தனிநாடாகும் தென் சூடானும் 'பிரிவினை' என்ற சொற்பதமும்

பொதுவாக அனைத்துலக உறவில் 'பிரிவினை' [secession] என்பது கெட்ட சொற்பதமாகும். பனிப்போர் காலப்பகுதியில், பயாபிரன்ஸ், பாஸ்க் மற்றும் குர்திஸ் [Biafrans, Basques, Kurds] இனத்தவர் போன்ற பல மக்கள் தங்களுக்குத் தேவையானது எதுவோ அதற்கு அதிகமாகக் கேட்டதற்காகத் தண்டிக்கப்பட்டார்கள்.

அந்த அரசியல் ஆய்வின் முழுவிபரமாவது,

ஒரு தேசம் என்பது ஒரு திருமண ஒப்பந்தம் போன்றது அல்லது நிலமைகள் கட்டுக்கடங்காமல் மோசமாகப் போனால் அதனைவிட்டு வெளியேறும் உரிமை ஒவ்வொரு தரப்பிற்கும் அல்லது மாநிலத்திற்கும் உண்டு என்று லெனின் அதனை கற்பனை செய்திருந்தார்.

1918ம் ஆண்டு சோவியத் அரசியலமைப்பு இந்த உரிமையை தனது குடியரசுகளுக்கு வழங்கியது. ஆனால் இந்த முயற்சியை ஏனைய பல நாடுகள் பின் தொடரவில்லை. இருந்தும் 'பிரிவினை' இல்லாமல் அரசியலமைப்பு திருத்தங்கள் நாடுகளைப் பிரிவடையும் நிலைக்குக் கொண்டுவந்தன.

சில சமயங்களில் இந்தப் 'பிரிவினை' இணக்கப்பாட்டுடன் இடம்பெற்றது. தனது பெயரிலும் பிராந்தியத்திலும் குறுக்கே ஒரு கோடு போடுவதில் செக்கொஸ்லாக்கியா அதிகளவு பிரச்சினைகள் எதுவுமின்றி தனது ஒன்றியத்தை உடைப்பதில் வெற்றி கண்டது. மறுபுறத்தில், யுகொஸ்லாவியா மிகவும் மோசமான நிலையில் பிரிவடைந்தது.

பொதுவாக அனைத்துலக உறவில் 'பிரிவினை' [secession] என்பது கெட்ட சொற்பதமாகும். பனிப்போர் காலப்பகுதியில், பயாபிரன்ஸ், பாஸ்க் மற்றும் குர்திஸ் [Biafrans, Basques, Kurds] இனத்தவர் போன்ற பல மக்கள் தங்களுக்குத் தேவையானது எதுவோ அதற்கு அதிகமாகக் கேட்டதற்காகத் தண்டிக்கப்பட்டார்கள்.

மேற்கு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து சென்று பங்களாதேஸ் வெற்றிகரமாக தனிநாட்டை அமைத்துக்கொண்டது. இருந்தும் இதற்கு இந்த இரு நாடுகளும் ஏற்கனவே ஆயிரக்கணக்கான கி.மீ இந்தியத் தரையால் பிரிக்கப்பட்டிருந்தது காரணமாக இருக்கலாம்.

பனிப்போரின் பின்னர், சோவியத் குடியரசுகள் தமது போக்கிற்குப் பிரிவடைந்து சென்றதுடன் 'பிரிவினை' என்பது பிரபலமாகியது. எரித்திரியா, எதியோப்பாவுடனான உறவை முறித்துக் கொண்டது. நமிபியா தென்னாபிரிக்காவிலிருந்து பிளவடைந்தது. கிழக்குத் தீமோர் இந்தோனேசியாவிலிருந்து பிளவடைந்தது. யுகொஸ்லாவியா பிளவடைவதற்கு 15 ஆண்டுகள் சென்றன.

