‘புதிய உலக ஒழுங்கு’ என்பது ஒரு மாறாத விதி அல்ல என்பதை துனீசியா, எகிப்தின் மக்கள் புரட்சிகள் தெரிவித்துள்ளன

ஈழத் தமிழர்கள் மத்தியிலும், புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் ஒரு மோசமான கருத்துருவாக்கம் வேகப்படுத்தப்பட்டு வருகின்றது. ‘போராட்டத்தின் மூலம், தமிழர்கள் இனிமேல் எதையும் சாதிக்க முடியாது’ என்ற கருத்தை, ஒரு உளவியல் போராகவே சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்றது. அதை, எம்மவர்கள் சிலரே காவிப் பரப்பும் பணியினையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.‘ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. அது மீண்டும் முளை விடுவதற்கான சாத்தியமே கிடையாது. சிங்கள இனவாதத்துடன் மோதும் நிலையைத் தவிர்த்து, அனுசரித்து வாழ்வதற்கான இடை வெளியே தற்போது உள்ளது. புலம்பெயர் தமிழர்களது சிறி லங்கா அரசுக்கெதிரான போராட்டங்கள், தமிழீழ மக்களது வாழ்க்கைத் தரத்தை மேலும் சீரழித்துவிடும். சிறிலங்கா அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கைவிட்டுவிட்டு, போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களது வாழ்வை மீட்டெடுக்கவும், தமிழர்கள் பிரதேசங்களைப் புனரமைக்கவும் புலம்பெயர் தமிழர்கள் முன்வரவேண்டும்…’ என்றவாறான அறிவுரைகள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் விதைக்கப்பட்டு வருகின்றது.உண்மையில், தமிழீழ மக்களது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டது, மீண்டும் ஒரு போராட்டத்திற்கான சாத்தியம் அங்கே அற்றுப்போய்விட்டது என்ற கருத்துருவாக்கம், சிங்கள தேசத்தின் போர் வெற்றியைத் தொடர்ந்தும் தக்க வைப்பதற்கானதொரு உளவியல் யுத்தமே. முடியாது, இயலாது என்ற எண்ணத்தை தமிழ் மக்களது மனங்களில் நிலை பெறச் செய்வதன் மூலம் அவர்களை இயலாமையினுள் வைத்து ஆட்சி புரிவதே இந்த உளவியல் யுத்தத்தின் நோக்கமாக உள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் முறியடிக்கப்பட்ட பின்னர், ஈழத் தமிழர்கள் சிங்கள தேசத்தின் அச்சுறுத்தல் வளையத்திற்குள் மீண்டும் கொண்டுவரப்பட்டு விட்டனர். அவர்களது இயலாமையை வைத்தே, புலம்பெயர் தமிழர்கள் மீதான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு சிங்கள அரச தரப்பு முயற்சி செய்கின்றது. புலம்பெயர் தமிழர்கள் மீது நேரடியான அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாத சிங்கள அரசு, தமிழீழத்தில் வாழும் அவர்களது உறவுகளைப் பணயமாகப் பயன்படுத்த முயல்கின்றது.

அத்துடன், புதிய உலக ஒழுங்கின்கீழ் தமிழீழ மக்கள் பிரிந்து செல்வது சாத்தியம் இல்லை என்றும், இந்தியாவின் ஒப்புதல் இன்றி தமிழீழம் உருவாக்கப்பட முடியாதது என்றும் இன்னொரு உளவியல் போரும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது, ஈழத் தமிழர்களது அவலங்களுக்கான உலகத் தமிழர்களது ஒன்றுபடுதலைக் குறி வைத்து மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த இரு உளவியல் யுத்தங்களையும் முறியடிப்பதிலேயே தமிழீழ விடுதலைக்கான அடுத்த கட்ட நகர்வு தங்கியுள்ளது.

