புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன ? – 1-3 உண்மைச் சம்பவம்

புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன ? பாகம் – 01

ஓவ்வொரு இரவும் விடிகின்ற பொழுது எங்கள் வாழ்வில் ஒரு விடியல் வந்துவிட்டதா என்ற கனவுகள் சிதைக்கப்பட்டன. விடிந்துவிட்டது என்றால் அடுத்த நாள் இரவுக்குள் எனது உறவுகள் இருக்குமா அல்லது நான் தான் உயிரோடு இருப்பேனா.
Posted Image
என்ற ஏக்கம் மனதுக்குள் குடிகொண்டது. எங்குமே இரத்தக் கறைகளும் அழுகைக் குரல்களும் வெளியில் போக முடியாதயளவிற்கு மழை போல் எறிகணைத் தாக்குதல். மக்களின் பிணங்களை வீதியோரங்களில் கிடந்தன. அவர்களை ஒரு புதை குழிக்குள் போட்டு மூடமுடியாமல் எறிகணைகள் வீழ்ந்த வண்ணம். இருந்தது.

கொத்து கொத்தாக காயமடைந்து குருதி வெள்ளத்தில் மிதந்தார்கள். யார் யாரை பார்ப்பது என்ற நிலைமை. இன்னும் சிலர் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு ஓடினார்கள். ஆனால் இனவெறிபிடித்த சிங்களவர்களால் வைத்தியசாலைகளுக்கும் எறிகணைத்தாக்குதல்களை நடாத்தினான். அங்கேயும் மக்கள் உடல் சிதறிப் பலியாகினார்கள் எங்கேயும் போகமுடியாத சூழ்நிலையில் எமது மக்கள் திணறித் தவித்தனர். வட்டுவாகல் நந்திக்கடல் ஊடாக சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்த மக்களை இராணுவத்தினர் மனிதாபிமானத்துடன் பார்க்கவில்லை. உணவு, உடமைகள் எதுவும் இல்லாமல் தமது உயிர் தப்பினால் போதும் என்று சரணடைந்த அப்பாவி மக்களை சிங்களப் படையினர் கொஞ்சங்கூட ஈவிரக்கமில்லாமல் மிரட்டியும், அடித்தும், சித்திரவதை, செய்தார்கள்.

இனவெறி பிடித்த சிங்களப் படையினர் வெள்ளைக்கொடியோடு வந்த நடேசன், புலித்தேவன் மற்றும் அவர்களுடன் வந்த போராளிகளையும் எல்லோரது கண்முன்னிலையிலும் அழைத்து சென்று அடித்தும், சித்திரவதை செய்தும், சுட்டுக்கொன்றுள்ளான். பெண் போராளிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டான். அவனது மிருகத்தனமான செயற்பாடுகள் பார்த்தவர் மனங்களில் மாறாத வடுவாக உள்ளது. பின்னர் அங்கிருந்து மக்களை ஓமந்தைக்கு கொண்டு சென்றான். ஓமந்தையில் வைத்து மக்களை வெவ்வேறாக பிரித்து. சந்தேகத்தின் பேரில் பலரும், இனம் காணப்பட்ட போராளிகள் பலரும் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Posted Image
இவர்களில் பலரது பதிவுகளோ தகவல்களோ இது வரைக்கும் உறவினர்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் எங்கு என்றே தெரியாத நிலை. சிலரை சித்திரவதை செய்து படுகொலை செய்துவிட்டு அவர்கள் போரின்போது இறந்து விட்டார்கள் என்று உண்மைக்குப் புறம்பான கதைகளைக் கூறிவருகிறான். அவர்களது பெற்றோர், உறவினர்கள் தம் பிள்ளைகள் தம் கண் முன்னே பிடித்து சென்ற தம் பிள்ளைகளை இன்றும் தேடி அலைந்து திரிகின்றனர். அவர்கள் தமிழர் நிலங்களிலேயே படுகொலை செய்யப்பட்டு எலும்புக் கூடுகளாக கிடக்கின்றார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.

