புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் சுய கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு செய்திகளைப் பிரசுரிக்கவேண்டும்!

புலம்பெயர் தேசங்களின் தற்போதைய அரசியல் களம் சிங்கள தேசத்தின் விருப்பப்படியே குழப்பப்பட்ட நிலையிலேயே தொடர்கின்றது.

இந்தக் குழப்பங்களுக்கான முக்கிய காரணியாக ஊடகங்களே பெரும் பங்கு வகிக்கின்றன. பல ஊடகங்கள் தமது தனிப்பட்ட கருத்துக்களைத் திணிப்பதற்கு சார்பான தகவல்களையும், தமிழ் மக்களைகுழப்பத்தில் ஆழ்த்துவதற்கான கட்டுரைகளையும் பிரசுரிக்கின்றன. அதுவும், சில ஊடகங்கள் முள்ளிவாய்க்கால் வரை தமிழ்த் தேசியம் குறித்து வேகமான கருத்துக்களைத் தெரிவித்து வந்தவை என்பதுதான் மிகவும் அதிர்ச்சியான தகவல்.

எப்படி இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன என்பது ஆராயப்படவேண்டிய சங்கதிகள். ஆனால், ஏதோ காரணத்துக்காக முள்ளிவாய்க்கால் வரை தேசியம் பேசியுள்ளன என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது. இது குறித்த தெளிவான பார்வை ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தமிழர்களுக்கும் அவசியமானதாக உள்ளது.

ஒரு உண்மையான செய்தியை தெரிவிக்கும் வகைகளிலேயே பல முரண்பாடுகளை உருவாக்க முடியும் என்பது ஊடகம் சார்ந்த பலருக்கும் தெரிந்த விடயம். இது சாதாரண வாசகர்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இதைப் பயன்படுத்தியேதான் பல ஊடகங்கள் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வருகின்றன.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகங்களின் நிலை பரிதாபகரமானது. அவர்கள் தேசியம் சார்ந்த செய்திகள் உண்மையாக இருந்தாலும், அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் காரணமாக அவற்றைப் பிரசுரிக்க முடியாமலோ, அல்லது முரணான புரிதல்கள் கொள்ளக்கூடியதாகவோ பிரசுரிக்கப்படும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். சில புலம்பெயர் இணையத்தளங்கள் அவற்றை அப்படியெ பிரசுரிப்பதன் மூலம் சிங்கள தேசத்தின் விருப்பங்களை தெரிந்தோ, தெரியாமலோ நிறைவேற்றும் பணிகளைச் செய்துவிடுகின்றார்கள்.

பல சந்தர்ப்பங்களிலும், புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் உள்ளன என்பதையும், சிங்கள தேசம் தமிழிழ தேசத்தைக் கைப்பற்றி ஆக்கிரமித்து உள்ளது என்பதையும் நம்மில் பலர் மறந்து சிங்கள அரசை இலங்கை அரசாகவும், சிங்கள ஆட்சியாளர்களை இலங்கைத் தீவின் ஆட்சியாளர்களாகவும் எழுத்துக்களில் பதிவு செய்துவிடுகின்றார்கள். தமிழகத்தில் தமிழீழம் குறித்த வார்த்தைப் பிரயோகத்தை காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நீக்கியதையும், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் அதைப் பின்பற்றுவதையும் மறுகலுடன் பார்க்கும் தமிழீழ மக்கள், புலம்பெயர் ஊடகங்களின் இத்தகைய புரிதலற்ற செயற்பாடுகளால் வேதனை அடைகின்றார்கள்.

எங்களுக்கான அடையாளங்களை வலியுறுத்துவதும், ஆக்கிரமிப்பாளாகளை வேறுபடுத்திக் காட்டுவதும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான கடமையாக உள்ளது. புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் இந்த அடையாளப்படுத்தல்களை மிக அவதானத்தோடு கையாள வேண்டும். கொழும்பு ஊடகங்கள் ஊடாக சிங்கள தேசம் மேற்கொள்ளும் கருத்துச் சிதைவுகளை மறுபதிப்புச் செய்வதில் அவசரப்படும் ஊடகங்கள், அந்த செய்திகள். கட்டுரைகள் மூலம் சிங்கள தேசம் என்ன சொல்ல வருகின்றது? என்ற புரிதலின் பின்னரே அதனைப் பிரசுரிக்க முன்வர வேண்டும்.

இன்று, 23 பெப்ரவரி 2011 அன்று கொழும்பு வீரகேசரி பத்திரிகையில் 'இலங்கைக்கு எதிரான தென்னிந்திய ஆர்ப்பாட்டங்கள் ஆரோக்கியமான தீர்வுகளுக்கு வழிவகுக்குமா?' என்ற தலையங்கத்தில் இராமானுஜம் நிர்ஷன் என்பவர் எழுதிய ஒரு குழப்பத்திற்கான ஆய்வை, தமிழ்த் தேசிய ஊடகங்கள் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் சில புலம்பெயர் இணையத்தளங்களும் அவசரமாகப் பிரசுரித்துள்ளன. அந்த ஆய்வு தமிழ்த் தேசிய விரோத தளங்கள் அனைத்திலும் மறு பிரசுரமாகியுள்ள நிலையில், தமிழீழத்திற்கு ஆதரவான தமிழகத்தின் ஆர்ப்பாட்டங்களை விமர்சிக்கும் இந்த ஆய்வை இந்த ஊடகங்கள் பிரசுரித்ததில் என்ன காரணம் இருக்கிறது? என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இத்தகைய செய்திகள் குழப்பங்களை இன்னமும் அதிகரிக்கவே உதவும். எனவே, புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதிலும், மறுபிரசுரம் செய்வதிலும் சுய கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு செயற்படவேண்டும் என்ற கோரிக்கையினை, தமிழ்த் தேசியத்தின் பெயரால் விடுக்கின்றோம்!

- இசைப்பிரியா
நன்றி: ஈழநாடு.

Comments