காலம் கடந்துவிடவில்லை.. ஒன்றுபடுங்கள் தமிழர்களே!' - சீமான்

தமிழினத்தை அழிக்க வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன வல்லாதிக்க சக்திகள். இனியும் காலம் தாழ்ந்துவிடவில்லை... தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம், என கூறியுள்ளார் சீமான்.

நாம் தமிழர் கட்சி தலைவர் இயக்குநர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 106 பேரை சட்ட விரோதமாக சிறை பிடித்துச் சென்று 15 நாட்கள் சிறையில் அடைந்திருக்கிறது சிங்கள அரசு. இந்நிலையில் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து 26 மீனவர்களை பிடித்து சென்று இலங்கையில் இளவாலை போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.

சிங்கள கடற்படையால் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்ட மீனவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இவர்களை இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள் கைது செய்து போலீசிடம் ஒப்படைத்துள்ளதாக இலங்கை அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்கும் மத்தியில் பகையை தூண்டுகிற வேலையை இலங்கை நேரடியாகவும், இந்தியா மறைமுகமாகவும் செய்து வருகின்றன. இலங்கை கடற்படையால் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டும் இன்று வரை கொலைகள் நின்றபாடில்லை.

இப்போது கூட்டம் கூட்டமாக எமது மீனவர்களை கடத்தவும் தொடங்கி விட்டனர்.இந்தியாவை சுற்றியுள்ள கடற்பரப்புகளில் தமிழர்கள் பிழைப்பு நடத்தும் கடற்பரப்பில் மட்டுமே இந்த அடாவடிகள் தொடர்கின்றன.

தமிழர்களின் கடல் வளம் திட்டமிட்டு பறிக்கப்படும் வல்லாதிக்க சதிக்கு எதிராக ஒன்று திரள வேண்டியது காலத்தின் கட்டாயம். இப்போதும் கூட காலம் தாழ்ந்துவிடவில்லை. தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம். அந்த ஒற்றுமையும், போராட்டமுமே மீனவர் படுகொலைகளையும் கடல் வளம் பறிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தும்."

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments