காங்கிரசுக்கு எதிராக 17 நாள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் டைரக்டர் சீமான் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கு எதிராக செயல்பட்டு இலங்கை தமிழ் இனத்தை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுவோம். இதற்காக 17 நாள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 63 தொகுதிகளிலும் எதிர்த்து பிரசாரம் செய்வோம்.

நாளை எனது பிரசாரத்தை நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தொடங்குகிறேன். ஏப்ரல் 11-ந்தேதி வரை பிரசாரம் செய்வேன். தமிழரால் உருவெடுத்து உள்ளோம். காங்கிரசை கறுவறுப்போம். அரசியல் சமுதாய மாற்றம் ஏற்படுத்தும் வகையில் எங்கள் பிரசாரம் அமையும்.

இலவச திட்டங்கள் வழங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். காங்கிரசை பழிவாங்க அரசியல் களத்தில் குதித்து உள்ளோம். வைகோவை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றியது வருத்தம் அளிக்கிறது. அவர் அனுபவம் மிக்க தலைவர் அவர் எடுத்த முடிவு சரியாக இருக்கும்.

எங்கிருந்தாலும் அவரது வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். காங்கிரசை தோற்கடிக்கக் கூடிய வலுவான சின்னம் இரட்டை இலையாக இருந்தாலும், மொட்டை இலையாக இருந்தாலும் அதை ஆதரிப்போம்.

காங்கிரசை அழிப்பது தான் எங்களது நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பேராசிரியர் தீரன், ஷாகுல்அமீது, தடா சந்திரசேகர், நெல்லை சிவா, வெற்றிக்குமரன், ஆவல் கணேசன், ஆகியோர் உடனிருந்தனர்

Comments