ஒற்றுமை குறித்து காகங்கள் பேசலாம், ஓநாய்கள் பேசலாமா?

நாடு கடந்த தமிழீழ அரசும், இரா. துரைரத்தினமும் - ஈழநாடு

முள்ளிவாய்க்கால் வரை முழங்கி நீட்டினார்கள். முடிவுக்கு வந்ததும் முடங்கிப்போய் இருந்தார்கள். கூட்டமைப்புத் தேர்தல் வந்ததும் குதித்து எழுந்தார்கள். இப்போது அவர்களுக்கு இரை போடுவது நாடு கடந்த தமிழீழ அரசு என்ற யுத்த களம். இலங்கைத் தமிழ் ஊதிய ஊடகவியலாளர்களின் இன்றைய நிலவரம் இதுதான்.

சிங்கள தேசத்தின் இருதுருவக் கோட்பாட்டுக்குள் விலை போயுள்ள எத்தனையோ மனிதப் பிறவிகள் இப்போது எம் மத்தியில் தத்துவம் பேசிக்கொண்டு வருகின்றார்கள். பாவம், அவர்கள் கூறி விற்க முணலும் சிங்கள யுக்திகளை புலம்பெயர் தமிழர்கள் கொள்வதற்கு முன் வருகின்றார்கள் இல்லை. சிங்கள தேசம் அறிவித்தது போலவே, நாடு கடந்த தமிழீழ அரசை வேரோடு பிடுங்க நியமித்த இவர்களால், இதைத் தவிர என்னதான் செய்துவிட முடியும்?

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்களில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பற்றிய சந்தேகங்களை இந்தச் சதிகாரர்கள் எப்படித் துல்லியமாகத் தெரிந்து கொண்டார்களோ அறியேன். நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரான்ஸ் - பாரிஸ் நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற வகையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதில்களை இரா. துரைரத்தினம் போன்ற குழப்பவாதிகளுக்கு வழங்குவது கடமை எனக்கு உண்டு.

முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய காலங்கள் ஈழத் தமிழர்களின் வேதனைக் காலம் மட்டுமல்ல, சோதனைக் காலமும் கூடத்தான். விடுதலைப்புலிகள் கள முனையில் தோற்கடிக்கப்பட்டு, ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகளின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தைக் கைப்பற்றும் தீவிர நடவடிக்கைகள் இலங்கைக்கு வெளியே தீவிரம் பெற்றது. யேசுநாதர் உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புவது போல், சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்று இந்தியர்கள் நம்புவது போல், தேசியத் தலைவர் குறித்த சிங்களத் தகவல்களை நிராகரித்த ஈழத் தமிழர்கள் அவரது மீள் வரவுக்காகக் காத்திருக்கிறார்கள்.

அதுவரை, தேசியத் தலைவர் அவர்களால் புலம்பெயர் தேசத்து மக்களிடம் வழங்கப்பட்ட தமிழீழ மீட்புக்கான போராட்டத்தை ஒவ்வொரு தமிழரும் சுமக்க முன்வந்துள்ளனர். அதற்காகக் களம் இறங்கியுள்ளார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது யாருடைய பரம்பரைச் சொத்தல்ல. அதைப் பிரேரிதத்தவர் யாராக இருந்தாலும், அந்தப் போர்க்களத்தை புலம்பெயர் தமிழர்கள் முற்றாக நம்புகின்றார்கள்.

அந்தப் போர்க் களத்தில் தாமும் போராளிகளாகப் பங்கேற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அதனால்தான், எந்த வேறுபாடுகளுமின்றி ஈழத் தமிழர்களின் அத்தனை அமைப்புக்கள் சார்ந்தவர்களும் அதில் போட்டியிட்டார்கள். பலர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இது மக்கள் வழங்கிய ஆணை. இந்த மக்கள் ஆணையை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. தமிழீழ மக்களில் மிகச் சிறுபான்மையினரின் வாக்குக்கள் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏற்றுக்கொண்டு துதி பாடும் திரு. இரா. துரைரத்தினம் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் போட்டியிட்டு, தெரிவான உறுப்பினர்கள் மீது சந்தேகங்களைத் தெரிவிப்பது அவர் சார்ந்த ஊடகத் துறைக்கு உகந்தது அல்ல.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் மக்கள் பேரவைகளைச் சார்ந்த பலர் வென்றிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ளதால், நாடு கடந்த தமிழீழ அரசைக் கைப்பற்றி, அதன் செயற்பாடுகளை முடக்கி விடுவார்கள் என்ற தகவல்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல முற்படுபவர்களது நோக்கம் சந்தேகத்திற்கிடமானது. மக்கள் பேரவை பற்றியும். அதன் உருவாக்கம், செயற்பாடுகள், நோக்கங்கள் பற்றியும் அறியாத முட்டாள்களின் கூற்றாகவே இது கணக்கிடப்பட வேண்டும். இரா. துரைரத்தினம் போன்றவர்கள் வேண்டாத கேள்விகளையும், நியாயங்களையும் எழுப்பி நாடு கடந்த தமிழீழ அரசுக்காகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடையே பிளவுகளையும், மோதல்களையும் உருவாக்க முயற்சிக்கின்றனர்.

நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வே நடைபெறாத நிலையில், அது இப்படித்தான் நடக்கும், அது இப்படித்தான் முடியும் என்று எதிர்வு கூறுவது முடிவு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலுக்குள் உருவாகிவரும் நாடு கடந்த தமிழீழ அரசை அழைத்துச் செல்லும் முயற்சியாகவே கருதப்படுகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இணைப்பாளர் திரு உருத்திரகுமாரன் அவர்களை ஓரங்கட்டும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளார்கள் என்ற கருத்துருவாக்கம் மூலம் திரு. உருத்திரகுமாரன் அவர்களுக்கும், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளுக்கும் இடையே சந்தேகங்களையும், முரண்பாடுகளையும் உருவாக்குவதே திரு. இரா. துரைரெத்தினம் போன்றவர்களது எண்ணமாக உள்ளது.

நாங்கள் அனைவருமே விடுதலைப் புலிகளது தியாகங்கள் ஊடாக வளர்ந்தவர்கள். அவர்களது வேள்வித் தீயின்வெப்பத்தினால் மாசு அகற்றப்பட்டவர்கள். தேசியத் தலைவர் அவர்களது பாதையில் பயணிப்பவர்கள். தமிழீழ விடுதலைக்காக எதையுமே இழக்கத் தயாரானவர்கள். அந்த இலட்சியப் பாதையில் எங்களது அணிவகுப்பு இரா. துரைரெத்தினம் போன்றவர்களுக்கு கசப்பாகவே இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக தமிழ்த் தேசியத்தை மாகாணங்களுக்குள் முடக்கும் சிங்களச் சதிக்கு நாம் தடைக் கல்லாக மாறிவிடுவோம் என்ற அச்சத்தில் திரு. இரா. துரைரெத்தினம் மட்டுமல்ல மேலும் சில ஊதிய ஊடகவியலாளர்கள் எழுதவேதான் செய்வார்கள்.

அதனை, தேசிய ஊடகவியலாளர்கள் முறியடிக்கவே செய்வார்கள். நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் உருத்திரகுமாரன் அவர்களது தமிழ்த் தேசிய விடுதலைக்கான உறுதியிலும், நேர்மையிலும், தியாகத்திலும் நம்பிக்கை வைத்தே அனைத்து வேட்பாளர்களும் களத்தில் இறங்கினார்கள். மண்ணிலும், கடலிலும் வீழ்ந்த மாவீரர்களின் கனவான தாயக மீட்பு இலட்சியப் பாதையிலிருந்து விலகாத வரைக்கும் திரு. உருத்திரகுமாரனின் தலைமை மீது யாரும் எதிர்க் கருத்து வைக்கப் பேவதில்லை.

அவரை ஓரங்கட்டப் போவதுமில்லை. திரு. உருத்திரகுமாரன் அவர்கள் தேசியத் தலைவர் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர். தாயக விடுதலை குறித்த ஆழமான பற்று உள்ளவர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நன்றாக உணர்ந்தவர். அவர் மீது அனைத்துத் தமிழர்களும் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

நாமும் அந்த அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசில் இணைந்து பணியாற்ற முன் வந்துள்ளோம். இந்தப் போர்க் களத்தில் எங்கள் ஒற்றுமையைச் சிதைக்க முடியும் என்று யாரும் கனவு கூடக் கண்டு விடாதீர்கள்.

ஒற்றுமை குறித்து காகங்கள் பேசலாம், ஓநாய்கள் பேசலாமா?

- ஈழநாடு

Comments