தமிழரை அழித்தொழிப்பதுதான் மத்திய மாநில அரசுகளின் கொள்கையா?

மத்திய அரசின் கொள்கையே எனது கொள்கை என்று தமிழக முதல்வர் கூறுகிறார் என்றால் தமிழரை அழித்தொழிப்பதுதான் மத்திய மாநில அரசுகளின் கொள்கையா? என்று நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.



இதுவரை 530க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கும் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் படுகாயமடைந்து ஊனமுற்றதற்கும் காரணமான இலங்கை கடற்படையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை தமிழ்நாடு அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த சனநாயகப் படுகொலையைப் பழ.நெடுமாறன், வை.கோ போன்ற தலைவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

சீமான் வன்முறை மற்றும் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகக் குற்றம் சுமத்துகிறவர்கள் தங்களின் கடந்தகால வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்ப்பது நல்லது. 1990இல் தி.மு.க ஆட்சி கலைக்கப்படும் சூழ்நிலை உருவானபோது, ‘தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டால், தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும்’ என அறிக்கை விட்டு எச்சரித்தவர்தான் அன்றும், இன்றும் தமிழக முதல்வராக உள்ள கருணாநிதி. காங்கிரசுடன் இன்று கூட்டணி வைத்து கூடிக்குலவிக் கொண்டிருந்தாலும், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை இரத்தக் காட்டேரி, சேலை கட்டிய ஹிட்லர் என்று இழித்தும் பழித்தும் பேசி மதுரையில் தாக்குதல் நடத்திய உத்தமர்கள்தான் இவர்கள்.

எம்.ஜி.ஆரிடம் தோல்விகளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டிருந்தபோது, தமிழர்களைச் சூடு, சொரணை அற்றவர்கள், சோற்றால் அடித்தப் பிண்டங்கள் என்றெல்லாம் வசைமாறிப் பொழிந்த கருணாநிதி, செந்தமிழன் சீமான்மீது வன்முறையாளன் என்று வழக்கு போடுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது. நமது மீனவர்களைக் கொன்ற சிங்கள கடற்படையினரை நன்முறையாளர்கள் என்று இவர் இனி நற்சான்றிதழ் வழங்கினாலும் வியப்பதற்கில்லை. காரணம் சீமானைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தமைக்கு, சிங்களர்கள் இலங்கை முழுவதும் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இலங்கை பத்திரிகைகள் பலவும் கருணாநிதியின் இச்செயலைப் பாராட்டி வரவேற்றுள்ளன. இதிலிருந்தே தமிழக முதல்வர் கருணாநிதி, சிங்களவர்களுக்கு எவ்வளவு வேண்டப்பட்டவராக ஆகிவிட்டார் என்பது தெரிறது.

விருப்பு வெறுப்பின்றி இந்திய குடிமக்கள் அனைவரையும் பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு ஆட்சிக்கு வரும் இவர்கள் கடந்த 30 ஆண்டுக்காலமாகத் தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறியது இவர்களுக்கு குற்றமாகத் தெரியவில்லை. ஆனால், தமிழக மீனவர்களை இனியும் சிங்களவர்கள் தாக்கினால், ஆட்சியாளர்கள் அக்கொடுமையை தடுக்கத் தவறுவார்களேயானால் நாங்கள் சிங்களவர்களைத் திருப்பித் தாக்குவோம் என்று பேசியது மட்டும் இறையாண்மைக்கு எதிரானதாம். அப்படியென்றால் பாகிஸ்தான் நம்நாட்டின்மீது தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடி கொடுப்போம் என்று இந்திய அரசியல் தலைவர்கள் பேசுவதுகூட இறையாண்மைக்கு எதிரானது அல்லவா?. இது மட்டும் அயலுறவைப் பாதிக்காதா?

நடுவண் மற்றும் மாநில அரசுகள் தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படைத் தாக்குதலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறுவது எப்படி பிரிவினைவாதம் ஆகும்? தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு மீனவநாடு வேண்டுமென்றா சீமான் கேட்டார்? திராவிட நாடு கேட்ட முதல்வர் கருணாநிதி இதற்கு நேரிடையாகப் பதில் சொல்லத் தயாரா?

சிங்கள மீனவர் எல்லைத் தாண்டி வந்தால், கைது செய்து பாதுகாப்பாக இலங்கையிடம் ஒப்படைத்துவரும் இந்தியா, தமிழக மீனவர் எல்லைதாண்டினாலும் அதுபோல் எங்களிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டுமென்று இலங்கை அரசை இந்தியா தட்டிக்கேட்கத் தயங்குவது ஏன்? தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? அண்மையில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 28 பாகிஸ்தானியர் சிறை வைக்கப்பட்டபோது, இலங்கையிடம் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களனைவரையும் பத்திரமாக விடுவித்தது. ஆனால் வணிகம் செய்வதற்காக இலங்கைக்குச் சென்ற 59 தமிழர்கள் அதேபோல் போதை மருந்து கடத்தல் பொய் வழக்கில் பல்லாண்டுகாலமாக சிறை வைக்கப்பட்டிருந்தும், இந்திய அரசு அவர்களை விடுவிக்க இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

2009 முள்ளிவாய்க்கால் போரில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட சுமார் ஒரு இலட்சம் ஈழத்தமிழர்களில் 15,000 பேர்கள் இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்கள் என்பது வெளிப்படை. அதைக்கூட தடுத்து நிறுத்தாமல் அவர்கள் சிங்களப்படையால் கொல்லப்பட காரணமாயிருந்தது இந்திய அரசு. தமிழன் எங்கிருந்தாலும் கொல்லப்பட வேண்டும் என்று நினைக்கின்ற சிங்கள அரசுக்கு இந்திய அரசும் துணை போவது என்பது இலங்கையும் இந்தியாவும் தமிழர்களுக்கெதிராக ஒரே எண்ணத்தில் இருப்பது வெட்டவெளிச்சமாகிறது.

சிங்களவருக்கும் தமிழருக்கும் மோதலை உருவாக்கும் விதத்தில் பேசியதாக சீமான் மீது ஒரு குற்றச்சாட்டு. ஒரு இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்ற சிங்களவன் நமக்குப் பகையாளியா, அல்லது நண்பனா? 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள அரசு நமக்கு பகை நாடா, அல்லது நட்பு நாடா? இவ்வளவு கொடுமைகளை செய்தவன்கூட வன்முறைவாதி அல்லவாம். ஆனால் அதைத் தட்டிக்கேட்கும் சீமான் வன்முறையாளன் என்றால், இவர்களைப் போல அரச பயங்கரவாதிகள் உலகில் வேறெங்கேனும் பார்க்க முடியுமா?

சிங்கள கடற்படையைக் கண்டித்து, இலங்கைத் துணைத் தூதரகத்தின் முன் ஆளுங்கட்சியான தி.மு.க ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த அதே வேளையில், இராமேஸ்வரம் மீனவர்கள் 200 பேர்களைச் சிங்களக் கடற்படை அடித்து விரட்டியது. இங்கே மீனவர்களைப் பாதுகாக்கும் அதிகாரத்தை கையில் வைத்துள்ளவர்களோ, எதிர்க்கட்சிகளைப்போல் ஆர்ப்பாட்டம் மட்டும் செய்வது தமிழர்களை ஏய்க்கும் வெறும் கண்துடைப்பு நாடகமல்லவா?

இப்படியே நாடகம் பல நடத்தித் தமிழர்களை நாள்தோறும் கொன்றுக்குவிப்பதை ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களாம். அதை சீமானைப் போன்றவர்கள் வெகுண்டெழுந்து தட்டிக்கேட்டால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறை வைப்பார்களாம். சனநாயகத்தை இந்த ஆட்சியாளர்கள் அவமதிப்பதுபோல் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குக்கூட அனுமதி வழங்க மறுக்கிறார்கள். அன்று ‘மிசா’ காலத்தில் ‘ஏனென்றால் சிறைவாசம்: இம்மென்றால் வனவாசம்’ என நாடெங்கும் சுவரொட்டியடித்து ஒட்டிய கருணாநிதி, இன்று சீமான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாங்கள் சுவரொட்டி ஒட்டினால் தமிழக காவல்துறையை வைத்து கிழித்தெறிகிறார். சுவரொட்டி ஒட்டும் கட்சித் தொண்டர்களை மிரட்டி கைது செய்கிறார். நெருக்கடி நிலை அறிவிப்பு காலத்தில்கூட காணமுடியாத இத்தகைய அடக்குமுறைகளை நாம் தமிழர் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய அரசின் கொள்கையே எனது கொள்கை என்று தமிழக முதல்வர் கூறுகிறார் என்றால் தமிழரை அழித்தொழிப்பதுதான் மத்திய மாநில அரசுகளின் கொள்கையா?

“கொலை வாளினை எடடா, மிகு கொடியோர் செயல் அறவே!”, “பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென சங்கே முழங்கு” எனப் பாடிய புரட்சிக் கவிஞர் இன்று உயிருடன் இருந்தால், அவரைக்கூட வன்முறையைத் தூண்டியதாகக் கூறி, செந்தமிழன் சீமானோடு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறை வைக்க தமிழக முதல்வர் சற்றும் தயங்கமாட்டார் என்பது உறுதி.

இப்படிக்கு
நாம் தமிழர் கட்சி

Comments