அத்துடன் முடிந்து விடவில்லை இன்றும் தடுப்பு முகாங்களுக்குள் மக்களை வைத்தும். மீள் குடியேற்றம் செய்து 100 மிற்றருக்கு ஒரு காவலரண்களை அமைத்தும். சுற்றிவளைப்பு என்று வீடுகளுக்குள் வருவதும், விசாரணை என்று சொல்லி அவர்களை இராணுவ முகாம்களுக்கு அழைப்பதும் மக்களை அல்லல் படுத்தியும் துன்பப்படுத்தியும் வருகிறான். இரவில் தனியாக படுக்க முடியாது. இரண்டு, மூன்று குடும்பங்கள் ஒரே வீட்டில் படுப்பது அல்லது அடுத்த கிராமங்களுக்கு சென்று உறவினர் வீடுகளில் படுத்து வருவது இப்படியே இன்னும் சொந்த ஊரிலேயே அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றார்கள்.

இவ்வாறு வாழுகின்ற மக்கள் விசாரணை என்ற பெயரில் கொண்டு செல்லப்படுகின்றனர். இரண்டு, மூன்று நாட்களின் பின் கொண்டுவந்து விடப்படுகின்றனர். நாளாந்தம் சித்திரவதை செய்தும் அவர்களை தாம் செய்த கொடுமைகளை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி வருகின்றான். மக்கள் படும் வேதனைகளையும் இவர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் சர்வதேச நாடுகளோ, சர்வதேச அமைப்புக்களோ திரும்பிப் பார்க்கவில்லை. என்பது வேதனைக்குரிய விடயமாக இருப்பதோடு அல்லற் படும் மக்களின் மனவேதனையை அதிகரிக்கச் செய்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட இளைஞர், யுவதிகளையும், போராளிகளாக சரண் அடைந்தவர்களையும், பதிந்துவிட்டு உடன் விடுகின்றோம் என்று சொன்னவர்களுக்கு புனர்வாழ்வு முகாமில் என்ன நடக்கின்றது. தம்மை உழைத்துப் பாக்கவேண்டிய கணவர் வருவாரா என்றும், அப்பா வருவாரா என்று பிள்ளைகளும், பிள்ளைகள் வரமாட்டார்களா என பெற்றோரும் ஏங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

புனர்வாழ்வு முகாம் என்ற போர்வையில் சர்வதேச விதிகளுக்கு முரணாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு பல சித்திரவதைகளையும், உளரீதியான தாக்கங்களையும் அனுபவித்து மனநிலை பாதிக்கப்பட்ட பல அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன்… என்ன நடக்கிறது என நேரடியாக அணுவப்பட்ட அணுபவங்களையும் தற்போது தொடர்கின்ற திட்டமிட்ட சித்திரவதைகளின் தகவல்களையும் சிங்கள பேரினவாதத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்துகிறோம்.

இது தொடர்பான உண்மை சம்பவங்களை உங்களிடம் இருந்தால் அனுப்பி வைக்கவும் அவை உறுதிபடுத்தப்பட்ட பின்பு இணைத்து கொள்ளப்படும்.

---------------

புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன ? பாகம் – 02

Posted Image
ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு கொண்டு செல்லப்பட்ட நாம் அங்கு ஆயிரக்கணக்கானோர் சந்தேகத்தின் பேரிலும், நூற்றுக்கணக்கான போராளிகளும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தோம். இராணுவத்தினர் ஒலிபெருக்கியில் ஒரு நாள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்றாலும், அவர்களோட வேலை செய்தவர்கள் என்றாலும் வந்து பதிந்து விட்டுப் போங்கள். அல்லது நாங்கள் பிடித்தால் பத்துப் பதினைந்து வருடம் இருக்க வேண்டி வரும்,என்று கூவிக் கொண்டிருந்தான்.

