நிருபமா சிங்களக் குழுவினரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சி ஆரவாரம் ???

தமிழக எழுத்தாளர் தி ஜானகிராமன் எழுதிய நாவலின் தலைப்பை இன்றைய ஆய்வுக்குச் சூட்டியுள்ளோம் யார் இந்த அம்மா, ஏன் அவரைப் பற்றி எழுத வேண்டும் போன்றவற்றை இதன் கீழ் உள்ளவற்றைப் படித்து அறியலாம்.


அடுத்த வருடம் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன அதை எதிர் கொள்வதற்கான வியூகங்களையும் கூட்டணிகளையும் தமிழக அரசியல்வாதிகள் வகுக்கத் தொடங்கியுள்ளனர் மேடைப் பேச்சுக்களும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்ற வாரம் சென்னையில் ஒரு முக்கிய உரை ஆற்றினார் தமிழக அரசியல் வாதிகள் இந்தியா எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிச் சிந்திப்பதில்லை காவேரி நீர்ப் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனை போன்றவற்றையே பேசித் தள்ளுகின்றனர்

இவ்வாறு பொரிந்து தள்ளிய கார்த்தி சிதம்பரம் இன்னொரு முக்கிய விடையத்தையும் தொட்டுக் காட்டினார் தமிழக அரசியல் வாதிகள் தம்மை இந்தியர்களாக எண்ணத் தவறினால் நாட்டின் ஒருமைப்பாடும் சுபீட்சமும் பாதிக்கப்படுமாம்

கார்த்தி சிதம்பரத்தின் பிரசாரம் பெரிதாக எடுபடவில்லை என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர் இவ்வருட யூலை கடைசி நாளன்று தமிழர்களம் நடத்திய மண்ணுரிமை மாநாடு நெல்லை மாவட்டத்தை உலுக்கியது ஈழ விடுதலை ஆதரவு முழக்கங்களும், பிரபாகரன் வாழ்க என்று ஓங்கி ஒலித்த குரல்களும் ஆயிரக் கணக்காக இளைஞர்களின் இதயங்களில் இருந்து பீறிட்டுக் கிளம்பின இந்திய – சிங்களக் கூட்டணிக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன

தமிழின விடுதலைக்காக உயிர் ஈகம் செய்த முத்துகுமாரின் நினைவாக ஐனவரி 29ம் நாளை இனப்போர் ஈகையாளர் நாளாகப் போற்றிக் கொண்டாடுவோம் என்ற தீர்மானமும் நெல்லை மாநாட்டில் நிறை வேற்றப்பட்டது ஐனவரி 29 முத்துக்குமாரன் தன்னை ஆகுதியாக்கிய நாள் என்பது நினைவுக்குரியது


இப்படியான எழுச்சி நிகழ்வுகளின் தாக்கத்தால் திமுக, காங்கிரஸ் கூட்டணியினர் கதிகலங்கிப் போயுள்ளனர் சட்ட சபைத் தேர்தலில் ஏதேனும் ஏடாகூடமாக நடந்து விடக் கூடாது என்ற கரிசனை கலைஞர் மனதில் தோன்றி விட்டது

கார்த்தி சிதம்பரம் போட்ட காட்டுக்கத்தல் காற்றோடு கலந்து விட்டாலும் கருணாநிதி பேனாவும் கடதாசியும் எடுத்து நிலமையைச் சரி செய்யத் துணிந்து விட்டார் இந்தியாவின் தலையாட்டிப் பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியை ஈழத் தமிழர் தாயகத்திற்கு அனுப்பி அவ்விட நடப்புக்களை கணிப்பிட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்

அவ்வாறு ஒரு உயர்மட்ட அதிகாரியை அனுப்புவதற்கான அனுமதியைப் பிரதமர் தனது மேலிடத்தில் இருந்து பெற்றுக் கொண்டார் கருணாநிதியின் சட்டசபைத் தேர்தல் நாடகத்திற்கு அது மிகவும் அவசியம் என்பதை இந்திய ஆளும் வர்க்கம் ஏற்றுக் கொண்டது

இந்தத் தொழிலை இவர்தான் சிறப்பாக முடிப்பார் என்று தீர்மானித்த பின் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா மேனன் ராவ் சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்டார் இந்த அம்மாவின் வருகையால் ஈழத் தமிழர்கள் நன்மை பெறாவிடின் சட்டசபைத் தேர்தலுக்கு அவர் பயணம் அனுசரணை வழங்குகிறது உண்மை தான்

நிருபமா நான்கு நாட்கள் சிறிலங்காவில் தங்கியிருந்தார் வவுனியா, செடடிக்குளம், ஒமந்தை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு 36 மணி நேரம் செலவிட்டு சூறாவளிப் பயனம் மேற்கொண்டார் அவருடைய பயணம் பற்றிய அறிக்கையில் 1100 கி.மீ தூரம் இந்தக் குறுகிய காலத்தில் பயணித்ததாகச் சொல்லப் படுகிறது

