கெஞ்சிக் கூத்தாடியதை அடுத்து, சர்வதேச செயலகப் பிரிவுத் தலைவர் கேஸ்ட்ரோவுக்குக் கட்டுப்பட்ட பணியில் நியமிக்கப்பட்டார். கே.பி. : சீறுகிறார் நெடுமாறன்


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 'வீர மரணம்' பற்றி முதலில் நெடுமாறனிடம் பேசியதாகவும், 'இதை விடுதலைப் புலி இயக்கத்தின் மையக் குழு உறுப்பினர்கள் மூலம் தீர்மானமாக வெளியிடச் சொல்லி' தன்னை நெடுமாறன் வற்புறுத்தியதாகவும்... ஆனால், பிறகு பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவரும் வைகோவும் அறிக்கைவிட்டு திகைப்படைய வைத்தார்கள் என்றும் டி.பி.எஸ். ஜெயராஜுக்கு அளித்த பேட்டியில் கே.பி. சொல்லி இருக்கிறார்.

இதுபற்றி உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறனிடம் பேசினோம். விவரங்களைக் கேட்டுக்கொண்ட அவர், மிகவும் நிதானமாக பதில் சொன்னார்.

"இந்த மனிதர் சொல்லும் வார்த்தைகளில் எதுவும் உண்மை இல்லை. கடந்த ஆண்டு, எங்கேயோ வெளிநாடு ஒன்றில் இருந்து, இவர் திடீரெனத் தொலைபேசியில் என்னிடம் பேசினார். 'தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வீர மரணம் அடைந்துவிட்டார். அவருக்கு ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்தான் சொன்னார். பிரபாகரன் வீர மரணம் அடைந்தாரா இல்லையா என்பதை அவருடன் களத்தில் இருந்த மூத்த தளபதிகள் மட்டுமே சொல்ல முடியும்.

கே.பி-யோ இன்டர்போலுக்குப் பயந்து வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அது அவருக்கு ஏற்பட்ட நிலை... இப்படி இருக்கும் நிலையில் என்னிடம் பேசிய அவரிடம், 'பிரபாகரன் வீர மரணம் அடைந்துவிட்டதாகக் கூற நீங்கள் யார்? பிரபாகரனுடன் போரின் இறுதி வரை களமாடிய தளபதிகள் இதைச் சொல்லட்டும் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளின் பொலிட்பீரோ அறிவிக்கட்டும்.

வெளிநாட்டில் இருந்துகொண்டு நீங்கள் எதையாவது சொல்லக் கூடாது. உண்மையிலேயே பிரபாகரன் மீது நீங்கள் மரியாதை வைத்திருந்தால், இது அவரை அவமரியாதை செய்யும் காரியம். இந்தத் தகவலை அறிவிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமை உங்களிடம் சொன்னதா?' என்று கேட்டேன். இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவர், தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

நான்கு நாள்களுக்குப் பிறகு, பிரபாகரன் வீர மரணம் அடைந்துவிட்டதாக கே.பி. பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார். இவர் கேட்டுக்கொண்டபடி எந்த நாட்டிலும், 'வீர மரண'த்துக்காக ஈழத் தமிழ் மக்கள் ஒரு நிகழ்ச்சிகூட நடத்தவில்லை. இதில் இருந்தே இவரின் யோக்கியதையை உலகம் தெரிந்துகொண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கே.பி. 2003-வரைதான் ஆயுதக் கொள்முதல் பொறுப்பாளராக இருந்தார். மறைந்த சுப.தமிழ்ச்செல்வன் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தபோது, கே.பி-யின் ஊழல்களைக் கேள்விப்பட்டு, அதற்கான ஆதாரங்களைத் தலைமையிடம் அளித்தார். அதையடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்முதல் பொறுப்பாளர் பதவியில் இருந்து கே.பி. நீக்கப்பட்டார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, கெஞ்சிக் கூத்தாடியதை அடுத்து, சர்வதேச செயலகப் பிரிவுத் தலைவர் கேஸ்ட்ரோவுக்குக் கட்டுப்பட்ட பணியில் நியமிக்கப்பட்டார். அப்போதும் கே.பி-க்கு முக்கியப் பொறுப்பு ஏதும் தரப்படவில்லை!" என விவரித்த நெடுமாறன், 'இப்போது கே.பி. 'ரா' உளவுப் பிரிவின் பிடியிலோ, சிங்கள அரசின் பிடியிலோ இருந்துகொண்டு இதுபோலப் பேசலாம்" என்றார் அழுத்தமாக!

Comments