உறவுக்குக் கைகொடுப்போம் - ஊர் வாழ வழி சமைப்போம்

இலங்கைத் தீவில் போர் முடிவுக்கு வந்து 15 மாதங்கள் ஆகிவிட்டன. போரின் கோரப் பிடியில் சிக்கி தங்களது உறவுகளை இழந்து, உடுத்த உடையுடன் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் உறவுகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, மாற்றுத் தெரிவுகள் எதுவுமற்ற நிலையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நகர்ந்திருந்தார்கள்.

vanni-1_1


இதன் பின்னர் இந்த அகதிகள் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற முகாம்களில் வெறும் தரப்பாள் கொட்டில்களின் கீழ் தங்களது காலத்தினைக் கழித்ததும் தற்போது சூனியமாக இருக்கும் இவர்களது சொந்த ஊர்களில் படிப்படியாக மீள்குடியேற்றப்பட்டு வருவதும் நாமறிந்ததே.

எங்களது சொந்தங்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பியபோது அங்கு எதுவுமே இருக்கவில்லை. இவர்களது வாழ்வாதாரங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டிருந்தன அல்லது சூறையாடப்பட்டிருந்தன. வீடுகள் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டிருந்தன.

சிறிலங்கா அரச படையினரின் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களின் விளைவாகவும் மோசமாகத் தொடர்ந்த போரின் நடுவில் சிக்குண்டும் தங்களது அன்புக்குரியவர்களையும் உறவினர்களையும் பறிகொடுத்த மன வலி ஒருபுறமும் இனி எவ்வாறு வாழ்க்கையினைக் கொண்டு நடாத்துவது என்ற ஏக்கம் மறுபுறமுமாக இவர்களின் வாழ்கை நிச்சயமற்ற ஒரு எதிர்காலத்தினை நோக்கிச் செல்கிறது என்பதுதான் உண்மை.

வன்னி எப்போதுமே வந்தோருக்கு நேசக்கரம் நீட்டிய வரலாற்றைக் கொண்டது. எழுபதுகளில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அந்த நெருக்கடியைத் தாங்கியது வன்னிதான் எனலாம். வன்னியின் பல பாகங்களிலும் படித்த வாலிபர் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு ஒப்பீட்டு ரீதியில் சன நெருக்கடி நிறைந்த குடாநாட்டிலிருந்து மக்கள் வன்னிக்குக் கவர்ந்திழுக்கப்பட்டார்கள்.

1970களின் ஆரம்பத்தில் 'வெளிக்கிடடி விசுவமடுவிற்கு' என்ற தெருவழி நாடகம் குடாநாட்டில் பிரபல்யம் அடைந்திருந்தது. இதற்கமைய ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் எழுபதுகளின் நடுப்பகுதியில் குடாநாட்டிலிருந்து வன்னியின் நெடுங்கேணி, முள்ளியவளை, விசுவமடு, உடையார்கட்டு, வட்டக்கச்சி, முரசுமோட்டை, முழங்காவில், துணுக்காய் மற்றும் மல்லாவி போன்ற விவசாயக் கிராமங்களுக்கு நகர்ந்திருந்தார்கள்.

இதேபோல இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் குடாநாட்டிலிருந்து வன்னிக்கு நகர்ந்த விடுதலைப் புலிகளின் தலைமையினையும் அமைப்பினது அடிப்படைக் கட்டமைப்புக்களையும் பாதுகாத்த பெருமை வன்னியையே சாரும்.

vanni-1_2


எண்பதுகளின் இறுதிப்பகுதியிலும் தொண்ணூறுகளின் முற்பகுதியிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் வன்னிப்பகுதிக்குள் வந்திருந்தார்கள். சிங்களக் காடையர்களின் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து தங்களது உறவுகள் பலரைப் பறிகொடுத்த இவர்கள் காடுகள் வழியாக பல நாட்கள் நடந்தும் கடல் வழியாகவும் வன்னியை வந்தடைந்தனர். முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் மற்றும் மூங்கிலாறு ஆகிய பகுதிகளில் இவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு இவர்களுக்கான வசதிகள் அனைத்தும் அப்போது செய்துகொடுக்கப்பட்டிருந்தன.

