முன்னிலைப்படுத்தி, சர்வதேச அரங்கிலிருந்து அதனைத் தனிமைப்படுத்த முற்படுகிறது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கான நிலத் தொடர்புள்ள நாடாக விளங்கும் மியன்மாரில் (பர்மா), அந்நாட்டுடனான அமெரிக்க உறவு வலுவடையும் அதேவேளை, பர்மிய இராணுவ உயர் பீடத்தில் சீனாவின் மீதான நம்பகத்தன்மை குறைவடைகிறது என சுட்டிக் காட்டப்படுகிறது. அதேபோன்று அருணாசலப் பிரதேச உரிமை கோரல்கள், திபேத்தின் ஆன்மிகத் தலைவர் தலைலாமாவிற்கு இந்தியா வழங்கிய அரசியல் அடைக்கலம் போன்றவை இந்திய சீன உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இவை தவிர இந்திய எதிர்ப்புவாதத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, நேபாளத்தில் ஒரு வகையான கயிறு இழுப்புப் போட்டியில் சீனா ஈடுபடுவதாக இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நம்புகின்றனர். பிரிவினைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் என்கிற மூவகை வாதங்களும் தமது நாட்டிற்குள் ஏதோவொரு வடிவில் புகுத்தப்பட்டுள்ளதாக கற்பிதம் கொள்ளும் சீனா, இதன் மூல வேர்களையும் பின்னின்று தொழிற்படும் சக்திகளையும் நன்கறியும். ஆனாலும் மற்றவர்களின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்கிற சீனாவின் கொள்கை நிலைப்பாட்டில் இனிவரும் காலங்களில் மாறுதல்கள் ஏற்படுமென்பதை பலரும் எதிர்பார்க்கின்றார்கள்.

அவ்வாறு மாறுவது, தமது நலனுக்கும் இறுகியுள்ள அரசியல் சூழலைத் தளர்த்துவதற்கும் தோதாதாக அமையுமென்பதை மேற்குலக பிராந்திய வல்லரசாளர்களின் எதிர்பார்ப்பு. இவை எவ்வாறு இருப்பினும் நேரடியான இராணுவ மோதல்களுக்கான ஏதுநிலையை உருவாக்காமல், பொருளாதார தலையீடுகளுக்கு ஊடாகவும் கடற்படைப் பலத்தை அதிகரிபதன் மூலமும் ஒரு வகையான அரசியல் இராணுவச் சமநிலையை உருவாக்கலாம் என்பதே சீனாவின் மூலோபாயமாக அமைகிறது.

இந்தியாவைச் சுற்றி, துறைமுக அபிவிருத்தி முத்துக்களைக் கோர்த்து அதன் அடுத்த கட்டமாக இராணுவத் தளங்களை நிறுவுவதே, சீனாவின் உத்தியாக இருக்குமென்று இந்திய ஆய்வாளர்கள் திடமாக நம்புகிறார்கள். டிசம்பர் 2008 இலிருந்து ஏதென் வளைகுடாவில் தொடரும் சீனக் கடற்படையினரின் பிரசன்னம், இந்த சந்தேகங்களை தோற்றுவிக்கிறது. இவை தவிர அமெரிக்காவின் புகழ்பெற்ற அரசறிவியலாளரும் இராணுவ ஆய்வாளருமாகிய றொபேர்ட் கப்லானின் சீனா குறித்து பார்வையையும் சற்று நோக்க வேண்டும்.

இந்திய ஆய்வாளர்கள் போலல்லாது, கப்லானின் ஆய்வில், கடல் தாண்டி நிலை கொண்டுள்ள ஆசிய நாடுகளும் சீனாவைச் சூழவுள்ள தென் சீனக் கடல், வட பசுபிக் பிராந்திய கடற்பரப்பு மற்றும் இந்து சமுத்திர பிராந்தியம் போன்றவையே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. சீன எல்லையிலிருந்து 100 மைல் தொலைவிலுள்ள தாய்வான் நாட்டில் அமெரிக்காவின் இருப்பு, நிரந்தரமாக உறுதி செய்யப்பட வேண்டுமென்கிற கருத்தினை கப்லான் முன் வைக்கிறார்.

இந்து மகா சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள இலங்கை போன்று, தென் சீனக் கடலில் தைவானும் ஒரு மையச் சூழல் சக்தியாகவும் அதன் தரிப்பிடமாகவும் இருப்பதை அமெரிக்க மிகத் தெளிவாக உணர்கிறது. 80 களின் முற்பகுதியில் திருமலைத் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்கா காய் நகர்த்தமுற்பட்டதும், அதனை எதிர்கொண்டு திசை திருப்ப, ஈழப் போராட்டத்தை இந்தியா கையாண்ட விவகாரத்தையும் இப்போது நினைவிற் கொள்வது அவசியம்.

தைவானை தனது ஆளுமைக்குள் சீனா சிக்க வைத்தால், கிழக்கு ஆசியாவின் பல்துருவ இராணுவச் சமநிலையில் புதிய மாற்றம் ஏற்படும். சீனக் கடற்பரப்பில், "மூழ்காத விமானம் தாங்கிக் கப்பல்'' போன்று தைவான் நிலை கொண்டு இருப்பதாக அமெரிக்க ஜெனரல் டக்ளஸ் மக் ஆர்தர், தனது படைத்துறைப் பார்வையை முன்வைத்தார். அமெரிக்க விமானப் படையில் ஊ 22 போர் விமானங்கள் மற்றும் கடற்படையில் விமானங்கள் தாங்கிய இரண்டு தாக்குதல் அணிகள் இருப்பினும் 2020 ஆண்டளவில் சீனாவின் தாக்குதலில் இருந்து தைவானைக் காப்பாற்ற அமெரிக்காவால் இயலாமல் போகுமென்பதே றொபேர்ட் கப்லானின் வாதமாக அமைகிறது.

ஜப்பான், ஒக்கினவாவிலுள்ள கடேனா விமானப் படைத் தளத்திலிருந்து ஆகாயச் சமர் புரியும் சாத்தியப்பாடுகளை மட்டுமே அமெரிக்கா கொண்டிருக்கும். பொருளாதாரப் புள்ளி விபரங்களின் அடிப்படையில் நோக்கும்போது தாய்வானின் ஏற்றுமதியில் 30 சதவீதம் சீனாவை நோக்கி உள்ளது. கடந்த 5 வருடங்களில் மட்டும் மூன்றில் இரண்டு அளவு தாய்வான் கம்பனிகள், சீனாவில் முதலீடு செய்துள்ளன.

அரை மில்லியன் சீன உல்லாசப் பயணிகள், வருடந்தோறும் தாய்வானுக்குச் செல்கின்றனர். பரஸ்பர சமூக பொருண்மிய உறவுகள், பலமானதொரு இணைப்பினை, இரு நாட்டு மக்களிடையே உருவாக்குமென்கிற நிலைப்பாடு, சீனாவின் பிராந்திய நலனிற்குச் சாதகமான நிலையை உருவாக்கலாம். இலங்கையில் போர் முடிவடைந்தவுடன் இந்தியா மேற்கொள்ளும் முதலீட்டு நகர்வுகள், புதுடில்லியில் வெளியுறவுத் துறைச் செயலர் நிரூபமா ராவ் நடத்தும் இரு தரப்பும் வர்த்தக ஒன்று கூடல்கள், தேசிய இன நல்லிணக்கச் சந்திப்புக்கள் யாவும் சீன, தாய்வான் உறவுப் பாலத்தின் மறு பிம்பமாகப் பார்க்கப்படலாம்.

அதேவேளை இவ்வருட ஆரம்பத்தில் 6.4 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத உதவிகளை, தாய்வானுக்கு வழங்குவோமென்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்ட செய்தி, கப்லானின் பார்வையோடு அனுசரித்துப் போவதை அவதானிக்க வேண்டும். தாராண்மைவாத சமூகமாக சீனா மாறும்வரை அதனைச் சூழ, இராணுவ இறுக்க வலயமொன்றினைப் பேண வேண்டிய அவசியம் உள்ளதாக அமெரிக்கா நியாயப்படுத்தினாலும் புவிசார் அரசியலில் தமது ஏகபோக ஆளுமையை நிலை நிறுத்த இவ்வகையான ஜனநாயகச் சித்தாந்தங்களை இவர்கள் முன்வைக்கிறார்கள் என்கிற உண்மையை மறைக்க முடியாது.

இவற்றோடு இவ்வல்லாதிக்க நாடுகளின் சந்தை ஆதிக்கப் போட்டியில் கடல் பாதையின் முக்கியத்துவம் குறித்து பார்க்க வேண்டும். ஆசியாவின் கடல் வணிகப் பாதையின் தலைவாசலில் இலங்கை தரித்து நின்றாலும் இதற்கான சீனாவின் வாசல் கதவு தென் சீனக் கடல்தான் இருக்கிறது. ஆகவே தாய்வான், மியன்மார் மற்றும் இலங்கை போன்ற நாடுகளே, சீனாவின் கடலாதிக்கக் கனவிற்குரிய உணர்திறன் மிக்க மையப் புள்ளிகளாக இருக்க வேண்டும்.

சீனாவைப் பொறுத்தவரை தென் சீனக் கடலானது, இன்னுமொரு "இரண்டாவது பாரசீகக் குடா'' வாக மாறுமென்று, புவிசார் அரசியலில் நிபுணத்துவம் கொண்ட நிக்கோலாஸ் ஸ்பைக்மன் கூறுகின்றார். சீனாவின் தென் கோடியிலுள்ள ஹைனான் தீவில், சகல வசதிகளும் கொண்ட ஏறத்தாழ 20 அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தக் கூடிய பாரிய கடற்படைத்தளமொன்றை தற்போது சீன அரசு நிறுவிக் கொண்டிருக்கிறது.

ஆகவே, இத்தகைய கடற்படை வலு விரிவாக்கம், நீட்சியடைந்து அம்பாந்தோட்டைவரை செல்லலாம். தனது இராணுவத் தளங்களை ஓசியானியாவை நோக்கி பின்னகர்த்தினாலும் தாய்வானிலுள்ள பிடியை அமெரிக்கா இப்போதுள்ள நிலையில் தளர்த்தாது. குவாமிலுள்ள அண்டசன் விமானப் படைத்தளம் போன்று தைவானையும் அமெரிக்கா பலப்படுத்தும்.

இலங்கையில் சீனா மேற்கொள்ளும், பொருண்மிய ஊருடுவல் சூத்திரத்தை புரிந்து கொள்ளும் அதேவேளை, இந்தியாவின் பதட்டத்தை தனக்குச் சாதகமாகக் கையாள்வதற்கும், அமெரிக்கா பல திட்டங்களை வகுக்கலாம்.

ஆகவே, சுதந்திரமான இறைமையையுள்ள வாழ்விற்காகப் பேராடும் தமிழ் மக்கள் இவ்வலரசுகளின் சந்தை ஆதிக்கப் போட்டி சமன்பாட்டில் ஒரு புள்ளியாக எங்கே நிலை கொண்டுள்ளோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

- இதயச்சந்திரன்

Comments