புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன? பாகம்– 05

அவை முகாம் நடைமுறைகளுக்கான கட்டளைகளாக தெரியவில்லை. அவனால் செய்யப்படும் துன்புறுத்தல்களை வெளியே சொல்லக் கூடாது என்பதற்காக ஏவப்பட்ட ஏவல்களாகத் தான் எமக்கு தென்பட்டது. அவ் ஏவல்கள் ஆவன…

* யாரும் இங்கு நடக்கும் சம்பவங்கள் வெளியில் சொல்லக் கூடாது. அத்துடன் அவ் விடையங்களை கூடிச் சேர்ந்து கதைக்கவும் கூடாது.

* வெளித் தொடர்புகள் எதுவும் வைத்திருக்க கூடாது.

* ரேடியோ கேட்கக் கூடாது, பத்திரிகை பார்க்க கூடாது அப்படி யாராவது செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* விடப்படும் கொட்டில்கள் தவிர்ந்த ஏனைய கொட்டில்களுக்கு போய்க் கதைக்க கூடாது.

* இரவு பத்து மணி தொடக்கம் காலை 6.00 மணிவரை யாரும் தங்கும் இடங்களை விட்டு வெளியே வரமுடியாது.

* எந்த பிரச்சனை என்றாலும் என்ன தேவை என்றாலும் எம்முடன் மட்டும் தான் கதைக்க வேண்டும் வெளியில் இருந்து வரும் ஒருவரோடும் கதைக்க கூடாது.

இவ்வாறாக பல அழுத்தங்களுக்கு ஊடான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு எம்மை எந்த வித மனிதாபிமான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வைத்திருப்பதற்கு ஊடாக தனது அரக்கத் தனமான பழி தீர்க்கும் எண்ணத்தை நிறைவேற்றத் துடித்தான்.

பகல் 2.00 மணியளவில் கடும் வெயிலில் மைதானத்தில் இருத்தி கதைத்த பின் மலசல கூடத்திற்கு தண்ணீர் வாளியில்லை வாங்குவதற்கு காசு தாருங்கள் என ஒரு இராணுவ அதிகாரி கேட்டான்.

எல்லாம் பறிகொடுத்த நிலையில் வந்த எமக்கு எங்கால காசு…? நாம் காசு இல்லை என்றோம். அதற்கு அவனால் அப்படி என்றால் போத்திலை தான் பாவியுங்கோ எமக்கு வாளி வந்தால் தருவோம் என சிரித்தவாறு கூறியதுடன் இப்ப எல்லோரும் நட மலசல கூடம் கழுவ வேண்டும். என அழைத்து செல்லப்பட்டோம். அங்கு போதியளவு தண்ணீர் ஊற்றப் படமால் அசுத்தமாக இருந்த கழிவறைகளை போத்தில் தண்ணீரால் பல சிரமத்துக்கும் மத்தியில் கழுவினோம்.

இவ்வாறு அழுத்தத்தை கொடுத்து எம்மிடம் பணம் வாங்க நினைத்தான். எந்த நாட்டிலும் இல்லாத ஒரு இழிவான செயல் முறையை இந்த அரசாங்கம் எம்மை மிரட்டுவதற்கு ஊடாக செய்தது. அதாவது கைதிகளிடம் பணம் வாங்கி அவர்களுக்கு தேவையானதை செய்தல். இவ்வாறு காசு வாங்கும் படலம் ஆரம்பமானது.

[punar6] பின் நேரம் 4.00 மணியளவில் எமக்கான மதிய சாப்பாட்டு வாகனம் வந்தது. சாப்பாடு எடுப்பதற்கு உரியோர் ஒடிச் சென்ற வரிசையாக உட்கார்ந்தார்கள். அப்போது அங்கு வந்த இராணுவ பொலிஸ் அதிகாரி ஒருவர் சவரம் செய்ய வசதியின்றி தாடியுடன் உட்காந்திருந்தவர்களில் பலரை எழுப்பி அவர்களது தாடியை அவர்கள் கதறக் கதற தன் கையால் பிடிங்கினான். பின்னர் அவன் எல்லோரும் இரவுக்கிடையில் சவரம் செய்ய வேண்டும் என்று சொன்னான். ஆனால் எம்மிடம் அதற்கான பொருட்கள் எதுவுமே இல்லை என அவனிடம் சொன்னோம். அதற்கு அவன் போத்திலை உடைத்து அத் துண்டால் சவரம் செய்யும் படி கூறினான். இவ்வாறு சவரம் செய்து முகத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்படுத்தி இரத்தம் சொட்டிய சம்பவம் இன்றும் மறக்க முடியாது உள்ளது.

சாப்பாடு வந்ததும் எடுத்து ஆவலுடன் பிரித்தோம். அதே மாங்கொட்டை கறியும் சோறும் அதுவும் பழுதடைந்த நிலையில் என்ன செய்வது வெயிலில் இருந்த களைப்பு எதுவும் மிச்சம் விடாமல் சாப்பிட்டோம். இரவு 11.00 மணியளவில் இரவுக்கான பாண் வந்தது அரை றாத்தலிலும் குறைவான முழுமையாக அவியாத பாண் அதைக் கூட நாம் சாப்பிட்டுத்தான் முடித்தோம். இவ்வாறாக நான்கு ஐந்து நாட்கள் தொடர் பட்டினியுடன். அவனது சித்திரவதை, வேலைக்களைப்புக்கு ஒரு தேனீர் அருந்த வேண்டும் போல் இருந்தது. என்ன செய்வது எதுவும் இல்லை.

