உயர் பதவிகள் வழங்கப்படுவதற்காகவே வளர்க்கப்படும் சிறிலங்கா அதிபரின் மூத்த மகன்

தனது தந்தையாரைத் தொடர்ந்து தான் ஆட்சியில் தொடருவதற்கு தனது சித்தப்பா பசில்தான் பிரச்சினையாக இருப்பார் என நாமல் கருதும் நிலையில் மகிந்த குடும்பத்திற்குள் குடும்ப வேறுபாடுகள் முளைவிட்டிருப்பதாகத் தெரிகிறது [முன்னர் மகிந்தவைத் தொடர்ந்து பசில்தான் ஆட்சியில் தொடருவார் என்ற நிலைமையே இருந்தது]. நாமலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு குடும்பத்திலுள்ளவர்கள் இணங்கக்கூடும்.

இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் The Economist சஞ்சிகையில் எழுதப்பட்டுள்ளது.

அதன் முழுவிபரமாவது,

வம்ச அரசியல் என்பது எங்கோ ஆரம்பிக்கப்படவேண்டும். இந்தியாவில் காந்தி என்ற பெயரும் பாகிஸ்தானில் பூட்டோ என்ற பெயரும் எவ்வாறு அரசியல் குடும்பமொன்றில் அரசியல் காரணங்களுக்காக அனைவரதும் பெயராகப் பயன்படுத்தப்படுகிறதோ அதுபோல அரசியலினுள் நுழைவதற்காக தங்களது குடும்ப முதற் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்துவது இலகுவானதாக மாறிவிட்டது.

2005ம் ஆண்டு சிறிலங்காவில் ஏற்பட்ட தேர்தலில் வெற்றிபெற்ற அதிபர் மகிந்த ராஜபக்சவினது செயற்பாடு மேற்குறித்த இந்த வாதத்தினை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

மகிந்தவினது அரசாங்கத்தில் ஏற்கனவே ராஜபக்ச சகோதரர்களுக்கு முதன்மையான பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களைக் கவனிக்கும் அதேநேரம் எப்போதும் சுறுசுறுப்புடன் செயற்படும் பசில் நாட்டினது பொருளாதார அபிவிருத்தி தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பாக இருக்கிறார்.

புற்றுநோய்க்கான சிகிச்சையினைப் பெற்றிருந்தார் என கடந்த மாதம் வெளிவந்த செய்திகளை முற்றாக மறுத்திருக்கும் தற்போது 65 வயதினை அடைந்திருக்கும் மகிந்த ராஜபக்ச அரசாட்சியில் தனது மகன் நாமலை முன்நிலைப்படுத்துவதற்கு அதிகம் முயன்று வருகிறார்.

24 வயதுடைய நாமல் ராஜபக்ச தனது தந்தையாருடன் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலுள்ள 'காத்திரமான உறவினை' மேலும் வலுப்படுத்தும் வகையில் லிபியாவின் அதிபர் கடாபியினைச் சிறிலங்காவிற்கு அழைக்கும் வகையில் கடந்த சனவரியில் நாமல் லிபியாவிற்குச் சென்றிருந்தார்.

நாட்டில் நாமலை முதன்மைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிறிலங்காவின் தெற்குப் பகுதியிலுள்ள நாமலின் சொந்த தேர்தல் தொகுதியான அம்பாந்தோட்டைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் கிறிக்கெற் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் போட்டியின் சிறப்பு ஆட்டக்காரராக நாமல் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவியளிக்கப்படும் புதிய செயலகத் தொகுதி ஒன்றை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் நாமல் பங்கெடுத்திருந்தார். அதற்கு முன்னர்தான் தேசிய நாமல் உயன என்ற திட்டத்தின் கீழ் காடுகள் மற்றும் புராதன மலைத்தொடர் போன்றவற்றைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டதிற்குப் பொறுப்பாக நாமல் நியமிக்கப்பட்டார்.

