நா.க.அரசின் ஜனநாயக அமைப்பு ஏன் ? மக்களுக்கு விளக்கம்

நாடு கடந்த அரசில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், யாப்பின் மீது சத்தியப்பிரமாணம் எடுத்த சிலர், அதன் மீது சத்தியப்பிரமாணம் எடுக்காத சிலர் என இரு பிரிவினர் தற்போது உள்ளனர். இவர்கள் தாம் ஏன் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என்பது தொடர்பாக சில விளக்கங்களைக் கொடுத்தும் தமது தமது 10 அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளையும் பிரதமர் திரு.ருத்திரகுமார் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் அதற்கு தகுந்த பதிலை அவர் தரவில்லை எனவும் ஆனால் மாறாக மார்ச் 5ம் திகதிக்கு முன்னதான அனைவரும் சத்தியப்பிரமாணம் எடுக்கவேண்டும் என்றும் அவ்வாறு எடுக்காவிட்டால் அவர்கள் பத்விநீக்கம் செய்யப்படுவார்கள் என சபாநாயகரால் அறிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாப்பின் மீது சத்தியப்பிரமாணம் எடுக்காத நா.க.தமிழீழ அரசின் உறுப்பினர்கள் பலர் அதிர்வு இணையத்தோடு தொடர்புகொண்டு, அதிர்வு இணையம் வெளியிட்ட செய்திகளுக்கு தமது அதிருப்த்தியைத் தெரிவித்ததோடு தாம் ஏன் யாப்பின் மீது சத்தியப்பிரமாணம் எடுக்கவில்லை என்பதனையும் விளக்கியுள்ளனர். அத்தோடு புதிதாக ஆரம்பமாகியுள்ள நா.க.அரசின் ஜனநாயக அணியினர் தமது செயல்பாடுகள் குறித்து பல விளக்கங்களை அதிர்வு இணையத்துக்கு தெரிவித்துள்ளனர். அதாவது அவர்கள் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

1) நா.க.தமிழீழ அரசை தாம் உடைக்க ஒருபோதும் விரும்பவில்லை என்பதாகும்.

2) யாப்பின் மீது அதிருப்த்தியடைந்துள்ள குழு, உள்ளே அங்கத்துவம் வகித்தவாறே செயல்படும் என்பதாகும்.

3) பல இன்னல்களுக்கு மத்தியிலும், தம்மை புறந்தள்ளியபோதும் தமிழ்த் தேசியம் ஒன்றிற்காகவே தாம் தொடர்ந்து பாடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே நாடுகடந்த தமிழீழ அரசில் "ஜனநாயக அமைப்பு" என்னும் குழு இயங்கும் எனவும், அது அரசை இரண்டாகப் பிளக்கும் ஒரு அமைப்பு அல்ல என்றும் அவர்கள் தம் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளனர். தமது கோரிக்கைகள் எப்போது நிறைவேற்றப்படுமோ அப்போது தாம் அதனைக் கலைத்துவிட்டு, சக உறுப்பினர்களோடு சேர்ந்து இயங்க தயார் என்பதனை அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். நா.க.தமிழீழ அரசின் ஜனநாயக அமைப்பு அறிக்கையை இணைக்கப்பட்டுள்ளது: அது பின்வருமாறு:-

--------------------------------------------
நாடு கடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணி

Transnational Government of Tamil Eelam � Democrats (TGTE-Democrats)

1) அறிமுகம்

தமிழ் இணையங்களில் ஆங்காங்கே வெளியாகும் குழப்பமான வதந்திகளால் அவதூறுப் பரப்புரைகளில் இருந்து உண்மையான சவால்களை மக்கள் பிரித்தறிய முடியாத நிலை தோன்றியிருக்கிறது. உடனடியாக சில சிக்கல்களுக்கு முற்றுப் புள்ளியிட்டு நன்நோக்கோடு எம்மை நாமே புடமிட்டு முன்செல்லும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசவைக்குத் தேர்தலில்

தெரிவுசெய்யப்பட்ட நாம் சில முக்கியமான முடிவுகளை மேற்கொண்டு அவற்றை எமது மக்களுக்கும் இதர அரசவைப் பிரதிநிதிகளுக்கும் இத்தால் அறியத்தருகிறோம்.

1.1 நாடு கடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணி மார்ச் 2011ம் ஆண்டு 4ம் திகதிமுதல் அதிகாரப+ர்வமாக உதயமாகியுள்ளது. இதற்கான தோற்றுவாய்ப் பின்னணியும் சூழலும் இந்த ஆவணத்தில் விளக்கப்படுகிறது.

1.2 மூவர் கொண்ட ஓராண்டுக்கொருமுறை தெரிவாகும் நிறைவேற்று மையமும் ஒன்பது பேர் கொண்ட ஈராண்டுக்கொருமுறை தெரிவாகும் ஆணை மையத்தையும் கொண்டு ஜனநாயக அணி செயற்படும். ஆணை மையத்தால் நிறைவேற்று மையத்தின் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர். ஆணை மையம் நா.க.த.அ வின் அரசவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் தீர்மானிக்கப்படும்.

1.3 எமது அணியில் அங்கத்துவம் பெறும் தகைமை நாடு கடந்த அரசாங்கத்திற்கான தேர்தலில் போட்டியிட்டவர்களில் ஜனநாயக அணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களுக்கு உண்டு. இதற்குரிய வகையில் எமது கொள்கைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு எழுத்துருவில் பிரகடனப்படுத்தப்படும். ஜனநாயக அணி முழுமையானதொரு சுயாதீனமான அணியாகும். இதற்கு ஏதுவாக இரண்டாம் தலைமுறை இளையோரே நிறைவேற்று மையத்தில் தெரிவாகியுள்ளனர். முதலாவது நிறைவேற்று மையத்தின் முடிவுகள் வருமாறு:

1.4 இன்று முதல் எமது முடிவுகள் நிறைவேற்று மையத்தின் மூவரினாலும் கையெழுத்திடப்பட்டு வெளியிடப்படும். அவதூறுகளும் ஆதாரமற்ற வதந்திகளும் எழுந்தமானமான குற்றச்சாட்டுக்களும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் முற்றுக்கு வரவேண்டும். ஜனநாயக அணியில் அங்கம் வகிப்போரிடம் இருந்து இவ்வாறான கடிதங்களோ அறிக்கைகளோ எமது அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவரமாட்டாது.

1.5 தற்போது உருவாகியிருக்கும் அரசாங்கக் கட்டமைப்பை யாப்புரீதியாக
அங்கீகரிக்காவிட்டாலும், அடுத்த அரசவைக்கான தேர்தல் நடைபெறும் வரை அவர்களின்
செயற்பாட்டுக்கு நாம் குந்தகமாக இருக்கப்போவதில்லை. சகல அரசவை அமர்வுகளிலும்
நாம் பங்குகொள்வோம். அதேவேளை, சரியான யாப்பொன்றை உருவாக்குவதற்கான எமது
மாதிரி யாப்பையும் நாம் முன்வைப்போம்.

1.6 மாதிரி யாப்பு தொடர்ந்தும் தனியான அமர்வுகளில் விவாதிக்கப்பட்டு, தரமான நாடு கடந்த கோட்பாட்டுக்கு இயைவான யாப்பாக அது முழுமையாக்கப்பட்டு அதன் அடிப்படையில் அடுத்த தேர்தல் நடைபெறக்கூடிய வகையில் எல்லோரும் சேர்ந்து அதை உருவாக்குவோம். தெரிவாகியிருக்கும் நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் சரியான திசையில் தொடரவேண்டும் என்று நாம் விரும்பும் அதேவேளை அரசாங்கத்தில் பதவிநிலைகளை வகிப்போர் குழப்பகரமான அறிக்கைகளை வெளியிடாதவாறு பேணும் பெரும்பொறுப்பு திரு. ருத்ரகுமாரன் அவர்களுக்குரியது என்பதையும் இத்தால் உரிமையுடன் சுட்டிக்காட்டுகிறோம். நாமும் நாடுகடந்த அரசவையின் அதிகாரப+ர்வமான பிரதிநிதிகளே என்ற ஆணையோடு எமது செயற்பாடு அமைந்திருக்கும்.

2) பின்னணி இறைமையும் பூரண சுதந்திரமும் பொருந்திய தமிழீழத் தனியரசு அமைப்பதற்கு நாடு கடந்த சூழலில் இருந்து செயலாற்றும் நோக்கில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி அதைச் சரியான பாதையில் நெறிப்படுத்தும் நோக்கில் எம்மில் பலர் (ஜனநாயக அணிக்கு அப்பாற்பட்ட பலரும் உள்ளடங்கலாக) தேர்தலுக்கு முன்பிருந்தே செயற்பட்டுவந்திருக்கிறோம்.

நா.க.த.அரசவைக்கான நாடுகள் தழுவிய தேர்தல் முன்னெடுப்பின்போது, சிறிலங்கா அரசின் கைகளுக்குள் சிக்கியிருப்போரின் நண்பர்களும் ஆதரவாளர்களும், அவர்களை நம்பியவர்களும், நாடு கடந்த அரசவைக்கான தேர்தல் ஆணையங்கள் பலவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒருபக்கச் சார்பான முறையில் கையகப்படுத்தியிருந்தனர். இந்த நிலை எவ்வாறு உருவாகியது என்பதற்கான பின்னணியை நாம் விளக்க வேண்டிய தேவை இன்று இல்லை.

ஆயினும், சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை மீளுறுதி செய்யும்
வாக்கெடுப்புக்கு எதிராக இவர்களிற் பலர் வெளிப்படையாகச் செயற்பட விழைந்தமையே நா.க.த.அ வேலைத்திட்டத்தில் இவர்களுக்கு இருக்கும் உண்மை நோக்கம் என்ன என்ற ஐயப்பாட்டை பரந்த அளவில் தர்க்கீகமான முறையில் எழுப்பியிருந்தது.

இவர்களை ஆதரித்தோரில் பலர் தமது அறியாமை காரணத்தாலோ, கொள்கைக்கு அப்பாற்பட்ட நடைமுறைசார்ந்த உணர்வுரீதியான கோபதாபங்களின் நிமித்தமோ, தோல்விநிலை வசப்பட்டோ, அல்லது உண்மையிலேயே சிறிலங்காவின் புலனாய்வு வலைக்குள்ளிருந்து இயக்கியோரால் தூண்டப்பட்டோ நா.க.த.அ உருவாக்கத்திற்கான வேலைத்திட்டத்தைத் திசைதிருப்பும் போக்கில் செயற்படலாகினர்.

இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து பெயர் குறிப்பிடப்படாத ஓர் �உருவாக்கக்குழு� இயக்கியது. இந்த உருவாக்கக்குழுவே பல நாடுகளில் ஒரு தலைப்பட்சமான தேர்தல் ஆணையங்களையும் செயற்குழுக்களையும் நிறுவி பிளவுநிலையைத் தோற்றுவித்தது என்பதும் யாவரும் அறிந்ததே. இதன் அபாயத்தை உணர்ந்தநிலையில் முற்கூட்டியே இந்த வேலைத்திட்டத்தின் பகிரங்க இணைப்பாளராகச் செயற்பட்ட திரு ருத்ரகுமாரன் அவர்களிடம் 2009 நவம்பர் 06 அன்று பல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஒன்று கூடித் தமது கரிசனைகளைத் தெளிவாகவே வெளிப்படுத்தியிருந்தனர்.

விளைவாக, பல நாட்களின் பின், தேர்தல் அண்மித்த வேளையில் திரு. ருத்ரகுமாரன் அவர்கள் தான் ஒருவரே உருவாக்கக்குழு என்று பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இச் சூழலில் வெளியான நா.க.த.அ வின் ஆலோசனைக்குழுவின் வழிகாட்டிக் கோட்பாடுகள் பற்றியும் காத்திரமான விமர்சனங்களை முன்வைத்து, குறித்த கோட்பாடுகளில் முக்கியமான மாற்றங்கள் சிலவற்றை மிகுந்த பிரயத்தனங்களின் மத்தியில் கொண்டுவந்து, நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கோட்பாடு சரியான திசையில் பயணிக்கச் செய்வதற்கு ஆரம்பத்திலிருந்தே பலரும் செயலாற்றினர்.

தமிழீழத்தின் இறைமை என்ற உச்சரிப்போடு இன்றிருக்கும் நாடு கடந்த அரசாங்கத்தின் கொள்கைக்குப் பின்னால் தமிழீழத் தேசியம் குறித்த சரியான பார்வை கொண்ட பலரின் அழுத்தம் நிறைந்த செயற்பாடு பொதிந்துகிடக்கிறது என்பது தான் உண்மை.

தவிரவும், தேர்தல் ஆணையங்கள் நாட்டுக்கு நாடு வேறு வேறு விதமான நடைமுறைகளைக் கையாண்டதும், தேர்தல் முடிவில் பெருமளவு வாக்குகளைப் பெற்ற பிரதிநிதிகள் பலர் பின்வாங்கச் செய்யபபட்டதும், இன்றுவரை வெளியிடப்படாது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற தேர்தல் முடிவுகளும், தேர்தல் நடாத்த முடியாத நாடுகளுக்கான பிரதிநிதிகள் வழிகாட்டிக் கோட்பாடுகளுக்கிணங்கத் தெரிவுசெய்யப்படாத நிலையிலும், அவரச அவசரமாக நடாத்தப்பட்ட இரண்டாவது அமர்வை, யாப்பு குறித்த விவாதத்திற்கான அமர்வாக மாத்திரம் கொள்ளாது முழுமையான யாப்பை நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட அமர்வாக நாம் கொள்ளமுடியுமா என்பது கேள்விக்குரியது. எனினும், இந்த விடயத்திலும் நாம் பொறுமையோடும் விட்டுக்கொடுப்புக்களுடனும் செயற்பட்டிருந்தோம்.

3) நாடு கடந்த தமிழீழ அரசவையின் அமர்வுகள்:

முதலாவது அமர்வின் மூன்றாம் நாளன்று அமர்விற் பங்கேற்ற அனைத்துப் பிரதிநிதிகளும் அரசியல் நிர்ணய அவைக்கான சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டுவிட்டனர்.

இரண்டாவது அமர்வில், யாப்புக்கான மாதிரி குறித்த விவாதத்தின்போது, மூன்றில் இரண்டு
பெரும்பான்மையோடு எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. தேர்தலில் தெரிவான அனைவரிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகரிக்கும் வகையில் யாப்பு விவாதிக்கப்பட்டு ஜனநாயக முறையில் முழுமைப்படுத்தப்படுவதே பொது மரபு.

மாதிரி யாப்பில் திருத்தத்தைக் கோருவதற்காக சில உறுப்பினர்கள் முன்வைத்த மூன்று
திருத்தக்கோரிக்கைகள் மட்டுமே வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. ஆனால், யாப்பு வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை.

ஒவ்வொருவராலும் யாப்பு ஏற்றுக்கொள்ளப்படுகிறதா இல்லையா என்பதை அறுதியாக முடிவெடுப்பதற்கு �ஆம்�, �இல்லை� �கலந்துகொள்ளவில்லை� என்று தமது ஒப்புதலையோ, மறுப்பையோ தெரிவிக்கும் வகையிலான இறுதி வாக்கெடுப்பும் நடைபெறவேயில்லை.

சிலர் குறிப்பிடுவதுபோல ஏகமனதாக எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. யாப்புச் சார்ந்த சில முக்கியமான முடிவுகள் நடைமுறை மீறல்கள் மத்தியில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாமல், நேரடியாக சமுகமளிக்க முடியாதிருந்த பிரதிவாக்கு வழங்கியோரின் வாக்குகளையும் முன்னுக்குப் பின் முரணாக நிராகரித்து, முடிவுகள் எல்லாம் ஓரிரு வாக்கு வித்தியாசஙகளில் ஒரு தலைப்பட்சமாக நிறைவேற்றப்பட்டன. இது குறித்த விளக்கங்களை மக்களுக்கு நாம் ஏற்கனவே முன்வைத்திருக்கிறோம்.

