குமரன் பத்மநாதன் - இவரா அவர்?

leader_with_friendsமுன்னர் ”குமரன் பத்மநாதன் - இவரும் அவரா?”
என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் குமரன் பத்மநாதன் தொடர்பிலான சில விடயங்களை ஆராய்ந்திருந்தோம். அவரைப்பற்றி வருகின்ற செய்திகள் ஏராளம். பத்திற்கு மேற்பட்ட பாஸ்போட்டுக்களை வைத்திருந்த இவர், ஒவ்வொரு பாஸ்போட்டிலும் ஒவ்வொரு விதமான முகவித்தியாசத்தை கொண்டிருந்தார். அதனால்தான் என்னவோ தான்தான் குமரன் பத்மநாதன் என நிரூபிப்பதற்காக தான் அணியும் தொப்பியிலும் K.P என எழுத்துக்கள் பொறித்து தற்போது அணிந்து கொள்ளுகின்றார்.

அண்மையில் ஐலண்ட் நாழிதழில் குமரன் பத்மநாதன் அவர்களுடனான நேர்காணல் ஒன்று வெளியாகி வருகின்றது. குமரன் பத்மநாதனின் இன்றைய நிலைப்பாட்டை அல்லது அவரை எவ்வாறு சிங்களம் பயன்படுத்துகின்றது என்பதை விளக்க அந்நேர்காணல் போதுமானது. இவரது வழிகாட்டலில் புலம்பெயர்ந்த தேசத்தில் சிறகு முளைத்து பறக்கதுடிக்கும் சிலரது மறுபக்கங்களை வைத்தும், சில முடிவுகளை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் முடிவுசெய்துகொள்ளவேண்டிய நிலையில் இப்போது உள்ளனர்.

தற்போதுவரை சிறிலங்கா புலனாய்வுத்துறையினரின் நேரடிக்கண்காணிப்பின் கீழேயே வெளியார் யாருடனும் கருத்துப்பரிமாற்றம் செய்யக்கூடிய நிலையில் குமரன் பத்மநாதன் அவர்களின் நிலை இருப்பதாக அவரை சந்தித்தவர்களால் தெரிவிக்கப்படுகின்ற ஒரு கருத்தாகும்.

அதன் தொடர்ச்சியாகவே, கோத்தபாயவின் நெருங்கிய நண்பரான ஒரு பத்திரிகையாளரினால் நேர்காணல் செய்யப்பட்டதாக கூறப்பட்டு ”மகிந்த சிந்தனை“ பத்திரிகையான ஐலண்டில் வெளிவந்து அதன் இறுதிப்பகுதி நாளை வெளிவரவுள்ளதையும் நோக்கவேண்டும்.

அதில் வன்னியில் வாழ்ந்துவரும் மாணவர்களுக்கு – வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பு மூலம் - ஐந்து இலட்சம் ரூபா செலவழித்து பணிசும் தேநீரும் கொடுத்துள்ளதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். இதுபற்றி விசாரித்தபோது கிளிநொச்சி சிங்கள மகாவித்தியாலத்தில் நடைபெற்ற பரீட்சைக்கால மீட்டல் செயலமர்வின்போது இரண்டு நாட்கள் பணிஸ் வழங்கப்பட்டதாக அறியமுடிந்தது.

பணிஸ் கொடுப்பதற்கு மகிந்த அரசாங்கம் அனுமதிக்கும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும், போருக்கு பின்னரான காலப்பகுதியில் மகிந்தவின் மனதிலும் அவரது சகோதர்களின் மனதிலும் ஞானம் ஒளிவிடுவதாகவும் அவர் மேலும் அந்நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கருத்தை வெளியிட்ட குமரன் பத்மநாதன், அமெரிக்காவில் அல்குவைதாவின் தாக்குதலால் உலகமே மற்றப்பக்கத்தால் சுற்ற தொடங்கியதாகவும், அதனை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்தான் கடந்த மேமாதத்தில் தாயகத்தில் நடந்த பேரழிவில் எல்லாமே முடிந்துவிட்டதாகவும், ஆனாலும் தனது கட்டளையை இன்னும் எஞ்சியுள்ள இரண்டாயிரம் போராளிகள் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பின்னர் நாடு கடந்த தமிழீழ அரசு மூலம் தமிழீழ அரசை கட்டியமைக்கலாம் எனவும் கூறியிருந்திருந்தார்.

இவ்வாறு அன்று சொன்னதற்கும் இப்போது சொல்வதற்கும் உள்ள வேறுபாடு ஏன் ஏற்பட்டது? இவை தமிழர்கள் மத்தியில் பல முகச்சுழிப்புக்களை ஏற்படுத்தினாலும், குமரன் பத்மநாதனால் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் நடத்தப்பட்டுவருகின்ற அலுவலகத்தில் சிறிலங்கா புலனாய்வாளர் அலுவலகர்களே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளமை, இதுபற்றிய புரிதலுக்கு இன்னும் விளக்கங்களை தரக்கூடும்.

