கே.பி. குழுவினர் மூலம் தமிழகத்தின் தமிழீழ ஆதரவு தளத்தைச் சிதைக்க முற்படுகின்றது சிங்கள – இந்திய கூட்டு!

இலங்கைத் தீவில் யார் மேலாதிக்கம் செலுத்துவது என்ற போட்டியில் இந்தியா சீனாவால் பின் தள்ளப்பட்டு வருகின்றது. இறுதி யுத்த காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு இரு நாடுகளுமே ஈழத் தமிழர்களின் மீதான இன அழிப்பு யுத்தத்திற்கு ஆயுதங்கள் வழங்கியது முதல், அதன் பின்னரான பொருளாதார உதவிகள் வரை இலங்கைத் தீவில் இந்த இரு நாடுகளும் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் வகையிலேயே முன்னெடுத்து வருகின்றன.

ஆரம்ப காலங்களில், இந்தியா அமெரிக்கா இலங்கையில் கால் பதிப்பதைத் தடுப்பதற்கான மயற்சியாகவே ஈழத் தமிழர் விவகாரத்தைக் கையில் எடுத்தது. அதில், ஓரளவு வெற்றியும் பெற்றது. அந்த முயற்சியில் தான் பெற்ற நிலை நாட்டுவதற்காகவும், நீடிக்கச் செய்வதற்குமாக ஈழப் பிரச்சினையைச் சாட்டாகக் கொண்டு இலங்கைத் தீவில் இராணுவ தலையீட்டையும் மேற் கொண்டது. இந்தியாவின் இந்த நிலைப்பாடு, சிங்கள அரசுக்கு இந்தியாவின் மீதான அச்சத்தையும் சந்தேகத்தையும் அதிகரிக்கவே அது இயல்பாகவே சீனாவின் பக்கம் சாய ஆரம்பித்தது.

இருந்த போதும், இந்தியா தன்னைச் சுற்றியுள்ள நாடுகளின் மாற்றங்களின் ஊடாகத் தன்னை மறுசீரமைத்துக் கொள்ளாமல், நேரு காலத்து வெளியுறவுக் கொள்கையுடனேயே தன்னை முன் நிறுத்த முயன்றது. இலங்கைத் தீவு மீதான மேலாதிக்க கனவுகளுடன் ஈழத் தமிழர்களின் தேசிய அபிலாசைகளை சிங்கள இனவாதத்திற்குக் காவு கொடுக்கவும் சம்மதித்தது. இதுவே, தமிழீழ மக்களின் அவலத்திற்கும், அழிவுக்கும் காரணமாக அமைந்தது. இந்தியா மீது ஈழத் தமிழர்கள் கொண்ட பற்றும், நம்பிக்கையும் இந்தியாவால் சிதறடிக்கப்பட்டது.

இந்தியாவை நேச சக்தியாக ஏற்றுக் கொண்டாலும், இந்தியாவின் மேலாதிக்கத்தின்கீழ் ஈழத் தமிழர்கள் வாழ்வது தற்கொலைக்கு ஒப்பானது என்ற விடுதலைப் புலிகளின் முடிவு இந்தியாவுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால், விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற பெயரில் தமிழீழ மக்கள்மீது சிங்கள அரசு மேற்கொண்ட கொடூர யுத்தத்தின் பங்காளனாகச் செயற்பட்டு முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தையும் நிகழ்த்தி முடித்தது.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் வரை இந்தியாவுடன் சமரச போக்கைக் கடைப்பிடித்த சிங்கள அரசு, அதன் பின்னர் அதிகம் மிரட்டல் போக்கையே கடைப்பிடித்து இந்தியாவின் கனவில் மண்ணைப் போட்டு வருகின்றது. இலங்கைத் தீவின் தமிழர் தாயகப் பிரதேசம் வரை சீன முதலீடு விரிவடைந்து செல்கின்ற இன்றைய நிலையில், ஈழத் தமிழர்களையாவது தன் பக்கம் வைத்திருக்க வேண்டிய கட்டாய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு உள்ளது. சீனாவின் மதலீடுகள் இலங்கைத் தீவில் அதிகரிக்கும் நிலையில், தனது போராயுதங்களாலும், இராணுவ தொழில் நுட்ப வழங்கல்களினாலும் அழிவுற்ற தமிழர் தாயக பிரதேசத்தில் சில புனருத்தாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதனூடாகத் தன்னை அங்கு நிலை நிறுத்த முயற்சிக்கின்றது.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் என்னதான் புனர் நிர்மாண அபிவிருத்தி வேலைகளை மேற் கொண்டாலும், அது ஈழத் தமிழர்களின் காயங்களுக்கு மருந்தாக அமையவில்லை என்பது கடந்த வாரம் இந்தியா சார்பாக இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபாமா ராவ் அவர்களின் யாழ். விஜயத்தின்போது தமிழ் மக்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சாதரண மக்கள் வாய் திறக்கவே அச்சப்படும் நிலையில் சிங்களப் படைகளால் அடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் அவர்கள் ஈழத் தமிழர்கள் சார்பாக இந்தியா மீதான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

