பிரிட்டனின் NEXT இலங்கை ஆடைகளை வாங்குவதை நிறுத்தியது

இலங்கைக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிற்பாட்டப்படும் கட்டத்துக்கு வந்துள்ளதால் பிரிட்டனின் ஆடை விற்பனை நிலையமான NEXT, தனக்குரிய ஆடைகளை இலங்கையிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது.

இவ்வரிச்சலுகை இருக்கும் காலகட்டத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு 9% நன்மை இருந்தது. ஆனால் வருகின்ற ஓகஸ்ட் 15 ஆம் திகதியிலிருந்து இலங்கைக்கான இவ்வரிச்சலுகையை நிற்பாட்டுவதில் ஐ.ஒ உறுதியாக இருப்பதால் ஐரோப்பிய நாடுகள் தாம் கொள்வனவு செய்வதையும் நிறுத்தும் அளவுக்கு வந்துள்ளன. இதன் பிரகாரமே NEXT தற்போது இலங்கை ஆடைகளை நிறுத்தி, தமக்கு வேண்டிய ஆடைத் தயாரிப்புகளை பங்களாதேஷிலிருந்து இறக்குமதி செய்யும் முடிவுக்கு வந்துள்ளது.

இதேவெளை இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் ஏற்றுமதியானது 2010 ஆம் ஆண்டு முதற்காலாண்டில் 13 வீதத்தால் குறைந்துள்ளது. பொருளாதார நிலமைகளில் ஏற்பட்ட சிக்கலே இலங்கையின் ஏற்றுமதி குறைந்ததற்கும் காரணம் எனப்படுகிறது. இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தயாரிப்புகளில் மிக முக்கியமானது ஆடை வகையே என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வெளிநாட்டு நாணயப் பரிமாற்றமும் கணிசமான அளவு குறைந்துள்ளது.

மத்திய வங்கியின் புள்ளி விவரப்படி 2009 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் 50 வீதத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியான ஆடைகள் நிரப்பியுள்ளன. இந்நிலையில் வரிச்சலுகை இரத்தாகின்றபோது பொருளாதாரத்தில் பலத்த அடி ஏற்படவுள்ளது. எனவே ஜி.எஸ்.பி வரிச்சலுகை இல்லாமல் ஆடைத் தொழிற்சாலைகளைக் கொண்டுநடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments