கவிஞர் தாமரை அவர்களே, ‘நாடற்ற உலகத் தமிழருக்கான நாடான, தமிழீழத்தில் நாளை சந்திப்போம்!’

கவிஞர் தாமரை அவர்களுக்கு, பல கோடி வணக்கங்கள்!

நீங்கள் நலமாகவும், வளமாகவும் தமிழகத்தில் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கும் ஈழத் தமிழர்களில் ஒருத்தியான நான் உங்கள் உள்நாட்டு அரசியல் களத்திற்குள் எங்களை வலிந்து இழுத்து மீண்டும் ஒரு கொலைக் களத்தில் நிறுத்திவாடாதீர்கள் என்று மன்றாட்டமாகக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

உங்களைப் பொறுத்தலரை அம்மா ஜெயலலிதா வருவதை விட, ஐயா கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு நல்லது என்று எடுக்கும் முடிவு உங்களுக்கே உரிய தனிப்பட்ட விருப்பு. அதற்குள் எங்கள் விருப்பங்களை இணைத்து உங்களுக்கான எதிர்காலத்தை நிராகரிப்பது எங்களது நோக்கமாக இருக்காது.

நீங்கள் ஜெயலலிதாவை நிராகரிப்பதும், கருணாநிதியை ஏற்றுக் கொள்வதும் உங்களது தெரிவாக இருப்பது போலவே, ஐயா பழ. நெடுமாறன், வைகோ, சீமான் போன்ற தமிழுணர்வாளர்கள் தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வருவது கேடு என்று தீர்மானிப்பதும் அவர்கள் தெரிவாக இருப்பதை நீங்கள் நிராகரிப்பதும், அதற்காக வலிந்து தமிழீழ மக்களை உள்ளிழுப்பதும் நியாயமான உணர்வாகத் தோன்றவில்லை.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தேர்தல் வெற்றியாக அறுவடை செய்ய சிங்களத்தின் அதிபர் மகிந்த ராஜபக்ஷ அதிபர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். அவரை எதிர்த்து, அந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதனால், அவருக்கு எதிராக அன்றைய இராணுவத் தளபதியும், போர்க் குற்ற சம பங்காளியுமான ஜெனரல் சரத் பொன்சேகா கொம்பு சீவப்பட்டு களத்தில் இறக்கப்பட்டார். தமிழீழத்தில் இந்தத் தேர்தல் குறித்த அக்கறை இல்லாமலே இருந்த போதும், இந்த இருவரில் யாருக்கு வாக்களிப்பது? என்ற விவாதங்கள் பல மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ மக்கள் அவர்களில் யார் வரவேண்டும் என்பது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தேர்தலில் போட்டியிட்ட இருவருமே தமிழின விரோதிகள். இருவருமே கொலைகாரர்கள். இருவருமே சிங்கள இனவாதிகள். எனவே, யார் வரவேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கவில்லை. யார் வரக்கூடாது என்பதை மட்டுமே தாங்கள் அந்தத் தேர்தலில் பதிவு செய்ய முடிவு செய்தார்கள். தமிழினம் அன்று மேற்கொண்ட முடிவினால், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக விழுந்த வாக்குக்களின் வீதம், இலங்கையில் தமிழீழ வரைபடத்தை மீண்டும் உறுதி செய்தது.

தமிழக சட்டசபைக்காக நடைபெற உள்ள தேர்தலிலும் தமிழீழ மக்கள் அதைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்கள். புலம்பெயர் தமிழ் மக்களும் அதையே அவாவி நிற்கிறார்கள்.

சிங்களம் எங்களைக் கொலை செய்தது. இந்தியம் அதற்கான வளங்களை வழங்கியதுடன், முள்ளிவாய்க்காலில் மீட்பு நடவடிக்கைகளையாவது மேற்கொள்ள விரும்பிய மேற்குலகையும் தடுத்து நிறுத்தி, தமிழினப் படுகொலையை முழுமைப்படுத்த உதவியது. நாங்களும், எங்கள் மக்களும் உங்களை நோக்கித்தானே கரங்களை நீட்டி அவலக் குரல் எழுப்பினோம்… பெரியாரும், அண்ணாவும், புரட்சித் தலைவரும் வீற்றிருந்த ஆட்சிக் கதிரையை அலங்கரித்திருந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களிடம்தானே கையேந்தி நின்றோம். எதுவும் கைகூடவில்லையே!

தானாக எழுந்திருக்க வேண்டிய தமிழகத்தை முத்துக்குமாரன் தன்னை எரித்துத் தட்டி எழுப்பினான், ஆனாலும் தமிழகத்தை மீண்டும் உறங்கத் தாலாட்டுப் பாடிய தமிழக முதல்வர் குறித்து நீங்கள் பாராட்டுரை வழங்க முற்பட்டது மிகவும் பரிதாபத்திற்குரியது. எப்படி முடிந்தது, இறுதி நாட்களில் மட்டும் முப்பதாயிரம் தமிழர்கள் சிங்களத்தால் படுகொலை செய்யப்பட்ட போது, பார்த்துக்கொண்டு வாழாதிருக்க உங்கள் தலைவரால் எப்படி முடிந்தது. கலைஞர் கருணாநிதி அல்லாமல், வேறு எந்தத் தமிழனாவது அந்த ஆட்சிக் கதிரையில் அமர்ந்திருந்தால் எங்கள் சேதங்களில் பாதியாவது குறைந்திருக்கும் என்பது தமிழ் உணர்வாளரான உங்களுக்குப் புரியாதது விந்தையாக உள்ளதே.

‘எதிரியிலும் பார்க்க, துரோகியே ஆபத்தானவன்’ என்பது எங்கள் தேசியத் தலைவரின் வாக்கு. செல்வி ஜெயலலிதாவின் தளம் ‘எதிரி’ நிலையிலேயே எம்மால் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. ஜெயலலிதா எப்போதுமே தன் கருத்தையும் கொள்கையையும் நேராகவே தெரிவித்துக் கொண்டதனால், நாங்கள் அவரிடம் எதையுமே எதிர்பார்த்திருந்திருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு இடைவெளி விட்டு எம்மால் நகர்வுகளை மேற்கொள்ள முடிந்திருந்தது. கலைஞர் அப்படியா செய்தார்? நம்ப வைத்துக் கழுத்தறுத்தாரே…? தனது பதவியையும் காப்பாற்றிக்கொண்டு, தனது வம்சங்களின் பதவிகளையும் உறுதி செய்துகொண்டு மிகப்பெரிய வரலாற்றுத் துரோகத்தை தமிழீழ மக்களுக்கு வழங்கினாரே… அதை மறந்துவிட்டீர்களா…? அல்லது மறைக்க முனைகின்றீர்களா…?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கலைஞர் நடாத்தி முடித்த நாடகத்தால் தமிழகத்தில் தடுமாற்றம் உருவானது உண்மையே. தமிழின உணர்வு தமிழகத்தில் மழுங்கடிக்கப்பட்டதனால், கலைஞர் கரம் மீண்டும் டெல்லியில் பலம் பெற்றது. அதற்கு. மத்தியில் ஒரு ஸ்திரமான ஆட்சி வேண்டும் என்று தமிழக மக்கள் நினைத்ததும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. ஆனால், நடைபெறவுள்ள சட்ட மன்றத் தேர்தல் கலைஞர் கருணாநிதி அவர்களது வரலாற்றுத் தவறுக்குத் தமிழர்களால் தண்டனை வழங்க வேண்டிய தேர்தல் என்றே உலகத் தமிழர்கள் அனைவரும் கருதுகின்றார்கள். நாங்களும் அந்த உடன்பாட்டில்தான் இருக்கின்றோம்.

எங்களுக்காக. தமிழகத்தில் ஓங்கிக் குரல் எழுப்பும் அத்தனை தமிழர்களும் எங்கள் கதாநாயகர்கள்தான். நொந்து போன எங்கள் நெஞ்சில் பால் வார்க்கும் உறவினர்கள். செத்துப்போன எங்கள் சொந்தங்களுக்காகத் தீபம் ஏற்றும் எங்கள் சகோதரர்கள். உங்களையும் நாங்கள் அப்படித்தான் நம்பியிருந்தோம். இப்போதும் நம்புகின்றோம். ஆதலால், வரலாற்றுக் குற்றம் புரிந்த கலைஞர் கருணாநிதிக்காக வக்காலத்து வாங்கி எங்களிடமிருந்து அந்நியப்பட்டுவிடாதீர்கள்.

