குந்த ஒரு குடிநிலம்

sun-sea-shipஅண்மையில் சிறிலங்காவின் வணிகசஞ்சிகை ஒன்றின் ஊடாக விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதன் அவர்களின் நேர்காணல் இடம்பெற்றிருந்தது. சிறிலங்கா அரசின் அனுசரணையில் வாழ்ந்துவரும் ஒருவரின் கருத்துக்களுக்கு நாம் அதிகம் கரிசனை கொள்ளதேவையில்லை.

இதனையே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால நிறைவேற்றுநர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களும் தெரிவித்திருந்தார்.

எந்த இடத்தில் வாழ்ந்தாலும் எந்த சிறையில் இருந்தாலும் குமரன் பத்மநாதன் என்பவரின் கருத்துக்களை உள்வாங்கும்போது அவர் எந்த நிலையில் குறித்த நேர்காணலை வழங்குகிறார். அது அவரால் உண்மையில் வழங்கப்படுகின்றதா? அதனை எவ்வாறு ”உருவேற்றி” வெளியிடுவார்கள் என்பது பற்றியும் சிந்திக்கவேண்டும்.

ஆனாலும் தற்போதும் மக்களை சந்திக்ககூடிய நிலையில் இருக்கின்ற குமரன் பத்மநாதன் அவர்கள் தெரிவித்ததாக சொல்லப்படும் கருத்துக்கள் யாவும், தமிழ் மக்களை ஒரு குடையில் அணி திரட்டுவதற்கு பதிலாக பல்வேறு பிரிவுகளாக பிளவுகளாக உடைப்பதற்கான முயற்சியாகவே இருப்பதை கண்டுகொள்ளலாம்.

இவ்வாறான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடன் நீண்ட காலம் நெருங்கி செயற்பட்ட குமரன் பத்மநாதன், தனது தலைவரை காப்பாற்ற ஹெலி வாங்கமுயன்றதாக ஒரு கருத்தை கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைக்கான பயணத்தில், கொள்கைக்காகவே இறுதிவரை போரிட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவர், தனது மக்களையும் போராளிகளையும் மிகப்பெரும் அவலத்திற்குள் விட்டு அங்கிருந்து வெளியேறுவார் என குமரன் பத்மநாதன் எண்ணியிருப்பதே ஆச்சரியமானதாக இருக்கின்றது.

அத்தோடு நின்றுவிடாது தமிழீழ விடுதலைக்காகவே இறுதிவரை வாழ்ந்து, கொண்ட கொள்கைக்காகவே மரணித்த வீரர்களையும் தளபதிகளையும் விமர்சிப்பதும், தமிழ் மக்களுக்காக ஏதாவது செய்வார் என எதிர்பார்த்த நாட்களையும் மறக்கடித்துவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்குகின்றது.

அவுஸ்திரேலிய நாட்டின் அடுத்த பிரதமரை நாளை சனிக்கிழமை தெரிவு செய்வதற்கான தேர்தல், நாளை நடைபெறுகின்றது. தற்போது ஆட்சியிலுள்ள லேபர் கட்சியானது கடும் போட்டியை அதன் எதிர்க்கட்சியான லிபரல் கட்சியிடம் எதிர்நோக்குகின்றது.

கடந்த மாதம் லேபர் கட்சியானது தனது அப்போதைய பிரதமர் கெவின் ரட்டிற்கான ஆதரவை விலக்கிகொண்டதை அடுத்து தற்போதைய பிரதமர் ஜூலியா கிலாட் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சரிந்துகொண்டிருந்த லேபர் கட்சியின் ஆதரவை தக்கவைப்பதற்காக, உள்கட்சி கிளர்ச்சி ஒன்றை நடத்திய அக்கட்சி, தற்போது அதன் சாதகமான நிலையை தக்கவைத்துள்ளதாகவே கருதப்படுகின்றது.

தமிழர்களை பொறுத்தவரை லிபரல் கட்சியானது, அகதிகள் வருகை தொடர்பில் கடும்போக்கை தாம் எடுக்கவுள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளமை தெளிவான முடிவுகளை தேர்தலின்போது வெளிப்படுத்த உதவும்.

931223-election-day-how-to-vote

தமிழர்கள்அவுஸ்திரேலியாவில் குறைவாக வாழ்ந்தாலும், உள்ளக மட்டங்களின் நெருக்கமான போட்டி வருகின்ற இடங்களில் தமது பலத்தை சரியாக பயன்படுத்தமுடியும்.

அந்தவகையில் தமிழர்களின் போராட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவை காட்டிவரும் மூன்றாவது பலம்வாய்ந்த கட்சியான கிறீன் கட்சிக்கு, தமிழர்கள் ஆதரவை வழங்கும் தீர்மானத்தை Tamils for Greens என்ற அமைப்பின் ஊடாக முன்னெடுக்கின்றனர்.

இரண்டு பிரதான கட்சிகளுக்கும் போட்டி வருகின்ற நிலையில், கிறீன் கட்சி தனது செல்வாக்கை செலுத்தமுடியும் எனவும், தற்போதைய நிலையில் எதிர்பாராத வகையில் கிறீன் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவை சென்றடைந்த கப்பலில் 492 தமிழர்கள் பாதுகாப்பாக சென்றடைந்திருக்கிறார்கள். ஒருவர் பயணத்தின்போது உயிரிழந்துள்ளார். இவர்கள் பயணம் செய்த கப்பலானது ஆண்கள் தங்குவதற்கு எனவும், பெண்கள் தங்குவதற்கு எனவும் தனியான பகுதிகளை கொண்டிருந்ததாகவும், அக்கப்பல் இவ்வாறான பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் கனேடிய காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகின்றது.

இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட நடைமுறையை பின்பற்றியமையும், மூன்று மாத கால பயணத்தின் பின்னரும், அனைவரும் எதிர்பார்த்ததைவிட நோய்கள் எதுவுமின்றி இருந்தமையும், இது புலிகளின் வேலையே என கனேடிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

எமது தமிழ் ஊடகம் ஒன்றும் அது புலிகளின் வேலையே என்ற வகையில் செய்தியை வெளியிட்டு அதன் இறுதியில் ”என கனேடிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது” என முடித்திருந்தது.

பெருந்தொகையாக, ஒரே தடவையில் இவ்வளவு தமிழர்கள் கனடாவை வந்துசேர்ந்திருப்பது அவ்வளவு பெரிய தொகை அல்ல என்றும், சாதாரணமாகவே வருடம் ஒன்றுக்கு 30 000 மக்களுக்கு கனடா அகதி அந்தஸ்து வழங்குவதாகவும் அந்நாட்டு குடிவரவு சட்டத்தரணி பீற்றர் கோல்டன் தெரிவிக்கின்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது வந்துள்ளவர்களின் எண்ணிக்கை என்பது சாதாரணமாக இரண்டு மூன்று கிழமைகளில் வான்கூவர் மற்றும் ரொறன்ரோ விமான நிலையங்கள் ஊடாக வந்திறங்கும் அகதிகளின் எண்ணிக்கையே எனவும் கூறுகின்றார்.

ஆனால் வந்திறங்கிய தமிழ் மக்களை உடனடியாகவே அதே கப்பலில் திருப்பி அனுப்பவேண்டும் 80 விழுக்காடு கனேடிய மக்கள் விரும்புவதாக அங்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பு கூறுகின்றது.

பாரதி சொன்னான் காணி நிலம் வேண்டும். ஆனால் தமிழனுக்கு ”குந்த ஒரு குடிநிலம் வேண்டும்”.

- சங்கிலியன்

Comments