மூன்றாம் உலகப் போரின் கருக்கட்டல் ஆரம்பமாகின்றது

valamputiஉலகில் நடைபெறும் அழிவுகளைத் தடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை செயற்றிறன் அற்று உள்ளது என்ற கருத்தை“பமிலி செக்குரிட்டி மற்றேர்ஸ்” என்ற இணையத்தளத்தில் விரிவுரையாளர் டைனா பார்ஹட் கொல்ஸ்மன் வெளிப்படுத்தியுள்ளார். ஐ.நா. சபை செயற்றிறன் அற்றுள்ளது என்ற தனது கருத்திற்கு ஆதாரமாக, இலங்கையில் நடந்த யுத்தத்தை அவர் முன்வைக்கின்றார்.

இலங்கை அரசு வன்னியில் யுத்தம் நடத்திய போது தமிழ் மக்கள் நசுக்கப்பட்டுள்ளனர். யுத்தம் இடம்பெற்றபோது அந்த மக்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதற்கு மேலாக இலங்கையில் நீண்ட காலமாக இன அழிப்பு நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இருந்தும் அதனைத் தடுத்து நிறுத்துவதில் ஐக்கியநாடுகள் சபை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. இது ஐ.நா. சபையின் செயற்றிறன் இன்மையையே வெளிக்காட்டி நிற்கின்றது என தனது கருத்தை வலிமைப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் நடந்த இன ஒடுக்குமுறையை தடுத்து நிறுத்த முடியாத ஐ.நா. சபையால் இனி எதனையும் செய்ய முடியாது என்பதே அவரின் கருத்தாகவுள்ளது.இதில் நூறுவீத நியாயத் தன்மை இருப்பதை எவரும் மறுத்து விடமுடியாது.வன்னி யுத்தம் இடம்பெற்றபோது ஐ.நா.சபை நினைத்திருந்தால் மிகப்பெரும் மனிதப் பேரவ லத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.

யுத்தத்திற்கு பின்னர் கூட முட்கம்பி வேலிக்குள் மூன்றுலட்சம் தமிழ் மக்களை அடைத்து வைத்த கொடூரத்தை ஐ.நா. சபை கண்டுகொள் ளவில்லை. யுத்த அழிவுகளை பார்வையிட வந்த ஐ.நா. சபைச் செயலாளர் பாங் கீ மூன் உலங்கு வானூர்தியில் ஏறிச் சுற்றினாரே அன்றி தனது பொறுப்பை அவர் செய்யவில்லை.

ஐ.நா.சபைச் செயலாளரின் இச் செயல் பலத்த சந்தேகங்களை எழுப்பியது. இப் போது கூட அவரால் இலங்கையில் நடந்த போர் குற்ற விசாரணைகள் தொடர்பில் இறுக்கமான முன் னெடுப்புக்களை மேற்கொள்ள முடியாத அளவில் ஏதோ ஒரு விடயம் அவரைத் தடுக்கின்றது என்பதை மட்டும் ஊகிக்க முடிகின்றது. இரண்டாம் உலகப் போரை அடுத்து உலகில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் தாபிக்கப் பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் இத்தகைய போக்கு மூன்றாம் உலகப் போருக்கான கருக் கட்டல் என்பதும், அந்தக் கருக்கட்டல் இலங்கையில் நடந்துள்ளது என்பதையும் எதிர்காலம் சான்றாதாரங்களுடன் உறுதிப்படுத்தும் என நம்பலாம்.

என்ன செய்வது! மிகப்பெரிய சாம்ராச்சியங்கள் மற்றும் மாமன்னர்களின் அழிவுகள் மிகச் சிறியவர்களின் சூழ்ச்சிகளால் நடந்ததாகவே வரலாறுகள் உள்ளன.இராமன் காடு செல்ல கூனியும், தர்மர் துன்பப்பட சகுனியும் இருந்தது போல் மூன்றாம் உலகப் போரின் கருக்கட்டலுக்கு உலகின் மிகச் சிறிய நாடும் காரணமாக இருக்கலாம் அல்லவா?

Comments