அவர்களின் அறிவிப்பைக் கேட்டு பதிந்துவிட்டுப் போனால் பிரச்சனை இல்லை என கட்டாயத்தின் பேரில் ஒருநாள், ஒருகிழமை, ஒருமாதம் இருந்கவர்களும் பதியப் போனார்கள். அவர்களுடன் சம்பளத்திற்கு பணிபுரிந்தவர்களும் சென்றார்கள். ஏல்லோரும் பதிவுக்காக தடுக்கப்பட்டு இன்றுவரை தடுப்பில் உள்ளார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விடயம்.

அதேபோல் ஒட்டுக்குழுக்களாலும், இராணுவப் புலனாய்வாளர்களாலும் காட்டிக் கொடுக்கப்பட்டும் தடுக்கப் பட்டார்கள். அவ்வாறு சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஏனக்கும் இயக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நான் ஒரு மாணவன். எனது குடும்பநிலைப்பாடு காரணமாக என்னை இயக்கம் சம்மந்தமான வேலைகளுக்கு யாருமே எடுப்பதில்லை. ஆனாலும் நான் பிடிக்கப்பட்டேன் காரணம் நான் உயர்ந்து வளர்ந்த கம்பீரமான தோற்றமுடையவன் என்பதால்.,

இவ்வாறு தோற்றமுடைய இனளஞர்களும், யுவதிகளும் ஆயிரக்கணக்கில் தடுக்கப்பட்டோம். இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இளைய சமுதாயத்தை அழிக்கும் திட்டத்தின் ஒரு வடிவம் தான் இது. எல்லாவற்றையும் இழந்து எம்மை மட்டும் நம்பிவந்த மனைவி பிள்ளைகளை தவிக்கவிட்டு தனித்து நின்ற தாய், தங்கையர்களை அப்படியே விட்டுவிட்டு பிரிந்த அந்த சோக நிகழ்வை யாராலும் மறந்து விட முடியாது.

தனித்துவிடப்பட்டு கையில் காசோ, பொருளோ இல்லாமல் எங்கு போவது? என்ன செய்வது? என்று தெரியாது அல்லல் பட்ட இளம் மனைவிமார், சகோதரிகள் பலர் இன்றுவரை எங்கு என்று இல்லை. அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டு மக்களோடு மக்களாக அகதிமுகாம்களுக்குச் சென்றவர்கள். தமது ஒருநேர உணவுக்காக கையேந்தியதும், யாரும் இல்லாது தனித்து நின்ற வேளை அவர்கள் பட்ட துன்பங்கள் என்பது ஏராளம்.

அவ்வாறு நாளாந்த மனித வாழ்வுக்காக துன்பப்பட்ட இளம் பெண்களை இனம் கண்டு உதவி செய்கிறோம் என்று ஆசைகளைக் காட்டி இராணுவத்தினர் அவர்களை தனது காம இச்சைக்கு பயன்படுத்திய சம்பவங்களும் ஏராளம் உள்ளன. ஆயி;னும் அவனது உண்மை நிலையை துணிச்சலக வெளிக்கொண்டு வந்ததன் மூலம் சமுதாயச் சீரழிவில் இருந்து ஒரளவேனும் எமது மக்களை பாதுகாத்துக் கொண்டனர்.

Posted Image

உணவு, நீர் இன்றி சோர்ந்த நிலையில் எம்மைவிட்ட கூரைகளுக்குக் கீழ் வெறும் தரையில் படுத்தோம். படுத்ததும் உறங்கிவிட்டோம். உறங்கியது நீண்ட நேரம் அல்ல அரை மணி நேரம் கூட ஆகவில்லை, திடீர் என ஐயோ, அம்மா என்ற கூக்குரல் என்ன என்று திடுக்கிட்டு கண்விழித்துப் பார்த்தோம் இராணுவப் புலனாய்வாளர்களும், ஒட்டுக்குளுக்களும் சேர்ந்து அடி, உதை ‘என்னடா அங்க படுத்தா இருந்தனீங்கள் உப்ப உங்களுக்கு படுக்கையா தேவையாக் கிடக்கு” என்று கொச்சைத் தமிழில் சொன்னபடி தாக்கினார்கள்.