இந்த முரண்பாடுகளை, தொடர்ந்தும் வளர்த்துக்கொண்டிருப்பது எமது நோக்கமல்ல. புவிசார் அரசியலில் ஒரு சர்வதேச சக்தியோடு மட்டும் அடையாளப்படுத்தும் வகையில் அமைந்துவிடாமல், எவரின் அழுத்தங்களுக்கும் பிடிகளுக்குள்ளும் அகப்படாதவாறு செயற்படுவதுதான் உண்மையிலேயே நாடு கடந்த கோட்பாட்டுக்கு மகிமை தருவதாகும். இவ்வாறான கட்டமைப்பு ரீதியான முடிவுகளில் எம்மால் இயன்ற அளவு விட்டுக்கொடுத்திருந்த போதும், அளவுக்கதிகமான அதிகாரங்களை ஒருவரின் கையில் மையப்படுத்தும் வகையில் அமர்வு நெறிப்படுத்தப்பட்டது.

4) மாதிரி யாப்பு குறித்த எமது நிலைப்பாடு

ஆரம்பத்தில் இருந்தே மாதிரி யாப்பு ஒன்றை அமைத்து, அதன் அடிப்படையிலேயே முதலாவது அரசவைக்கான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவேண்டும் என்ற முறைமையை உருவாக்கக்குழுவும், ஆலோசனைக்குழுவும் முற்றாக நிராகரித்துவந்திருந்தன.

இவ்வாறான மாதிரி யாப்பு ஒன்று முதலே வரையப்பட்டிருப்பின், குறித்த அடிப்படைகளை
ஏற்றுக்கொண்டு தேர்தலில் தெரிவுசெய்யப்படுவோர் பின்னாளில் தாம் தெரிவுசெய்யப்பட்ட
அடிப்படைகளை நிராகரிக்குமிடத்து, அதாவது எந்த ஆணையை வைத்து மக்களால் தெரிவுசெய்யப்பட்டார்களோ அந்த ஆணையை அவர்கள் நிராகரித்தால், குறித்த அவையிலிருந்து அவர்கள் விலக்கப்படலாம்.

ஆனால், யாப்பை உருவாக்குவதே முதலாவது அரசவை தான் என்றும் அதை அமைப்பதற்கானதே முதலாவது அரசவைக்கான தேர்தல் என்றும் தெளிவாகத் தெரிவித்த அடிப்படையிலேயே தேர்தல்கள் நடைபெற்றன.

இதற்கேற்பத் தெரிவுசெய்யப்பட்டவர்களை சட்டவாக்க அவையில் இருந்தே விலக்கும் உரிமை எந்த ஒரு அரசியல் அமைப்புச் சபைக்கும் இருக்கமுடியாது. அதாவது, குறித்த ஒரு விடயத்தை உருவாக்குவதற்கென மக்கள் தெரிவுசெய்த பிரதிநிதிகளில் ஒருசாரார் � தாங்கள் பெரும்பான்மையாக இருந்தாற்கூட � தாம் உருவாக்கிய முறையே சரியென்றும் மற்றவர்கள் சிறுபான்மையென்றும், சிறுபான்மையாய் இருப்பவர்கள் அவையில் இனிமேல் அங்கம் வகிக்கவே முடியாதென்றும் வாதிடுவது சட்டவிரோதமானது மட்டுமல்ல, அபத்தமானதும் ஜனநாயக விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானதும் ஆகும்.

அமைக்கப்படும் அரசாங்கத்தில் வேண்டுமானால் அவர்கள் தெரிவுசெய்யப்படாமல் விடப்படலாம். ஆனால், அவர்களை அவையில் இருந்தே வெளியேற்ற முயற்சிப்பது விநோதமானது. அமர்வில் தான் யாப்பு நிறைவேற்றப்படலாமே அன்றி, தனிப்பட்ட ரீதியி;ல் தொடர்புகொண்டு கையெழுத்து வாங்கும் முயற்சியூடாக யாப்பை அங்கீகரிக்க முயற்சிப்பதும் சட்ட அரசவைக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் முரணானது.

ஆக, சுமுகமான முறையில் மீண்டும் கருத்துப் பகிர்வுக்கு இடமளித்து, ஓர் அமர்வைச் செய்வதற்கு ஏன் பின் நிற்கவேண்டும் என்ற கேள்வி நியாயமானதே. தேர்தலில் அதிக வாக்குகளால் மக்களின் அபிமானத்தோடு வெற்றிபெற்றும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அரசவைப் பிரதிநிதிகளுக்கான தேர்தல் முடிவுகளை இனியும் காலதாமதம் செய்யாது அங்கீகரிக்குமாறும், அடுத்த அமர்வை விரைவில் நடாத்தி யாப்பை நியாயப+ர்வமான முறையில் முழுமைப்படுத்துவதற்கு ஒழுங்கு செய்யுமாறும் எழுத்துமூலமாக எமது பிரதிநிதிகள் திரு ருத்ரகுமாரன் அவர்களை வேண்ட நேரிட்டது.

எமது பிரதிநிதிகள் விடுத்த வேண்டுகோளுக்கு நியாயமான முறையில் பதில் அளிக்காது,
அவையில் எமது உறுப்புரிமையையே இரத்துச் செய்யும் நோக்கில், யாப்பு நிறைவேற்றப்பட்டது போலவும், அதற்கேற்ப சத்தியப்பிரமாணம் செய்யுமாறும் காலக்கெடு விதித்து அச்சுறுத்தியிருக்கிறார் திரு. பொன். பாலராஜன். இது குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம்.

அதேவேளை, இந்தச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள விழையும் எமது அணியின் உறுப்பினர்களையும் நாம் பொறுமை காக்குமாறு வேண்டியிருக்கிறோம். இந்தச் சூழலே நாம் ஓர் அணியாகச் செயற்படவேண்டிய தேவையை ஜனநாயக ரீதியாக எம்முன் தோற்றுவித்திருக்கிறது. இதனால், கருத்திசைந்த அனைவரும் ஜனநாயக அணியாக ஒன்றிணைந்துள்ளோம்.

தவிரவும், ஒருவரே முதல்வர் என்றும், அவரிடமே முழு நிறைவேற்று அதிகாரங்களும் இருக்கும் வகையில், அவ்வொருவரே மூன்று துணைப் பிரதமர்களையும் சகல அமைச்சுக்களையும் தெரிந்தெடுப்பார் என்றும், நாடு கடந்த கோட்பாட்டுக்கே முரணாக, மரபு வழிக் கட்சி அரசியல் பாணியில் அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

நாடு கடந்த அரசாங்கத்தின் முழுமையான அதிகாரங்களையும் ஒரு நாட்டின்
எல்லைக்குட்பட்டிருக்கும் பிரஜை ஒருவரிடம் கையளித்துவிடல் என்பது அடிப்படையில் நாடு கடந்த கோட்பாட்டிற்கே விரோதமானது. 50 வீதத்தோடு ஒரு வாக்கு சேர்ந்து வரும் சாதாரண பெரும்பான்மையோடு ஒரு பிரதமர் தேர்ந்தெடுக்கப்படலாம், ஆனால் அதே சாதாரண பெரும்பான்மைக்கு குறித்த பிரதமரில் நம்பிக்கையில்லா நிலை ஏற்பட்டாலும் அவர் பதவி வகிக்கும் வண்ணம் யாப்பு எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு சாதாரண பெரும்பான்மையோடு தெரிவாகுபவர், மூன்றில் ஒரு மடங்கு பிரதிநிதிகளுடன் ஆதரவுடன் மட்டும் அரசவையில் தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்றும் கூட மாதிரி யாப்பு பிரஸ்தாபிக்கிறது. இந்த மூன்றில் ஒரு மடங்கு கூட, மக்களால் வாக்களித்து தெரிவுசெய்யப்படாத பிரதிநிதிகளாக இருக்கும் வாய்ப்பும் உள்ளது.

