இரு வருடங்களில் சிறீலங்காவில் இருந்து தமிழ் மக்கள் முற்றாக அழிக்கப்படலாம்: கயல்விழி

தமிழ் மக்களை மீள்குடியமர்த்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துவருகின்றது. ஆனால் அங்கு நடைபெறுவது மறுதலையானது.

அங்கு தமிழ் மக்கள் வாழமுடியாத நிலையில் உள்ளதாக அங்கு சென்றுவந்த கயல்விழி தெரிவித்துள்ளார். அங்குள்ள தமிழ் மக்கள் இரு வருடங்களில் முற்றாக அழிக்கப்படலாம் அல்லது நாட்டில் இருந்து முற்றாக வெளியேறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் நிலமைகளை பார்வையிடச் சென்ற இந்திய உயர் நீதிமன்ற சட்டவாளர் கயல்விழியை சிறீலங்கா அரசு கைது செய்து தடுத்து வைத்திருந்தது. வவுனியாவில், கட்டறியன்குளம் பகுதியில் உள்ள முகாமில் 1,600 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் பெரும்பாலானவர்கள் குழந்தைகளும், பெண்களும்.

அங்கு வாழும் ஆண்களில் பலர் அவயவங்களை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர். பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். புனர்வாழ்வுக்கான உதவிகள் வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துவரும்போதும், 30 விகிதமாக உதவிகளே மக்களை சென்றடைகின்றன.

தமிழ் மக்களே தமது தேவைகளை தேடிக்கொள்கின்றனர். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற காரணத்தால் 16,000 இளைஞர்களும், 9,000 பெண்களும் இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் 18 தொடக்கம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால் அவர்கள் தொடர்பான விபரங்களை அரசு யாருக்கும் தெரிவிப்பதில்லை. துன்புறுத்தல்களை மேற்கொள்ளும் வதை முகாம்களில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலை தொடர்ந்தால் சிறீலங்காவில் இருந்து தமிழ் மக்கள் விரைவில் முற்றாக துடைத்தழிக்கப்படலாம். தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட விவசாயப்பொருட்களையும் அரசு சிங்களவர்களுக்கே வழங்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments