இந்தியா,ரஷ்யா,சீனா ஆகிய நாடுகளுக்கு எதிராக ஜூலை 10 ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் -சீமான்

தமிழினப் படுகொலைக்குத் துணை போகும் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக ஜூலை 10 ஆம் நாள் நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழர்கள் உலக வல்லரசுகள் அனைத்தின் உதவியுடன் சிங்கள ஏகாதிபத்தியத்தால் பெரும் எண்ணிக்கையில் அழித்தொழிக்கப்பட்ட பின்பு உலகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக ஒரு வருடம் கழித்து ஐ.நா.அமைப்பானது சிங்கள அரசின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கு மூவரடங்கிய நிபுணர் குழுவினை நியமனம் செய்துள்ளது.

ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அமைத்த நிபுணர் குழுவில் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ரட்னரும் , இந்தோனேசியாவின் முன்னாள் சட்ட அதிபர் மர்சுகி தருஸ்மனும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஜாஸ்மின் சூகாவும் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச போர் சட்டங்களுக்குப் புறம்பான அத்தனை வழிமுறைகளையும் தாயக விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் நடத்தியுள்ளது இன வெறி சிங்கள இராணுவம்.

இலங்கையின் போர் குற்றங்களை ஆராயப் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவை உலகமெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், இன விடுதலைக்காகப் போராடும் அமைப்புக்களும், வரவேற்றுள்ள போதிலும் பெயரளவில் கம்யூனிசம் பேசும் ரஷ்யா,சீனா உள்ளிட்ட 29 நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்தியா இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் ”கள்ள” மௌனம் சாதிக்கின்றது.

இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் தாம் பெற்ற உதவிகளைக் கொண்டு எத்தகைய கோரத் தாண்டவத்தை இலங்கை ஆடியுள்ளது என்பதற்கு தினந்தோறும் பல்வேறு வகை சான்றுகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அதிநவீன ரேடார்கள், உளவு பார்க்கும் கருவிகள், ரோந்துக் கப்பல்கள் உட்பட எண்ணற்ற ஆயுதங்களை தமிழர்களைக் கொன்றொழிக்க இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. தமிழர்களுக்கு எதிரான போரில் தடைசெய்யப்பட்ட 500 மில்லியன் டாலருக்கு மேற்பட்ட மதிப்புள்ள கொத்துக் குண்டு மற்றும் இரசாயன ஆயுதங்களை ரஷ்யா இலங்கைக்கு போர் காலத்தில் விற்பனை செய்துள்ளது.

சீனாவோ இந்தியாவுடன் போட்டி போட்டுக்கொண்டு தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு உதவிகளை வாரி வழங்கி வருகின்றது.கடந்த ஆண்டு மட்டும் உலக வங்கியை விட அதிக அளவில் சீனா இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளது. இப்பொழுது போர் முடிந்த பின்னும் சீனா இலங்கைக்கு 3021 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இது தவிர தனது நாட்டில் கொடும் குற்றம் புரிந்த 25000 க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் புகலிடமாக ஈழத்தை சீனா மாற்றிக்கொண்டு வருகின்றது.

இவ்வாறு இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் தனக்கு அனுசரணையாக இருக்கும் தைரியத்தில் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகள் மற்றும் இதர இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகளைக் கொன்று குவித்த சிங்கள இராணுவம் இப்பொழுது விசாரணைக்கும் ஒத்துழைக்க மறுப்பதோடு எதிர்ப்பும் தெரிவிக்கின்றது.

மேலும் மேலும் இந்த நாடுகளிடம் இருந்து இலங்கை அரசு இன்று வரை உதவிகளையும் போட்டி போட்டுக் கொண்டு பெற்று வருகின்றது. இதன் மூலம் இத்தகைய நாடுகள் உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கைக்கு பகிரங்கமாகத் துணைபோகின்றனர். இத்தகைய நிலையில் கண் முன்னே நடக்கும் இந்த கொடுஞ்செயலை தடுத்து நிறுத்துவதும் அதற்கு எதிராக கடும் போராட்டங்களை முன்னெடுப்பதும் நம் அனைவரின் கடமை.

ஆகவே முதற்கட்டமாக வரும் ஜூலை 10 ஆம் நாள் காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்துகின்றது. இதில் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு நம் எதிர்ப்பினை உலகுக்கு உணர்த்துவோம் என்று தெரிவிக்கின்றேன்.

Comments