இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துமா அமைச்சர் பீரிஸின் பயணங்கள்?

லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் மூலோபாயக் கற்கைகளுக்கான அனைத்துலக நிறுவனம் (INTERNATIONAL INSTITUTE FOR STRATEGIC STUDIES) சிங்கப்பூர் அரசோடு இணைந்து தமது 9 ஆவது ஆசியப் பாதுகாப்பு மாநாட்டினை நடத்துகிறது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக உரையாடுவதற்கு ஒரு பொதுவான கருத்துக்களமொன்றின் தேவை உணரப்பட்டதால் 2002 ஆம் ஆண்டில் சாங்ரி லா (SHANGRI-LA) பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வருடம் ஜூன் 46 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் 27 நாடுகளின் பாதுகாப்புத்துறை சார்ந்த உயர்நிலை அதிகாரிகளும், அமைச்சர்களும் கலந்து கொள்கின்றார்கள்.

ஆனாலும் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்யும் உயர்மட்டக் குழுவில் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்குப் பதிலாக, வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும், விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலகவும், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவும் கலந்து கொள்வது சற்று வித்தியாசமாகத் தென்படுகிறது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 8 ஆவது மாநாட்டில் அனைத்துலக நெருக்கடிக் குழுவில் (INTERNATIONAL CRISIS GROUP) பிரதிநிதி முன்வைத்த கேள்விக்கணைகள் சில நாடுகளுக்குச் சிக்கல்களை உருவாக்கியிருந்தது. அண்மையில் மிகக் காட்டமான அறிக்கையொன்றினை “”ஸ்ரீலங்காவின் போர்க்குற்றம்” என்று தலைப்பிட்டு இந்நெருக்கடிக் குழு வெளியிட்டது.

பாதுகாப்பு வலயத்தில் அடைக்கலம் புகுந்த பொதுமக்கள், வைத்தியசாலைகள், தன்னார்வ தொண்டு நிறுவன மையங்கள் மீது வான் தாக்குதல்களும், எறிகணை வீச்சுக்களும் நிகழ்த்தப்பட்டிருப்பது, ஆகஸ்ட் 2009 இலிருந்து தம்மால் சேகரிக்கப்பட்ட நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்கள், புகைப்படங்கள், செயற்கைக்கோள் நிழற்படங்கள், காணொளி பதிவு மூலம் உறுதிப்படுத்தப்படுவதாக அனைத்துலக நெருக்கடிக் குழு தனது அறிக்கையில் தெரிவிக்கின்றது.

ஆகவே, வெளிவரும் ஆதாரங்கள், சர்வதேச சட்ட விதிகளுக்குப் புறம்பான வகையில் அமைவதால் அதற்கான முழுப்பொறுப்பினை ஆட்சித் தலைவர்களும் இராணுவ உயர் அதிகாரிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதே மேற்குலகால் அங்கீகரிக்கப்பட்ட சிந்தனை மையத்தின் நிலைப்பாடாகும்.

இவை தவிர ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனான் உட்பட சர்வதேச மன்னிப்புச் சபை, நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு உலகெங்கிலும் பரந்து இயங்கும் மனித உரிமைக் கண்காணிப்பகம் என்பன ஐ.நா. சபையூடாக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளன.

இந்த நெருக்கடிக் குழுவின் தற்போதைய தலைவியான லூயிஸ் ஆர்பர் அம்மையார், ஐ.நா. சபையின் முன்னாள் மனித உரிமை விவகார ஆணையாளர் ஆவார்.

முன்னாள் ஆணையாளரும், தற்போதைய ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதில் மிக உறுதியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், 1956 இலிருந்து தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நடவடிக்கைகளையும் இறுதிப் போரில் நடைபெற்ற விடயங்களுக்குள் மறைக்கும் அல்லது முடக்கும் தந்திரோபாய நகர்வொன்று சர்வதேசத்தால் குறிப்பாக மேற்குலகத்தால் முன்னெடுக்கப்படுகிறதா என்கிற சந்தேகம் புலம்பெயர் மக்கள் மத்தியில் உருவாகுவதை அவதானிக்கலாம்.

போர் நடந்தால் அதன் விளைவாக உருவாகும் போர்க் குற்றங்கள் குறித்து மோதலில் சம்பந்தப்படாதோர் பாதிப்படையும் போது பேசப்படுகிறது.