1995ஆம் ஆண்டு குடாநாடு சிங்கள ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டபோது பல்லாயிரக்கணக்கான குடாநாட்டு மக்களுக்கும் புலிகளின் தலைமைக்கும் புகலிடம் வழங்கியதும் வன்னியே.

vanni-1_3


ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடைநின்று போகும் வரைக்கும் போராட்டத்தின் கடினமான சுமையினை தன் தோழில் சுமந்து பெரும் பங்காற்றியதும் வன்னிதான். ஆனால் இன்று வன்னியோ நார் நாராகக் கிழித்தெறியப்பட்டு அலங்கோலமாய்க் கிடக்கிறது. சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் அகப்பட்டு மீளத் துடிக்கிறது.

இந்த நிலையில் வன்னியை வாழ வைப்பதற்கு, இடர்மிகுந்த இந்த வேளையில் எங்களது மக்களுக்குக் கை கொடுப்பதற்குப் புலம்பெயர் தமிழர்கள் செய்யவேண்டியது என்ன என்ற கேள்வி எழுகிறது. சரி, வன்னி மக்களின் மீளெழுச்சிக்கென புலம்பெயர் தேசங்களில் சேகரிக்கப்படும் நிதி உண்மையில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைச் சென்றடைவதற்கு ஏற்ற வழியேதும் உள்ளதா? நம்பத்தகுந்த கட்டமைப்பு ஏதேனும் உள்ளதா என நீங்கள் கேட்கலாம்.

அண்மையில் கொழும்பிலிருந்து வெளிவரும் த ஐலண்ட் பத்திரிகையில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனது செவ்வி வெளிவந்திருந்தது. சிங்களத் தலைமையுடன் இணைந்து செயற்படாமல் எதுவும் நடந்துவிடப்போவதில்லை என்றும் தான் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களுக்கு உதவப் போவதாகவும் அதற்காக புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஒவ்வொரு தமிழனும் மாதமொன்றுக்கு ஒரு டொலர் வீதம் வழங்கவேண்டும் என்றும் கோரியிருந்தார்.

தான் இந்தப் பணியினை மேற்கொள்வதற்காக வடக்குக் கிழக்கு புனர்வாழ்வுக் கழகம் என்ற நிறுவனத்தினைத் உருவாக்கியிருப்பதாகவும் தங்களது இந்த அமைப்பு ஏலவே மக்கள் பணியினை ஆரம்பித்திருப்பதாகவும் கதைவிட்டிருந்தார். மகிந்த சகோதரர்களின் குறிப்பாக, கோத்தபாய ராஜபக்சவின் கைப்பொம்மையாகச் செயற்படும் குமரன் பத்மநாதன் வெளிநாட்டுத் தமிழர்களிடமிருந்து பணத்தினைக் கறந்து மகிந்த சகோதரர்களின் கல்லாவினை நிரப்புவதற்கு முனைகிறாரேயன்றி வேறு எதுவுமில்லை.

உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றி வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் இப்போது இங்கு பணிசெய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்குத் துணைபோனதாகக் குற்றம் சுமத்தப்பட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினைக் கொழும்பு அரசாங்கம் தடை செய்திருக்கிறது.

இந்தப் புறநிலையில் தமிழ் மக்களின் நலன்களைக் கவனிப்பதற்கென புதிய தொண்டு நிறுவனம் ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்றும் இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிர்வகிகக்கவேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பணியினைத் தன்தலையில் சுமப்பதற்குப் பின்னடிப்பதாகவும் சில தகவல்கள் வெளிவருகின்றன.

