சிறீலங்கா அரசை எதிர்த்து மூன்று தளங்களில் தொடர்ச்சியான போராட்டம்!

சிறீலங்கா அரசை எதிர்த்து மூன்று தளங்களில் தொடர்ச்சியான போராட்டம் மேற்கொள்ளப்படள்ளதாக பிரித்தானியா தமிழர் பேரவை நேற்று முன்தினம் (28) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

பெப்பிரவரி 04 அன்று பிரித்தானியா இலங்கைத் தீவுக்கு சுதந்திரம் வழங்குகின்றோம் என்று தமிழ் மக்களின் சுதந்திரத்தை நிரந்தரமாக சிங்கள பேரினவாதிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ச்சியாக இடம்பெற்ற இன அழிப்பின் உச்சமாக 2009 மே 19 உலக வரலாற்றில் பதிவாகியது. அன்றில் இருந்து தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வாய்மூடி மௌனமாக்கப்பட்டனர்.

இன்று இருபது மாதங்கள் கடந்தும் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு பேரழிவுக்கு உட்படுத்தப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்ட பிரதேசத்தில், புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைள் அனைத்தும் மறுக்கப்பட்டு தமிழ் மக்கள் அரசியல்ரீதியாக முடக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் சிறைபிடிக்கப்பட்டு, நாளாந்தம் சித்திரவதைக்கு உட்படுத்தப்படும், கொல்லப்பட்டும் வருகின்றனர்.

மனித உரிமைகள், ஜனநாயகம், சுதந்திரம் அனைத்தும் பறிக்கப்பட்டு தமிழர் பிரதேசத்தில் ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தல், கொல்லப்படுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன் மனித மாண்புகள் மறுக்கப்பட்டு.தமிழ் மக்கள் ஒரு திறந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு திரும்பும் இடமெல்லாம் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டு வாழ்கிறார்கள்.

கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்கள் மேற்கொண்ட வெகுஜனப் போராட்டங்கலாலும், சர்வதேச சமூகத்திற்கு நாம் கொடுத்த அழுத்தத்தினாலும், பல திருப்பங்களைக் கொண்டுவரமுடிந்தது. குறிப்பாக முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை விடுவிப்பதற்கான திறப்பு போராட்டம் போன்ற நடவடிக்கைகளை உலகம் முழுவதும் மேற்கொண்டமையினால் தமிழ் மக்களை அரசு வெளியில் விடுவதற்கான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியிருந்தோம்.

ஆயினும் போராட்டத்தில் ஈடுபடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களை சிறிலங்கா அரசு அடைத்து வைத்திருப்பதுடன் போர்முடிவடைந்து 20 மதாங்களாகியும் அவர்களது பெயர் விபரங்களை வெளியிட மறுக்கிறது. இதனால் கைது செய்யப்பட்டவர்களில் ஏற்கனவே கொல்லப்பட்டவர்களையும், தொடர்ச்சியாக நாளாந்தம் கொல்லப்பட்டு வருபவர்களையும் அரசு கணக்கு காட்டாது தவிர்த்து வருகின்றது. இதற்கு எதிராக தொடர்ச்சியாக செயல்ப்பட்டு எமது உறவுகளின் உயிர்களைக் காப்பாற்றுவதோடு இலங்கை தமிழ்மக்களுக்கு மேற்கொள்ளும் வன்கொடுமைகளை உலக அரங்க்கிட்கு நாம் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்த வேண்டும்.

அந்த வகையில் பெப்பிரவரி 04 அன்று மாலை 15 .00 தொடக்கம் 19.00 மணிவரை லண்டன் நகரின் மையப்பதியில் ஒரு கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது மூன்று தளங்களில் தொடர்ச்சியாக நகர்த்தப்பட உள்ளது.

1. சர்வதேச மக்களுக்கான வெகுசன கவனயீர்ப்புப் போராட்டங்கள்,
2. அரசியல்வாதிகள், கொள்கைவகுப்பாளர்களுக்குரிய பரப்புரைப் போராட்டங்கள்
3. மனித உரிமை அமைப்புக்கள், நீதி அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவது

போன்ற நடவடிக்கையினை தொடர்ச்சியாக மேற்கொள்ள பிரித்தானியா தமிழர் பேரவை நடவடிக்கை எடுத்து வருகிறது. இரண்டு இனங்களாக தனித்தனியே தம்மைத்தாமே ஆண்டுகொண்டிருந்த தமிழ் மக்களை சிங்கள பேரினவாதிகளுடன் இணைத்து விட்டு சிங்களவர்களுக்கு சுதந்திரத்தையும், தமிழ் மக்களுக்கு அடிமை வாழ்க்கையையும் ஏற்படுத்திய இந்த நாளில் ( பெப்பிரவரி 04 ) உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாயகத்தில் இன்னமும் தொடர்ச்சியாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும், சரணடைந்த இளைஞர், யுவதிகளையும் விடுவிக்க கோரி அனைவரும் தெருவில் இறங்கி சர்வதேச மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும், கொள்கைவகுப்பாளர்களிடமும் கையெழுத்து பெறும் போராட்டத்தை பெப்பிரவரி 04 அன்று மாலை 15.00 – 19.00 வரை ஆரம்பிக்கவுள்ளோம்.

இப்போராட்டத்தை தொடர்ச்சியாக உக்கிரப்படுத்தி மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஜெனிவாவில் நடைபெற உள்ள ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அவலப்படும் தாயக மக்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்த சகலரும் இணைவோம்.

அனைத்து தமிழ் மக்கள் அமைப்புக்கள், தொண்டுநிறுவனங்கள், தமிழ் பாடசாலைகள், பழைய மாணவர் சங்கங்கள், கோயில்கள் என அனைத்து மக்கள் கட்டமைப்புக்களும் இந்நிகழ்வில் தொடர்ச்சியாக பங்களிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், இந்நிகழ்விற்கு அதிகமான தொண்டர்கள், தேவைப்படுவதால் எமது பிராந்திய இணைப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

அலுவலகம்: 020 8808 0465
079 5850 7009
074 0475 9029

வடகிழக்கு லண்டன்: 078 3295 4281

வடமேற்கு லண்டன்: 075 3950 1142

தென்மேற்கு லண்டன்: 079 0357 0245

தென்கிழக்கு லண்டன்: 074 0475 9029

லண்டனக்கு வெளியே: 079 2702 3912

மின்னஞ்சல்: admin@tamilsforum.com

Comments