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், தமிழீழ விடுதலைப் போருக்கான காரணங்களும், அவசியமும் முன்னரை விடவும் தற்போது அதிகரித்தே உள்ளது. தமிழீழ பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் தீவிர சிங்களக் குடியேற்றங்களும், தமிழ் மக்கள்மீது தொடரும் வன்முறை, படுகொலைச் சம்பவங்களும் இலங்கைத் தீவில் சிங்கள தேசம் பெற்ற யுத்த வெற்றி அங்கே அமைதியை ஏற்படுத்துவத்ற்குப் போதுமானது அல்ல என்பதை இப்போதும் நிரூபிக்கின்றன. எனவே, இலங்கைத் தீவில் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்கான தமது போராட்டத்தை ஈழத் தமிழர்கள் தொடர்ந்தே ஆக வேண்டும் என்ற நிலையே இப்போதும் உள்ளது.

சிங்கள தேசத்தால் தோற்கடிக்கப்பட்ட இனமாக, உயிரச்சத்துடன் வாழும் எமது மக்களது வாழ்வு இலங்கைத் தீவில் உறுதிப்படுத்தப்படாத வரைக்கும் அவர்களை ‘மீட்டெடுத்தல்’, ‘புனர்வாழ்வளித்தல்’ என்பதெல்லாம் சாத்தியமற்றதாகவே உள்ளது. அச்சத்திற்குள்ளாக்கப்பட்ட தமிழ் மக்கள், தமது பாதுகாப்பிற்காக வெளியேறுவதையும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும். எனவே, சிங்கள தேசத்துடன் சமரசம் என்பது, சிங்கள – பௌத்த தேசத்தின் உருவாக்குதலுக்கான சரணாகதியாகவே இறுதியில் அமைந்துவிடும்.

விடுதலைப் புலிகள் சிங்கள அரசுடனான போரில் தாம் தோற்கும் நிலையை எதிர்கொண்ட போதும், தமிழீழ மக்களது விடுதலைக்கான போராட்டத்தை எதிரியிடம் சரணாகதி ஆக்காமல், புலம்பெயர் தமிழர்களிடம் கைமாற்றியுள்ளதன் தார்ப்பரியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களது போராட்டம் மட்டுமே, ஈழத் தமிழர்களது அவலங்களை உலகின் கவனத்திற்குக் கொண்டு செல்லும். அதுவே, சிங்கள தேசத்தின் கொடூர முகத்தினையும் அம்பலப்படுத்தும். அதன் மூலம், தமிழீழ மக்களுக்கான பாதுகாப்பு அரண் ஒன்றை உலக நாடுகளிடம் கோரும் சக்தி படைத்தது. அதனை முறியடிப்பதற்காகவே, சிங்கள தேசம் புலம்பெயர் தமிழர்கள்மீது இத்தகைய உளவியல் யுத்தத்தை மேற்கொண்டு வருகின்றது.

‘புதிய உலக ஒழுங்கு’ என்பது ஒரு நிரந்தர விதி அல்ல என்பதை துனீசியா, எகிப்தின் மக்கள் புரட்சிகள் தெரிவித்துள்ளன. மேற்குலகின் விருப்பங்களுக்கு மாறான மாற்றங்களை அந்த நாட்டு மக்கள் நடாத்திக் காட்டியுள்ளார்கள். எனவே, மக்கள் சக்தி என்பது அனைத்து விதிகளையும் மாற்றக் கூடியது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அது எம்மவர்களின் ஒன்றுபடுதலில் மட்டுமே சாத்தியமாகும். எனவே, எங்கள் மத்தியில் பிளவுகளையும், நம்பிக்கையீனங்களையும் உருவாக்குவதற்கு சிங்கள அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலான இந்தப் பிளவுபடுத்தல் முயற்சிக்கு சிங்கள அரசு, கே.பி. குழுவினரை பயன்படுத்தி வருகின்றது. சிங்கள அரசுடன் இணைந்து பணியாற்றும் விடுதலைப் புலிகளின் முன்நாள் ஆயுத முகவரான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்கள் ஊடாக சிங்கள அரசு மேற்கொள்ளும் இந்தப் பிளவுபடுத்தல் முயற்சிக்கு, புலம்பெயர் கே.பி. விசுவாசிகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

‘இந்தியாவின் விருப்பத்தினை மீறி, தமிழீழம் அமையாது’ என்பதும் ஒரு வகையான உளவியல் போர் மட்டுமே. இந்தியா என்பது பல்லின மக்களது கூட்டு அரசு என்பதை நாம் முதலில் கவனத்திற்கு எடுக்க வேண்டும். அங்கே, பிராந்திய சிந்தனைகள் மேலோங்கி வருவதையும், தேசியக் கட்சிகள் சுருங்கி, பிராந்திய கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்தியா குறித்த அச்சம் தேவையற்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

இந்தியா, தனது பிராந்திய வல்லாதிக்க பேராசைக்குத் தமிழீழ மக்களைப் பலிக்கடா ஆக்கும் நிலை தொடருமாயின், அதன் விளைவுகளைத் தமிழகத்தில் அறுவடை செய்ய வேண்டிய காலம் விரைவில் உருவாகும் என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது. ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் இந்தியா கொண்டிருந்த வகிபாகமும், தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையின் தொடர் வெறியாட்டங்களும் தமிழகத்தில் கொதி நிலையை உருவாக்கியுள்ளது. அதன் விளைவு, நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றே நம்பப்படுகின்றது.

இலவசங்களுக்கும், சாதி அரசியலுக்கும், சினிமாக் கவர்ச்சிக்கும், பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கும் பழக்கப்படுத்தப்பட்ட தமிழகம் மெல்ல, மெல்ல விழிப்படைந்து வருகின்றது. தமிழகம் எழுச்சி பெறும் நிலையை அடைந்தால், ஈழத் தமிழர்கள் மீதான இந்திய அணுகுமுறையும் மாற்றத்திற்குள்ளாகியே தீரும். அந்த அச்சத்தின் காரணமாகவே, இந்திய புலனாய்வுத் துறை தமிழின உணர்வாளாகள் மத்தியில் பிளவுகளை உருவாக்க முனைப்புக் காட்டி வருகின்றது. அண்மையில், சென்னையில் நடைபெற்ற ‘நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்?’ என்ற கருப்பொருளுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வரங்கத்தில் இந்தப் பிளவு படுத்தல் வெளிப்படையாகவே தெரிந்தது. தோழர் தியாகு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வரங்கத்தில், ஐயா பழ. நெடுமாறன், வைகோ, தா. பாண்டியன் போன்ற மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளாதது, அதன் நோக்கத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.

இந்த நிலையில், புலம்பெயர் தமிழர்கள் நிலமைகளைப் புரிந்துகொண்டு தமது போராட்ட வியூகங்களை மீள் வகுத்தல் செய்ய வேண்டும். இந்திய – சிங்களச் சதிகளுக்குள் புதைந்துவிடாமல் தம்மிடையே தெளிவான புரிதல்களை உருவாக்க வேண்டும். ‘புதிய உலக ஒழுங்கு’ என்ற விலங்கை அறுத்தெறிந்துவிட்டு, மாற்றங்களுக்கான நம்பிக்கையுடன் வேகமாகப் பயணிக்க வேண்டும். ‘எனது மக்கள் விடுவிக்கப்படுவார்கள்’ என்ற நெல்சன் மாண்டேலாவின் நம்பிக்கை சுதந்திர தென்னாபிரிக்காவை உருவாக்கியது போல், ‘நம்மால் முடியும்’ என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் நம்பிக்கை, அமெரிக்க அதிபராக பராக் ஒபாமாவை உயர்த்தியது போல், ‘தமிழீழம் உருவாகியே தீரும்’ என்ற ஈழத் தமிழர்களது நம்பிக்கையும் சாத்தியமானதே.

- இசைப்பிரியா

Comments