புதிய பாலங்கள் வீதிகள் மற்றும் வங்கிக் கிளைகளைத் திறக்கும் நிகழ்வுகளிலும் நாமல் தொடர்ந்தும் பங்கெடுத்து வருகிறார். 'நாளைய இளைஞர்கள்' என்ற தேசிய அமைப்பினது தலைவர் என்ற வகையில் அடிக்கடி உலங்குவானூர்திகளில் வடக்கிற்குப் பறக்கும் நாமல் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியினையும் மாணவர்களுக்கான புத்தகங்களையும் ஏனைய உதவிகளையும் வழங்கி வருகிறார். நாளைய இளைஞர்கள் என்ற நாமலின் இந்த அமைப்புக்குத் தொலைக்காட்சி சேவை கூட இருக்கிறது. நாட்டினது அரச ஊடகங்களில் இந்த இளைய அரசியல்வாதிக்குத் தனி முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

நாமலின் ஓராண்டு கால அரசியல் வாழ்க்கை வசீகரமானது. 1930ம் ஆண்டு முதல் ராஜபக்ச குடும்பத்தின் கோட்டையாக விளங்கிய நாமலின் தேர்தல் தொகுதியான அம்பாந்தோட்டையில் புதிய அனைத்துலக விமான நிலையம், மாநாட்டு மண்டபம், விடுதிகள் உள்ளிட்ட பெரும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சீனாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினை அதிபர் மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைத்தபோதும் நாமலும் உடனிருந்தார். லண்டனில் கல்விகற்ற ரக்பி விளையாட்டில் அதிக நாட்டம் கொண்ட வசீகரமான தோற்றம்கொண்ட நாமல் தற்போது 2018ம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவினை அம்பாந்தோட்டையில் நடாத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

இன்றைய நிலையில் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் என்பது ஒரு இரவில் நடந்துவிடாது. பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த கொடூரம் நிறைந்த போரினை இரண்டு ஆண்டுகளின் முன்னர் முடிவுக்குக் கொண்டுவந்தவர் என்ற பெருமையைத் தனதாக்கியிருக்கும் மகிந்தவிற்கான ஆதரவும் பெரும்பான்மையினச் சிங்களவர் மத்தியில் அதிகம் இருக்கிறது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருந்த மகிந்த, தான் தொடர்ந்தும் ஆட்சியிலிருக்கும் வகையில் நாட்டினது அரசியலமைப்பில் மாற்றத்தினைக் கொண்டுவந்திருக்கிறார். அந்த அரசியலமைப்புச் சீர்திருத்தமானது 2016ம் ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலிலும் மகிந்த போட்டியிடுவதற்கு வழிசெய்திருக்கிறது. அதேநேரம், காப்புறுதிக் கொள்கை ஒன்றைப் போல தனக்குப் பின் ஆட்சியில் தொடருவதற்காக மகிந்த இப்போதே நாமலைத் தயார்ப்படுத்துவதாகத் தெரிகிறது.

தனது தந்தையாரைத் தொடர்ந்து தான் ஆட்சியில் தொடருவதற்கு தனது சித்தப்பா பசில்தான் பிரச்சினையாக இருப்பார் என நாமல் கருதும் நிலையில் மகிந்த குடும்பத்திற்குள் குடும்ப வேறுபாடுகள் முளைவிட்டிருப்பதாகத் தெரிகிறது [முன்னர் மகிந்தவைத் தொடர்ந்து பசில்தான் ஆட்சியில் தொடருவார் என்ற நிலைமையே இருந்தது]. நாமலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு குடும்பத்திலுள்ளவர்கள் இணங்கக்கூடும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரின்போது ஆயிரக்கணக்கான புலிகளின் உறுப்பினர்களும் பொதுமக்களும் படுகொலைசெய்யப்பட்டனர் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முதலில் அரசாங்கம் இல்லாதுசெய்யவேண்டும். இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என தொடராக வேண்டுகைகள் முன்வைக்கப்படும் அதேநேரம் இந்த வேண்டுகைகளுக்குச் செவிசாய்க்காது மகிந்த அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. இது சிறிலங்காவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவினைப் பெரிதும் சீர்குலைத்து விட்டது.

இன்றைய நிலையில் சீர்கெட்டுப்போயிருக்கும் வெளிநாடுகளுடனான உறவினை மீண்டும் சீர்செய்வதும் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களுடன் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதும்தான் சிறிலங்காவினது ஆட்சியளார்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினை.

அரசாங்கத்தின் முகமாக மகிந்த தொடரும் வரைக்கும் மேற்குறித்த இந்த இலக்குகளை அடைவது கடினமாது. சிறிலங்காவில் கடந்த பல ஆண்டுகளாக இருக்கும் பரம்பரை ஆட்சிமுறையினைத் தொடர்ந்தும் பேணுவதற்கு ராஜபக்சக்கள் விரும்பினால், போர் இடம்பெற்ற காலப்பகுதியில் போர் தொடர்பான தொடர்புகள் எதனையும் கொண்டிருக்காத குடும்பத்தின் இளையவர் ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பினைக் கையளிப்பதுதான் மகிந்த குடும்பத்தின் திட்டமாகத் தெரிகிறது.

அதனை மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

Comments