போரின் சாட்சியங்கள்

ஈழத் தமிழர்களின் புலம்பெயர்ந்த வரலாற்றில் ஒரு பெரும் பதிவாக கடந்த வாரம் கனடாவில் 492 தமிழ் மக்கள் கூட்டாக அரசியல் தஞ்சம் கோரியமை நிகழ்ந்துள்ளது. இத்தனை தொகையான தமிழ் மக்கள் ஒரே நேரத்தில் புலம்பெயர்ந்த நாடொன்றில் கூட்டாக அரசியல் தஞ்சம் கோரியுள்ளமை ஈழப்போராட்ட வரலாற்றில் இதுதான் முதற்தடவை எனக் கருதமுடியும்.

The Harin Panich 19, which was renamed the MV Sun Sea.
அதுவும் போர் முற்றாக முடிந்துவிட்டதாக சிறீலங்கா அறிவித்து ஒரு ஆண்டு கடந்துள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்த அரசியல் தஞ்சம், சாதாரண ஒரு விடயமாகப் பார்க்கப்பட முடியாதது. பாதுகாப்பற்ற ஒரு சரக்குக் கப்பலில் இத்தனை தொகையான மக்கள் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து, தங்கள் குழந்தைகளுடன் புறப்பட்டிருக்கின்றார்கள் என்றால், அது உயிரைப் பாதுகாப்பதைத் தவிர வேறு நோக்கமாக இருக்கமுடியாது. இவர்களது அரசியல் தஞ்சக் கோரிக்கையானது இலங்கையில் இனப்படுகொலை இன்னும் தொடர்கின்றது, இனியும் தொடரும் என்பதற்கான ஆதாரமே.

மாதக் கணக்காக கடலில் அலைந்து வாசல் தேடி வந்த மக்களை கனடா அரசும், மக்களும் திருப்பியனுப்ப முனையாது அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசென்று பராமரித்து வருவது இனப்படுகொலையில் இருந்து உயிர்தப்பி வந்த அந்த மக்களுக்கு சற்று ஆறுதலளிப்பதாகவே இருக்கும். ஆனால், அந்த மக்களை எவ்வாறாயினும் இலங்கைக்கு கொண்டுவந்து இனப்படுகொலை செய்துவிட வேண்டும் எனத் துடிக்கின்றது சிறீலங்கா அரசு. அதனால், இவர்களது அரசியல் தஞ்சக்கோரிக்கையை கனேடிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கிறது.

ஏற்கனவே, வன்னியில் அகப்பட்ட மக்களில் பலர் கொல்லப்பட்டும், இன்னும் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியாது மறைத்து வைக்கப்பட்டும், ஏனையவர்கள் இன்னும் தடுப்புச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டும் இருக்கின்றனர். அன்றாடம் வரும் செய்திகள் இவர்களது அவலங்களை புலப்படுத்துகின்றன. தமிழ் மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திவரும் அவசரகாலச் சட்டத்தை இன்னமும் நீடித்துக்கொண்டேயிருக்கும் சிறீலங்கா அரசு, இந்த மக்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கக்கூடாது என்று வலியுறுத்துகின்றது. இவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்பினால் சிறீலங்கா என்ன செய்யும் என்பதை இங்கு சொல்லி விளக்கவேண்டிய தேவையில்லை.

இலங்கையில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே இங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறும் இவர்களின் உண்மைநிலையை கனேடிய அரசாங்கம் புரிந்துகொண்டு இவர்களின் எதிர்கால வாழ்விற்கான பாதுகாப்பை வழங்கவேண்டும். அத்துடன், போரின் களமுனைக்குள் இருந்து வந்துள்ள இம்மக்கள் போரின் சாட்சிகளாவும், சாட்சியங்களாகவும் உள்ளனர். எனவே, இவர்களின் மூலம் இந்த இனப்படுகொலைக்கு யார் காரணம் என்பதை கண்டறியவும் முனையவேண்டும். இவர்களை மீண்டும் சிறீலங்காவின் கைகளில் ஒப்படைப்பதென்பது அவர்களின் அழிவுக்கோ அல்லது அடிமைப்பட்ட வாழ்விற்கே வழிவகுக்கும்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு முற்றாகப் பறிபோயுள்ளது. கேள்வி கேட்பதற்கு யாருமின்றி தமிழ் மக்களின் நிலங்கள் மிகவேகமாக ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள மயமாக்கப்பட்டுவரும் நிலையில், மீண்டும் கடத்தல்களும், மர்ம மரணங்களும், படுகொலைகளும் தொடரவே செய்கின்றன.

இந்த நிலை நிறுத்தப்பட்டு தமிழ் மக்கள் தங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை அங்கு மக்களை திருப்பி அனுப்புவதென்பது கொலைக் களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பானதாகவே இருக்கும். தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை, இந்த மக்களைப் பாதுகாக்க கனேடிய அரசு முன்வரவேண்டும். தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு ஒன்றை எட்டுவதற்கும் இந்த சர்வதேச உலகம் சிறீலங்கா அரசின் மீது அழுத்தங்களைக் கொண்டுவரவேண்டும்.

அவ்வாறு இல்லாதவிடத்து இவ்வாறான புலம்பெயர்வுகள் இத்துடன் முடிவுறாமல் எதிர்காலத்திலும் இன்னும் தொடரவே செய்யும்.

ஆசிரியர் தலையங்கம்

ஈழமுரசு (21.08.2010)

Comments