போரின் கோரப் பிடியில் சிக்கி தங்களது வாழ்வில் என்றுமில்லாத சோகங்களையும் சுமைகளையும் தாங்கியவாறு வாழத் துடிக்கும் எம்மக்களுக்கு எப்படியாவது உதவவேண்டும் என்ற எண்ணம் இன்னமும் புலம்பெயர் தமிழர்களிடம் இருக்கிறது என்பதை அறியும் போது மனம் உவகையில் திழைக்கிறது.

இந்த மக்களுக்கு உதவுவதற்காக நடைமுறைச் சாத்தியமான வினைத்திறன் கொண்ட வழியொன்று இருக்கிறது. இது ஏலவே வெற்றியும் தந்திருக்கிறது. வெவ்வேறு புலம்பெயர் தேசங்களில் பரந்து வாழ்ந்தாலும் நீங்கள் இணைய வழி மூலமாக இணைந்திருக்கிறீர்கள்.

எடுத்துக்காட்டாக வன்னியின் வட்டக்கச்சியை எடுத்துகொண்டால், இந்தக் கிராமத்தவர்கள் பல்வேறுபட்ட புலம்பெயர் நாடுகளில் வசிக்கின்ற போதும் மின்னஞ்சல்கள், 'பேஸ் புக்' போன்ற சமூக இணையத் தளங்கள் மூலமாகவும், ஸ்கைப் வழியாகவும் இவர்கள் அனைவரும் இணைந்திருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் இணைந்து தங்களது கிராமத்தினை முன்னேற்றுவதற்காக, கிராமத்தில் போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதரத்தினை மீளவும் பெற்றுக்கொடுப்பதற்காக உதவிகளைச் செய்யலாம். ஊரிலுள்ள இவர்களது பெற்றோரைக் கொண்டு பயனாளிகளை இனங்கண்டு அவர்களுக்கான தேவை என்னவெனக் கண்டறிந்து அதனைப் பெற்றுக்கொடுக்கலாம்.

உதாரணமாக தையல் தெரிந்த ஒரு இளம் பெண் போரில் தனது கணவனைப் பறிகொடுத்துவிட்டு இரண்டு பிள்ளைகளையும் வைத்துப் பராமரிப்பது எவ்வாறு எனத் திண்டாடுகிறாள் எனில் அந்தக் குடும்பத்திற்கு ஓர் தையல் இயந்திரத்தினைப் பெற்றுக்கொடுக்கலாம். இதனை நீங்கள் உங்கள் உறவினர்கள் மூலமாகவே செய்யலாம். தையல் இயந்திரத்தின் விலை வெறும் இருபதாயிரம் ரூபாய்தான். ஆனால் இந்த இளம் யுத்த விதவையின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கு நீங்கள் வழிசெய்திருப்பீர்கள்.

இதுபோன்ற பயனாளிகளை ஊரிலுள்ள உங்களின் உறவினர்களின் உதவியுடன் இனங்கண்டு அவர்களுக்கான இதுபோன்ற உதவிகளை நீங்கள் செய்யலாம். குடும்பத் தலைவன் எறிகணைத் தாக்குதலின் விளைவாக அங்கவீனமடைந்திருந்தால் அவரது குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தினைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் பெட்டிக்கடை ஒன்றை வைத்துக் கொடுக்கலாம். இதற்கும் பெரும் முதல் தேவையில்லை.

விவசாயக் குடும்பமெனில் நீர்ப்பம்பி ஒன்றைக் கொள்வனவு செய்து கொடுக்கலாம். தற்போது நீர்ப் பம்பி ஒன்றின் விலை 30,000 ரூபாய்களே. இதனை நீங்கள் மாத்திரம் தனியாகப் பொறுப்பேற்கவேண்டும் என்றல்ல. ஏற்கனவேயுள்ள இணையவழித் தொடர்புகள் ஊடாக உங்கள் கிராமத்தவர்களை ஒன்றுதிரட்டுங்கள். கிராமத்திலுள்ள உறவினர்கள் அல்லது சமூகத்தலைவர்கள் மூலமாக பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவுங்கள்.

வறுமையிலும் வறுமையில் வாடும் குடும்பம் ஒன்றின் பிள்ளைகளின் கல்விச் செலவினைப் பொறுப்பெடுங்கள். அல்லது அங்கவீனமடைந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் மாணவரின் கல்விச் செலவைப் பொறுப்பெடுங்கள். உண்மையான பயனாளிகளை ஊரிலுள்ள உங்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாகத் தேர்ந்தெடுங்கள்.

இந்த முறைமை ஏற்கனவே நல்ல பலன்களைப் பெற்றுத்தந்திருக்கிறது. முல்லைமாவட்டத்தின் பாண்டியன்குளம் உதவி அரச அதிபர் பிரிவிலுள்ள கொல்லவிளாங்குளம் என்ற கிராமத்தில் இந்த முறைமை நல்ல விளைவினைத் தந்திருக்கிறது. விவசாயக் கிராமமான இந்தக் கிராமத்தினைச் சேர்ந்த விரல் விட்டு எண்ணக்கூடிய குறிப்பிட்ட சிலர் மாத்திரம் அவுஸ்ரேலியா, கனடா, லண்டன் மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளில் வாழுகிறார்கள்.

இந்தக் கிராமத்தின் மூத்த பிரஜை ஒருவரின் தலைமையில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று குடும்பங்களுக்கு நீர்ப்பம்பிகளும் நான்கு குடும்பங்களுக்குத் தையல் இயந்திரமும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கின்றன. தவிர, ஏழு பிள்ளைகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான கல்விச் செலவு பொறுப்பெடுக்கப்பட்டிருக்கிறது. மூவருக்கு பெட்டிக்கடை வைத்துக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பயனாளிகள் தெரிவு சிறு குறையேனும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்குச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதுபோல யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும், போரின் போது அங்கவீனமடைந்த மற்றும் வறுமையிலும் வாடும் வன்னிப் பிள்ளைகள் இனங்காணப்பட்டு சுவிஸ்லாந்தில் வாழும் சில தமிழர்கள் மாதம்தோறும் 5,000 ரூபா பணத்தினைக் கல்விச்செலவுக்கென அனுப்பிவைக்கிறார்கள்.

போரின் இறுதி நாட்களில் மாற்றுத் தேர்வுகள் ஏதுவுமற்ற நிலையில் சிங்களப் படைகளின் கைகளில் அகப்பட்ட 11,000 போராளிகளில் தற்போது 3200 பேர் வரையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 1200 வரையிலான அங்கவீனமடைந்த போராளிகள் உள்ளனர்.

தற்போது மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளிலும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலும் வசித்துவரும் அங்கவீனமடைந்த இந்தப் போராளிகளில் பெரும்பாலானவர்கள் திருமணம் செய்தவர்கள். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்கள், அங்கத்தினை இழந்த நிலையில் இருக்கிறார்கள்; என்பதற்காகவே வேண்டுமென்றே இவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. திறமை இருந்தும் இவர்களுக்கு யாரும், ஏன் தமிழ் வர்த்தகர்கள் கூட வேலை கொடுக்க மறுக்கும் கொடுமை இங்கு அரங்கேறுகிறது.

இந்த நிலையில் குறிப்பிட்ட முதலைத் திரட்டக்கூடிய நிலையில் இருக்கும் ஒருசில அங்கவீனமடைந்த போராளிகள் மாத்திரம் சொந்தமாகத் தொழிலை ஆரம்பித்திருக்கிறார்கள். ஏனையோருக்கும் இதுபோன்ற வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டால், அவர்களது வாழ்விலும் ஒளி பரவும். இந்தப் போராளிகள் சுயதொழிலை ஆரம்பிப்பதற்கான வட்டியற்ற கடனாகக் கூட இது இருக்கலாம். அது அவர்களுக்குப் பெரிதும் துணைநிற்கும். ஒவ்வொரு கிராமத்திலும் உங்களது உறவினர்கள் மூலமாக இதுபோன்ற உண்மையான பயனாளிகளை நீங்கள் இனங்காண முடியும்.

கணவன் தடுப்பிலுள்ள பல குடும்பங்களும் பெரும் துயரத்திற்கு முகம்கொடுத்து நிற்கிறார்கள். அண்மையில் மூன்று பிள்ளைகளுடன் வாழும் ஒருவரை திருவையாற்றில் சந்தித்தேன். இவளது கணவன் வெலிக்கந்தைப் பகுதியிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறான். வருமானம் எதுவுமற்ற நிலையில் வயது முதிர்ந்த பெற்றோரின் தயவில் வாழும் இவள் தனது மூன்று பிள்ளைகளுக்கு மூன்று நேரமும் உணவளிப்பதற்கே பாடாய்ப் படுகிறாள். இந்த நிலையில் மாதத்தில் ஒரு தடவையாவது வெலிக்கந்தைக்குச் சென்று கணவனைப் பார்த்துவரவேண்டுமென்றால் ஆகக்குறைந்தது 1500 ரூபாய் ஆவது வேண்டும்.

ஈழத் தமிழன் என்றொரு இனமுண்டு என்று உலகறியச் செய்வதற்கும் அவர்களுக்குச் சுதந்திரத் தனிநாடு அமைப்பதற்குமாகத் தங்களது இளமைக்காலம் முதலே போராடியவர்கள் இவர்கள். புலம்பெயர்ந்து வாழும் தேசத்திலாக இருக்கலாம் அல்லது ஈழத்திலாக இருக்கலாம் தமிழருக்குப் பெருமையைத் தேடித் தந்தவர்கள் இவர்கள். இன்று விதியின் விளையாட்டில் எப்போது வெளியே வருவோம் எனத் தெரியாது சிங்களப் படையினரால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இவர்களது குடும்பங்களுக்கு உதவுவது எங்களது கடமை என நான் எண்ணுகிறேன். ஒவ்வொரு கிராமத்திலும் பயனாளிகளை இனங்காணும்போது இதுபோன்றதொரு தரப்பினர் இருப்பதையும் நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும்.

பாடசாலையின் பழைய மாணவர் சமூகங்களும் வன்னியின் அபிவிருத்தியில் பெரும் பங்காற்ற முடியும். வடக்கினது பாடசாலைகள் ஒவ்வொன்றினதும் பழைய மாணவர் சங்கங்கள் பேஸ்புக்கில் தங்களுக்கென கணக்குகளை வைத்திருக்கிறார்கள். போரினால் இடிந்து அழிந்துபோயிருக்கும் தத்தமது பாடசாலைகளை மீளக் கட்டுவதில் புலம்பெயர் தேசங்களில் வாழும் குறிப்பிட்ட பாடசாலையின் பழைய மாணவர்கள் பெரும் பங்காற்ற முடியும்.

உதாரணமாக, வன்னியின் முதல்தரப் பாடசாலையாம் வித்தியானந்தாக் கல்லூரியில் கல்வி பயின்ற, தற்போது பிரித்தானியாவில் வாழும் பழைய மாணவர்கள் 27 ஏக்கர்களைக் கொண்ட பாடசாலை வளாகத்தின் சுற்று வேலியினை அமைப்பதற்கும் ஆசிரியர் விடுதியினை திருத்துவதற்குமான நிதியுதவியினை உடனடி உதவியாக வழங்க முன்வந்திருக்கிறார்கள்.

அண்மையில் பாடசாலை நிர்வாகத்திற்கும் வன்னியிலுள்ள அதன் பழைய மாணவர்களுக்கும் பிரித்தானியாவில் வாழும் கல்லூரியின் பழைய மாணவர்களுக்குமிடையிலான இணையவழி மாநாடு ஒன்று வவுனியாவிலுள்ள கணனிக் கல்வி நிறுவனம் ஒன்றில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டின் போது புலம்பெயர் தேசங்களில் வாழும் கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவருமே கல்லூரியினை மீளக் கட்டுவற்குத் தங்களாலான உதவிகளை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தனர். வித்தியானந்தாவை மீண்டும் முதல்தரப் பாடசாலையாக்கும் உறுதி அவர்கள் அனைவரிடத்திலும் இருந்தது.

