சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பாக 'ஒழித்துப் பிடித்து விளையாடும்' பிளேக்

அமெரிக்காவின் ரெக்சாஸ் பகுதிக்கு அதிபர் ராஜபக்ச பயணித்துபோது தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராசாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் அவர்களும் ரெக்ராசில்தான் இருந்திருக்கிறார்.


சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவினது திடீர் அமெரிக்கப் பயணம் மர்மம் நிறைந்த ஒன்றாகக் காணப்படுகிறது.

இந்தப் பயணம் தொடர்பாக வேறுபட்ட ஊகங்கள் வெளியிடப்படுகின்றபோதும் அதிபர் மகிந்தவின் திடீர் பயணத்தின் உண்மையான நோக்கம்தான் என்ன என்பது இன்னமும் இரகசியமாகவே உள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக்கொண்ட அமெரிக்காவிலுள்ள 'இனக்கொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு' மகிந்தவிற்கு எதிரான போர்க்குற்ற வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தது.

கடந்த 2009 ஒக்ரோபரில் சிறிலங்காவினது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோது சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து அவர் உடனடியாகவே நாடு திரும்பியிருந்தார்.

எவ்வாறிருப்பினும் மகிந்த ராஜபக்ச அமெரிக்கா சென்றிருந்தபோது இதுபோன்ற நிலைமை அவருக்கு ஏற்படவில்லை. ஒரு நாட்டினது அரச தலைவர் என்ற வகையில் அதிபர் மகிந்தவிற்கு இராசதந்திர ரீதியிலான பாதுகாப்பு இருப்பதனாலேயே மகிந்த ராஜபக்ச சரத் பொன்சேகா எதிர்கொண்டதைப் போன்ற நிலைமையினை எதிர்கொள்ளவில்லை எனப்படுகிறது. முப்படைகளின் துணைத் தளபதி என்ற வகையில் பொன்சேகாவிற்கும் அதே இராசதந்திரப் பாதுகாப்பு இருக்கத்தான் செய்தது.

ஆனால் பொன்சேகா தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவிற்குச் சென்றமையினால் இந்த வசதி பொன்சேகாவிற்கு இல்லாது போய்விட்டது. ஆதலினால்தான் பொன்சேகா உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

சரி மகிந்தவும் தனிப்பட்ட பயணமாகத்தானே அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார், இருந்தும் அவருக்கு மாத்திரம் ஏன் இராசதந்திரப் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. பொன்சேகா கிறீன் காட்டினை வைத்திருக்கும் ஓர் அமெரிக்கக் குடிமகன் என்பதால் அவரை விசாரணைக்கு உட்படுத்தும் உரிமை அந்த நாட்டினது உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உண்டு.

சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுடன் தொடர்புடைய அனைத்துச் சூழமைவுகளையும் அதனுடன் இணைந்த சம்பவங்களையும் கவனத்தில் எடுப்போமானால், இந்த விடயத்தின் அதிக நலன் கொண்ட தரப்பினர் யாரோ அவர்கள் 'ஒழித்துப் பிடித்து' விளையாடுவது தெளிவாகத் தெரியும்.

அமெரிக்காவின் ரெக்சாஸ் பகுதிக்கு அதிபர் ராஜபக்ச பயணித்துபோது தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராசாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் அவர்களும் ரெக்ராசில்தான் இருந்திருக்கிறார்.

சிறிலங்காவினது அதிபர் ராஜபக்ச அமெரிக்காவின் ரெக்சாசில் வைத்து றொபேட் ஓ பிளேக்கினைச் சந்தித்தாரா என ஊடாகவியலாளர்கள் கேட்டபோது அமெரிக்க இராசாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் தெளிவான பதில் எதனையும் வழங்கவில்லை.

அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் உத்தியோகபூர்வமான சந்திப்புக்கள் எதுவும் இடம்பெறாது என அந்தப் பேச்சாளர் கூறியிருக்கிறார். ஆனால் அதிபர் மகிந்த ரெக்சாசுக்குச் சென்றிருந்த அதே காலப்பகுதியில் றொபேட் ஓ பிளேக்கும் ரெக்ஸ்சாசில் இருந்திருப்பது ஏதோவொன்றைச் சொல்லுகிறது. ரெக்ஸ்சாஸ் பிராந்தியத்திலுள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் உரைநிகழ்த்துவதற்காகவே றொபேட் ஓ பிளேக் ரெக்சாசுக்குச் சென்றிருந்தார் என இராசாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் கூறுகிறார்.

பிளேக்கினது ஒப்புதலின்றி அதிபர் மகிந்த ராஜபக்ச அமெரிக்காவிற்குப் பயணித்திருப்பார் என்பதை ஏற்றுக்கொள்வது கடினமானதே.

அதிபர் மகிந்த அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும்போது அங்கிருக்கும் அமெரிக்கவாழ் தமிழர்களால் பிரச்சினைகள் ஏதாவது தோன்றுமா என சிறிலங்காவினது அதிபர் மகிந்தவோ அன்றி வெளிவிவகார அமைச்சர் பீரிசோ பிளேக்கினைத் தொடர்புகொண்டு கட்டாயம் கேட்டறிந்திருப்பார்கள்.

