இரகசியமாக சிதைக்கப்படும் தமிழர் தாயகம் – தடுப்பதற்கு வழி என்ன?

சிறீலங்காவில் இருந்து தமிழ் மக்களை முற்றாக இல்லாது செய்யும் நடவடிக்கைகள் தினமும் மெல்ல மெல்ல அரங்கேற்றப்பட்டு வருகின்றன.


வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் படையினரின் செறிவாக்கம், அதன் மூலம் அங்கு நகர்த்தப்படும் படையினரின் குடும்பங்கள் என மக்கள் தொகையின் விகிதாசாரம் மிக வேகமாக மாற்றமடைந்து வருகையில், தமிழ் மக்களின் நிலங்களையும் கொள்வனவு செய்வதில் சிங்கள சமூகம் அதிக அக்கறைகள் காண்பித்து வருகின்றது.

வட – கிழக்கில் பெருமளவு பௌத்த ஆலயங்கள் அமைக்கப்படும் அதேசமயம், மாதகல் தொடக்கம் நாகதீபம் வரை புத்தரின் வழிவந்தவர்கள் நடந்த காலடிகள் தென்படுவதாக புதிய கண்டுபிடிப்புக்களையும் சிங்கள புத்தியீவிகள் முன்னின்று மேற்கொண்டு வருகின்றனர்.

மறுவளமாக கிழக்கிலங்கையிலும், தென்னிலங்கையிலும் உள்ள இந்து ஆலயங்களின் தொன்மையான சிலைகளும், சிற்பங்களும், விளக்குகள் போன்ற அரிய பொருட்களும் அரச ஆதரவுள்ள கூலிப்படையினரால் இரவோடு இரவாக கொள்ளையிடப்பட்டு, அழிக்கப்படுகின்றன. காலியில் உள்ள பிள்ளiயார் கோவிலின் புராதன விளக்கு தொடக்கம் தம்பலகாமத்தில் உள்ள வைரவர் ஆலயம் வரையிலும் சிறு சிறு ஆலயங்களை அழிக்கும் நடவடிக்கைகளை அரசு மறைமுகமாக ஆரம்பித்துள்ளது.

வெளியில் இருந்து பார்க்கும் போது யாரோ திருடர்கள் சிற்பங்களை திருடிச் சென்றதாகவே தெரியும், ஆனால் அதன் ஆழமான திட்டமிடல்கள் தமிழ் இனத்திற்கு மிகவும் ஆபத்தானது. சில ஆலயங்களில் அவர்கள் சிலைகளை திருடவில்லை, மாறாக சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராட்சிக்கான நிதியை திட்டமிட்டு நிறுத்தியுள்ள சிறீலங்கா அரசு தென்னிலங்கை பல்கலைக்கழகங்களின் தொல்பொருள் ஆராட்சியாளர்களை குமண தொடகம் மாதகல் வரை களமிறக்கியுள்ளது.

மன்னாரில் பல கிராமங்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளன. கிரிமலையும் “தம்பல பட்டுணவா” என மாற்றம் பெற்றுள்ளது. உடுவில், கந்தரோடை பகுதியில் காணப்படும் சிறு சிறு குன்று போன்ற கட்டமைப்புக்களை புராதன பௌத்த ஆலயங்கள் என தெரிவித்துள்ள சிறீலங்கா அரசு, சண்டிலிப்பாய் பகுதிக்கும் புதிய சிங்களப் பெயரை தேடி வருகின்றது.

அண்மையில் நயினாதீவுக்கு சென்று வந்த எனது நண்பர் கூறினார், அங்கு காணப்பட்ட 50,000 மக்களில் 40,000 பேர் தென்னிலங்கை சிங்களவர்கள் என்று. சிங்களவர்களை வடக்கில் களமிறக்கி, இதுவும் உங்களின் பிரதேசம் என்று கூறும் இந்த அரசின் அரசியல் தந்திரம் மிகவும் கொடுமையானது. போர் வெறி கொண்ட சிங்கள சமூகத்தின் கைகளில் வடக்கை ஒப்படைத்துவிட்டேன், அங்குவாழும் தமிழர்கள் உங்களின் அடிமைகள் என்பதை தான் இந்த அரசு இரகசிய மொழியில் சிங்கள சமூகத்திற்கு தெரிவித்துவருகின்றது.

அரசு கொடுக்கும் இந்த ஊக்க மருந்து தான் சிங்கள சமூகத்தை மகிந்தாவின் காலடியில் மயங்கி கிடக்க வைத்துள்ளது. அண்மையில் பிரித்தானியாவில் இருந்து யாழ் சென்ற எனது மற்றுமொரு நண்பர் கூறிய கதை மேலும் அச்சத்தை கொடுக்கின்றது.

அவர் யாழ் பேரூந்து நிலையத்தில் இறங்கி, வட்டுக்கோட்டைக்கு செல்ல தீர்மானித்திரந்தார். பருத்தித்துறையை வசிப்பிடமாக கொண்ட அவருக்கு வட்டுக்கோட்டை பரீட்சயமற்றது. எனவே யாழ் பேரூந்து நிலையத்தின் அருகில் இருந்த நடைபாதை வியாபரியிடம் வட்டுக்கோட்டைக்கு செல்லும் பேரூந்தின் இலக்கத்தை கேட்க முற்பட்டபோது, பதில் சிங்களத்தில் தான் வந்தது.

அதன் பின்னர் வேறு ஒருவர் மூலம் பேரூந்தின் இலக்கத்தை கண்டறிந்து பேரூந்தில் ஏறிய பின்னர், பேரூந்தில் அருகில் இருந்தவரிடம் வட்டுக்கோட்டை எவ்வளவு தூரம் என வினாவிய போது அங்கிருத்தும் சிங்களத்தில் தான் பதில் வந்ததாம்.

யாழ் நகரத்தின் சுற்றுப்புறத்தில் அதிகரித்துள்ள சிங்களவர்களின் விகிதாசாரம் கண்டு அதிர்ந்துபோன நண்பர், பேரூந்தில் பயணம் செய்தவரிடம் பேச்சுக் கொடுத்தார் (பெரதேனியா பல்கலைக்கழத்தில் பொறியியல் பீடத்தில் படித்ததால் அவருக்கு சிங்களம் தெரியும்). பேரூந்தில் பயணம் செய்தவர் சிங்கள காவல்துறை அதிகாரியாம்.

விடுமுறையில் தென்னிலங்கை சென்ற அவர் மீண்டும் வட்டுக்கோட்டை காவல்நிலையத்திற்கு சிவில் உடையில் திரும்பிக் கொண்டிருந்தார். வட்டுக்கோட்டை பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், அடுத்த மாதம் தனது மனைவியும், மூன்று பிள்ளைகளும் வட்டுக்கோட்டைக்கு வந்து குடியமரப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது ஒரு சிறிய சம்பவம் இதனைபோல பல நூறு சம்பவங்கள் அங்கு தினமும் நிகழ்கின்றன. அதிகளவு இராணுவ முகாம்களை அமைப்பதும், அங்கு அதிகளவு படையினரையும், அவர்களின் குடும்பங்களையும் நகர்த்தவே.

சோரம்போன தமிழ் கட்சிகள், பணத்துக்காக அரசுக்கு காவடி தூக்கும் துரோகக் கும்பல்கள், தென்னிலங்கையில் முடங்கிப்போன எதிர்க்கட்சிகள், இந்தியாவின் மாயை வலையை உடைக்க முடியாத மேற்குலகம், அனைத்துலகத்தின் கவனத்தை ஒருங்கிணைக்க முடியாத புலம்பெயர் தமிழ் சமூகம் இவை தான் தற்போது தமிழ் இனம் கண்டுள்ள தோல்வி.

சிறீலங்காவில் உள்ள வடக்கு – கிழக்கு தமிழர் தயகத்தை முற்றாக இல்லாது செய்து, தமிழ் இனத்தை முற்றாக சிறீலங்காவில் இருந்து வெளியேற்றும் மகிந்தாவின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டுமானால், சிங்கள இனத்திற்குள் மோதல்கள் உருவாக வேண்டும், இல்லையெனில் அனைத்துலகத்தின் நேரிடையான தலையீடு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

பேரினவாத சிங்கள அரசுகளின் ஆட்சி அதிகாரங்கள் தெற்கில் பலவீனமாகும் போதெல்லாம், தமிழ் மக்கள் மீதான வன்முறைகளும் குறைவதுண்டு. 1988 ஆம் ஆண்டு உருவான ஜே.வி.பி கலவரம், 2000 ஆம் ஆண்டில் சந்திரிக்கா அரசிடம் இருந்து நாடாளுமன்றம் பறிபோன சம்பவங்களின் போதெல்லாம் தமிழ் இனம் மூச்சுவிட காலஅவகாசம் கிடைத்தது.

ஆனால் இன்று நிலமை அவ்வாறானது அல்ல, சிங்கள இனம் தனது பெரும்பான்மை பலத்தை ஒன்றுதிரட்டி தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்க கங்கணம் கட்டி நிற்கின்றது. வடக்கிற்கு அழைத்துச் செல்லும் சிங்களப் பேரினவாதிகளால் அரசு பலம்பெற்று வருகின்றது.

அரசின் இந்த நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு ஏதுவான சூழ்நிலைகளை விரைவாக ஏற்படுத்த வேண்டிய காலமிது. பொருளாதார அழுத்தமாக இருந்தாலும், இராஜதந்திர நெருக்கடிகளாக இருந்தாலும், தென்னிலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகளின் மூலம் ஏற்படுத்தப்படும் அரசியல் நெருக்கடிகளாக இருந்தாலும் அவற்றை நாம் ஒன்று சேர்ந்து விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

– வேல்ஸ் இல் இருந்து அருஷ்
நன்றி: ஈழமுரசு.

Comments