தமிழீழ மக்கள் எமது தேசிய கொடியை மறக்ககூடாது.


“தமிழ்மக்களுக்கான விடுதலைப்போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் புலிக்கொடியை இவ்வளவு காலமும் தாங்கிய தமிழினம், பயங்கரவாத அமைப்பாக பன்னாட்டு சமூகத்தினால் தடைசெய்யப்பட்ட அந்த அமைப்பின் கொடியை தாங்கியதால் சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டுவிட்டது. அந்த கொடியினை களைந்துவிட்டு தமிழ்மக்களின் உரிமைகளையும் நலன்களையும் ஒரு மக்கள் சமூகமாக சென்று சர்வதேச சமூகத்திடம் இறைஞ்சினால் – அல்லது பேரம் பேசினால் – தமிழ்மக்களுடைய விடுதலையை பெற்றுவிடலாம்”


- இவ்வாறான ஒரு எழுதப்படாத கோட்பாடு கடந்த மே 19 ஆம் திகதிக்கு முன்னர் புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தின் ஒரு பகுதியினரின் மத்தியில் காணப்பட்டது. அந்த எழுதாத தத்துவத்தை தற்போது ஓர்மமாகவே நின்று அமுல்படுத்தி, “புலிகளது அடையாளங்கள் இன்றிய நிகழ்வுகளின் ஊடாக தமிழ்மக்களின் நியாயமான நிலைப்பாடுகளை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்கூறி மென்போக்கு அல்லது மிதவாத அரசியல் போராட்டத்தை நடத்தப்போகிறோம்” – என்று ஒரு பகுதியினர் புறப்பட்டிருக்கின்றமையை தெளிவாக காணவும் உணரவும் முடிகிறது.

இந்தக்கூற்று பிழை என்ற நிலைப்பாடு உடையவர்களும்கூட, காலப்போக்கில் தமது நிலைப்பாட்டை மாற்றுவதில் என்ன தப்பு என்ற பாதையின் பால் ஈர்க்கப்படும் வகையில் சூழ்நிலைகள் அமைந்துவிடுகின்ற ஆபத்தை நாம் கண்முன்னால் காண்பதால் இது தொடர்பில் ஒரு விரிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அதற்கு முக்கிய காரணம், கொடியை மறுக்கின்ற புலம்பெயர்ந்த மக்களின் மத்தியில் உள்ள அந்த ஒரு பகுதியினர், தமிழ் தேசிய கொள்கைக்கும் தமிழீழ விடுதலை என்பதில் அனைவரும் கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கும் மாறானவர்கள் அல்லர். ஆனால், தேசிய உணர்வு என்பது மனதில் இருந்தால் போதுமானது. சர்வதேச சமூகத்துடன் அணைந்து பணிபுரியவேண்டுமாயின் அந்த சமூகத்தை உள்வாங்குவதற்கு ஏதுவாக – அந்த சமூகத்துக்கு பிடிக்காத – விடயங்களை தவிர்ப்போம் என்ற ஒரு கொள்கையின் ஊடாக தமது செயற்பாடுகளை முன்நகர்த்துவதற்கு தலைப்பட்டுள்ளனர்.

இந்த இடத்தில்தான் தெளிவான விளக்கத்தினை பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை உணரப்படுகிறது.

அதாவது, புலிக்கொடி என்று ஒற்றை சொல்லில் அழைக்கப்படும் அந்த அடையாளத்தின் பெயர் அதுவல்ல என்பதை புரிதல் மிக மிக அவசியமாகிறது. அதன் பெயர் தமிழீழ தேசிய கொடி. அதுவே சரியான சொற்பதமும் அதற்குரிய மரியாதையும் ஆகும். அது ஏன் அவ்வாறு அழைக்கப்படவேண்டும் என்பதை கீழே பார்ப்போம்.

(கொடியில் புலி இருப்பதனால் அந்த புலிக்கொடி என்று அழைக்கப்படலாம்தானே என்று வாதம் முன்வைப்பவர்கள், நாம் மாவீரர் சுடலை என்று கொச்சையாக அழைப்பதில்லை என்பதையும் தேசத்துக்காக உயிர்நீத்த அந்த புனிதர்கள் விதைக்கப்பட்ட இடத்தை அழைப்பதற்கு மாவீரர் துயிலும் இல்லம் என்ற சொற்பதத்தையே பேச்சுவழக்கில்கூட கொண்டுள்ளோம் என்ற யதார்த்தத்தினையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். மரியாதையும் மதிப்பும் கொடுக்கவேண்டும் என்ற உண்மைநிலையை புரிந்துகொள்பவர்கள் சொற்பதத்திற்கூட தமிழீழ தேசிய கொடியை புலிக்கொடி என்று அழைக்கமாட்டர்கள்)
தமிழீழ தேசிய கொடியின் அந்த மகத்துவம் என்ன? ஏன் நாம் அதனை என்றைக்கும் இழக்கக்கூடாது?

தமிழீழ தேசிய கொடி எனப்படுவது வெறுமனே தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடி மட்டும் அல்ல. அது தமிழீழ மக்களின் கொடியும் ஆகும். ஏனெனில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைக்காகவும் அவர்களது அபிலாஷைகளுக்காகவும் அவர்களுக்கு எதிரான கொடிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக போராடி மடிந்த 30 ஆயிரம் மாவீரர்களின் இழப்புக்களின் ஊடாகவே தமிழீழ மக்களின் போராட்ட நியாயம் வெளியுலகுக்கு உணர்த்தப்பட்டது. அவர்களது அந்த உறுதியான இலட்சிய பயணத்தின் ஊடகத்தான் ஈழத்தமிழன் ஒவ்வொருவனுக்கு உலகின் எந்த மூலையிலும் ஒரு அடையாளம் கிடைத்தது. ஈழத்தமிழருக்கென்ற தேசம் ஒன்று இன்னமும் கிடைக்கவில்லை என்பது வேறு. ஆனால், அது இன்னமும் மறுக்கப்பட்டுவருகிறது என்ற யதார்த்தத்தை உலகுக்கு உணர்த்தியது தமிழீழ விடுதலைப்போராட்டமும் அதன் பாதையில் மடிந்த மாவீரர்களின் தியாகமும் ஆகும்.

அந்த வகையில் தமிழர்களது போராட்டம் எனப்படுவது 70 களின் பிற்கூறிலிருந்து புதிய பாதையில் மீளுரைக்கப்படுகிறது. அது மூன்று தசாப்தங்களக்கு மேற்பட்ட காலப்பகுதியாக வரிவடைகிறது. அந்த காலப்பகுதியில் தமிழ்மக்களின் சகல உரிமைகளும் இழப்புக்களின் ஊடாக வரலாறாக மீண்டும் பதியப்படுகிறது. அதாவது, தமிழினம் என்பது ஒரு தேசிய இனம் எனப்படுவதும் அவர்களது தாயகம் எது என்பதும் அந்த இனத்துக்கு தன்னாட்சி உரிமை உண்டு எனப்படுவது அழியாத உண்மைகளாக மீளுறுதிப்படுத்தப்படுகிறது. தமிழீழ மக்களின் இந்த தார்மீக உரிமைகள் எவ்வளவு பெறுமதியானவை நியாயபூர்வமானவை என்பதும் இடித்துரைக்கப்படுகிறது. அந்த அடிப்படை தத்துவங்கள் அனைத்தும் ஈழத்தமிழனாக பிறந்த ஒவ்வொருவனினதும் இரத்தத்தில் ஊறிய உண்மைகள்.

ஆனால், அப்படிப்பட்ட நியாயமான – தியாகங்கள் நிறைந்த போராட்டம் ஏன் மெளனிக்கப்பட்டது? அதனை ஏன் சர்வதேச சமூகம் பயங்கரவாத போராட்டமாக சித்திரித்தது? என்ற விடயங்கள் எல்லாம் பிறிதொரு ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியவை.

இதில் முக்கியமாக புரிந்துகொள்ளவேண்டிய விடயம் யாதெனில், சர்வதேச சமூகம் அங்கீகரிக்கத்தக்க விதத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டம் நடைபெறவில்லை என்பதற்காக தமிழீழ மக்கள் தமக்கென்றுள்ள அடையாளங்களையும் தியாகம் செய்ய முடியாது என்பதே ஆகும். ஏனெனில், தமிழ் தேசிய அடையாளங்களாக நாம் பேணும் விடயங்கள் எனப்படுவை தமிழ் மக்களின் இழப்புக்களின் ஊடாகவும் தமிழர் சேனையின் தியாகத்தின் ஊடாகவும் பெறப்பட்டவை. அந்த அடையாளங்களுக்காக உயிரை துறப்பதற்குக்கூட ஒரு இனம் துணிந்ததென்றால், அந்த தியாகமும் அந்த துணிவும் அந்த தேசிய அடையாளங்களும் தமிழர்களின் பெருமையும் வீரமும் சார்ந்த விடயங்கள். அதனை விமர்சிப்பதற்கு எவருக்கும் தகுதியில்லை.

என்னை அடித்தவனை என் தந்தை அடித்தார். அங்கு என் தந்தையின் வீரமும் மானத்தை இழக்காத எந்த குடும்பத்தின் கெளரவமும் தங்கியிருக்கிறது. அதன் ஊடாக எமது குடும்பத்துக்காக கட்டிக்காத்த ஒரு மரியாதை இருக்கிறது. இவை எல்லாவற்றையும் வெளியிலிருந்த பார்க்கும் ஒருவன், குற்றவாளியான உன் தந்தையை துறந்துவிட்டு வா, நான் உனக்கு அடைக்கலமும் அளிக்கிறேன், உனக்கு தேவையானவற்றையும் தருகிறேன் என்று கூற, அதற்கு நான் உடன்படுவேனாக இருந்தால், அது எந்த வகையில் நியாயம்?

ஆகவே, ஈழத்தமிழினம் இன்னமும் தனது இலக்கை அடையாதவர்களாக – இன்னமும் துன்பச்சுமையுடனேயே பயணிப்பவர்களாக – இருக்கலாம். ஆனால், எமது இன அடையாளங்களையே இழந்துதான் அந்த இலக்கினை அடையவேண்டும் என்ற தேவை எமக்கு இல்லவே இல்லை. இருக்கவும் கூடாது. அவ்வாறு எமது இன அடையாளங்கள் என்ற விடயத்திலேயே சமரசம் செய்யும் நிலைக்கு செல்லக்கூடிய இனம் ஒன்று இலக்கினில் ஒருபோதும் உறுதியாக இருக்கப்போவதில்லை. இன அடையாளம் என்ற விடயத்தையே பேரம்பேசும் பொருளாக்கி பயணிக்கும் இனம் ஒன்று ஒன்று இலக்கினை நோக்கிய பாதையிலும் சமரசத்துடன் சந்தி பிரிந்துவிடாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் ஒன்றை மிக தெளிவாகவும் உறுதியாகவும் புரிந்துகொள்ளவேண்டும்.

அதாவது, தமிழரின் தேசிய அடையாளங்களை துணிவுடன் முன்னிலைப்படுத்தி இனத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் சூழ்நிலை இன்று தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு இல்லை என்பது யதார்த்தம். ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு அவ்வாறு முன்னிலைப்படுத்துவதில் எந்த தடையும் இல்லை. பல்லின மக்கள் வாழும் நாடுகளில் தமிழனின் அடையாளம் தமிழீழ தேசிய கொடியே ஆகும். எமது இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய சக்தி எமது தேசிய கொடி. அந்த ஒரு தனிப்பெரும் அடையாளத்தை பெற்றுக்கொள்வதற்கும் அதனையே எமது வரலாறாக வரிந்துகொள்வதற்கும் எமது மக்களும் மாவீரர்களும் கொடுத்த விலை எத்தகையது என்பதை விரிவாக பார்த்தோம்.

இலக்கினை அடைகிறோமோ இல்லையோ அடுத்த தலைமுறை என்ன, அதற்கு அடுத்த தலைமுறையாயினும் அதற்கு நாம் பெருமையுடன் விட்டுச்செல்லப்போகின்ற மகத்தான விடயங்கள் யாதெனில் எமது இனத்தின் அடையாளங்களும் அதற்காக நாம் கொடுத்த விலையும் அவை நடந்தேறிய வரலாறுமே ஆகும். இத்துணை பெறுமதியான தேசிய சொத்துக்களை, நித்தமும் மாறிவரும் பூகோள அரசியல் படிமுறைகளுக்கேற்ப நாம் பதுக்கி வைக்கவேண்டும் என்றும் அல்லது பயந்து ஒதுக்கவேண்டும் என்றும் நினைப்போமேயானால், அது மாண்ட மக்களும் மறைந்த மாவீரர்களும் வரைந்த தமிழரின் வரலாற்றை நாம் மாற்றி எழுத முனைகிறோம் என்றே அர்த்தமாகும்.

தெய்வீகன்

Comments