ஆயுதக் குழுக்களின் குறுநிலங்கள்

அணையாத நெருப்பாக கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாகக் கொழுந்து விட்டெரியும் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் இற்றைவரை எந்தவொரு சிங்கள ஆட்சியாளரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. மாறாக தமிழீழத் தனியரசுக் கோரிக்கையின் அடித்தளமாக விளங்கும் தமிழீழ தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய முக்கோட்பாடுகளை சிதைத்து, தமிழ்த் தேசியப் பிரச்சினையை ஒரு சிறுபான்மையினத்தின் பொருண்மியப் பிரச்சினையாக சித்தரிப்பதையே தமது மூலோபாயமாகக் கொண்டு, அரசியல் தீர்வு நாடகங்களை ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளரும் அரங்கேற்றி வந்துள்ளனர்.

டி.எஸ்.சேனநாயக்காவின் காலத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச வரை இவ்வாறான மூலோபாயத்தையே மாறிமாறி ஆட்சிக்கட்டிலேறிய சிங்கள ஆட்சியாளர்கள் கையாண்டு வருவது வரலாறு. அரசியல் தீர்வு என்பது ‘இன்ஸ்ரன்ற் நூடில்ஸ் அல்ல (உடனடியாகத் தயாரிக்கக்கூடிய நூடில்ஸ் அல்ல)’ என்று அண்மையில் மகிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்தை இதற்கான சமீபத்திய உதாரணமாக நாம் கொள்ள முடியும்.



ஆனாலும் ஏனைய சிங்கள ஆட்சியாளர்களை விட தமிழ்த் தேசியப் பிரச்சினையை மிகவும் நுண்ணியமான முறையில் கையாண்டு, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கான காய்நகர்த்தல்களை மிகவும் நயவஞ்சகமான முறையில் முன்னெடுக்கும் ஒருவராக மகிந்தர் திகழ்வதை, அவரது கடந்த நான்கரை ஆண்டுகால நடவடிக்கைகள் கோடிட்டுக் காட்டுகின்றன: ‘குள்ளநரி’ என்று வர்ணிக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சூழ்ச்சிகளை விஞ்சும் வகையிலேயே மகிந்தரின் நயவஞ்சக நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

கடந்த 2006ஆம் ஆண்டு யூலை மாதம் மாவிலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பெரும்போரை சிங்கள அரசு தொடங்கிய பொழுது, அதற்கு முழுமையான ஆசீர்வாதத்தையும், ஒத்துழைப்பையும் மேற்குலகம் வழங்கியிருந்த பொழுதும், யுத்தத்தில் சிங்கள அரசு ஈட்டக்கூடிய வெற்றி, எதிர்காலத்தில் இனப்பிரச்சினைக்கு அரசியல் வழியில் தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்களை இல்லாதொழித்துவிடக்கூடும் என்பதையும் ஓரளவுக்கு மேற்குலகம் புரிந்து கொண்டிருந்தது.

சிங்களப் படைகளுக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்தும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நிகழ்த்திய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், ‘இனப்பிரச்சினைக்கு படைவழியில் தீர்வு காண முடியாது’ என்றும், ‘அரசியல் தீர்வின் ஊடாக இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முடியும்’ என்றும், ஒற்றைப் பல்லவியை மேற்குலக சமூகம் பாடிவந்தது. தமது படைவலிமையின் ஊடாக சிங்களத்தின் படைய – பொருண்மிய இயந்திரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் நெருக்கடிக்குள் இட்டுச்சென்ற பொழுதும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தியாவிற்கும் சரி, மேற்குலகிற்கும் சரி அடிக்கடி உணர்த்திய முதன்மை சக்தியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் படைவலிமையே திகழ்ந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் போருடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைவலிமை பின்னடைவுக்கு ஆளாகிய பின்னர், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு மேற்குலகமும் சரி, இந்தியாவும் சரி பிரயோகிக்கும் அழுத்தங்கள், சகட்டு மேனிக்கு வெளிப்படுத்தப்படும் கண்துடைப்பு நடவடிக்கைகளாகவே திகழ்கின்றன. கடந்த 1995ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கவுடனான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த பொழுது, ஒரு அரைமரபுப் படையாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விளங்கியது.

அக்காலகட்டத்தில் தமிழ்த் தேசியப் பிரச்சினையின் அடிப்படைக் கோட்பாடுகளைப் புறந்தள்ளி சந்திரிகா குமாரதுங்க முன்வைத்த அதிகாரப் பரவலாக்க (Devolution of pouuer) தீர்வு யோசனையை ஒப்புவிக்கும் கருத்துக்களையே மேற்குலக சமூகம் வெளியிட்டு வந்தது. எனினும் 1999ஆம் ஆண்டின் இறுதியில் முழுமையான மரபுவழிப் படையாக தமது வலிமையை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிப்படுத்திய பொழுது, களயதார்த்தத்தைப் புரிந்து கொண்ட மேற்குலகம், அதன் பின்னர் ஒருபடி மேலேசென்று அதிகாரப் பரவலாக்கத் தீர்வுப் பல்லவியைக் கைவிட்டு, சமஸ்டி (feederalism) முறையிலான தீர்வு யோசனையை வலியுறுத்தி வந்தது.

தற்பொழுது படைவழியில் முழுமையான மேலாதிக்கத்தை சிங்களம் செலுத்தும் நிலையில், சமஸ்டியை விட்டுக் கீழிறங்கி, அதிகாரப் பரவலாக்கத்தில் இருந்தும் பலபடிகள் சறுக்கி விழுந்து, உப்புச்சப்பற்ற அதிகாரப் பகிர்வு (power sharing) வழியிலான தீர்வு யோசனையை மேற்குலகமும், இந்தியாவும் வலியுறுத்தி வருகின்றன. இந்த மெய்யுண்மையை நன்குபுரிந்து கொண்டிருக்கும் மகிந்தர், ஒருபுறம் தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் வீரியம்கொண்டு எழுச்சி பெறுவதற்கான புறநிலையை இல்லாதொழிப்பதற்கான எதிர்புரட்சி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டவாறு, மறுபுறம் உள்ளிருந்து எழும் தீர்வு (Home-grown soluution) என்ற கோசத்துடன் மேற்குலகைத் திசைதிருப்பி ‘இலவு பார்த்த கிளி’யின் நிலைக்கு இட்டுச்செல்லும் நடவடிக்கைகளை கனக்கச்சிதமாக அரங்கேற்றி வருகின்றார்.

இதன் விளைவாக தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக கட்டப் பஞ்சாயத்து முறையை எதிர்காலத்தில் மகிந்தர் முன்வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தியப் பேரரசின் திரைமறைவு அனுசரணையுடன் மகிந்தர் முன்னெடுக்கும் இந்த நாடகத்தில், ஏற்கனவே அவரது இரண்டு கண்களாக விளங்கும் டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்றோருக்கு மேலதிகமாக, தனது நெற்றிக்கண்ணாக கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனையும் மகிந்தர் இணைத்துள்ளார். இதேபோன்று, ஏறத்தாள மூன்று தசாப்தங்களாக இந்தியாவில் அஞ்ஞாதவாசம் புரிந்த செல்வநாயகம் சந்திரகாசன், இரண்டு தசாப்தங்களாக ஒரிஸ்ஸாவில் ஒளிந்து வாழ்ந்த வரதராஜப் பெருமாள் போன்றோர், இந்தியாவின் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய தற்பொழுது நாடுதிரும்பி மகிந்தரின் அரசியல் நாடகத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
ஒருபுறம் தனது தாளத்திற்கு ஆடும் ‘தமிழ்த் தேசிய’ மூலாம்பூசப்பட்ட கைப்பொம்மையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாற்றியமைத்திருக்கும் இந்தியா, மறுபுறம் அதனை சமநிலைப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல் கட்சிகள் பேரவை என்ற அமைப்பை தற்பொழுது நிறுவியுள்ளது. சிறீலங்கா துணைப்படைக் குழுக்களான ஈ.பி.டி.பி, புளொட், பிள்ளையான் குழு போன்ற ஆயுதக் குழுக்களும், ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி, மனோ கணேசனின் சனநாயக மக்கள் முன்னணி, சிவாஜிலிங்கம்-சிறீகாந்த தலைமையிலான தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளும், செல்வநாயகம் சந்திரகாசனின் அணியினரும் இந்தப் பேரவையில் அங்கம் வகிக்கின்றனர்.