இதுபோல பேரினால் பாதிக்கப்பட்ட வடக்கினது பாடசாலைகள் அனைத்தினதும் புலம்பெயர் தேசங்களில் வாழும் பழைய மாணவர்கள் உதவி செய்யலாம். தங்களை நற்பிரஜைகளாக வளர்த்தெடுத்த பாடசாலைகளுக்குக் கைமாறு செய்யும் கடன் அனைவருக்கும் இருக்கிறது.

இதுபோல நாம் எங்களது மக்களுக்கு உதவிசெய்யும் போது நிர்வாகச் செலவுகள், இதர செலவுள் என எதுவுமில்லாமல் உங்களது உதவிகள் மக்களைச் சென்று நேரடியாகச் சேர்கிறது. இந்தப் பணத்தினை அரச சார்பற்ற நிறுவனங்களின் கைகளில் கொடுத்தீர்களானால் நீங்கள் வழங்கும் பணத்தில் அரைப்பகுதி கூட பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையாது.

வெளிநாட்டு வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதையும் நீங்கள் சிறுகச் சிறுகப் பணம் சேர்ப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறீர்கள் என்பதையும் நாமறிவோம். மனைவி பிள்ளைகளுடன் வீட்டில் சந்தோசமாக இருப்பதற்கே நேரத்தினைத் தேடும் நீங்கள் இரண்டு ஏன் சில சமயங்களில் மூன்று வேலைகளுக்குத் தினமும் சென்று மாடாய் உழைப்பதையும் கொட்டும் பனியில் கொடும் குளிரில் அதிகாலையில் வேலைக்குச் செல்லும் நீங்கள் பின்னிரவிலேயே வீடு திரும்புவதும் எமக்குத் தெரியும்.

அவ்வாறு நீங்கள் தேடும் பணம் வீண் விரயமாகக் கூடாது. பயனாளிகள் எவருக்கும் பணத்தினை நேரடியாகக் கொடுக்காதீர்கள். அது அவர்களைச் சோம்பேறிகள் ஆக்கிவிடும். உங்களது உறவினர்கள் ஊடாக அவர்களுக்கான வாழ்வாதாரத்தினைப் பெற்றுக்கொடுங்கள், அதுவே போதும். பயனாளிகள் தெரிவு சரியாக இடம்பெறுவதையும் நீங்கள்தான் உறுதிப்படுத்தவேண்டும். உதவும் மனநிலையில் நீங்கள் இருந்தாலும் இந்தப் பெடியனுக்கு ஏனிந்த வேலை என ஊரிலுள்ள உங்கள் அம்மா சினக்கக்கூடாது. வாழத் துடிக்கும் மக்களுக்கு உதவவேண்டிய தேவையினை நீங்கள் அவர்களுக்கும் விளக்குங்கள்.

வந்தோரை வாழவைத்த வன்னி இன்று உருக்குலைந்து கிடக்கிறது, தன்நிலை இழந்து தவிக்கிறது. சிங்களத்தின் கொடுங்கரத்தில் சிக்குண்டு மீளத் துடிக்கிறது. 'வாருங்கள்... போரின் சுமையை உங்களுக்காகவும் தாங்கிய வன்னியை மீட்டுவிடுங்கள்' என வானளாவ உயர்ந்து நிற்கும் வன்னியின் மரங்கள் தங்களது கரங்களைக் காற்றில் அசைத்து உங்களை அழைக்கின்றன. புலம்பெயர் தேசத்து உறவுகளே... காற்றினிலே வரும் இந்தச் செய்தி உங்கள் ஒவ்வொருவருக்குமானது தான்.

-யாழினி

Comments

See thought of our blood reltives.

http://www.youtube.com/watch?v=luhuglahioQ