சுவிஸில் தமிழீழ தபால் தலை (முத்திரை) வெளியீடு

சுவிஸ் ஈழத்தமிழர் அவையால், தமிழீழ முத்திரைகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 1 பிராங் பெறுமதியான இம் முத்திரை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மக்கள் அதனை வாங்கி தமது உறவினர்களுக்கு கடிதம் எழுதும் போது அனுப்ப முடியும். சுவிஸ் அரசால் நடாத்தப்படும், தபால் சேவையில் இம் முத்திரைகள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இது நல்லதொரு உதாரணமாகவும் அமைந்துள்ளது!


இம் முத்திரையில் இலங்கை அரசே இன அழிப்பை நிறுத்து என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, தமிழீழ தேசியப் பூ, முகாமில் அடைபட்டுள்ள மக்கள், முள்ளிவாய்க்கால் பேரவலம், என பலதரப்பட்ட சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், பார்க்கும் அனைவருக்கும், மற்றும் வேற்றின மக்களுக்கும் இலங்கை நிலை நன்கு புரியும். சுவிஸ் வாழ் ஈழத் தமிழர்கள், இதில் முன்னோடிகளாக இருப்பது பெருமைக்குரிய விடயமாகும். குறிப்பாக இளையோர்களில் நிதிலா தெய்வேந்திரன் அவர்கள் இம் முத்திரைகளை வடிவமைத்து, சட்ட அங்கீகாரங்களையும் பெற்றுள்ளமை பாராட்டுதலுக்கு உரியது.

சுவிஸ் வாழ் தமிழ் மக்கள், இனி தாம் அனுப்பும் கடிதங்களுக்கு தமிழீழ முத்திரைகளை ஒட்டி அனுப்பவேண்டும். இருப்பினும் இலங்கைக்கு கடிதங்களை அனுப்பும்போது, இதனைத் தவிர்த்துக்கொள்வது, நல்லது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கும், உள்ளூருக்கும் கடிதங்களை அனுப்பும்போது, தமிழீழ முத்திரைகளையே சுவிஸ் வாழ் தமிழர்கள் பயன்படுத்தவேண்டும்! சுவிஸ் ஈழத்தமமிழர் அவை மிகவும் திறமையாகவும், நேர்த்தியாகவும் பல விடயங்களை முன்னெடுத்து வருகின்றது. அதற்கு அதிர்வு இணையம் என்றும் உறுதுணையாக இருக்கும்!
------------
கடந்த 20.08.2010 அன்று இனப்படுகொலையை சித்தரிக்கும் தபால் முத்திரைகள் சுவிஸ் ஈழத் தமிழரவையினால் வெளியிடப்பட்டுள்ளன.

இனப்படுகொலையை சித்தரிக்கும் தபால் முத்திரைகள் சுவிஸ் தபால் திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்று, நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

தற்போது உள்ளுர் தபால் சேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் சர்வதேச தபால் சேவைக்கேற்றவாறு, விலை நிர்ணயிக்கப்பட்டு முத்திரைகள் வெளியிடப்படவுள்ளன.

தமிழீழ தேசியப் பூ, முள்ளிவாய்க்கால் பேரவலம், வருடக்கணக்காக முகாமில் அடைபட்டுள்ள மக்கள் என பலதரப்பட்ட காட்சிகளை சித்தரிக்கும் வகையில் முத்திரை வெளியடப்பட்டுள்ளதுடன், சிறிலங்கா அரசே இனப்படுகொலையை நிறுத்து என்ற வாசகமும் முத்திரையில் பொறிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுவிஸ் ஈழத்தமிழரவையினர் விடுத்துள்ள செய்தியில்,

வித்தியாசமான பாதையில் நமது போராட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டிய காலத்தில் நாங்கள் இருக்கின்றோம். நமது நாட்டுப்பிரச்சனையை எவ்வாறு வெளிநாட்டு மக்களுக்கும், வெளிநாட்டு அரசாங்கங்களுக்கும் தெரியவைக்கவேண்டிய கடமைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம்.

நமக்குள்ளே ஏற்பட்டுள்ள பேதங்களை மறந்து நமது இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.
நமது தேசம் விடுதலை பெறவேண்டும் என தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நாம் மறவோம்.

புலத்தமிழர் கைகளில் கையளிக்கப்பட்டுள்ள தாயக விடுதலைப் போராட்டத்தை, சரியான பாதையில் கொண்டு சென்று நமது இலக்கை நாம் அடையும் வரை, அனைத்து புலம் வாழ் தமிழர்களும் ஓரணியில் ஒற்றுமையாக செயற்படுவோம்.

அதே போல ஏனைய புலம் பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற இளையோர்கள் இவ்வாறான புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு நமது தேச விடுதலையைப் பெற்றெடுக்க முன்வரவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிகமாக தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில், info@scet.ch என்ற மின்னஞ்சல் முகவரியில் எம்முடன் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயக விடுதலைப் போராட்டத்தில் சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் சாதனை மதிப்பிடமுடியாதவை. அந்த வகையில் இப்போதும எதற்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்கள் சுவிஸ் ஈழத்தமிழரவையினர்.

புலம்பெயர் தேசங்களிலே விறு கொண்டு எழுந்து நிற்கின்ற இளையோர்களின் செயற்பாடுகள் வெற்றியளிக்க, ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஆசீர்வாதத்தை அள்ளி வழங்கி வழங்குவோம்.

Comments