விடுதலைப்புலிகளின் பெயரில் போலி அறிக்கைகளை வெளியிடும் "காகிதப்புலிகள்"

கடந்த ஆண்டு மே 18இற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரையும், கடிதத் தலைப்பையும் பயன்படுத்தி, அடிக்கடி வெவ்வேறு ஊடகங்களில் ஒன்றுக்கொன்று முரணான அறிக்கைகள் வெளியிடப்படுவதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.

இந்த வகையில் அண்மைக் காலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம், தமிழீழம் என்று முகவரியிடப்பட்டு, இராமு.சுபன் என்ற நபரின் பெயரில் அடிக்கடி அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தின் பெயரைப் பயன்படுத்துவதற்கான தகைமையையோ, அதிகாரத்தையோ அன்றி அருகதையையோ கொண்டிருக்காத இந்த நபரின் பெயரில், எமது ஊடக வலையமைப்பிற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் தற்பொழுது அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இதன் பின்னணி தொடர்பாகவும், இவ்வாறு அறிக்கை விடுவோர் தொடர்பாகவும் சில உண்மைகளை உலகத் தமிழ் உறவுகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கு நாம் விரும்புகின்றோம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கடிதத் தலைப்பில் அறிக்கை வெளியிடும் அதிகாரம், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் நியமிக்கப்படும் துறை அல்லது படையணிப் பொறுப்பாளர்கள் - தளபதிகளுக்கும், அவர்களின் நியமன அதிகாரம் பெற்ற போராளிகளுக்கும் மட்டுமே இருப்பது உலக ஊடகவியலாளர்களும், உலகத் தமிழ் உறவுகளும் நன்கு அறிந்த விடயம்.

இதில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால் இணைப்பாளர் பொறுப்பிற்கு இதுவரை எவருமே நியமிக்கப்பட்டதில்லை. தலைமைச் செயலகத்தின் அறிக்கை என்பது பொதுவாக தமிழீழ தேசியத் தலைவரால் அல்லது தலைமைப்பணியக பொறுப்பாளரால் வெளியிடப்பட்டு வந்துள்ளது.

இந்த வகையில் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தின் நேரடி அங்கீகாரம் பெற்ற அறிக்கைகள், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களால், தமிழீழ அரசியல்துறை என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்தன.

எனினும் மே 18இற்குப் பின்னர் தமிழீழ தேசியத் தலைவர் உட்பட மூத்த போராளிகள் - தளபதிகளுடனான வெளிதொடர்புகள் இழக்கப்பட்ட நிலையில், தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்தும், தானே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அடுத்த தலைவராகுவதற்கும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் செல்நெறியைத் தீர்மானிப்பதற்கும் தகுதிவாய்ந்தவர் என்றும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களிடையே குமரன் பத்மநாதன் அல்லது சண்முகம் குமரன் தர்மலிங்கம் அல்லது செல்வராஜா பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி பிரகடனம் செய்திருந்தார்.

இதன் பின்னர் அப்பொழுது தென்தமிழீழத்தில் தங்கியிருந்த தளபதி ராம் அவர்களுடனும், கல்வி கற்கும் நிமித்தமும், இறுதிப் போரில் தமிழீழத்தை விட்டுத் தப்பியோடி இந்தியா, மலேசியா உள்ளடங்கலான நாடுகளிலும் தஞ்சம் புகுந்த சிலருடனும் கே.பி தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். இவர்களைவிட சமாதான காலப்பகுதியில் தத்தமது துறைப்பொறுப்பாளர்களால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட போராளிகள் சிலரையும் கே.பி அணுகியிருந்தார்.

கே.பியின் இந்த தொடர்பாடல்களின் பெறுபேறாக, தளபதி ராம், தமிழீழ புலனாய்வுத்துறையின் முன்னாள் போராளியான அறிவழகன் என்றழைக்கப்படும் கதிர்காமத்தம்பி விநாயகம், தமிழீழ நீதித்துறையின் முன்னாள் போராளியும், தற்பொழுது மலேசியாவில் கல்வி கற்று வருபருமான சுகி என்றழைக்கப்படும் இராமு.சுபன், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கே.பி.ரெஜி அல்லது கே.பி.அறிவன் என்றழைக்கப்படும் காந்தலிங்கம் பிரேமரெஜி, கடற்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சங்கர், முன்னாள் மன்னார் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளரான அமுதன் என்றழைக்கப்படும் சுரேஸ் ஆகியோர், கே.பியின் தலைமையில் செயற்குழு ஒன்றை அமைப்பதற்கும், அதன் ஊடாக தலைமைச் செயலகம் என்ற பெயரில் அறிக்கைகளை வெளியிடுவதற்கும் முடிவுசெய்திருந்தனர்.

இதன் பின்னர் கே.பி அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராக அறிவித்து, இந்த செயற்குழுவால் தலைமைச் செயலகம் என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த செயற்குழுவில் இணையுமாறு அனைத்துலக தொடர்பகத்தின் இரண்டாம் நிலைப்பொறுப்பாராக விளங்கிய நெடியவன் என்பவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பொழுதும், அதனை ஏற்க மறுத்த அவர், சகல செயற்பாடுகளில் இருந்தும் விலகி தற்பொழுது தனது தனிப்பட்ட குடும்ப வாழ்கையில் முழுமையாகக் கவனம் செலுத்தி வருகின்றார்.

