சிவப்பு சமத்துவ சீனா, வியட்நாமிலும் கம்போடியாவிலும் என்ன செய்தது?

குற்றம் புரிந்தவர்கள், தீர்ப்பு வழங்கும் தகுதியை இழந்து விடுகிறார்கள் என்கிற உண்மை அரசுகளுக்கு பொருந்தாது என்பது போலிருக்கிறது. இன்றைய புவிசார் அரசியலின் போக்கு "யாரோ விதிக்கும் நிபந்தனைக்கோடுகளின் எல்லைக்குள் நின்றபடி அங்கும் இங்கும் அங்கலாய்த்து ஓடுகிறார்கள்'' என்கிற சாம் பிரதீபனின் நிஜக் கவிவரிகள், சமகால யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.

அரசால் அமைக்கப்பட்டுள்ள பட்டறிவிலிருந்து கற்ற நிபுணர் குழுவினை வரவேற்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டினையே இங்கு குறிப்பிடுகின்றேன்.

போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் முதன்மைத் தூதுவர் ஸ்டீபன் ரப் (STEPHEN RAPP) அவர்கள் அரசின் நிபுணர் குழு குறித்த தனது நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தி அமெரிக்காவின் இரட்டைப் போக்கினை அம்பலப்படுத்தியுள்ளார். கடந்த புதன்கிழமையன்று அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவைச் சார்ந்த இன அழிவிற்கெதிரான தமிழர் அமைப்பும் TAG), தமிழ் அரசியல் செயற்பாட்டுச் சபை USTPAC யும் இணைந்து வோஷிங்டனிலுள்ள இராஜாங்க திணைக்களத்தில் ஸ்டீபன் ரப்பை சந்தித்தனர்.

இச் சந்திப்பில் இலங்கை அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் நம்பகத்தன்மை வட, கிழக்கில் தொடரும் இராணுவ மயமாக்கல், மீள்குடியேற்றங்கள், இலங்கையின் நிபுணர் குழு மற்றும் தமிழ் போர்க்கைதிகளின் நிலைமை குறித்த விடயங்கள் உரையாடப்பட்டுள்ளன.

இந்த ஒன்றுகூடல் நடைபெற்ற போர்க்குற்ற விவகாரங்களுக்கான அலுவலகமானது யூகோஸ்லாவியா மற்றும் ருவண்டாவில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொண்ட ஐ.நா.வின் ஆதரவோடு இயங்கிய குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகளுக்கு பக்கபலமாக இருப்பதோடு, 1997 ஆம் ஆண்டு அன்றைய அமெரிக்க இராஜாங்க செயலர் மடலின் அல்பிறைட் (MEDELINE K.ALBRIGHT) அவர்களால் உருவாக்கப்பட்டது.

இவ்வலுவலகமானது தற்போது கொங்கோ, காசா மற்றும் இலங்கை விவகாரங்களில் அதிக கவனம் செலுத்துவதை அவதானிக்கலாம்.

அதேவேளை அமெரிக்கா போன்று ஐ.நா. சபையும் இன அழிப்பு போர்க்குற்ற விசாரணை தொடர்பாக இரட்டைப் போக்கினைக் கடைப்பிடித்த விடயத்தையும் கவனிக்க வேண்டும்.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள், 2009 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதியோடு சேர்ந்து விடுத்த கூட்டறிக்கையில் சர்வதேச மனித உரிமை சட்ட நியமங்கள் இலங்கையில் மீறப்பட்டுள்ளதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. போர்க்களத்தில் யுத்தக் குற்றங்கள் நடைபெறவில்லையென்பதை பான் கீ மூன் அவர்கள் முன்னரே ஏற்றுக் கொண்டுள்ளதாக 23 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சகம் சுட்டிக்காட்டுவதனூடாக ஐ.நா.வின் இரட்டை வேடத்தை அம்பலமாக்கி தமது தரப்பின் நிலைப்பாட்டிற்கு வலுச் சேர்க்க முயல்கிறது.

இவை தவிர இறுதிப் போரில் குறிப்பாக அந்த மூன்று நாட்களில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய கொடூரங்கள் தமக்கு தெரியுமென்று பூடகமாகக் கூறும் அமெரிக்கா, அதனைத் தடுத்து நிறுத்த ஏன் முன்வரவில்லையென்கிற கேள்விக்கான பதிலில் பூகோள அரசியல் நலன் புதைந்திருப்பதைக் காணலாம்.

ஆனாலும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐ.நா., அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் மேற்கொள்ளும் தற்போதைய நகர்வுகளில் ஸ்ரீலங்காவின் வெளியுறவு குறித்த சந்தேகங்களும் நம்பிக்கையீனங்களும் முக்கியத்துவம் பெறுவதை நோக்கலாம்.

ஆனாலும் சர்வதேச அரசியலில் மேற்குலகிற்கு எதிராக நகரும் சீனா, ரஷ்யா, அணிசேரா நாடுகள் போன்றவை போர்க்குற்ற விசாரணை என்கிற துருப்புச் சீட்டினை நுட்பமாகக் கையாளுவதன் ஊடாக இலங்கையை தமக்கு அணிக்குள் நிரந்தமாக இணைத்துக் கொள்ள முடியுமாவென்று பரீட்சித்துப் பார்க்கின்றன.



இலங்கையின் உள் விவகாரங்களில் எவரும் தலையிடக்கூடாது, சுதந்திரமான நிபுணர் குழு அமைத்து போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் தகுதியும் திறமையும் இலங்கை அரசிற்கு உண்டென வக்காலத்து வாங்கும் சீனா, இலங்கை அரசால், 2007 நவம்பரில் பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவிற்கு என்ன நடந்தது என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும். பிரான்ஸை தளமாகக் கொண்டியங்கும் பட்டினிக்கெதிரான அமைப்பின் 17 தொண்டர்கள் மூதூரில் படுகொலை செய்யப்பட்டமை, திருமலை நகரில் ஐந்து மாணவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணை செய்த இந்த மாண்புடையோர் குழு, அரசிற்குச் சார்பாக அறிக்கை சமர்ப்பிக்க மறுத்த காரணத்தால் அரசோடு முரண்பட்டு 2008 ஏப்ரலில் இலங்கையிலிருந்து வெளியேறியதாக கூறப்பட்டது.

சிவப்புச் சமத்துவ சிந்தனையின் அடிப்படையில் நாட்டிற்குள் எது நடந்தாலும் அதில் தலையிட எவருக்கும் உரிமையில்லையென்றால் வியட்நாமிலும், கம்போடியாவிலும் சீனா என்ன செய்தது?

விசாரணைக்குழுக்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியான தீர்ப்பினை வழங்கியதாக இலங்கை வரலாற்றில் எங்காவது பதியப்பட்டிருந்தால் அதனை சீன அரசு சுட்டிக்காட்டுவது நல்லது. போருக்கு உதவியவர்கள் விசாரணைகளை எதிர்ப்பதும் இறைமைக்குள் உண்மைகளைப் புதைப்பதும் ஆச்சரியமான விடயமல்ல.

அதேவேளை நிபுணர் குழுவினை அமைத்திருக்கும் ஐ.நா.வின் பொதுச் செயலாளரும் அதற்கு ஆதரவு வழங்கும் மேற்குலகும் அயர்லாந்து, பாலஸ்தீன பாணியில், தேசிய நல்லிணக்கம் அரசியல் தீர்வு குறித்து நகர்வதற்கான பாதையும் அதன் வரைபடமும் (கீOஅஈ Mஅக) எவ்வாறு அமைய வேண்டுமெனத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்க விரும்புகின்றன.

இதில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழினமானது ஒரு கௌரவமான குறியீட்டு பங்காளர்களாக இருப்பதையே இவர்கள் விரும்புகின்றார்கள்.

அரசியல் தீர்வற்ற ஆனால் அபிவிருத்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்ட மறைமுகமான நிகழ்ச்சி நிரலையா மேற்குலகமும் இந்தியாவும் கொண்டிருக்கின்றன என்று ஆங்கில இணையத்தளமொன்றின் கருத்துப் பகிர்வின் பக்கங்கள் கூறுகின்றது.

அமெரிக்காவில் அடிக்கடி சூறாவளி வீசுவது போல இலங்கை அமெரிக்க வர்த்தக உறவில் ஜி.எஸ்.பி. பிளஸ் என்கிற பொருளாதாரத் தடைப் புயல் வீசப்போவதாக செய்திகள் வருகின்றன.

இலங்கையின் ஏற்றுமதி வரிச் சலுகையின் 43 விழுக்காட்டினைக் கொண்டுள்ள அமெரிக்காவும் 45 விழுக்காட்டினை உள்வாங்கும் ஐரோப்பிய யூனியனும் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கும் அதேவேளை, இலங்கை மீதான ஐ.நா. வின் போர்க்குற்ற ஆலோசனைக் குழுவிற்கு ஆதரவு வழங்குகின்றன.

இதனை எதிர்கொள்ளும் இலங்கை அரசு, அபிவிருத்திக்கான நிதி வளங்களைத் தேடும் பணியிலும் பாதுகாப்பினைப் பலப்படுத்தும் ஒப்பந்தங்களிலும் தனது தீவிர கவனத்தைச் செலுத்த முற்படுகின்றது.