எனவே இங்கு இருக்கின்ற இடத்தை பொறுத்து, குமரன் பத்மநாதன் தன்னை தகவமைத்து கொள்ளவைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கருதுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்புநிலையிலிருந்த ஒருவரின் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கபோவதில்லை.

தாயகத்தை பொறுத்தவரை, அங்கு வாழும் தமிழ்மக்களாலோ, அல்லது தமிழ்தேசிய அரசியல்வாதிகளாலோ குமரன் பத்மநாதனின் இவ்வாறான செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையிருப்பது, அவரது செயற்பாடுகள் எவ்வாறு தமிழ்மக்களை பாதித்துள்ளது என்பதை விளங்கிக்கொள்வதற்கு உதவகூடும்.

தமிழர் தாயகத்தில் அதிகூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக தமிழர்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவிரும்பாத அரசு, ஏன் குமரன் பத்மநாதன் ஊடாக அவ்வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவிரும்புகின்றது என்பதில் மகிந்த சிந்தனையின் உட்கிடக்கையை அறிந்துகொள்ளமுடியும்.

இதேவேளை குமரன் பத்மநாதன் அவர்களின் வழிகாட்டலில், தற்போது தடுப்புமுகாம்களிலுள்ள உள்ள போராளிகளுக்கு தனியார் ஆசிரியர்களை நியமித்து வகுப்பு எடுப்பதற்கு, புலம்பெயர்ந்துவாழும்மக்கள் நிதியுதவி செய்யவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களை ஏமாற்றுவதற்கு எங்கே கைவைக்கவேண்டும் என்பது மகிந்த சிந்தனையில் ஊறியவர்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கின்றது. தடுப்புமுகாம்களிலுள்ள போராளிகளில் 300 வரையானோர் தற்போது பரீட்சை எழுதவுள்ளதாகவும் அதற்கு சாத்தியமான உதவிகள் செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்கமுடியாது.

ஆனால் இதனை செய்வோரின் முன்னெடுப்புகளும், அவர்கள் அதற்கு ஊடாக தமிழ் தேசியத்தை சிதைப்பதற்கான முனைப்புக்களை எடுப்பதுவுமே, தமிழ் மக்களை எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

எமது மக்களுக்கான உதவிகளை செய்வதற்கு சிங்கள அரசாங்கம் எந்த தடைகளையும் எற்படுத்தாமல் விட்டால் – அங்கு சென்று அப்பணிகளை நேரடியாக பொறுப்பெடுத்து செய்வதற்கு – தமிழ்ப்பற்றாளர்கள் இப்போதும் தயாராகவே இருக்கின்றார்கள்.

மகிந்த சிந்தனையை சரியென இப்போதும் வாதிடுவோர், இவ்வாறான பணிகளை செய்வதிலுள்ள அபாயங்கள் சமூகத்திற்கு பிழையான முன்னுதாரணங்களை வெளிப்படுத்திவிடும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

அதனை புரிந்துகொள்ளாமல் விட்டால், எமது மக்கள் குண்டுவீச்சுக்களால் கொல்லப்படும்போதும் அதனை நியாயப்படுத்திய டக்ளஸ் தேவானந்தாவையும், தமிழினத்தின் வரலாற்றில் மற்றொரு துரோக அத்தியாயத்தை பதித்த கருணாவையும், புலத்து தேசத்திற்கு அழைத்துவந்து அவர்களின் சேவைக்கு பட்டாடை அணிவித்து கௌரவிப்பது பற்றி தமிழர் தரப்பு சிந்திப்பது பொருத்தமானதாகவிருக்கும்.

இதுபற்றிய விவாதம் ஒன்றின்போது ”அவனும் இந்த தரம் போய் பத்துப்பேரை தடுப்பு முகாமிலிருந்து விடுவித்து போட்டுத்தான் வந்தவனாம்” என ஒருவர் சொன்னார். ”ஏன் மகிந்த சிந்தனையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டால் அனைவரையும் ஒரேநாளிலேயே விட்டுவிடுவார்களே” என இன்னொருவர் ஆதங்கப்பட்டார்.

மேலே குறிப்பிட்ட சம்பாசணையை – புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் - தமிழ் மக்கள் கூடும் இடங்களில் நிச்சயமாக கேட்ககூடும். இதுதான் சாதாரண தமிழ் மக்களின் எண்ணங்கள்.

இதற்கு பின்னாலுள்ள சரியான உள்ளார்த்தங்களை புரிந்துகொள்ளாமல் விட்டால், தமிழ் மக்களும் போராளிகளும் செய்த தியாகங்கள் அனைத்துமே, விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகிபோய்விடும்.

- சங்கிலியன்-

Comments