அவருடைய செட்டிக்குளம் வருகையின் போது அங்கு அடைபட்டிருந்த 28,000 வரையிலான கூடார மக்களில் ஒரு சிலர் தமது குறைகளை அவரிடம் ஒப்புவித்தனர் உறுதி மொழிகளோ பரிந்துரைகளோ வழங்குவதற்கு அம்மாவுக்கு அனுமதியில்லை கேட்டு வைத்தார் அவ்வளவு தான்

மூச்சு அவர் மீது படும் அளவு நெருக்கமாக சிறிலங்கா இராணுவத்தினர் அவரைச் சுற்றி நின்றனர் வட மாகாண ஆளுநர் ஐP.ஏ சந்திர சிறி நிருபமாவை நிழல் போல் பின் தொடர்ந்தார் திருமுறிகண்டி மக்கள் தமது உள்ளக் குமுறலை வெளிப்படையாகத் தெரிவித்தனர் திருமுறிகண்டியில் தமது பூர்வீக நிலங்களில் குடியேறுவதற்கு இராணுவம் தடை விதித்துள்ளதாகக் கூடார மக்கள் முறைப்பாடு செய்தனர்

திருமுறிகண்டி ராஐபக்ச அரசினால் சிங்களக் குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு இந்திய அரசு கட்டிக் கொடுக்கப் போவதாகக் மக்கள் அச்சம் தெரிவித்தனர் இதற்க்குப் பதில் கூறும் நிலையில் நிருபமா இல்லை

திருமுறிகண்டி இந்துபுரம் மக்கள் தமது பகுதிக்கும் தமக்கும் உள்ள பூர்வீக உறவை கண்ணீர் மல்க நிருபமாவுக்கு எடுத்துச் சொன்னார்கள் இந்துபுரத்தை மறந்து விடும்படி கூற விரும்பினாலும் அதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவித்த நிருபமாவை சந்திர சிறி வேடிக்கையாகப் பார்த்தார்

செப்ரெம்பர் 01 நாள் நடந்த யாழ் நூலக சந்திப்பில் நிருபமாவை வடபுலக் கல்விமான்களும் வேறு பிரபலங்களும் எதிர் கொண்டனர் யாழ் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சி.க சிற்றம்பலம் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்

இலங்கை இந்திய உடன்பாடு ஏற்படுவதில் இந்திய அரசு முக்கிய பங்கு ஆற்றியது ஆனால் அதை நடைமுறைபப் படுத்துவதில் உங்களுக்குக் கவலை இல்லை யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இந்தியா காப்பாற்றும் என்று நினைத்தோம் ஆனால் இந்திய அரசு அதைச் செய்யவில்லை

இறுதித் தருணத்தில் இந்தியா இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியது பொதுமக்களைக் கொல்வதற்கு அது தான் காரணமாக அமைந்தது யுத்தத்திற்கு பிறகாவது ஏதேனும் சமாதானம் செய்து வைக்க இந்தியா பங்காற்றும் என்று நினைத்தோம் அது நடக்கவில்லை

தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்க இலங்கையை வலியுறுத்துவீர்கள் என்று ஒரு ஆண்டு காலம் காத்திருந்தோம் அதுகும் நடக்கவில்லை இந்த விடயத்தில் இந்தியா தோல்வி அடைந்து விட்டது இந்தியா வெறுமனே கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது என்று சிற்றம்பலம் பேசி முடித்தார்

அவரைத் தொடர்ந்து பேசியவர்களும் இலங்கைக்கு இந்தியா செய்த ராணுவ உதவிகளே ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு உதவியது என்று உரத்த குரலில் பேசினார்கள் தமிழ்த்தரப்பு பேச்சுக்களை கேட்ட ஆளுநர் ஐP.ஏ சந்திரசிறி மிகவும் கோபம் அடைந்தார்

நிகழ்ச்சியை இடைநிறுத்த அவர் எழுந்த போது நிருபமா கையசைத்து அவரை அமரும்படி கேட்டார் நிருபமாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தாலும் தான் ஒரு அமைதியான இராசந்திரி என்பதை அவர் நிருபித்தார்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியோர் பற்றிய பெயர், முகவரி தொலைபேசி எண் போன்ற விவரங்களை இராணுவத்தின் புலனாய்வாளர்கள் யாழ் நூலக வாயில் நின்று திரட்டியுள்ளனர் பேராசிரியர் சிற்றம்பலத்திற்கு என்ன நடக்குமோ என்று யாழ் மக்கள் அஞ்சுகின்றனர்

செப்ரம்பர் 02ம் நாள் காலை 10.30 தொடக்கம் 11.45வரை நடந்த இந்திய இல்லச் சந்திப்பில் தமிழ்க் கூட்டணியினர் நிருபமா முன்னிலையில் கெஞ்சிக் கூத்தாடித் தமிழர்களுக்கு உதவும் படி கேட்டார் நிருபமா அசைந்து கொடுக்கவில்லை

