ஏர்டெல் நிறுவனத்தின் சேவையை புறக்கணிப்போம் – மே 17 இயக்கம்

ஏர்டெல் நிறுவனத்தின் சேவையை புறக்கணிக்கும் போராட்டத்தினை ஆரம்பிக்க அனைவரையும் மே 17 அமைப்பினர் அழைத்துள்ளனர். கொழும்பில் நடைபெற்ற இந்தித்திரைப்பட விழாவானது சிறீலங்கா அரசுக்கு தோல்வியை ஏற்படுத்தியதற்கு மே 17 அமைப்பினரின் செயல்பாடுகள் அதிகப்படியானது. மே 17 அமைப்பு மற்றும் இதர அமைப்பினருக்கும் மீனகம் தளம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

சிறிலங்கா அரசிற்கு உதவி செய்யும் தொழில் நிறுவனங்களின் மீது பொருளாதாரத்தடை விதிப்போம்!
போர்க்குற்றவாளியான சிறிலங்காவின் குற்றங்களை இருட்டடிப்பு செய்யும் விதமாகவும், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் விதமாகவும், கொழும்புவில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடத்தப்படக் கூடாது என்று FICCI மற்றும் IIFAஐ நாம் எச்சரித்திருந்தோம். அதனையும் மீறி விழா கொழும்புவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. போர்க்குற்றவாளியாக நிற்கும் சிறிலங்காவுடன் வணிக உறவுகளை மேற்கொள்ளும் செயல் மனிதத்தன்மையற்றது என்பதை தெளிவுபடக் கூறியும், அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் வணிக லாபங்களுக்காகவும், சிறிலங்காவிற்கு நற்பெயரை ஏற்படுத்துவதற்காகவும் இந்த விழா நடந்துள்ளது. இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டிய தேவை இன்று நம்முன் உள்ளது. இதுமட்டுமல்லாமல் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தமிழர்களை கொன்றொழிக்க சிறிலங்காவிற்கு பக்கத்துணையாய் நின்ற இந்திய,உலக நிறுவனங்கள் அனைத்திற்கும் நாம் பாடம் புகட்ட வேண்டும். அதற்கான சரியான வழி, அந்த நிறுவனங்களின் மீது பொருளாதாரத் தடை விதிப்பதுதான். அந்த நிறுவங்களின் பொருட்களை புறக்கணிப்பதன் மூலம் இதனை நாம் செயல்படுத்த முடியும்.

ஃபிக்கி அமைப்பின் தலைவராக உள்ளவர் ராஜன் பார்த்தி மிட்டல். இவருடைய நிறுவனம்தான் ஏர்டெல். இந்த ஏர்டெல் நிறுவனம் இன வெறி சிறிலங்க அரசுடன் கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையின் ஒரு பகுதியில் – கொழும்புவிலிருந்து புத்தளம் வரை – செல்பேசி சேவையை நடத்த அனுமதி பெற்ற ஏர்டெல், தற்போது 12 இலட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் முதன்மையான செல் பேசி நிறுவனங்களில் ஒன்றாக இயங்கிவரும் ஏர்டெல்லிற்கு 13 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 1.25 கோடி வாடிக்கையாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். தமிழனைக் கொல்லும் அரசுடன் உறவு வைத்துக் கொண்டு, தமிழனிடம் வணிகமும் செய்யும் மனிதாபிமானமற்ற ஏர்டெல் நிறுவனம், ஈழத் தமிழினத்தை அழித்த சிறிலங்காவின் இனப் படுகொலைப் போரில் அந்நாட்டிற்கு உதவியதாகவும் குற்றச்சாற்று உள்ளது. அந்த உதவிக்கு கைமாறாகத்தான் அங்கு செல்பேசி சேவை நடத்த அனுமதி பெற்றதென்றும் கூறுகின்றனர்.

எனவேதான், நம்மினத்தை அழித்த இன வெறி சிறிலங்க அரசை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் ஃபிக்கியை கண்டித்தும், ஒரு நிறுவனத்திற்கு இருக்க வேண்டிய சமூக பொறுப்பை தட்டிக்கழித்து செயலாற்றிவரும் ஏர்டெல் செல்பேசி சேவையை தமிழர்களாகிய நாம் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தமிழினப் படுகொலை செய்த சிறிலங்கா இனவெறி அரசுடன் கைகோர்த்து வணிகம் செய்யும் ஏர்டெல் செல்பேசிச் சேவையை புறக்கணிப்போம். இன வெறி சிறிலங்கா அரசின் பொருளாதார முதுகெலும்பை முறிப்போம்.

இப்படிக்கு,
மே பதினேழு இயக்கம்

Comments