மிகுந்த உடல் களைப்புடன் கூடிய உடல் வலியுடன் எழுந்து இருந்தோம். எழுந்திருந்தோம் என்றுதான் சொல்ல முடிந்ததே தவிர எம்மில் பலர் காயங்களின் வேதனையில் துடித்துக் கொண்டிருந்ததை கண்டு மனவேதனை அடைந்தோம். அவர்கள் வேதனையில் கத்தும் போதாவது அவர்களைச் சும்மாவிடவில்லை ‘அங்க உதோடநின்றுதானே எங்களைச் சுட்டநீங்கள்” என்று கேட்டுக் கேட்டு அடித்தான். காயத்தின் வேதனையுடனும் அடியை வாங்கிக் கொண்டு எதுவுமே கதைக்கமுடியாது மவுனமாக இருந்தோம்.

எதோவோரு உண்மைக்குப் புறம்பான காரணத்தை வைத்து அடிக்கடி உடல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானோம். அதேநேரம் காட்டிக் கொடுக்கப்பட்டு இனம் காணப்பட்ட போராளிகள் தனி;யறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நான்கைந்து பேரால் ஒரே நேரத்தில் தாக்கப் பட்டார்கள். காரணம் உங்களோட நிண்டவர்களை காட்டித்தரும்படியும், மிகுதிப் பேர் எங்கு என்றும், ஆயுத வெடிபொருட்கள் எங்கு என்றும் துன்புறுத்தப்பட்னர்.

தாக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து இரத்தம் சிந்தச் சிந்த வேதனையுடன் எம்மோடு பதிவுக்காக வந்து உட்கார்ந்தார்கள். ஏந்தவித விசாரனைகளும் இன்றி மனிதாபிமானம் அற்ற முறையில் தாக்கப்பட்டோம். இதை யாரிடம் சொல்ல முடியும். எம்மைச் சந்திக்கவரும் .இராணுவ அதிகாரிகளின் கதைகள் எப்பவும் நாங்கள் நீங்கள் எல்லாம் ஒன்று. உங்களை யாரும் அடிக்கமாட்டார்கள். அடிக்கவும் விடமாட்டோம் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வோம். பிரச்சனை இருந்தால் சொல்லுங்கோ என்பார்கள்.

Posted Image

அடி உதை வாங்கிய நாம் இராணுவ அதிகாரிகளின் பேச்சை நம்பி எங்களுக்கு அடிக்கிறார்கள் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக இராணுவ அதிகாரிகள் சென்றபின் கதைத்தவர்கள் பலர் இன்று வரை எங்கு என்று இல்லை. சிலரை எல்லேரும் பார்க்கக் கூடிய இடத்தில் முளங்காலில் விட்டு தங்கள் கைகளில் அகப்பட்ட பொருட்களால் தாக்கினார்கள். இதையாரிடமாவது சொன்னால் இதைவிட மோசமாகத் தாக்குவோம் என மிரட்டப்பட்டோம். நாங்கள் உங்களை எது வேண்டுமானாலும் செய்வோம் யாரும் எங்களை எதுவும் கேட்கமுடியாது, கேட்கவும் மாட்டார்கள்.

அப்படிஎன்றால் எங்களுக்கு என்ன நடந்தது? என்ன நடக்கிறது? என்று சற்று யோசித்துப் பாருங்கள்? வெளி உலகிற்கு ஒரு முகத்தைக் காட்டிக் கொண்டு எங்களுக்கு பழிதீர்பு. இதை திட்டமிட்டு சரியாகச் செய்கின்றான். இராணுவ புலனாய்வாளர்களும், ஒட்டுக்குழுக்களும் வெளியில் இருந்து வந்து சில பெயர்களை வாசித்து எடுக்கப்பட்டவர்கள் இன்றுவரை எங்கு என்று இல்லை.

இவ்வாறாக ஓமந்தைச் சோதனைச் சாவடியில் எந்த வோரு வசதிகளும் இன்றி மூன்று, நான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். அங்கு நாங்கள் ஆண்கள் எதை வேண்டும் என்றாலும் சமாளித்தோம். ஆனால் பெண்கள்………..

தொடரும்….

