நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதமராக உருத்திரகுமாரன் தெரிவு - அரசியலமைப்புக்கும் அங்கீகாரம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதம அமைச்சராக விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நாடாளுமன்றத்தினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் செப்ரம்பர் 29ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 1ம் நாள்வரையான மூன்று தினங்கள் கூடி அவ்வரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் தமக்கான பிரதம அமைச்சரையும் தெரிவுசெய்தனர்.

இதனைத்தொடர்ந்து அமைச்சரவையினை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தன.

நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள்சபைக்கு அருகாமையிலுள்ள பிளாசா ஹோட்டலில் ஒன்றுகூடியுள்ள பிரதிநிதிகளுடன் பரீஸ், இலண்டன் மாநகரங்களில் உள்ள பிரதிநிதிகளும் தொலைக்காட்சி தொடர்பாடல் மூலம் இணைந்தனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உரமாகிப்போன உயிர்களுக்கு மௌனாஞ்சலி செலுத்துவதுடன் அமர்வுகள் ஆரம்பமாகியது.

ஐக்கிய அமெரிக்க நாட்டு முன்னைநாள் சட்டமா அதிபர் றாம்ஸி கிளார்க், மலேசிய பினாங் மாநில பிரதிமுதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி, மனித உரிமைகள் மற்றும் முரண்பாடுகள் தீர்வு ஆகியவற்றிற்கான சர்வதேச விற்பன்னரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ஐக்கியநாடுகள் சபை ஆகியவற்றிற்கான ஆலோசகரும் கொலம்பியா பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான கற்கைமையத்தின் வருகைதரும் கல்விமானுமான பேராசிரியர் எல்.பிலிப், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் வாசிங்டன் சட்டக்கல்லூரி UNROW மனிதஉரிமைகள் சார்ந்த சட்டமுறைநிவாரண நிறுவகத்தின் நிறைவேற்றுபணிப்பாளர் அலி பெய்டவுன் ஆகியோரின் உரைகளுடன் அமர்வு ஆரம்பமாகியது.

UNROW மனிதஉரிமைகள் சார்ந்த சட்டமுறை நிவாரண அமைப்பு சிறிலங்காவில் நடந்தபோர்க்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையிடம் அண்மையில் அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


ஆரம்ப அமர்வினைத் தொடர்ந்து முன்மொழியப்பட்ட மாதிரி அரசியல்யாப்பினை அங்கீகரிப்பதற்கு முன்னான விவாதம் என்ற சவால்மிக்க செயற்பாடு ஆரம்பமாகியது.

இவ்விவாதத்தினைத் தொடர்ந்து மரபுசார்ந்த பாராளுமன்றக் கட்டமைப்பு இவ்வரசுக்கு உகந்ததெனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவராக பிரதம அமைச்சர் செயற்படுவார் எனவும் நாடாளுமன்றம் தீர்மானித்தது.

அவருக்கு உதவியாக மூன்று பதில் பிரதம அமைச்சர் பதவிகளும் வேறு ஏழு அமைச்சர் பதவிகளும் உருவாக்கப்படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்றம் இரண்டு அவைகளினைக் கொண்டதாக இருக்கும்.

இது தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளினைக் கொண்ட நாளுமன்றத்தினையும், மேலவை எனப்படும் நியமன அங்கத்தவர்களினைக் கொண்ட ஆலோசனைச் சபையினையும் கொண்டிருக்கும். அவசியமான வேளைகளில் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களினை மீள் அழைப்பதற்கான பொறிமுறையினை நாடாளுமன்றம் கோவைப்படுத்தும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கனடாவினைச் சேர்ந்த பொன் பாலராஜன் நாடாளுமன்ற சபாநாயகராகவும் சுவிற்சலாந்து நாட்டினைச்சேர்ந்த சுகன்யா புத்திரசிகாமணி அவர்களினை பதில்சபாநாயகராகவும் ஏகமனதாக தெரிவுசெய்தது.

Comments