அரசு, டக்ளஸ், இந்திய சதி வலையில் யாழ் மீனவர்கள் விழுந்தார்களா? மாட்டினார்களா?

சிறீலங்கா - இந்திய அரசாங்கங்கள் தமக்கிடையேயான மற்றொரு அரசியல் நகர்வை ஈ.பி.டி.பி துணைப்படைக் குழுவின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் உதவியுடன் மீண்டும் அரங்கேற்றியுள்ளன.

Indian trawlers in Point Pedro

சிறீலங்கா அரசாங்கம் ஒட்டுக்குழுவின் உதவியுடன் மேற்கொண்டுள்ள இந்த செயற்பாட்டுக்கு, யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்கள் பலியானார்களா? அல்லது பலியாக்கப்பட்டனரா? என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

தமிழீழக் கடல் எல்லைக்குள் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் எல்லை மீறுவது, உரிய கடற் கலங்களைப் பாவிக்காது மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது என்பது ஈழத்தமிழ் கடற்றொழிலாளர்களை வெகுவாகப் பாதிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் அதனையே தாம் தமிழ்நாடு கடற்றொழிலாளர்களைச் சுட்டுக்கொல்வதற்குக் காரணமாகக் காண்பிக்க முயல்வதும், சிறீலங்கா கடற் படையினர் தம்மை ஈழத்தமிழ் மக்களிற்கான காவலன் போன்று காண்பித்து, தமிழ் (தமிழ்நாடு – தமிழீழம்) கடற்றொழிலாளர்கள் மத்தியில் பிரச்சினையை உண்டாக்க முயலும் சிறீலங்கா அரசாங்கத்தின் கபடத்தனத்தை எற்க முடியாது.

1974ஆம் ஆண்டு இலங்கைக்கு என இந்தியா கையளித்த கச்சதீவுக்கு தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் சென்றாலே சுட்டுத்தள்ளும் சிறீலங்கா கடற்படையினர், அவர்கள் பருத்தித்துறை கடல் எல்லைக்கு வரும்வரை அனுமதித்தமை, அதன் பின்னர் ஒருசில யாழ் கடற்றொழிலாளர்கள் மூலமாக தமிழ்நாடு கடற்றொழிலாளர்களைக் கைது செய்தமை சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது.

கடற்றொழிலாளர்கள் யாழ் கரைக்கு வந்துசேர முன்னரே, படையினர் அன்றி யாழ்ப்பாணக் கடற்றொழிலாளர்களே அவர்களைப் பிடித்துவந்து, சிறீலங்கா காவல்துறையிடம் ஒப்படைத்திருப்பதாக அவசர அவசரமாகச் செய்தி வெளியிடப்பட்டன. இந்தச் செய்திகளை எமது தமிழ் ஊடகங்களும் விரைவாகக் காவி வரத்தவறவில்லை. கடற்றொழிலாளர்கள் படையினரால் கைது செய்யப்பட்டார்கள் என்று சொல்லாமல், யாழ் கடற்றொழிலாளர்களால் பிடித்து வரப்பட்டனர் என்றே அனைத்து ஊடகங்களும் கூறின.

சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற துணைப்படைக் குழுவின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, கைது செய்யப்பட்ட தமிழ்நாடு கடற்றொழிலாளர் ஒருவரை ஊடகங்கள் முன்னிலையில் மிரட்டி, நீங்கள் எல்லை மீறித்தானே வந்தீர்கள் எனக்கேட்க, குறிப்பிட்ட கடற்றொழிலாளரும் ஆமாம் என்று பதலளிக்க நேர்ந்திருக்கின்றது.

தமிழீழம் - தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் தமக்கிடையிலான மீன்பிடிப் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க இடமுண்டு. அப்படியிருக்க இரு தரப்பினரையும் மோதவிட்டு எதையோ ஒன்றை அல்லது பலதைச் சாதிக்க சிறீலங்கா அரசாங்கம் நினைக்கின்றது. இந்தச் செயற்பாடுகள் தொடரலாம். தொடர்ந்தால் இரு தரப்பிற்கும் இடையிலான தமிழ் உறவில் கசப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. இது ஈழத்தமிழ் மக்களிற்காக தமிழ்நாட்டில் தொடர்ந்து குரல் கொடுக்கும் தமிழுணர்வாளர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும்.

தேர்தல் நாடகத்திற்காக நிருபாமாவை அனுப்பி எச்சரிக்கை செய்தால், தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் எல்லை மீறுகின்றனர் என்பதை படம் பிடித்துக் காட்டுவோம், அல்லது நேரில் அவர்களைப் பிடித்தும் காட்டுவோம் என சிறீலங்கா அரசாங்கம் மறைமுகமாகப் பதில் வழங்கியுள்ளதாக எண்ணலாம். அல்லது நிருபாமா பயணம், கடற்றொழிலாளர்கள் கைது, தி.மு.க ஆர்ப்பாட்டம் எல்லாமே திட்டமிட்டு இடம்பெற்றிருக்கலாம்.

அது மட்டுமன்றி கடற்றொழிலாளர்கள் பிரச்சினையே அடுத்து வரப்போகின்ற தமிழ்நாடு தேர்தலில் எதிரொலிக்க இருப்பதால், தமிழ் உணர்வாளர்களும், தமிழ்நாடு எதிர்க்கட்சிகளும் இந்தப் பிரச்சனையை ஒரு பிரதான விடயமாகக் கையில் எடுத்திருப்பதால், காங்கிரஸ் - தி.மு.க அரசாங்கங்களின் அனுசரணையுடன்கூட தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

சீனா, இந்தியா, சிறீலங்கா ஆகிய நாடுகள் தமிழ்நாடு – தமிழீழத்திற்கு இடையேயுள்ள தமிழ் மக்களின் கடலில் ஆதிக்கம் செலுத்த மேற்கொள்ளும் போட்டியில், தமிழ் (தமிழ்நாடு – தமிழீழம்) கடற்றொழிலாளர்கள் பலியாவதை தமிழ் தேசிய மக்கள் அனுமதிக்கக்கூடாது.

தமிழக மீனவர்களை யாழ் மீனவர்கள் கைது செய்தது என்பது நகைப்புக்கிடமானது: கொழும்பு ஊடகம்

தமிழகத்தை சேர்ந்த 112 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் யாழ் மீனவர்களை கைது செய்துள்ளது என்பது நகைப்புக்கிடமானது, அவர்களை சிறீலங்கா கடற்படையினரே கைது செய்துள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நேற்று முனத்தினமும் (16) மாதகல் கடற்பகுதியில் வைத்து 7 றோலர் படகுகளுடன், 24 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறீலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு முதல் நாள் 18 றோலர் படகுகளுடன், 112 தமிழக மீனவர்களை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர்கள் கைது செய்திருந்ததாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அது மிகவும் நகைப்புக்கிடமானது என யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா படையினரின் ஆதரவுகள் இன்றி எவ்வாறு இவ்வாறு கைது செய்ய முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வடபகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள மீனவர்களின் உதவியுடன், சிறீலங்கா கடற்படையினரே தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments