உப்பு நீரையும், மழை நீரையும் பயன்படுத்தியே நாம் உயிர்வாழ்ந்தோம்: சன் சீ கப்பலில் வந்தவர்கள் தகவல்

உப்பு நீரை குளிப்பதற்கும், மழை நீரை தேநீர் தயாரிப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டே நாம் எமது பயணத்தை தொடர்ந்தோம் என அண்மையில் பிரிட்டிஷ் கொலம்பியா கரையை அடைந்த எம் வி சன் சீ கப்பலில் பயணம் செய்தவர்கள் தெரிவித்துள்ளதாக த ஸ்ரார் என்ற கனடாவை தளமாக கொண்ட பத்திரிகை தெரிவித்துள்ளது.

The Harin Panich 19, which was renamed the MV Sun Sea.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இரவு, பகலா பல நாட்களாக எம் வி சன் சீ கப்பல் தனது பயணத்தை தொடர்ந்தபோதும், அதில் பயணம் செய்த சில பெண்களுக்கு தமது நோக்கம் தொடர்பில் உறுதியிருந்தது.

ஓருவருக்கு தினமும் 250 மில்லி லீற்றர் நீரே வழங்கப்பட்டது. மாதங்களாக கடலில் நாம் பணயம் செய்தபோதும் அது மாற்றப்படவில்லை. எனவே இந்த பணயம் நன்றாக திட்டமிடப்பட்டதாக அதில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.

canada-2தாம் குளிப்பதற்கு உப்பு நீரையும், மழை நீரை தேநீர் தயாரிப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டதாக அதில் பயணம் செய்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் பேர்னவே தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நீர் சுத்தமாக இருக்கவில்லை. கடல் நீரில் குளித்ததால் நாம் பல பாதிப்புக்களை சந்தித்தோம். பெண்களும், குழந்தைகளும் கப்பலின் மேற்தளத்தில் இருந்தோம். அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட புகலிடங்களினுள் நாம் இரவில் உறங்கினோம்.

ஆண்கள் கீழ் தளத்தில் இருந்தனர். காலநிலை பாதகமாக மாறும் சந்தர்ப்பங்களில் நாம் கீழ் தளத்திற்கு சென்றுவிடுவோம். பெருமளவானவர்கள் அடிக்கடி நோயால் பாதிக்கப்பட்டனர்.

பாதுகாப்பாக நாம் சென்றடைய வேண்டும் என்பதில் எல்லோரும் உறுதியாக இருந்ததால் நாம் ஒற்றுமையாக இருந்தோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவருடன் வந்த 491 பேரும் தற்போது குடிவரவுத் துறையினரின் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 44 சிறுவர்களும், 25 பெண்களும் பேர்னபே தடுப்பு நிலையத்தில் உள்ளனர். தாய் தந்தையர் இன்றி வந்த சிறுவர் ஒருவர் கப்பலில் வந்த வேறு ஒருவரின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளார்.

இவர்களை மேலும் ஒரு வாரம் தடுத்து வைப்பதற்கு கனேடிய குடிவரவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமது விசாரணைகளை நிறைவு செய்வதற்கு அவர்களுக்கு இந்த கால அவகாசம் தேவைப்படுகின்றது.

கப்பலில் வந்தவர்களில் சிலர் பயங்கரவாதிகளாக அல்லது மக்களை சட்டவிரோதமாக கொண்டு வருபவர்களாக இருக்கலாம் என கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் ரொவ்ஸ் தெரிவித்துள்ளார்.

Sun-seaஆனால் தாம் பயங்கரவாதிகள் அல்ல, நாம் பயங்கரவாதிகள் என்றால், எம்முடன் வந்துள்ள குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும், பெண்களும், முதியவர்களும் பயங்கரவதிகள? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என சில பெண்கள் எமது ஊடகத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

தமது சொந்த நிலங்களில் தாம் நிம்மதியாக வாழ்ந்து வந்ததாகவும், ஆனால் சிறீலங்கா இராணுவத்தின் படை நடவடிக்கையால் சொத்துக்களையும், உயிர்களையும் இழந்து தற்போது வெளியேறியுள்ளதாகவும் சில பெண்கள் எம்முடன் பேசும்போது தெரிவித்திருந்தனர்.

தொடர்ச்சியாக நடைபெற்ற உந்துகணை மற்றும் துப்பாக்கி தாக்குதல்களில் இருந்து தப்பும் நோக்கத்துடன் காயமடைந்த தமது உறவினர்களைக்கூட தாம் கைவிட்டு ஓட நேரிட்டதாகவும் சிலர் தெரிவித்துள்ளனார். அந்த துன்பத்தை எழுத்தில் அடக்கிவிட முடியாது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் கனடாவுக்கு வரும் அகதிகள் திரும்பி அனுப்பப்பட வேண்டும் என கனடா மக்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த மக்களை கனடா ஏற்றுக்கொள்ள வேண்டும் என 35 சதவிகித கனடா மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ் (www.eelamenews.com).

Comments