விதவைகளின் தேசம்!



ஓர் ஊடகவியலாளராக இலங்கைக்கு நான் மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இது. ஒவ்வொரு பயணத்தின்போதும் புதிய அனுபவங்களை, புதிய நெகிழ்ச்சிகளை, புதிய பாடங்களைத் தரும் இலங்கை!

குறிப்பாக, இந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன், வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளுக்குச் செல்லக் கிடைத்த வாய்ப்பு, எனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயம்.

போரால் துரத்தப்பட்டும் வீழ்த்தப்பட்டும் நசுங்கிக்கிடந்த மக்களைச் சந்திப்பது, எந்த ஊடகவியலாளருக்கும் நிறைவான விஷயம்.

ஆனால், 'பயணம் எப்படி இருந்தது?' என்று யாராவது கேட்கும்போது, ஒரு நொடி திகைப்பதை உணர்கிறேன். நிறைவான பயணம் என்று சொல்லும்போது அதில் உள்ள முரண்பாடு என்னைக் குற்றவுணர்வுக்கு உள்ளாக்குகிறது.
நான் சந்தித்த மனிதர்கள் என்னை இன்னமும் குற்றவுணர்வுக்குள் தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக, நிசாந்தன். 20 வயதுதான் இருக்கும். ஷெல் அடிபட்டு பார்வையையும் கைகளையும் இழந்துஇருந்தார். 'இத்தனைக்கும் அப்ப பங்கரில்தான் இருந்தோம்' என்றார் நிசாந்தன்.

இப்போது குடும்பத்தைச் சிற்சில வேலைகள் செய்து காப்பாற்றுவது நிசாந்தனின் சகோதரன் சிவக்குமார். நிசாந்தன் இந்தியாவில் வந்து மருத்துவ உதவி பெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு நிதி சேகரித்துக்கொண்டு இருக்கிறார் செல்வம் அடைக்கலநாதன். நிசாந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்தியா வருவதுபற்றி ஆயிரம் கனவுகள், ஆயிரம் பயங்கள்!

"முழுக் கையையும் வெட்டிட்டுத்தான் பிளாஸ்டிக் கை வைப்பாங்களா அக்கா? அப்படி யாரோ சொன்னாங்க, பயமா இருக்கு" என்று நிசாந்தன் கேட்டபோது, அழுதுவிடுவேனோ என்று தோன்றியது. போரில் எல்லாவற்றையும் தொலைத்த மனிதர்கள், தமிழ்நாட்டில் இருந்து யாராவது வரும்போது பகிரவென்று கொஞ்சம் புன்னகையை மட்டும் மிச்சம் வைத்திருக்கிறார்கள். எனக்கு இருந்த கொஞ்சநஞ்ச மருத்துவ அறிவை வைத்துக்கொண்டு அப்படிச் செய்ய மாட்டார்கள் என்று சொன்னபோது, நிசாந்தனின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

நான் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று தெரிந்ததும் அவர்களது வீட்டில் (அதை வீடு என்று சொல்லலாமா?) ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. "அவ்வளவு தூரத்தில் இருந்து எங்களைப் பார்க்க வந்திருக்கீங்க, உங்களுக்குக் கொடுக்க ஒண்ணுமே இல்லியே... கஷ்டமா இருக்கு... கொஞ்சம் நிக்கறீங்களா? காட்டுக் கோழி புடிச்சித் தர்றோம்" என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தார் நிசாந்தனின் சகோதரி.

அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இருக்கும் மக்கள், இன்னமும் நம் மீது நம்பிக்கையும் அன்பும் வைத்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கையை, தொடர்ந்து பல இடங்களிலும் பல மனிதர்களிலும் என்னால் உணர முடிந்தது.

மன்னார் தேவன்பிட்டியில் நான் சந்தித்த ஒரு பெண்ணிடம் போரின் அசலான இறுக்கத்தை என்னால் உணர முடிந்தது. யாருடனும் எதுவும் பேசாமல் இருந்த அவரிடம் கிளம்பும்போது, நான் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று யதேச்சையாகச் சொன்னதும், கதறலோடு பேச ஆரம்பித்தார். கடல் தொழில் பார்த்துக்கொண்டு இருந்த அந்தப் பெண்ணின் கணவர் இன்று புலிகளுக்கான தடுப்பு முகாமில் இருக்கிறார்.

இன்னும் படிப்பை முடிக்காத நான்கு பிள்ளைகள். "ஒரு பக்கம்,பிள்ளை களின் கல்விச் செலவு. இன்னொரு பக்கம், தடுப்புல இருக்கிற கணவருக்கு மாற்று உடுப்புகூட இல்லை. சாப்பாட்டுக்கே வழி இல்லை, என்ன செய்ய?" என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற பந்தா இல்லா மல் அடைக்கலநாதன் பல கிராமங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் நின்று மக்களோடு பேசிக்கொண்டு வந்தார். கிட்டத்தட்ட சந்தித்த எல்லோரது பெயர்களையும் அவர் தெரிந்துவைத்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது. "உங்க நாடு மாதிரி இங்க வெறுமனே கையை அசைச்சிட்டு வாக்கு வாங்க முடியாது" என்றார் சிரித்துக்கொண்டே.

அன்றைய பொழுது முழுவதும் மக்களுக்கு இடையில், அவர்களுடைய எளிய அன்பில், எதிர்ப்பார்ப்புகள் அற்ற உரையாடல்களில் கழிந்தது. மறு குடி அமர்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்டபோதும் அவர்கள் தங்கி இருந்தது தார்ப்பாயில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ஓர் அறையில்தான். ஒரு காலத்தில் ஆசுவாசமாக அவர்கள் வாழ்ந்த வீடுகள் அந்த அறைகளுக்குப் பக்கத்திலேயே போரில் சிதைந்து சிதறிக்கிடந்தன.

பலரது அறைகளில் அடுப்பு எரிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனாலும், நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு சோடா கொடுத்து உபசரித்தார்கள். பல சோடாக்கள் அருந்திய பிறகு, ஒரு கிராமத்தில் அதை மென்மையாக மறுத்தபோது, சோடா வாங்கி வந்த பாட்டியின் முகத்தில் மேலும் சுருக்கங்கள் கூடின. 'உங்களுக்காகத்தான் வாங்கி வந்தோம்' என்றார். "இல்லம்மா, இப்போதான் குடிச்சேன்" என்றபோதும் அவர் சமாதானம் ஆகவில்லை. 'உடைச்சாச்சு' என்றார் கொஞ்சம் வருத்தத்துடன்.

என்னால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை. ஐந்து ரூபாயோ பத்து ரூபாயோ, அந்த சோடாவை வாங்குவதற்கு அவர்களில் பலர் தங்களுக்குள் வசூல் செய்திருப்பார்கள். 'சாப்பாட்டு நேரமாச்சே, சோடா போதுமா?' என்று விவாதித்திருப்பார்கள். 'இதாவது கொடுக்க முடியுதே' என்று சமாதானமாகி இருப்பார்கள். எனது கைப்பையில் இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கு சாராயம் வாங்குவதற்காக வைத்திருந்த டாலர்களின் கனம் கூடிஇருந்தது.

எனது பயணம் நெடுகிலும் நான் மிக அதிகமாகப் பார்த்தது விதவைகளை. நான் பார்த்தவரையில் போரில் கணவரை இழந்த பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு வயது 20-களில்தான் இருக்கும். அதற்குள் மூன்று, நான்கு பிள்ளைகளையும் பெற்றிருந்தார்கள். 'சிலர் மறுமணம்பற்றி இப்போது யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், அது ஆகப் பெரிய சவால். குறிப்பாக, காணாமல் போனவர்களின் மனைவிகள் என்ன செய்வார்கள்?' என்று கேட்டார் பாதிக்கப்பட்டவர் களுக்கான அமைப்பு ஒன்றில் பணிபுரியும் நந்தினி.