இதில் கே.பி, கருணா போன்றோரை இணைத்துக் கொள்வதற்கு டக்ளஸ் தேவானந்தா முற்பட்ட பொழுதும், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, மனோ கணேசன் போன்றோரின் ஆட்சேபனை காரணமாக இந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரத்தில் தம்மிடம் சரணடைந்து தமது எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட ஆயுதக் குழு ஒன்றை கே.பி தலைமையில் உருவாக்கி, அதனை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளில் மகிந்தர் ஈடுபடுவது தொடர்பான தகவல்கள் தற்பொழுது அரசல்புரசலாகக் கசியத் தொடங்கியுள்ளன.

ஏற்கனவே புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களின் உளவுறுதியை சிதறடிக்கும் நாசகார பரப்புரை நடவடிக்கைகளில் கடந்த ஓராண்டாக கே.பி குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில், மீண்டும் தமிழீழ தாயகத்தில் ஆயுதப் போராட்டம் தலைதூக்குவதை தடுத்து நிறுத்துவதற்கான யுக்தியாக, தற்பொழுது வடதமிழீழப் பகுதிகளில் கே.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக்கூடிய ஆயுதக் குழுவை களமிறக்குவதற்கு மகிந்தர் தயாராகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோரின் ஏற்பாட்டில் இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் டக்ளஸ் தேவானந்தா, தர்மலிங்கம் சித்தார்த்தன், கே.பி ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதனை முழுமனதாக டக்ளஸ் தேவானந்தா ஏற்றுக் கொண்டுள்ள பொழுதும், இதனை ஏற்றுக் கொள்வதற்கு சித்தார்த்தன் தயக்கம் காட்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே தென்தமிழீழத்தை கருணா, பிள்ளையான் ஆகிய இரு துணைப்படைக் குழுக்களிடம் ‘குறுநிலங்களாகப்’ பங்குபோட்டு, தனது எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சிங்களம், அதே பாணியில் வடதமிழீழத்தை ஈ.பி.டி.பி, புளொட் ஆகிய இரு குழுக்களிடமும் பங்குபோட்டுள்ளது. இதில் வன்னிப் பெருநிலப்பரப்பின் தென்புலப் பகுதிகள் புளொட் குழுவின் ‘குறுநிலமாகவும்’, யாழ்ப்பாணக் குடாநாடு ஈ.பி.டி.பி குழுவின் ‘குறுநிலமாகவும்’ மாற்றப்பட்டுள்ளது.