இந்திய இல்லத்தில் இறுமாப்பின் உச்சத்திற்கு நிருபமா சென்றார் தமிழ்ப் பிரதிநிதிகள் மீது அவர் காட்டிய வெறுப்பை அவருடைய உடல் மொழி தெளிவாகக் காட்டியது அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது. காட்டும் முகம் என்று குறளுக்கு அமைவாக அவருடைய கடுகடுப்பு இருந்தது

ஒருவருடைய பகைமை நட்பு ஆகியவற்றை அவரது கண்கள் காட்டி விடும் என்பார்கள் நிருபமாவின் பகைமையை அவருடைய வாய் பேசா விட்டாலும் கண்கள் காட்டிக் கொடுத்தன பின்பு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு நிருபமா பின்வருமாறு சொன்னார் தமிழர்களுக்கு நன்மை செய்ய இந்தியா விரும்புகிறது ஆனால் சில நடங்கல்கள் இருக்கின்றன என்ற பல்லவியை அவர் எடுத்தார்

அவர் பாடிய அனுபல்லவி தான் சுவாரஸ்யமானது 1987ம் ஆண்டில் இலங்கையை அழைத்து ஒப்பந்தம் போட்ட மாதிரியான நிலமை இப்போது இல்லை இலங்கை அரசு இன்று மூன்றில் இரண்டு பலம் கொண்டதாக இருக்கிறது அதனால் நாம் நினைத்த மாதிரியெல்லாம் நடக்க முடியாது

நிருபமா என்ன சொல்லாமல் சொல்கிறார் என்றால் இப்போது சூழல் மாறிவிட்டது இந்தியாவை அழைத்து இலங்கை ஒப்பந்தம் போடும் அளவுக்குப் பலம் பெற்று விட்டது தமிழனை அழிக்க உதவியதின் பலனை இந்தியா இப்போது அனுபவிக்கிறது தடி கொடுத்து அடி வாங்கும் படலம் தொடங்கி விட்டது

நிலமையை உணராமல் தமிழ்க் கட்சியினர் முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படுமாற் போல் வடக்கு கிழக்கு இணைப்பு தமிழர் மண்ணில் சிங்களக் குடியேற்ற நிறுத்தம் சிவில் நிர்வாகத் தொடக்கம் போன்ற எட்டாக் கனிகளைக் கேட்டார்கள் ஒன்றும் கிடைக்கவில்லை

இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தியா சார்பில் முடிந்த அளவு உதவிகளைச் செய்வோம் வீடுகள் கட்டித் தருவோம் என்று சரணம் பாடி நிருபமா சந்திப்பை முடிவுக்குக் கொண்டு வந்தார் தமிழ் நாட்டுத் தேர்தல் நாடகத்திற்கு நிருபமாவின் சுற்றுப் பயணம் எவ்வளவு தூரம் உதவும் என்று தற்சமயம் மதிப்பிட முடியவில்லை கலைஞரின் நாவன்மையிலும் எழுத்து வன்மையிலும் பயணத்தின் வெற்றி தோல்வி தங்கியுள்ளது

கலைஞர் நினைத்தால் நிருபமாவின் பயணம் ஈழத் தமிழர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் என்று தமிழக வாக்காளர்களை நம்பவைக்க முடியும் நிருபமாவின் பயணத்தால் மிகப் பெரியபயன் பெற்றவர்கள் சிறிலங்கா அரசினர்களே நிருபமாவைக் கொழும்பில் சந்தித்த பொருளாதார அபிவிருத்தித் துறை அமைச்சர் பசில் ராஐபக்ச தலைமையிலான வெளிவிவகாரத் துறை, உயர் கல்வி, நீர்ப்பாசனம். மீன்பிடி ஆகிய பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் பல வாக்குறிதிகளைளப் பெற்றுக் கொண்டனர்

பிரிந்தவர் கூடினால் சொல்லவும் வேண்டுமோ என்றவாறு நிருபமா தலைமையிலான இந்தியக் குழுவினரும் சிங்களக் குழுவினரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் தமிழ்ப் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க உதவிய இந்தியாவுக்கு சிங்கள அமைச்சர்கள் மீண்டும் தமது நன்றியைத் தெரிவித்தனர்

நன்றியுரையை ஏற்றுக் கொண்ட நிருபமா இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் அம்பாணி குடும்பத் தலைமையில் இலங்கையில் முதலீடு செய்யத் தயாராக உள்ளனர் என்றார் மேலும் இடம் பெயர் தமிழர்கள் தொடர்பாக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் திருப்தி தருவதாகத் தெரிவித்தார்

தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி இந்தியா மீது ஒரு மறைமுக யுத்தம் நடத்துவதைப் பற்றி நிருபமா வாய் திறக்கவில்லை இந்திய அரசு அலட்டிக் கொள்ளாத போது அவர் ஏன் அது பற்றிப் பேசப் போகிறார்

Comments