நம் தமிழினத்தை அழித்து, மென்று, உமிழ்நீரால் ஊறவைத்த காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி என்று இயக்குனர் சீமான் அவாகளுக்கு ஒப்புதல் வாக்குமூலம் அழித்த நீங்கள் தமிழீழ மக்களுக்கு என்ன தீர்வை வழங்க எண்ணுகின்றீர்கள்? காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்ட, தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் காவடி டெல்லியை நோக்கித்தானே இருக்கும். இன்னொரு ஸ்பெக்ரம் அரங்கத்திற்கு வராமல் தடுப்பதற்கு எங்கள் ஈழத்தில் இன்னொரு முள்ளிவாய்க்கால் கொடூரம் அரங்கேற்ற கலைஞர் அங்கீகாரம் கொடுக்கமாட்டார் என்று சொல்ல வருகின்றீர்களா?

யார் இந்த ஜெயலலிதா? என்று பட்டியலிடுகின்றீர்களே… அவரிடம் ஈழத் தமிழர்கள் எதையும் யாசிக்கவில்லையே… எதையும் எதிர்பார்த்திருக்கவில்லையே… ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்று அவர் சொல்லிய பின்னர்தானே, ‘சகோதர யுத்தத்தால் தமிழீழம் அழிந்தது’ என்று கலைஞர் எரிந்து கொண்டிருந்த தமிழீழ மக்கள் மீது எண்ணை வீசினார். அதை எப்படி விட்டுவிட்டீர்கள். நாங்கள் செல்வி ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் நோயைக் காரணம் காட்டி, இந்தியாவில் சிகிச்சைக்காக அனுமதி கேட்டது இந்தியாவின் கொடூர சிந்தனையைத் தணிப்பதற்காக என்ற எங்களுக்குத் தெரிந்த உண்மை உங்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே. வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்களை ஜெயலிலலிதா பொடாவில்தான் அடைத்தார், தமிழீழத்தின் மனச்சாட்சி சீமானை தமிழகத்து முதல்வர் கருணாநிதி தேசத்துரோகக் குற்றச்சாட்டில் அல்லவா சிறையில் அடைத்தார்.

தமிழீழம் எரிந்தபோதும், தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோதும் தமிழக முதல்வர் வாளேந்தியவாறு போர்க் களத்துக்கா வந்தார்? மக்கள் படையைத் திரட்டிக்கொண்டு கடல் கடக்கவா முயற்சித்தார்? வெற்றுக் காகிதத்தில் கொட்டை எழுத்துக்களில் கடிதம் மட்டும்தானே வரைந்து கொண்டிருந்தார்? முத்துக்குமாரன் மூட்டிய தமிழின எழுச்சியை மூன்று மணி நேர உண்ணாவிரதத்துடன் முடிவுக்குக் கொண்டுவந்த சாகசத்தையல்லவா அரங்கேற்றி, இந்தியாவின் தலைவிதி சோனியாவின் வியூகத்திற்கும், ராஜபக்ஷவின் வேட்டைக்கும் பங்கம் வந்துவிடாமல் பார்த்துக்கொண்டாரே, அதைவிட ஒரு தமிழினத் துரோகத்தை ஜெயலலிதாவினாலும் புரிய முடிந்திருக்காதே.

கலைஞரின் இனத் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டும் நீங்கள் ஜெயின் இனத்துரோகத்தையும் உரிக்க வேண்டாமா? அதை மன்னிக்க முடியாது என்றால் இதையும் மன்னிக்க முடியாது அல்லவா? என்றறு சீமானிடம் வைத்த உங்களது வாதம் அற்புதமானது. ;பக்கத்து வீட்டுப் பெண்யும் நடத்தை கெட்டவள்தான், அவளை விட்டுவிட்டு என்னை மட்டும் குற்றம் சொல்கிறீர்களே’ என்று கணவனைக் கேட்ட மனைவியின் கதைதான் எனக்கு ஞாபகம் வருகின்றது. ‘அவன் குடிகாறன் கிடக்கிறான், எனக்கு ஊற்று’ என்ற எங்கள் ஊர் வரிகள் போல், கலைஞரைக் கரை சேர்க்க கண்ணகியாய் மாறிநிற்கிறீர்களே…?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழீழ மக்கள் எடுத்த அதே ஆயுதத்தைத்தான் சீமான் அவர்களும் எடுத்துள்ளார். தமிழீழத்தில் மனிதப் பேரழிவு நடைபெறுவதற்கு முன்பாக ஜெயலலிதா பேசியதும், செய்ததும் இப்போது மாற்றம் பெற்றிருக்கலாம் என்று நம்புவதற்கு சில காரணங்களாவது இருக்கலாம். ஆனால், முள்ளிவாய்க்காலின் இத்தனை கொடூரங்களுக்கும் உடன் இருந்து இறுதிக்கிரியை மட்டும் எங்கள் எதிரிகளுடன் கைகோர்த்து நின்ற கலைஞர் அதன் பின்னரும் மாறாத தமிழினத் துரோகத்துடனேயே பயணிக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்யும் உங்கள் தமிழுணர்வைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