இல்லை என்று இருந்த பழக்கம் எமக்கு இல்லைத் தானே தேடினோம். தண்ணீர் பவுசர் காரனை கைக்குள் போட்டோம். 1000 ரூபா காசை கொடுத்து எமக்கு சீனியும், தேயிலையும், பிஸ்கேற்றும் வாங்கித் தரும்படி கேட்டோம். ஆனால் அவனும் சிங்களவன் தானே கொடுத்த 1000 ரூபாவுக்கு 1 கிலோ சீனியும் 100 கிறாம் தேயிலை மட்டும் கிடைத்தது. அதுவும் இரண்டு நாட்களுக்குப் பின்தான் கிடைத்தது. அதை நாம் வாரக்கணக்காக வைத்துக் குடித்தோம். ஓன்றரை லீற்றர் தண்ணீர் போத்தல் மூடியால் சீனி எடுத்து அதை இருவருக்கு பகிர்ந்து நக்கிக் குடித்தோம். ஓரு கப் போட்ட தேயிலையை காய விட்டு இரண்டுநாள் பயன்படுத்தினோம்.

மலசலகூடத் தேவைக்கு அரசாங்கத்தால் வாழி வாங்கித்தர முடியாதா என்ன? வாங்கித் தராமல் எம்மைக் கஸ்ரப்படுத்துவதும், அதற்கேன நிறுவனங்களால் தரப்படும் காசை தமது தேவைக்கு பயன்படுத்துவதுமாக இருந்தான். ஆகவே காசு இல்லாதவர்களுக்கும் காசைக் கொடுத்து காசு சேர்க்க நிற்பந்திக்கப் பட்டு வாழிவாங்கிப் பயன்படுத்தினோம். மூன்று நாட்களின் பின் எமக்கான குழிப்பு வந்தது. குழிப்பதற்கு ஆசைப்பட்டு எமக்கென ஒழுங்கு செய்யப்பட்ட பைப்படிக்கு ஓடினோம். அங்கு குழிப்பதற்கு ஒருவருக்கு மூன்று நிமிடம்தான் ஒதுக்கப் பட்டிருந்தது.

இவ்வாறு 05 பேர் 15 நிமிடம் ஒரு பைப்பில் குழித்தோம். வெயிலில் குழித்தோமா அல்லது தண்ணீரில் குழித்தோமா என்பது எமக்கே தெரியவில்லை. ஏனெனில் குழிக்க வரிசையில் நின்றது ஒன்றரை மணித்தியாலம். மாற்று உடை பலருக்கு இல்லை என்ன செய்வது அந்த உடுப்புடனேயே குழித்து தம் உடலில் போட்டு காயவைத்தனர்.

உடல் துன்புறுத்தல் ஒருபுறம், வேலை ஒரு புறம் இதனால் பசி எம்மை வாட்டியது. உணவுக்காக அலைந்தோம். எங்கும் எதுவும் இல்லை. ஆனால் ஒரு புளியமரம் மட்டும் எமக்குக் கிடைத்தது. பலர் களைப்பில் படுத்து உறங்கி விடுவார்கள். நாம் அந்த புளியம் மரத்து நிழலில் உட்கார்ந்து கொண்டு மரத்தை பார்த்தவண்ணம் இருப்போம் ஏனெனில் அதில் நிறையப் பழம் இருந்தது. அதில் ஏறிப் பறிக்கவும் இராணுவம் தடை போட்டது. பழம் விழுந்ததும் ஓடிச் சென்று எடுத்து அதில் உள்ள பழங்களைப் பிரித்து உண்போம். ஆனால் கொட்டைகூட மிஞ்சாது பசிக் கொடுமையில் அதையும் சப்பிச் சாப்பிட்டோம்.

இவ்வாறு அன்றாட மனித உயிர் வாழ்க்கைக்கு தேவையான சகல வசதிகளும் தடுக்கப் பட்டு எம்மைக் கொடுமைப் படுத்தினான். இதைத் தாங்கிக் கொள்ளாத சிலர் அவனது அற்ப சலுகைகளுக்காக அவனுடன் இனைந்து எமக்கான துரோகச் செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். அவர்களில் சிலருக்கு சிங்களம் தெரியும். அவர்கள் இராணுவத்தின் மொழி பெயர்ப்பாளர்களாகவும், அவனின் ஏவல்களைத் தாங்களே முன்னின்று அவனுக்கு விசுவாசமாகவும் செய்யத் தொடங்கினர். இதன் வெளிப்பாடுதான் மறைவாக இருந்த பலர் இனங் காணப்பட்டனர். அத்துடன் தன்னை நல்லவனாக காட்டிக் கொண்டு அவர்களுக் ஊடாக திட்டமிட்ட பல நடவடிக்கைகளைச் செய்யத் தொடங்கினான். அதன் விளைவுகள்தான் மறைவாக இருந்த பலர் காட்டிக்கொடுக்கப்பட்டனர். அவ்வாறு காட்டிக் கொடுக்கப்பட்டவர்களுக்கு …

தொடரும்….

சோபி, ஆசிரியர் குழு,
www.eelampress.com

Comments