யாழ்.பொது நூலகத்தில் நேற்று இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் கலந்துகொண்ட நிகழ்வில் வைத்து பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் ஈழத் தமிழர்களது சார்பில் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

இலங்கை யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் நம்புவதாகத் தெரிவித்த அவர், யுத்தத்திற்குப் பின்னராவது இந்தியா ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா செயற்பட்ட விதம் குறித்து மக்கள் கடும் அதிருப்தியும் ஏமாற்றமும் கொண்டுள்ளனர். இந்தியா யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும், பொது மக்களைக் காப்பாற்றும் என்றே மக்கள் நினைத்தனர். எனினும் இந்தியா அதனைச் செய்யவில்லை.

யுத்தத்திற்குப் பின்னராவது இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புச் செய்யும், தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வொன்றை வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். ஒருவருடத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. நியாயபூர்வமான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதில் இந்தியா தோல்வியடைந்தது. இந்தியா வெறுமனே கண்களை மூடிக் கொண்டிருக்கிறது. அக்கறை இல்லாமல் இருக்கிறது. உரிய தீர்வுகளை முன்வைக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தத் தவறிவிட்டது என்று இந்தியா மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் இந்தியாவின்மீது அதை விடவும் அதிக ஆத்திரங்களைக் கொண்டுள்ளனர். ஈழத் தமிழர்களின் அதிருப்தியினைப் போக்கும் எந்த வித காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான சக்தியை இந்தியா வேகமாக இழந்து வருகின்றது. இந்தியா மீதான ஈழத் தமிழர்களின் கோபத்தையும், காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மீதான தமிழக மக்களது அதிருப்திகளும் எதிர்வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்குப் பாதகமான நிலையை உருவாக்கும் என்ற கவலையும் உருவாகியுள்ளது.

ஏற்கனவே, ஈழத் தமிழர்கள் மீதான கோர யுத்தம் காரணமாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தில் போட்டியிட்ட முக்கிய பிரமுகர்கள் தமிழின உணர்வாளர்களால் தோற்கடிக்கப்பட்டனர். தற்போதைய இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கே.பி. குழு ஊடாகப் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்கும் சிங்கள தேசத்தின் அணுகு முறையை இந்திய காங்கிரஸ் ஆட்சியும் பின்பற்ற முனைகின்றது. இதற்காகவே, கே.பி.யின் வாக்கு மூலங்கள் ஊடாக தமிழகத்தின் தமிழீழ உணர்வாளர்கள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடாத்தப்பட்டு வருகின்றது. இதற்காகவே, தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளனாகக் காட்டிக்கொண்டு ஈழத் தமிழர்களது போராட்டத்தை சிதைத்து வரும் கத்தோலிக்க பாதிரியாரான ஜெகத் கஸ்பர் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்.

2011 முற்பகுதியில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழீழப் பிரச்சினை முக்கிய பேசு பொருளாக அமையப் போகின்றது. அண்மையில், அ.தி.மு.க. கூட்டணி சார்பாக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் நடாத்தப்பட்ட கூட்டங்களில் சேர்ந்த பிரமிக்கத்தக்க மக்கள் கூட்டம் தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் ஒன்றை விரும்பவதாகவே உணரப்படுகின்றது.

அ.தி.மு.க. அணியில் உள்ள ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் தமிழீழ மக்கள் மீதான சிறிலங்கா அரசின் இன அழிப்புப் போருக்கு உதவியதாகவும், ஈழத் தமிழ் மக்களின் இன்றைய அவலங்களுக்கு மூல காரணம் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணியே என்றும் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தொடர்ந்தும் கொல்லப்படுவதற்கும், தாக்கப்படுவதற்கும் தாக்கமான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மீதான தாக்குதலைத் தொடுக்கப் போகின்றார்கள். இதற்காகவே, தமிழீழ மக்களுக்கு ஆதரவான தமிழகத் தலைவர்கள் மீது கே.பி. ஊடான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் காலங்களில் இன்னமும் பல பூதங்கள் கிளம்பும் என்று எதிர் பார்க்கலாம். கே.பி. குழுவினர் மூலம் புலம்பெயர் தமிழர் பலத்தை சிதைக்க முற்படுவது போலவே, தமிழகத்தின் தமிழீழ ஆதரவுத் தளத்தையும் சிதைக்க முற்படுகின்றது சிங்கள – இந்திய கூட்டு!

Comments