தமிழில் படம்! ராஜபக்‌ஷேவுடன் இசையமைப்பாளர் கங்கை அமரன் கூட்டு சதி!


இலங்கையில் நடந்த போரின்போது தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசின் அதிபரான ராஜபக்சேவை பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஒருவர் நேரில் சென்று பார்த்திருக்கிறார். உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும், அதனை கண்டுகொள்ளாமல் போரை நடத்திய அதிபர், அந்த இசையமைப்பாளருக்கு ஒரு சினிமா எடுப்பதற்காக கோ‌டிகளை கொட்டிக் கொடுக்கவும் முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தான் மட்டுமல்லாமல் தன் வாரிசுகளையும் இசையிலும், இயக்கத்திலும், நடிப்பிலும் அறிமுகப்படுத்தியிருக்கும் அந்த இசையமைப்பாளர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றிருக்கிறார்.

ராஜமரியாதையுடன் அரச மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, இலங்கையில் தமிழர்கள் எந்த கவலையும் இல்லாமல் நல்லபடியாக இருக்கிறார்கள் என்பதுபோல ஓரு படம் எடுக்கும்படி இசையிடம், அதிபர் வலியுறுத்தியிருக்கிறார். இதற்காக சிலபல கோடி பணத்தை கொடுக்கவும் அதிபர் முன்வந்திருக்கிறாராம். இசையும் சம்மதம் சொல்லி விடை பெற்றிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருக்கும் இசை, இந்த படத்தை தனது மகனை வைத்தே இயக்க முடிவு செய்துள்ளாராம். இசையின் மகன் தற்போது முக்கிய தயாரிப்பாளரின் படம் ஒன்றை முன்னணி நடிகரை வைத்து மங்காத்தா ஆடிக் கொண்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

இலங்கையில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்றால் பெரும் பிரச்னையாகி விடும் என நினைத்த தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இலங்கையை புறக்கணித்ததுடன், பாலிவுட் ஸ்டார்கள் சிலரையும் பங்கேற்க விடாமல் செய்த சம்பவங்கள் சிலபல மாதங்களுக்கு முன் நடந்தேறின.

நடிகை அசின் இலங்கை சென்று சூட்டிங்கில் பங்கேற்றார் என்பதற்காக தமிழகத்தில் அவருக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. இப்போது ராஜபக்சே அறிவிக்கப்படாத தயாரிப்பாளர் ஆவதற்கு முன்னோட்ட வேலைகள் நடந்து வருகின்றன என்ற தகவல் கோடம்பாக்கத்தையே அலறவும், குமுறவும் வைத்திருக்கிறது.

இலங்கையில் போர் நடக்கும் போது திரையுலகம் திரண்டு பல போராட்டங்களை நடத்தினார்கள். அதில் சொல்லப்பட்டதும் நாம் புரிந்து கொண்டதும் ஒரே விஷயம் தான். இந்த அழிவுகளுக்கும் கொடுமைகளுக்கும் காரணமானவர்கள் ஒரு புறம் இருக்க, இந்த கொடுமையான பதிவுகளை காலத்துக்கு எடுத்து சொல்லவும் அதற்கு காரணமானவர்களை அடையாளம் காட்டும் பொறுப்பும் திரைத் துறையினருக்கும் கலைத் துறையினருக்கும் அதிகம் உண்டு என்பதே.

இலங்கைப் பிரச்சனை அரசியலாக்கப்படுவது ஒருபுறம் இருக்க இந்தக் கொடுமைகளை எல்லாம் மறைக்க ராஜபக்‌ஷே ஒரு பெரிய சதி திட்டம் தீட்டி வருக்கிறார். அதாவது தமிழில் படம் தயாரிக்க இருக்கிறார் ராஜபக்‌ஷே. இதனால் அவருக்கு என்ன லாபம்... அதில் தானே விஷயமே இருக்கிறது. தமிழில் படம் எடுத்து அதில் வரும் காட்சிகளில் இலங்கையில் உள்ளத் தமிழர்கள் நன்றாக இருப்பது போலவும் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது போலவும் கொடுமைக்கு காரணமான வர்கள் நல்ல மனிதர்களைப் போலவும் காண்பிக்க வேண்டும் என்பது ராஜபக்‌ஷேவின் கனவு.

இதில் கொடுமை என்னவென்றால், இதற்கு ஒத்துழைப்பதாக ராஜபக்‌ஷேவிடம் வாக்கு கொடுத்திருகிறாராம் ஒரு பிரபல தமிழ் இசையமைப்பாளர். அவர் வேறு யாரும் இல்லை, கங்கை அமரன் தான். இதற்காக எவ்வளவு கோடிகளை வேண்டுமானாலும் கொட்டிக் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாராம் ராஜபக்‌ஷே. சமீபமாக ரகசியமாக இலங்கை சென்று ராஜபக்‌ஷேவிடம் பேசிவிட்டு வந்திருக்கிறாராம் இந்த இசையமைப்பாளர். கொழும்பில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த இந்த இசையமைப்பாளரை ராஜ மரியாதையுடன் தூதர்கள் அரச மாளிகைக்கு அழைத்து சென்றார்களாம்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த இளையமைப்பாளரின் மகன் தற்போது பிசியான பிரபல டைரக்டர் என்பதால் அவரை வைத்தே அந்தப் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம் சதிகாரர்கள். (அப்போ... வெங்கட் பிரபுவிற்கு இனிமேல் தான் மங்காத்தா ஆரம்பம்ன்னு சொல்லுங்க!)

இது பற்றி கருத்து தெரிவித்திருக்கும் கங்கை அமரன், எனக்கு அப்படி ஒரு அவசியம் இல்லை என்றும் அது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், ராஜபக்‌ஷேவை கங்கை அமரன் சந்தித்தது உண்மை தான் என்றும், இன்னும் கொஞ்ச நாட்களில் உண்மை வெளியே வரும் என்றும் செய்திகள் வருகிறது.

Comments