வான் கரும்புலிகள் மற்றும் லெப்.கேணல் பொன்னம்மான், லெப்.கேணல் கெளசல்யன், பிரிகேடியர் தமிழேந்தி உட்பட்ட மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு!


தமிழர்களின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாய் அமைந்த வான் புலிகளின் வரலாற்றில் முதலாவது வான் கரும்புலித் தாக்குதலை நடாத்தி வீரகாவியமான வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதித்துறைப் பொறுப்பாளரான பிரிகேடியர் தமிழேந்தி அவர்களினதும் 2 ஆம் ஆண்டு நினைவாகவும், மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கெளசல்யன் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவாகவும், மூத்த தளபதியும், பயிற்சி ஆசிரியரும், வெடிமருந்து நிபுணருமான லெப்.கேணல் பொன்னம்மான் அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவாகவும், மற்றும் பெப்ரவரி மாத்ததில் வீரச்சாவை தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெறவுள்ளது.

உலகத் தமிழர் வரலாற்றில் வான்படை அமைத்து பல வெற்றித்தாக்குதல்களையும் நடாத்திய பெருமை முதன் முதலாய் தமிழீழத்திலேயே இடம்பெற்றது. இச்சம்பவம் தான் உலக வல்லரசுகளையும் தமிழர்களின் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உன்னிப்பாக பார்க்கவும் வைத்தது.

எதுவும் எம்மால் முடியும் என உரத்துக் கூறி எதிரியின் குகையினுள்லேயே மோதி வீரகாவியமான அந்த வான் கரும்புலிகளை நினைவுகொள்ளும் முதல் நிகழ்வில் இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நிகழ்வாக சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெறவுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள மில்ட்ரங்கெயின்ஸ் பகுதியில் 31 Pascal Drive, Medbourne, Milton Keynes, MK5 6LS எனும் முகவரியில் உள்ள MEDBOURNE COMMUNITY SPORTS PAVILION மண்டபத்தில் எதிர்வரும் 26-02-2011 அன்று சனிக்கிழமை மாலை 5மணி முதல் இரவு 9மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ்மக்களை வந்து கலந்துகொண்டு எமக்காகவும், எம் மண்ணுக்காகவும், எதிர்கால சந்ததியினரின் சுதந்திர வாழ்விற்காகவும் தம்மை அர்ப்பணித்து வீரகாவியமாகி வித்தாகி வீழ்ந்த மாவீரர்களை எம் நெஞ்சங்களில் நிறுத்தி மலர்தூவி வணங்கி எம்முள் உறுதி எடுத்து செல்வோமென ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Comments