மன்னார் மாவட்டம் சகுந்தலாவுக்கு 20 வயது தான். 14 வயதில் திருமணம். இப்போது மூன்று வயதில் மகன். கணவர் காணாமல்போய் ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. 'என்ன செய்வது என்றே புரியவில்லை' என்று கவலைப்படுகிறார். ஏதாவது அமைப்பு வந்து, ஏதாவது தொழில் கற்றுக்கொடுத்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும், தனது மகனை வளர்த்துவிடலாம் என்கிற நம்பிக்கை அவரிடம் சிறு கீற்றாக இருக்கிறது. 'அவர் இருந்தவரை நான் வேலை செய்வதை விரும்ப மாட்டார். ஆனா, இப்போ வேறு வழி இல்லை.

அவர் வருவாருங்கிற நம்பிக் கையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைஞ்சிட்டே இருக்கு' - பட்டெனத் தெறிக்கிறது ஒரு துளிக் கண்ணீர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமூக சேவகர் சரோஜா சிவச்சந்திரன் சொன்ன விஷயம் முக்கியமானது. 'சிங்கிள் வுமன் என்றால் உங்களுக்கு வேற அர்த்தம். எங்களுக்கு வேற அர்த்தம். போரில் எல்லாச் சொந்தங்களையும் இழந்து சிங்கிள் வுமனா இருக்கும் பல்லாயிரக்கணக்கானோர் இங்கே இருக்காங்க' என்றார்.

கிழக்கில் மட்டும் கிட்டத்தட்ட 40,000 விதவைகள் இருப்பதாக கடைசிப் போருக்கு முன்பு எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. வடக்கில் 29,000 விதவைகள் இருக்கலாம் என்று சொல்கிறார் சரோஜா. "1983-க்குப் பிறகு நாடு தழுவிய மக்கள் கணக்கெடுப்பு 2011-ல் நடக்கவிருக்கிறது. அப்போது அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளிவரலாம்" என்கிறார்.

பல்லாயிரக்கணக்கான விதவைகளுக்கு எதாவது தொழில் கற்றுத்தர இந்தியாவில் அமைப்புகள் எதுவும் இருக்குமா என்று அடைக்கலநாதனும் விசாரித்துக்கொண்டு இருந்தார்.

நமக்கு இங்கு கோஷங்கள் எழுப்பவும், போராட்டங்கள் நடத்தவும் மட்டுமே நேரம் இருக்கிறது. இலங்கையில் நடந்த போரை, நாம் ஏன் மனித உரிமைகள் பிரச்னையாகப் பார்க்கத் தவறினோம்? போர் முடிந்தவுடன் எல்லாம் முடிந்துவிட்டதான ஒரு மாயை எப்படி உருவானது? அங்கு என்றாவது தங்களது கௌரவமான வாழ்க்கைக்கு நாம் எதாவது செய்வோம் என்கிற நம்பிக்கையோடு தவித்துக்கிடக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம்?

இலங்கையில் இருந்து வந்த நாளில் இருந்து, 'எம்மைத் தெரிகிறதா? எங்கள் குரல் கேட்கிறதா?' என்று தொடங்கும் சேரனின் கவிதை என்னைத் தொந்தரவு செய்துகொண்டு இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், நான் இலங்கையில் சந்தித்த ஒவ்வொரு தமிழரும் நம்மை நோக்கிய அந்தக் கேள்வியாகவே இருந்தார்கள்.

நாம் போர்பற்றி நிறையப் பேசினோம். வெற்றி, தோல்வி குறித்தும் அதன் சாதக பாதகங்கள் குறித்தும் நிறையவே பேசினோம்.

ஆனால், போரின்போதும், அதற்குப் பிறகும் நாம் அவர்களைப் பார்க்கவில்லை. அவர்களது குரலைக் கேட்கவில்லை. அரசியல் தீர்வு, நிம்மதியான வாழ்வு போன்றவற்றுக்கு இந்தியா இனியாவது ஏதாவது செய்யும் என்கிற எதிர்பார்ப்பில் யாசித்துக்கொண்டு இருக்கும் அவர்களின் இல்லாத கைகளில் நாம் இப்போதும் வைக்கப்போவது வெற்றுக் கோஷங்களைத்தானா?

ஈழத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட் கவிதா
நன்றி: விகடன்

Comments