ஒருபுறம் தமிழீழ தாயகப் பகுதிகள் தோறும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவித் தனது ஆயுதப் படைகளைப் பரவவிட்டிருக்கும் சிங்களம், மறுபுறம் தமிழீழ மக்களிடையே சமூக விரோத செயல்களையும், தமிழ்த் தேசவிரோத சிந்தனைகளையும் தூண்டிவிடும் நோக்கத்துடன் தமிழீழ தாயகப் பகுதிகளை ஆயுதக் குழுக்களின் குறுநிலங்களாகத் துண்டாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. இதில் குறிப்பாக வன்னிப் பெருநிலப்பரப்பின் வடபகுதிகளையும், யாழ்ப்பாணக் குடாநாட்டையும் கூட்டாக குறுநிலங்களாக குத்தகைக்கு எடுப்பதற்கான இணக்கப்பாடு, டக்ளஸ் தேவானந்தாவிற்கும், கே.பியிற்கும் இடையில் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் போரின் பொழுது புதுமாத்தளன் பகுதியில் இருந்து தப்பியோடி சிங்களப் படைகளிடம் சரணடைந்த தயா மாஸ்ரர் போன்றோர் இதில் முக்கியமான பாத்திரத்தை வகிப்பதாக கூறப்படுகின்றது. தற்பொழுது வடமராட்சியில் சுதந்திரமாக நடமாடும் தயா மாஸ்ரர், ஈ.பி.டி.பியின் பாதுகாப்புடன் கட்சிப் பரப்புரைகளில் ஈடுபடுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று கே.பி – டக்ளஸ் அணியின் அனுசரணையுடன் தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பணியாளர்கள் சிலரும், மூத்த ஊடகவியலாளர்களும் தற்பொழுது கே.பி குழுவிற்கான பத்திரிகை ஒன்றைத் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1980களின் நடுப்பகுதியில் தமிழீழத்திலும், பின்னர் இந்தியாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினராக செயற்பட்ட கே.பி, டக்ளஸ் தேவானந்தாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்திருந்தார். சமூக விரோத நடவடிக்கைகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ் குழு ஈடுபட்ட பொழுது, அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் முற்பட்ட பொழுது, தனது நண்பரும், அப்பொழுது ஈ.பி.ஆர்.எல்.எவ் குழுவின் இராணுவத் தளபதியாகவும் விளங்கிய டக்ளஸ் தேவானந்தாவைக் காப்பாற்றுவதற்காக, அதனை கே.பி கடுமையாக ஆட்சேபித்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னரான இரண்டு வார காலப்பகுதியில், தனது பால்ய நண்பர்கள் சிலருடன் நேரடியாகவும், தொலைபேசியிலும் கலந்துரையாடிய கே.பி, இனிப் புதிய பாதையில் தான் பயணிக்கப் போவதாகவும், மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் நேச அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகளுக்குமான நினைவு நாளாக மட்டுமன்றி, சகல இயக்கங்களையும் சேர்ந்த ‘தோழர்களுக்கான’ நினைவு நாளாக மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, மாவீரர் நாளை நவம்பர் 27இல் இருந்து வேறொரு நாளிற்கு மாற்றியமைப்பது தொடர்பான யோசனையையும் முன்மொழிந்திருந்தார்.

இதேபோன்று, முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டங்களிலும், அதன் பின்னரும் டக்ளஸ் தேவானந்தாவுடன் நெருங்கிய தொலைபேசித் தொடர்பாடலில் கே.பி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறாக, ஒருபுறம் ‘இன்ஸ்ரன்ற் நூடில்ஸ்;’ பற்றிப் பேசிக் கொண்டு அரசியல் தீர்வு நாடகத்தை அரங்கேற்றியவாறு, மறுபுறம் தமிழீழ தாயகத்தை ஆயுதக் குழுக்களின் குறுநிலங்களாகத் துண்டாடியும், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை நிரந்தரமாக சிதைக்கும் இலக்குடன் தனது எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளுக்கான காய்நகர்த்தல்களை மகிந்தர் முன்னெடுத்து வருகின்றார்.

இவற்றின் நடுநாயகமாக விளங்கும் கே.பியை நியாயப்படுத்துவதற்கு அவரது குழுவினரும், அவர்களின் ஊடகங்களும் முற்படுவது இதில் நகைப்புக்கிடமானது. ஈழத்தமிழினத்தை ஏமாந்த சோணகிரிகளாக நினைத்து, புலம்பெயர் தேசங்களில் கே.பியால் இயக்கப்படும் இந்தக் ‘காகிதப்புலிகள்’ நிகழ்த்தும் அறிக்கைப் போர் இதிலும் எள்ளிநகையாடலுக்கு உரியது.
- சேரமான்

நன்றி:ஈழமுரசு

Comments