இதேநேரத்தில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் கே.பி அவர்கள் சிறீலங்கா அரசிடம் சரணடைந்த பின்னர், மீண்டும் கூடிய இதே செயற்குழு, கே.பி அவர்களுக்குப் பின்னரான தமது அடுத்த தலைவராக அப்பொழுது சிறீலங்கா புலனாய்வுத்துறையுடன் இணைந்து பனாகொட முகாமில் இயங்கி வந்த தளபதி ராம் அவர்களை தெரிவு செய்திருந்தது.

எனினும் ராம் அவர்களுக்கும், விநாயகம் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்து, செயற்குழுவில் இருந்து ராமை நீக்குவதற்கான முடிவை சுகி என்றழைக்கப்படும் இராமு.சுபனும், ஏனையோரும் எடுத்தனர். இதே காலப்பகுதியில் இவர்களின் செயற்குழுவில் தமிழீழ நிர்வாக சேவையை சேர்ந்த முன்னாள் உறுப்பினரான நவீனன் என்பவரும் இணைந்து கொண்டார். இதன் பின்னர் மீண்டும் கூடிய இந்த செயற்குழு, சுகி என்றழைக்கப்படும் இராமு.சுபனை தமது தலைவராக நியமித்தது.

எனினும் இராமு.சுபன், தலைவர், தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் அறிக்கை வெளியிடுவதால் மக்களின் கடும் ஆட்சேபனைக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் காரணமாக, இணைப்பாளர் என்ற பெயரில் இந்த நபர் தற்பொழுது அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார்.

இவ்வாறு அறிக்கை வெளியிடுவதற்கான நியமன அதிகாரம் எதுவும் இந்த நபருக்கோ அல்லது இவரைத் தலைவராகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் செயற்படும் எந்தவொரு நபர்களுக்குமோ தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் வழங்கப்படவில்லை. இதனை உலகத் தமிழ் உறவுகளாகிய நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.

தமிழீழ தேசியத் தலைவரிடம் இருந்து எந்தவொரு அறிக்கையும் வரவில்லை என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் பெயரில் அறிக்கை வெளியிடும் உரிமை எவருக்கும் இல்லை. குறிப்பாக தமிழீழ தாயகத்தை விட்டு முழுமையாகப் புலம்பெயர்ந்து, தமது சொந்தக் குடும்ப நலன்களிலும், பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்தும் இவர்களுக்கு இதற்கான அருகதை எதுவும் இல்லை என்பதை உலகத் தமிழ் உறவுகளாகிய நீங்கள் நன்கு புரிந்திருப்பீர்கள்.

எமது பாசத்திற்குரிய உலகத் தமிழ் உறவுகளே,

தமிழீழ மண்ணில் ஒன்றரை இலட்சம் உறவுகளை சிங்களம் கொன்றுகுவித்து நரபலி வேட்டையாடிய பொழுது, பாராமுகம் காட்டி உண்ணாநோன்பு நாடகமாடிய கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் செம்மொழி மாநாட்டை வரவேற்று இந்தக் ‘காகிதப்புலிகளே' அறிக்கை வெளியிட்டனர்.

தமிழீழ தேசியத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்காத இவர்கள், ஈகத்தின் உச்சத்தில் உருவான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்துவதற்கு அருகதையற்றவர்கள்.

ஒய்யாரமாய் வெளிநாடுகளில் வசித்தவாறு தமிழீழ மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமையை இவர்களுக்கு எவருமே வழங்கவில்லை.

நேற்று சங்கதி வலைத்தளத்தின் முகவரி தனியொருவரால் கையகப்படுத்திய பின்னர், புதிய முகவரியில் சில பத்து நிமிடங்களில் மீண்டும் புத்துயிர்ப்பு பெற்றதை சகிக்க முடியாத காரணத்தால் காகிதப்புலிகளின் ஒரு குழுவினர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதனையிட்டு நாம் மிகவும் மனவேதனையடைகின்றோம்.

இக்காகிதப்புலிகளின் சுயரூபத்தை அறிந்து கொண்டதன் காரணமாகவே, கடந்த பல மாதங்களாக இவர்களால் வெளியிடப்பட்ட எந்தவொரு ‘கடதாசி' அறிக்கைகளையும் எமது ஊடகங்களில் நாம் பிரசுரிக்கவில்லை.

அதேநேரத்தில் உண்மையை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு நாம் ஒருபொழுதும் பின்னின்றதுமில்லை. தமிழீழ விடுதலை கிட்டும் வரை உண்மைகளை நாம் எமது மக்களுக்கும், உலகிற்கும் உரைத்து எடுத்துரைப்போம்.

இக் காகிதப்புலிகளின் மிரட்டல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதுமில்லை.

இவர்களின் இரண்டகச் செயல்களை அம்பலப்படுத்துவதற்கு நாம் தயங்கப் போவதுமில்லை.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

ஆசிரியர் பீடம்

சங்கதி - பதிவு வலையமைப்பு

காகிதப்புலிகளின் ஒரு குழுவினர் வெளியிட்ட அறிக்கை



Comments