அண்மையில் லண்டனுக்கு பயணம் செய்திருந்த சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச அவமானகரமான அனுபவத்தினைச் சந்தித்திருந்த பின்னணியில், பிளேக்கிற்குத் தெரியாமல் அல்லது அவரது அறிவுரைகளைக் கேட்டறியாமல் அதிபர் மகிந்த அமெரிக்காவிற்குப் பயணம் செய்யத் துணிந்திருக்கமாட்டார்.

றொபேட் ஓ பிளேக் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த காலப்பகுதியில் மகிந்த ராஜபக்சவுடன் மாத்திரமல்லாது அவரது குடும்பத்தினருடன்கூட மிக நெருங்கிய உறவினைக் கொண்டிருந்தார் என்பது ஊரறிந்த விடயம்.

றொபேட் ஓ பிளேக் தூதுவராக கொழும்பில் இருந்த காலப்பகுதியில் அதிபர் ராஜபக்சவின் அழைப்பினை ஏற்று மகிந்தவின் சொந்த ஊரான தங்காலை பகுதியிலுள்ள 'கால்ரன் விடுதி' என்ற அதிபர் ராஜபக்சவின் இல்லத்தில் ரொபேட் ஓ பிளேக் தனது குடும்பத்துடன் ஒரு நாளைச் செலவிட்டதாகக் கூறுப்படுகிறது. இதன்போது மகிந்தவினது குடும்பத்துடன் இணைந்து றொபேட் ஓ பிளேக் கடலில் நீச்சலடித்தாகவும் கூறுப்படுகிறது.

இந்தப் புறநிலையில் அதிபர் மகிந்த ரெக்ராசுக்குச் சென்றிருந்தவேளையில் றொபேட் ஓ பிளேக்கும் அந்தப் பிராந்தியத்தில் இருந்தமையானது ஒன்றும் எதேச்சையாக நடந்த விடயமல்ல என்பது மட்டும் தெளிவு. இவர்கள் இருவரும் உத்தியோகபூர்வமற்ற முறையில் ரெக்சாசில் சந்தித்திருப்பதாகத்தான் தெரிகிறது.

இது மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பயணமாக இருந்தாலும் பிளேக்கினைச் சந்திக்கும் எண்ணம் மகிந்தவிற்கு இருந்திருக்கிறது. இதனால்தான் அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்கவினையும் வெளிவிவகார அமைச்சர் பேராசியரிர் பீரிசையும் மகிந்த தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.

கடந்த ஆண்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோதும் பிளேக்கினைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்ததாக செய்திகள் வெளிவந்திருந்தன.

தனது இராசதந்திர சிந்தனைகளுக்கு ஏற்ப மகிந்த அரசாங்கத்தினைச் செயற்படவைக்கும் எண்ணத்தில் தான் அதிபர் மகிந்த ராஜபக்சவினையும் அவரது சகோதரர் கோத்தாவினையும் தனிப்பட்ட ரீதியில் தான் சந்தித்துக் கலந்துரையாடியதாக றோபேட் ஒ பிளேக் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தினைப் போலவே தேவை கருதியே அதிபர் ராஜபக்சவினது அமெரிக்க விடயம் தொடர்பான செய்திகளை பிளேக் வெளியே குறிப்பிடாதிருந்தார்.

அமெரிக்காவில் அதிபர் ராஜபக்ச தங்கியிருக்கும் வதிவிடத்தினை அடையாளம் காணுவது அங்கு வாழும் புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஒன்றும் கடினமான பணியன்று. அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரையில் பிரித்தானியாவிலுள்ளதை விட அளவில் குறைந்தவர்களே அங்கிருக்கிறார்கள்.

எவ்வாறிருப்பினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் அமெரிக்காவிலேயே வசித்துவருகிறார். உருத்திரகுமாரனைக் கைதுசெய்வதோடு அவரைச் சிறிலங்காவிற்கு நாடு கடத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் பிளேக்கிடம் கோரிக்கை விடுத்திருந்தது. உருத்திரகுமாரனுக்கு எதிராக பயங்கரவாதம்சார் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லையென்பதால் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்கமுடியாது என பிளேக் கைவிரித்துவிட்டாராம். றொபேட் ஓ பிளேக் உருத்திரகுமாரனுடனும் தொடர்புகளைப் பேணுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதிபர் ராஜபக்ச அமெரிக்காவிற்கான பயணத்தினை மேற்கொள்ளும்போது கடுமையான எதிர்ப்புப் போராட்டங்கள் எதிலும் ஈடுபடவேண்டாம் என பிளேக் உருத்திரகுமாரனைக் கோரியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும் இனக்கொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அமைந்த எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்படத்தக்கது.

எது எவ்வாறிருப்பினும் சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக 'ஒழித்துப் பிடித்து விளையாடும்' அணுகுமுறையினை பிளேக்கும் அமெரிக்காவும் கைக்கொள்ளும் காரணம்தான் என்ன?



இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான டெயிலிமிரரில் அதன் பத்தி எழுத்தாளர் Upul Joseph Fernando குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

Comments