தற்போது பல முக்கிய பதவிகளை வகிப்பவர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படாதவர்களாயிருப்பதும், அதேவேளை அதிக வாக்குளைப் பெற்றவர்கள் கூட அவைக்கு வெளியிலேயே நிறுத்திவைக்கப்பட்டிருப்பதும் இந்த யாப்பின் பலவீனங்களை எடுத்துக்காட்டுகிறது.

பிரதம அமைச்சரே தனது மந்திரிசபையை முழுமையாகத் தெரிவுசெய்யும் முறை அமைவதென்றால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வடிவமும் ஒருசேர அமைந்திருக்கவேண்டும். இதுவே ஜனநாயக அரச வடிவங்களின் நடைமுறை.

ஆனால், சம அதிகாரங்களுடனான நிறைவேற்றுக் கூட்டுத் தலைமையையும், அமைச்சுக்களையும் அரசவை உறுப்பினர்கள் நேரடியாக, இரகசிய வாக்கெடுப்பின்மூலம் தெரிவுசெய்ய முடியுமாயிருந்தால், எதிர்க்கட்சி வடிவத்திற்கான தேவை இருக்காது. இதையே நாம் விரும்பினோம். இதுவே நாடு கடந்த தன்மைக்கும் பொருத்தமானது என்பதே எமது கருத்தாகும். தயை கூர்ந்து அனைவரையும் யாப்பு மாதிரியை முழுமையாக ஒரு முறை வாசித்துப் பார்க்குமாறு மீண்டும் வேண்டுகிறோம்.

5) சுமுகமான தீர்வுக்கான வழிமுறை

எமக்கு எவரிலும் எதுவித தனிப்பட்ட கோபதாபங்களும் இல்லை. ஆனால், நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளாகிய நாம் அதிகாரங்களையும் மக்களின் ஆணையையும் ஒரு சிலரின் கைகளில் மையப்படுத்த முயற்சிக்கும் சாமானிய அரசியலில் ஈடுபட முடியாது.

ஒரு தேசத்தின் விடுதலைக்கான கடமையைச் சுமக்கும் பணியாளர்கள் என்ற உணர்வும்
பொறுப்பும் இந்தக் கட்டமைப்புக்கு மிகவும் அடிப்படையானது. இந்தவகையில் நாமெல்லோரும் விரும்புவது நாடு கடந்த நிலையில் அனைவரும் தெரிவு செய்கின்ற, எந்த ஒரு வல்லாதிக்க சக்தியின் கைகளுக்குள்ளும் தனித்து அகப்பட்டுவிட முடியாத, புவிசார்
அரசியலில் அனைத்துச் சக்திகளுடனும் பேரம் பேசவல்ல ஒரு கூட்டுத் தலைமையையே. இரண்டாம் தலைமுறையின் பங்கு இதில் முன்னிலைப்படுத்தப்படவேண்டும்.

இதனால், நாம் ஒரு ஏகமனதான முடிவுக்கு வந்திருக்கிறோம். தற்போது அரசாங்கத்திற்குத் தெரிவாகியிருப்போர் அங்கீகாரமில்லாத ஒரு யாப்பின் அடிப்படையில் தெரிவாகியிருந்தாலும், எமது நோக்கம் எதிர்வரும் தேர்தலில் சரியானதொரு யாப்பின் அடிப்படையில் தெரிவுகளும் கட்டமைப்பும் உருவாகவேண்டும் என்பதே. அதுவரை, அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கும் நாம் குந்தகமாக இருக்கப்போவதில்லை.

ஆனால், முடிவுகள் எடுக்கும் போது எமது ஜனநாயக அணியுடனும் கலந்தாலோசித்து, ஒற்றுமையை வெளிப்படுத்தி நல்லெண்ணத்துடன் செயற்படுமாறு இத்தால் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம். மக்கள் மத்தியிலும் இதர அரசவைப் பிரதிநிதிகள் மத்தியிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றிய யாப்புக் குறித்த கருத்துருவாக்கத்தில் நாம் ஈடுபடுவோம்.

சரியானதொரு யாப்பை அதற்குரிய முறையில், தனியான அமர்வுகளில் விவாதித்து, தரமானதொரு நாடு கடந்த கோட்பாட்டுக்கு இயைவான வடிவம் கொடுத்து அதன் அடிப்படையில் அடுத்த தேர்தல் நடைபெறும் வகையில் நாம் எல்லோரும் சேர்ந்து உழைப்போம். இதற்கான நடைமுறைகளைத் தீர்மானிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் நாம் விரைவில் ஈடுபடுவோம்.

அதேவேளை, அனைத்து ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பாரபட்சமற்ற முறையில், குழுவாதம் பாராட்டாது எமது இந்த நன் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறோம்.

வாழ்க தமிழ், வெல்க தமிழீழீம். நாடு கடந்த தமிழீழ அரச கோட்பாடு மேலும் வளர்க!

இவ்வண்ணம்,

6) நாடு கடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணியின் கட்டமைப்பு

6.1) நிறைவேற்று மைய உறுப்பினர்கள்

கிருசாந்தி சக்திதாசன் (பிரான்ஸ்) சசிதர் மகேஸ்வரன் (பிரித்தானியா) வித்தியா ஜெயசங்கர் (ஜேர்மனி)

6.2) ஆணை மைய உறுப்பினர்கள்

ஜெயவாணி அச்சுதன் (பிரித்தானியா)
கார்த்திகேசன் பரமசிவன் (பிரித்தானியா)
மரியாம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன் (கனடா)
எஸ் திருச்செல்வம் (கனடா)
முரளி சிவானந்தன் (நோர்வே)
சிவகுரு பாலச்சந்திரன் (பிரான்ஸ்)
சேரன் சிறீபாலன் (அவுஸ்ரேலியா)
ரேணுகா லோகேஸ்வரன் (ஜேர்மனி)
மயில்வாகனம் பாஸ்கரநாராயணன் (இத்தாலி)

6.3) ஜனநாயக அணியின் ஆரம்ப அங்கத்தவர்கள்:

(தேர்தலில் தெரிவானதாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு வாக்குரிமை கொண்டிருப்பவர்களும்,
தேர்தலில் வெற்றிபெற்றும் அறிவிப்பு இடைநிறுத்தி வைக்கப்பட்டோ அல்லது முடிவுகளே இதுவரை
அறிவிக்கப்படாது வாக்குரிமை அற்றவர்களும் உள்ளடங்கலாக)
தெய்வேந்திரன் குலசேகரம்
மரியாம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன்
வனிதா இராஜேந்திரம்
எஸ். திருச்செல்வம்
சுரேசானந்த் ரத்னபாலன்
பாலன் ரத்னராஜா
சிவகுரு பாலச்சந்திரன்
சசிகுமார் சரவணமுத்து
கிரிஸாந்த் தர்மந்திரன்
திருச்சோதி திருக்குலசிங்கம்
கிருசாந்தி சக்திதாசன்
சேரன் சிறிபாலன்
பரமு ஆனந்தசிங்கம்
வித்தியா ஜெயசங்கர்
ரேணுகா லோகேஸ்வரன்
நடராஜா திருச்செல்வம்
இராசையா தனபாலசுந்தரம்
முகுந்தன் இந்திரலிங்கம்
கணேசரட்ணம் சந்திரபாலன்
மயில்வாகனம் பாஸ்கரநாராயணன்
ஜெயசிறி பாலசுப்ரமணியம்
சிவானந்தன் முரளி
சிவகணேசன் தில்லையம்பலம்
ஜெயவாணி அச்சுதன்
கார்த்திகேசன் பரமசிவன்
மகேஸ்வரன் சசிதர்
சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி
வாசுகி சோமஸ்கந்தா
சண்முகநாதன் கவிராஜ்
சின்னத்துரை சிறிரஞ்சன்
ஆறுமுகம் விவேகானந்தராஜா

Comments