இந்திய சிறிலங்கா உறவில் சந்தேகத்திற்கிடமான ஏதோவொன்று தெரிகிறது

இதுபோல எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் யாழ் குடாநாட்டு மீனவர்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டதும் நீதிமன்றில் நிறுத்தப்பட்ட மீனவர்களுக்கு இரண்டுவார கால தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தபோதும் இந்த மீனவர்கள் இரண்டு நாட்களில் பின்னர் விடுவிக்கப்பட்டதும் பாக்கு நீரிணையில் மீன்பிடிப் பிரச்சினை எவ்வாறு பூதாகரமானதாக மாறியிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
mahi-sonija
இவ்வாறு இந்தியாவின் ஆங்கில ஊடகமான Hindustan Times கொழும்புச் செய்தியாளார் Sutirtho Patranobis தனது செய்திக்குறிப்பில் எழுதியுள்ளார். அவரது செய்திக்குறிப்பின் முழுவிபரமாவது,

இறால் மற்றும் மீன்களை அதிகம் பிடிப்பதற்காகவே தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடற்பிராந்தியத்தினுள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறு அதிக கடலுணவுகளைப் பிடிக்கும் நோக்கத்துடன் எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 136 தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடற்பிராந்தியத்தில் வைத்து அந்தநாட்டு மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுப் பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுபோல எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் யாழ் குடாநாட்டு மீனவர்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டதும் நீதிமன்றில் நிறுத்தப்பட்ட மீனவர்களுக்கு இரண்டுவார கால தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தபோதும் இந்த மீனவர்கள் இரண்டு நாட்களில் பின்னர் விடுவிக்கப்பட்டதும் பாக்கு நீரிணையில் மீன்பிடிப் பிரச்சினை எவ்வாறு பூதாகரமானதாக மாறியிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் இரண்டு தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடற்படையினரால் கொல்லப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தக் கொலைகளுக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என சிறிலங்கா அரசாங்கம் மறுத்துவிட, ஆயுதம் தரிக்காத அப்பாவி மீனவர்களைத் தான் கொலைசெய்தேன் என சிறிலங்கா ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என இந்திய இராசதந்திரி ஒருவர் கூறியிருந்தார்.

அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டதையும் இந்த மீனவர்களுக்கு இரண்டு வாரகால தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையும் மகிந்த அரசாங்கம் புதுடில்லிக்கு வழங்கிய செய்தியாகவே சிலர் நோக்குகிறார்கள்.

நாட்டினது நீதித்துறையின் செயற்பாட்டில் மகிந்த அரசாங்கம் தலையிடாதிருந்திருந்தால் இந்த மீனவர்கள் 14 நாட்களைச் சிறையிலேயே கழித்திருக்க நேர்ந்திருக்கும்.

அதேநேரம் இந்த மீனவர்கள் இரண்டு வாரகாலத் தடுப்பில் வைக்கப்படவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவினையும் மீறி வேகமாக விடுவிக்கப்பட்டமையானது புதுடில்லி கொழும்பு மீது எத்தகைய அழுத்தத்தினைப் பிரயோகித்திருக்கிறது என்பதன் வெளிப்பாடாக அமைகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவினது இராசதந்திரி ஒருவர் யாழ்ப்பாண நீதியாளர் ஒருவரை அச்சுறுத்தும் வகையில் செயலாற்றியிருக்கிறார்.

இது இவ்வாறிருக்க, "இந்தப் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையே இல்லை. அரசாங்கமும் அரசாங்கமும் பேசித்தீர்க்கக்கூடிய பிரச்சினையிது" என்கிறார் சிறிலங்காவின் சட்டமா அதிபர் மோகான் பீரிஸ்.

இங்கு அதிக கவலையினைத் தருகின்ற மோசமான விடயம் யாதெனில், தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடல் எல்லைக்குள் சென்று அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடுவதானது யாழ்ப்பாணக் குடாநாட்டில் வசிக்கின்ற 22000 மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினைப் பெரிதும் பாதிக்கிறது. குடாநாட்டு வாசிகள் மீன்பிடியினையே நம்பி வாழ்கிறார்கள்.

"குடாநாட்டுக் கடற்பிராந்தியத்திலுள்ள பாராம்பரிய மீன்பிடி முறையினையே தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி இல்லாது செய்கிறது. தமிழ்நாட்டு மீன்பிடி ரோலர்கள் அகலம் கூடிய வலைகளைக் கொண்டு கடலின் அடிப்பாகத்தினையே வருடுகின்றன. இது ஏற்றுக்கொள்ளமுடியாததொன்று" என குடாநாட்டினது 117 மீனவக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் எஸ் தவரத்தினம் கூறுகிறார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் கைக்கொள்ளும் மீன்பிடி முறையானது மீனினங்களின் இனப்பெருக்கத்தினைப் பாதித்து விடுகிறது என இவர்கள் வாதிடுகிறார்கள்.

கடந்த திங்களன்று தலையில் கறுப்புப் பட்டிகளை அணிந்தவாறு குடாநாட்டு மீனவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்னால் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாகும் அல்லது அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடுவது அல்லது கைதுசெய்யப்படும் சம்பவங்கள் திடீரென அதிகரித்திருப்பதானது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

தமிழ்நாட்டு சட்டசபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இது தொடர்பான சந்தேகங்கள் அதிகம் எழுகிறது.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்படுவது அல்லது கைதுசெய்யப்படுவது என்பது தமிழ்நாட்டின் கரையோரத் தேர்தல் தொகுதிகளில் குழப்பங்கள் வலுப்பெறுவதற்கு வழிசெய்யும். ஈற்றில் மேலுமதிக அத்துமீறிய மீன்பிடிச் சம்பவங்களும் அதற்கு எதிரான நடவடிக்கைகளும் வரும் நாட்களில் அதிகரிக்கும்.

தி.வண்ணமதி

Comments