------------------------------------------

புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன ? பாகம் – 03


அங்கு சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்பட்ட பெண்களும் பெண் போராளிகளும் பட்ட இன்னல்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. தமிழ் மரபுக்கும்,

பண்பாட்டிற்கும் ஏற்ற வகையில் தம்மைப் பாதுகாத்து வந்த பெண்களினது கலச்சார வாழ்க்கைக்கு எந்த வித பங்கமும் வராது அதைத் தட்டிக் கொடுத்து அதில் தீவிரம் காட்டி வந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பக்குவமாகவும், பண்பாகவும் வழக்கப்பட்ட எம் இனப் பெண்கள் எந்த வித வசதிகள் இன்றி பல இன்னல்களைச் சந்தித்தார்கள்.

300 சதுர கிலோ மீற்றரிக்கும் குறைவான அப்பிரதேசத்தில் 2000 – 3000 ஆண்களுடன் 1000 திற்கும் மேற்பட்ட பெண்களை இரண்டு, மூன்று நாட்களுக்கு தடுத்;துவைக்கப்பட்டு 10 – 15 மலசலக் கூடங்களில் சிலது பழுதான நிலையிலும். ஆண்களுடன் அதை பல சிரமங்களுக்கும் மத்தியிலும் பயன்படுத்த வேண்டிய அவலத்தை பெண்களுக்கு ஏற்படுத்தினான்.

ஓரேயொரு கிணறு மாத்திரம் அதில் தான் எல்லாத் தேவைகளுக்கும் நீர் எடுக்க வேண்டும் ஆண்களும், பெண்களும் குழிப்பதற்கு ஒரு கப்பி மட்டும் போடப்பட்டிருந்தது. குழிப்பதற்கோ உடைமாற்றுவற்கோ எந்தவித மறைப்பும் இல்லை. என்றாலும் எம் பெண்கள் தாங்கள் போட்டிருந்த உடைகளுடன் குழித்து தங்கள் தோழிகளின் மறைப்பை வேலியாக பயன்படுத்தி உடைமாற்றி தம் தேவைகளை பெரும் கஸ்ரத்தின் மத்தியிலும் நிறைவேற்றினார்கள்.

இராணுவத்தினரும், இராணுவப் புலனாய்வாளர்களும், ஒட்டுக்குளுக்களும் யாரை தன் இச்சைக்குப் பயன்படுத்;தலாம் என்று தன் கழுகுக் கண்ணால் பார்த்த வண்ணம் தமது போன் கமராக்களில்; படம்பிடித்தபடி திரிந்தார்கள். இந்நிலையில் பெண்கள் அக் கிணற்றைப் பயன்படுத்துவதில் அச்சம் அடைந்தார்கள் ஏனெனில் கிணற்றடியைச் சுற்றி பல இராணுவத்தினர்கள் கதிரைகளை போட்டபடி மது அருந்திக்கொண்டும் சிகரட் பற்றவைத்துக் கொண்டும் இருப்பார்கள்.

இவற்றை யெல்லாம் சமாளித்து எச்சூழலிலும் தம்மை அசுவாசப் படுத்திக் கொள்ளும் பெண்கள் தங்களையும் தம்; மானத்தையும் பாதுகாத்துக்கொண்ட விதம் தமிழ்ப் பெண்கள் எவ்வளவு கௌரவமான மானமுள்ளவர்கள் என்பதுடன் தழிழ் பெண்களையும் தமிழ் இனத்தையும் பெருமைப்படுத்தினார்கள்.

இந்த இடத்தில் தமிழீழ தேசியத்தலைவரை நினைத்து பெருமைப்பட்டடோம். ஆனால் சரியாக கவலைப்பட்டோம். அதற்காக அவர்கள் பட்ட இன்னல்கள் அதிகம் அவர்களை அவதூரான வார்த்தைகளால் பேசிய போதும். தேவையற்ற கதைகள் கதைத்தபோதும் அதை தாங்கிக்கொள்ளாது பல பெண்கள் அழுத காட்சி இன்றும் எம் மனக் கண்முன்னே வருகிறது.