இதனை இன அழிப்பல்ல என்று வியாக்கியானம் செய்யும் இந்த உலகம் இன அழிவு என்றால் அது இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் யூதர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு சொல்லாடலாக ஏற்கெனவே இவ்வுலகம் வரையறுத்துவிட்டது.

புதிய உலக ஒழுங்கில் அதிலும் குறிப்பாக ஆசியப் பிராந்தியத்தில் இராணுவச் சமநிலையில் ஏற்படும் நெருக்கடிகளின் மத்தியில் ஸ்ரீலங்கா மீது போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என்கிற கடுமையான அழுத்தங்களை மட்டுமே மேற்குலகால் பிரயோகிக்க முடியும்.

இதற்கு அப்பால் இன அழிப்பு எனும் முற்றாகத் தனிமைப்படுத்தும் பேராயுதத்தை ஸ்ரீலங்கா மீது பிரயோகித்து இந்து சமுத்திர பிராந்தியத்தில் புதிதான இரு முனைவாக்க சூழலை உருவாக்க மேற்குலகோ அல்லது இந்தியாவோ விரும்பாது.

யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் இலங்கை அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட மக்கள் குறித்து பேசுவதை பிராந்திய வல்லரசாளர்களும் தவிர்க்கின்றார்கள்.

பல்லாயிரக் கணக்கில் மக்கள் அழிந்தாலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதை மட்டும் கருத்தில் கொண்டு பொருண்மிய மீள்கட்டமைப்பிற்கும் புனர்வாழ்வுப் பணிகளுக்கும் முன் நிபந்தனையற்ற ஆதரவினை வழங்க வேண்டுமென சர்வதேசத்திடம் இலங்கை அரசு எதிர்பார்க்கின்றது.

ஆனாலும் பாதிக்கப்பட்ட இனத்தின் மீது சுமத்தப்பட்ட கொடூரங்களும், வாழ்வாதார அடியழிப்பும், எதிர்கால வாழ்வு குறித்தான சந்தேகங்களும் மீண்டுமொரு தேசிய இன நல்லிணக்கத்தை நோக்கிய நகர்வுகளை அரசு முன்னெடுத்தாலும் அது சாத்தியப்படப்போவதில்லையென்பதை மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த வருடம் நடந்த ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய மக்கள் சீனக்குடியரசின் படைத்துறைத் துணைத் தலைவர் லெப். ஜெனரல் மா.சியோரியன் “முதலில் பொருளாதாரம் அடுத்தது அரசியல்’ என்கிற அணுகுமுறையையே தாய்வான் விவகாரத்தில் முன்வைத்தார்.

ஆகவே, போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற கடந்த கால விவகாரங்களை புறந்தள்ளி அழிவிற்குள்ளான பகுதிகளில் பொருளாதார மேம்பாட்டிற்கான முன்னகர்வுகளை மேற்கொள்வதே சரியானது என்பதனை இம்மாநாட்டில் சீனத்தரப்பு முன்வைக்கலாம்.

இதனை உறுதி செய்யும் வகையில் இம்மாநாட்டில் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்கவிருக்கும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், “”தீவிரவாத எதிர்ப்பு மற்றும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களில் அரசு எதிர்நோக்கும் சவால்களும், ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்தலும்” என்கிற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

ஆனாலும் இம்மாநாட்டின் பிரதான பேசு பொருளாக வடகொரிய விவகாரமே முன்னிலைப்படுத்தப்படும். தென் சீனக் கடலாதிக்கத்திற்காக முரண்படும் சீனாவும் அமெரிக்காவும், பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகள், சர்வதேச ஒப்பந்தங்களை மதித்து நடத்தல், அணு ஆயுத பரவலாக்கத்தைத் தடுத்தல் போன்ற புளித்துப்போன விவகாரங்களையே இம்முறையும் பேசுவார்கள்.

அதேவேளை, அனைத்துலக இராஜதந்திர உறவுகளை சீர்செய்வதற்கு சில சந்திப்புகளை ஜீ.எல்.பீரிஸ் மேற்கொள்வாரென ஊகிக்கலாம்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர், அவுஸ்திரேலியா, தாய்லாந்து, கொரியா மற்றும் அமெரிக்க, பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர்களை பீரிஸ் குழுவினர் சந்திக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பொருளாதார உதவிகள் நாட்டிற்கும் கிடைக்க வேண்டும். அதேவேளை, சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதுதான் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பயணிக்கும் இருவழிப்பாதை.


-இதயச்சந்திரன்-

நன்றி: வீரகேசரி வார ஏடு

Comments