கட்சிகளாலும், சாதிகளாலும், மதங்களாலும் பிளக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் மனங்களில் தமிழுணர்வைப் புகுத்தி அணி சேர்ப்பது என்பது சாத்தியமான செயற்பாடாக என்னால் கருத முடியவில்லை. இலவசங்களால் அபகரிக்கப்பட்ட மக்கள் மனங்களை இலகுவாகத் திருப்பிவிட முடியாது. அதற்கு, ஒரு மாற்று அரசியல் சக்தியின் ஆதரவு அவசியம். முதலில், எல்லோரும் ஒன்றிணைந்து துரோகிகளைத் தோற்கடியுங்கள். எதிரிகள் தன்னாலேயே காணாமல் போய்விடுவார்கள். அவர்களில் ஒருவர்தானே ஆட்சிக்கு வருவார் என்று பேசாமல் இருந்தால், தமிழகத்தின் எதிர்காலமும், அதனுடன் சேர்ந்து தமிழினத்தின் எதிர்காலமும் தொலைந்தே போய்விடும்.

இன்றைய பொழுதில், தி.மு.க. தோற்கடிக்கப்பட்டால், காங்கிரஸ் காணாமல் போய்விடும் என்பதே யதார்த்தம். அதற்காக, முழுமூச்சாக எதிரணியின் வெற்றிக்காகப் பாடுபடுவதும் எமக்கான அரசியலே தான். அதை விட்டுவிட்டு, காங்கிரசை மட்டும் வீழ்த்துவது என்பது தி.மு.க.வின் தாலியை மட்டும் பறிப்பது போன்றது. அது இல்லாவிட்டாலும், தி.மு.க. வேலி தாண்டி டெல்லியில் சங்கமமாவதில் தடையெதும் இருக்கப் போவதில்லை. என்ன, இன்னும் இரண்டு அமைச்சுக்கள் கூடப் பேரம் பேசுவார்கள். அவ்வளவேதான்.

இலங்கைப் புறக்கணிப்பை வலுவாக மேற்கொள்வோம் என்ற எங்கள் மீதான உங்கள் அக்கறைக்கு தமிழீழம் என்றும் தலை வணங்கும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தமிழகத்தில் கொண்டு வருவோம் என்ற உங்கள் கருத்துக்கு புலம்பெயர் தமிழீழ மக்கள் சார்பாக உங்களிடம் ஒரு வேண்டுகோளையும் விடுக்க விரும்புகின்றேன். ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ற அற்புதமான கருப் பொருள் தமிழீழத்தை வென்றெடுக்கும் கருவியாக மட்டுமே பயன்பட வேண்டும். புலம்பெயர் தமிழினம் அதன் பின்னெ அணி திரளும் நிலை உருவாக்கப்பட வேண்டும். தற்போது, புலம்பெயர் தமிழ் மக்களைப் புது அணிகளாகப் பிளவு படுத்த முயலும் மூன்றாம்தர அரசியலிலிருந்து அதன் பிரதமர் முற்றாக விடுபட்டு, புலம்பெயர் தமிழர்களின் அத்தனை அமைப்புக்களையும் உள்வாங்கி, அதனூடான தமிழ்த் தேசிய அணியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பலம் பெற வேண்டும் என்ற புலம்பெயர் தமிழாகளின் விருப்பங்களை நிபந்தனையாக வைத்தே உங்கள் ஆதரவினைத் தெரிவியுங்கள் என்ற வேண்டுகோளையும் உங்களுக்கு விடுக்கின்றேன்.

‘நாடற்ற உலகத் தமிழருக்கான நாடான, தமிழீழத்தில் நாளை சந்திப்போம்!’

- இசைப்பிரியா

Comments