அவர்கள் எமக்கான பதிவுகளை முடிப்பதற்கா மூன்று தொடக்கம் நான்கு நாட்கள் அங்கேயே தடுத்து வைத்திருந்தார்கள். இங்கே எமக்கான பதிவுகளாக எமது குடும்ப விபரம், எமது படையணி தொடர்பான செயற்பாடு, எம்மைப் புகைப்படம் பிடித்தல் என்பன நடைபெற்றது.

பதிவுகள் முடிவடைந்தோர் பஸ்களில் ஏற்றப்பட்டு வவுனியாவில் உள்ள எமது தமிழ் மாணவர்களின் பாடசாலைகளை பறிமுதல் செய்து அதை தற்காலிக புனர்வாழ்வு முகாம் என்ற போர்வையில் வதைமுகாமாக்கி அங்கே கொண்டு சென்று இறக்கினார்கள்.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்;டவர்களும் சில போராளிகளும் தமது உடல் சோர்வாலும் அடுத்தது என்ன என்ற சிந்தனையிலும் வரிசையில் நின்று கஸ்டப்பட்டு பதிவதை விட ஆறதலாக பதிவோம் என்று அவனது அடி உதைகளுக்கு மத்தியிலும் மறைவாக படுத்துறங்கி தங்கள் களைப்பை போக்கினார்கள். அவ்வாறு இருந்த நாங்கள் இறுதிப் பதிவுக்குள் வந்தோம்.

அவ்வாறு பதியப்பட்டவர்கள் வேறு கோணத்தில் பார்க்கப்பட்டார்கள் அதாவது இவர்கள் தான் இறுதிவரை தங்களோடு நின்று சண்டை பிடித்தவர்கள். இவர்கள் ஆபத்தான புலிகள் என்று சொன்னான் எங்களால் என்னசெய்ய முடியும். ஆனால் நின்றவர்கள் போராளிகள் மட்டும் மல்ல நாளாந்த பணியாளர்கள், உதவி செய்தவர்களும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டோர். மக்கள் படையென தற்காப்பு பயிற்சி எடுத்த அறுபது வயதிற்கு மேற்பட்டோரும் நின்றார்கள்.

அப்போது அங்கே வந்த சில இராணுவத்தினர் எம்மை அழைத்து சென்று மக்கள் இருந்த இடம், நாங்கள் இருந்த இடம் இராணுவத்தின் தங்குமிடம் எல்லாம் துப்பரவு செய்யும்படி சொன்னான். ஆனால் எமக்கு துப்பரவாக்கும் பொருள் எதுவும் தரப்படவில்லை. கைகளால் தான் அள்ளினோம் இரண்டு மூன்று நாட்களாக பெய்த மழையி;ல் சாப்பிட்டு மிகுதியாக போடப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் புளுப்பிடித்த நிலையில் அவற்றை வெறுங்கைகளால் அள்ளினோம். மலசல கூட வசதியில்லாதனால் வெளியிடங்களில் இருந்த மலங்களை எம்மை கைகளால் அள்ளச் சென்னான். நாம் பேப்பரின் உதவிகொண்டு கைகளால் அள்ளினோம். நாம் அள்ளும் போதும் உதுக்கத்தானே அங்கு இருந்த நீங்கள் இப்ப அள்ளுங்கோ என்று கொச்சத் தமிழில் சொல்லிச் சிரித்தான்.

இவ்வாறு இராணுவத்தினரதும் ஒட்டுக்குழுக்களினதும் உடல்ரீதியான துன்புறுத்தல்களையும் உள ரீதியான துன்புறுத்தல்களையும் தாங்கிக் கொண்டு எமது பதிவுகளை ஒரு வாறு முடித்துக்கொண்டோம். அதன் பின் எம்மையும் பஸ்களில் ஏற்றிக் கொண்டு ஒமந்தை மத்திய கல்லூரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கே புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் எங்களுக்கான வதை முகாம் ஆரம்பமானது. .

தொடரும்.

நன்றி ஈழம் பிறஷ்

Comments