பனிப்போருக்குப் பின்னர் இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், 'பிரிவினை' என்பது இன்று கெட்ட சொற்பதமாக இருக்காது என நீங்கள் நினைக்கலாம். சிலரைப் பொறுத்தவரையில் அது உண்மைதான்.

தென் சூடானில் கடந்த மாதம் கருத்துக்கணிப்புக்கு வாக்களித்தபோது, 99 வீதம் வரையிலானோர் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். காட்டூம் [Khartoum சூடானின் தலைநகர்] அரசாங்கமும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ஆபிரிக்காவின் மிகப் பெரிய நாடான சூடான் யூலையில் இரண்டாகப் பிரியவுள்ளது.

இந்தப் பிரிவினையானது 2 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டு நான்கு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்த 22 வருட போரின் பின்னர் இடம்பெறுகிறது என்பது என்னவோ உண்மைதான்.

இது அவர்கள் சுதந்திரத்திற்காகக் கொடுத்த மிகப்பெரிய விலையாகும். ஆனால் உலகில் வேறு பல மக்களும் இதேபோன்ற தியாகங்களைச் செய்திருந்தும் அவர்கள் தமக்கான நாட்டைப் பெற்றுக்கொள்ளவில்லை.

செச்சினியாவை [Chechnya] நினைத்துப் பாருங்கள். ரஸ்யாவுடன் இரண்டு தடவை யுத்தம் செய்து 75000 பொதுமக்களை இழந்தது. அத்துடன் கடத்தல்கள், சித்திரவதைகள் என்பவற்றை அந்த மக்கள் அனுபவித்ததுடன் தலைநகர் குறொஸ்னியும் Grozny தரைமட்டமாக்கப்பட்டது. அவர்கள் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளாதது மட்டுமன்றி தற்போது செச்சினியர்கள் ரஸ்யர்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட ரம்சான் கடிறொவ் [Ramzan Kadyrov] என்ற சர்வாதிகாரியின் ஆட்சியின்கீழ் அல்லலுறுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பாவுக்குத் தப்பிச் சென்ற கடிறொவின் பாதுகாவலர்கள் கடிறொவ் சித்திரவதை மற்றும் கடத்தல்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியிருந்தனர். 2009ன் ஆரம்பத்தில், கடிறொவின் கைக்கூலிகள் வியன்னாவில் கடத்தல் நடவடிக்கை ஒன்றில் குழல் ஊதும் இசைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றிருந்தனர்.

செச்சினியாவுக்கு வடக்கே கோக்கசஸ் [north Caucasus] அயலவர்களான டஜஸ்ரான் மற்றும் இங்குசேசியா [Dagestan, Ingushetia] போன்றவற்றில் இன்னமும் ரஸ்யாவிலிருந்து வெளியேறுதல் பற்றிய பேச்சுக்கள் தொடர்கின்றன.

மொஸ்கோ வானூர்தி நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சுதந்திரம் கோரிநிற்கும் பிரிவு ஒன்றினாலேயே மேற்கொள்ளப்பட்டது. இந்தக் குற்றச் செயலுக்குப் பொறுப்பான கூட்டத்தை இல்லாதொழிப்பதாக ரஸ்ய அதிபர் உறுதிபூண்டுள்ளார்.

தெற்கு சூடானின் வெற்றிக் கதைக்குப் பின்னால், பல அடக்கப்பட்ட செச்சினியக் கதைகளும் உள்ளன.

ரஸ்யாவின் புட்டின் [Putin] போல 'பிரிவினை' கோரும் அமைப்புக்களை முழுமையாக அழிப்பதற்கு திடசங்கற்பம் கொள்ளும் ஒவ்வொரு தலைவரும் சிறிலங்காவையும் அதன் தலைவர் மகிந்த ராஜபக்சவையும் மரியாதையுடன் பார்க்கின்றனர்.

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மே 2009ல் ராஜபக்ச இல்லாதொழித்திருந்தார்.

மூன்று ஆண்டுகளாக இடம்பெற்ற பயங்கரமான போரினால் 40,000 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கொழும்புக்கான முன்னாள் ஐநா பேச்சாளர் கூறுகிறார்.

சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகளைப் பல நாடுகள் கண்டித்ததுடன் அமெரிக்காவின் உதவியுடன் ஐநா மனித உரிமை சபை போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆராயத் தொடங்கியது. அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்தது.

"ஐநா சபையாலோ அல்லது வேறெந்த நாட்டினாலோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணையையும் நான் அனுமதிக்கமாட்டேன்" என பாதுகாப்பு அமைச்சராக இருந்த ராஜபக்சவின் சகோதரர் தெரிவித்தார்.

அரசாங்கங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட கண்டனங்கள் பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவத் தளபதிகளுடன் பழகும் விதத்தில் முற்றிலும் முரண்படுகிறது. அந்த அரசாங்கங்கள் சிறிலங்காவின் இராணுவத் தளபதிகளை மிகப் பெரிய வீரர்களைப் போன்று நடாத்தியிருக்கின்றன.

நியூயோர்க்கைச் சேர்ந்த ஜோன் லீ அண்டர்சன் என்பவர் கடலோரப் பாதுகாப்புத் தொடர்பில் சிறிலங்காவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிற்குச் சென்றிருந்தார். அந்த மாநாட்டின் உண்மையான தலைப்பு கடற்கொள்ளை மற்றும் ஏனைய விடயங்கள்பற்றிக் கலந்துரையாடுவதே.

"ஆனால் மாநாடானது சிறிலங்காத் தளபதிகள் தாம் எவ்வாறு புலிகளைத் தோற்கடித்தோம் என்பதை தமது சகாக்களுக்குப் புழுகுவதற்குக் கிடைத்த வாய்ப்பாகவே அமைந்தது" என அவர் எழுதுகிறார்.

"அவர்களது வெற்றி தொடர்பில் வெளிநாட்டுப் பேச்சாளர்கள் அவர்களைப் பாராட்டியதுடன் அவர்கள் பயன்படுத்திய உத்திகள் தொடர்பில் ஆவலாகக் கேள்விகளை எழுப்பினர். பயங்கரவாத முறியடிப்பு மற்றும் கடலோரப் பாதுகாப்பு ஆகியன தொடர்பில் சிறிலங்கா அதிக பங்களிப்புக்களைச் செய்ய முடியும்" என அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் பிராந்தியத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ஸ்ரான்லி உசர்மன் [Brigadier General Stanley Osserman] தெரிவித்தார்.

பாரியளவு படைக்கலன்களின் பயன்பாடும் கட்டுப்பாடற்ற கொடூரமான நடவடிக்கையையும் கொண்ட சிறிலங்காவின் 'தீர்வு' ['solution'] குறிப்பாக ஒன்றும் புதிய விடயமல்ல.

சிறிலங்கா இராணுவமானது தென் அமெரிக்கா பிரிவினை என்ற சொற்பதத்தை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் 1864ல் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட ஜெனரல் வில்லியம் ரெகும்செ சேர்மன் அவர்களின் உபாயங்களைக்கூட கைக்கொண்டிருந்தது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வழமைக்கு மாறான விடயம் என்னவெனில் அது இணையத்தள யுகத்தில் இடம்பெற்றமைதான். சிறிலங்காவின் 'தீர்வு' மாதிரியை அது கைக்கொண்ட முறைமைகளுக்காகவன்றி அது எவ்வாறு குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக்கொள்கிறது என்பதை அறிவதற்காகவே ஏனைய நாடுகள் ஆராய்கின்றன.

சூடானின் வெற்றிக்கும் தமிழ்ப் புலிகள், செச்சினியர்கள் மற்றும் ஏனையோரது தோல்விக்குமிடையே மூன்றாவது சாத்தியமும் உள்ளது.

பல நாடுகள் என்ன செய்வதென முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளன. தனிநாடு போல செயற்படும் தாய்வான் அது சீனாவுக்கு எரிச்சல் தரும் எந்தவொரு அறிவிப்பையும் மேற்கொள்ளாதவரை தொடர்ந்தும் அவ்வாறே இருக்க முடியும்.

கொசோவோ 75 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் கடந்த யூலையில் அனைத்துலக நீதிமன்றம் அதனை அங்கீகரித்தது. ஆனால், ரஸ்யா, சீனா மற்றும் ஸ்பெயின் போன்ற பிரிவினைவாதப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாடுகள் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த நாடுகளுக்கு செல்வதை தடை செய்துள்ளன.

ஆனால் தாய்வானும் கொசோவோவும் ஒருவகையில் நல்வாய்ப்பு [lucky] பெற்றவர்கள். அவர்களுக்கு ஏதொவொருவகையில் அங்கீகாரம் கிடைத்துவிட்டது.

சோமாலியாவிலிருந்து சோமாலிலாண்ட் [Somaliland] 1991ல் பிரிந்துசென்றது. இன்றுவரை எந்தவொரு நாடும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இது விருந்து ஒன்றிற்கு உலகம் முழவதையும் அழைத்து எவரும் வராமல் இரவு முழுவதும் நீங்கள் தனிமையில் கழித்தது போன்றதாகும்.

கடந்த மாதம் சோமாலியாவின் இன்னொரு பகுதி பிரிந்து செல்வதற்கு விண்ணப்பித்தது. பன்ற்லாண்ட் [Puntland] சோமாலிலாண்டைப் போலவே ஒப்பீட்டு ரீதியில் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் உறுதியானது.

பன்ற்லாண்ட் பிரிவினை என்ற பதத்தை உச்சரிப்பது குறுகிய கால அடிப்படையிலானதாக இருக்கலாம். "ஆனால் இது இணைந்த [federal] சோமாலியாவின் பகுதியாகவே இருக்க விரும்புவதால் அதனை மாற்ற முடியாது" என்கிறார் Foreign Policy In Focus -FPIF இன் பத்தியாளர் குசேன் யுசப் [Hussein Yusuf].

"அனைத்துலக சமூகத்தைத் தட்டி எழுப்புவதற்காகவே அது தனது அறிவிப்பைச் செய்துள்ளது. அது சோமாலியாவின் ஏனைய பகுதிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு அரசாங்கம் விரும்பாதமையை கவனத்திற்குக் கொண்டு வருவதற்காகவே இந்த அறிவிப்பை மேற்கொண்டது".

சுதந்திர நாடாக வர விரும்பும் இந்த நாடுகளின் தலைவிதிகள் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றன.

வலூன்கள், பாஸ்க், குறொசியர், மேற்கு சகாரா, ஆச்சே, நாகா, காரன், திபெத்தியர், குர்திஸ்கள், பலுசிஸ்தான்கள், வேமென்ரர் [Walloons, Basques, Corsicans, Western Saharans, Acehnese, Naga, Karen, Tibetans, Kurds, Baluchis, Vermonters] மற்றும் பல தேசியத்தார் தாமும் பிரிவினை கோரி அதில் வெற்றி பெற முடியுமா என ஆவலாக இருக்கின்றனர்.

தென் சூடான் தலைமை தாங்கும் வழியில் பிரிவினை என்பது பிரபலமான நடவடிக்கையாக மிகக் குறுகிய காலத்தில் மாறலாம். ஐநா பொதுச் சபையில் இந்தப் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக இருப்பிடத்தை விரிவாக்கும் வகையில் அவர்கள் சில சுவர்களை உடைக்கவேண்டி இருக்கும்.

இவ்வாறு Foreign Policy In Focus -FPIF என்னும் இணையத்தில் John Feffer எழுதிய உலக அரசியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

Comments