அண்மையில் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட உக்கிரேன் பயணத்தின் போது நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி, வர்த்தகம், கலாச்சாரம் போன்ற துறைகளில் அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்கவும், உக்கிரேனின் பாதுகாப்புச் சேவையின் பிரதித் தலைவர் பொரொட்கோவும் இரு நாடுகளின் சார்பாக உடன்படிக்கைகளை மேற்கொண்டனர். போர்க் காலத்தில் மிக் போர் விமானங்களை வழங்கிய உக்கிரேன் வடக்கில் மேற்கொள்ளப்படும் படைத்தள விரிவாக்கத்திற்குத் தேவையான கனரக ஆயுதங்களை வழங்க முன்வந்திருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதேவேளை இழுபறிப்பட்ட சர்வதேசநாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட 407.8 மில்லியன் டொலர் கொடுப்பனவு, இலங்கைக்கு வழங்கப்பட்டு விட்டாலும் வரவு செலவுத் திட்டத்தில் ஏற்படும் பாரிய நிதிப் பற்றாக்குறையை எவ்வாறு சமாளிப்பது என்கிற சிக்கல் அரசுக்கு ஏற்படுவதை அவதானிக்கலாம். நாணய நிதியம் விதித்த தேசிய மொத்த உற்பத்தியின் 5 சதவீதமாக நாட்டின் நிதிப் பற்றாக்குறை இருக்க வேண்டுமென்கிற நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டுமாயின் மேலதிக நிதி உதவிகளை அரசு, பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து அல்லது தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த மாதம் உற்பத்தித் துறை வீழ்ச்சியடைந்திருப்பதாக அறிவித்துள்ள சீனா வெளிநாட்டு முதலீடுகளை மட்டுப்படுத்தும் என்கிற முடிவிற்கு வரலாம். சீனா எதிர்கொள்ளும் பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலை அல்லது தேக்கத்தினை அவதானிக்கும் இலங்கை ஆட்சியாளர்கள், மேற்குலகோடு சமரசப்பாதையில் பயணிக்க முற்படலாம்.

அதேவேளை "சீபா' ஒப்பந்தம் நிறைவேறாத சீற்றத்தில் இருக்கும் இந்தியா, அரசியல் தீர்வு குறித்த விவகாரத்தினை உயர்த்திப் பிடிக்கலாமென கணிப்பிடும் இலங்கை அரசு, கே.பி. என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் ஊடாக பன்முக நகர்வுகளை மேற்கொள்ள எத்தனிப்பதை நோக்க வேண்டும்.

புலம்பெயர் தேசங்களிலிருந்து பல்வேறு தனிநபர் குழுக்களை இலங்கைக்கு வரவழைப்பதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக மட்டத்திலும் இனப் பிரச்சினைக்கான தீர்வு விவகாரம் தனது கட்டுப்பாட்டிற்குள் இருப்பது போன்றதொரு கருத்துருவாக்கத்தினை நிறுவ அரசு முற்படுகிறது.

அரசு சார்பான தமிழ்க் கட்சிகளின் ஒன்றுகூடல்களும் பொது இணக்கப்பாட்டிற்கு இவர்கள் வருவது போன்ற தோற்றப்பாடுகளும் இந்தியாவின் அரசியல் தீர்வு நகர்வுகளை முடக்கி விடுமென்று இலங்கை அரசு கருதுகின்றது.

அதேவேளை, இக் கூட்டுக்குள் வருவதற்கு மறுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், மூன்று நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள விடயம் அரசிற்கு கசப்பானதாகவே இருக்கும். இலங்கைத் தமிழ் அரசியலை கையாளும் போட்டியில் நீண்டகாலமாகவே பனிப்போர் நிகழ்த்தி வரும் இந்தியாவும், சிங்கள ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் இறைமை குறித்து கவலைப்படுவதில்லை.

ஆனாலும் கே.பி. யின் அரசியல் வருகை நிஜமானால் அதன் தாக்கங்கள் தாயகத் திலோ அல்லது புலம்பெயர் நாடுகளிலோ பாரியளவில் மாற்றங்களை உருவாக்காது.

மேற்குலகையும் இந்தியாவையும் ஒரு எல்லைக்குள் நிறுத்தி வைக்க கே.பி. என்கிற துருப்புச்சீட்டு உதவுமென்கிற அரசின் தவறான கற்பிதம் விரைவில் உணரப்படலாம்.



இதயச்சந்திரன்

Comments